Tuesday, January 31, 2017

தாழப் பறக்காத பரத்தையர் கொடி – பிரபஞ்சன்

பல வருடங்களுக்கு முன்னர் பிரபஞ்சன் கதைகள் என்ற தொகுப்பை வாசித்திருக்கிறேன். வானம் வசப்படும் என்ற நாவலையும் வாசித்திருக்கிறேன்.  ஓரிரண்டு முறை அவருடைய  உரைகளை இணையதளத்தில் யூடியுபில் கேட்டிருக்கிறேன்.   எழுத்தாளனுக்குரிய எல்லா குணங்களும் நிரம்பப் பெற்றவர் என்பது எனது மனதில் இருந்த பிம்பம். 

            ‘தாழப் பறக்கும் பரத்தையர் கொடி’ என்ற தொடரை எங்கோ கேட்ட/படித்த ஞாபகம் இருக்கிறது. அதிலிருக்கும் எதிர்மறைச் சொல் அவர்களை இழிவு செய்ய பயன்படுத்தப்பட்டது என்பதை உணர்ந்து, தாழப்பறக்காத’ என்று சொல்வதே ஒரு கருத்து மாற்றம்.

            தன்னுடைய அனுபவங்களை நம்முடம் பகிர்ந்திருக்கிறார்.  பத்திரிக்கை உலகில் எப்படி குமுதம் இதழ் தன்னைத் தக்க வைத்துக் கொண்டது என்பதைப் பகிர்ந்திருக்கிறார்.  நான் சிறுவனாக இருந்த காலத்தில் பெண்களை அட்டையில் போட்டால் அது குறையாகச் சொன்னோம்.  ’ராணி’அதை ஆரம்பித்து வைத்ததென்றே எனது ஞாபகம். குமுதம் வண்ணப் படங்களை, கவர்ச்சிகரப் படங்களை (அத்துடன் சேர்த்துப் பல இரண்டர்த்தக் கதைகளை அப்போது) வெளியிட்டது.   இது மெல்ல மெல்லப் பரவி, இப்போது பெண் படம், அதுவும் குறிப்பிட்ட கோணங்களில் இல்லாத ‘பொது வாசகருக்கான’ பத்திரிக்கை அனேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.  அது போலவே ஒரு புறம் சங்கராச்சாரியார்,மறுபுறம் கவர்ச்சி நடிகை என்றும் குமுதத்தை விமரிசித்தது உண்டு.  நடைமுறையும் இந்த வகையிலேயே இருந்த்து என்பதை பிரபஞ்சன் அனுபவத்தின் வாயிலாக நிறுவுகிறார்.

            முதலில் கீதோபதேசம், பக்தி மணக்கும் உரை இவை முடிந்ததும் பெண்களின் படம் குறித்த விவாதம்.  கிசுகிசுவின் ஆரம்பம் எல்லாம் சொல்லிச் செல்கிறார்.  பெரும்பாலும் தெரிந்த விஷயங்கள் என்றாலும், குமுதம் எப்போதுமே குறுகுறுப்பூட்டும், கிளுகிளுப்பூட்டும் விஷயங்களுக்கே முதன்மை இடம் அளித்த்து என்பதையும் சொந்த ஆதாரங்களோடு ஆவணமாக்கி இருக்கிறார். 

            எஸ்.ஏ.பி போன்ற ஒருவர், சிறந்த எழுத்தாளர்களை அறிந்தும் வாசித்தும் வந்தவர், தொழில் என்று வரும்போது எப்படி மூன்றாந்தர ரசிகர்களின் வாசிப்பை நம்பி பத்திரிக்கை நடத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது, அவருடைய ஆளுமை குறித்த குழப்பங்கள் ஏற்படுவது இயல்பு.  அப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.  இப்போது புரிகிறது கமலஹாசனுக்கும் அது போலப் பலருக்கும் யார் முன்னோடி என்று. 

            தன் சகோதரியையும் சகோதரனையும் அம்மை நோய்க்குப் பறிகொடுத்த்தைப் படிக்கும் போது, நமது நாட்டில் இன்றும் அடிப்படை  உடல்நல மருத்துவ வசதிகளைக்கூட பெற முடியாமல் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களை அது நினைவூட்டுகிறது.  மனதைத் தொடும் கட்டுரை.


            ’எழுத்தாளர்களைப் பதிப்பகம் ஏமாற்றிய கதை’ புதியதல்ல.  அது இன்னும் பல இடங்களில் தொடர்ந்து கொண்டிருப்பதும் வியப்பல்ல.  அதை எதிர்த்து அவர் போராடிய கதை புதிது.  மற்றப் பல கட்டுரைகளும் படிக்க வேண்டியவை.  நேர்மையான, தன்னம்பிக்கை உள்ள, பொது நலன் கருதும் எழுத்தாளார் என்ற அவரைப் பற்றிய எனது பிம்பத்தை உறுதி செய்யும் கட்டுரைகள்.  *****

No comments:

Post a Comment