Monday, January 16, 2017

நாம் நாமாக இருப்பதற்குப் பயிற்சி வகுப்புகள் உண்டா?

          மனிதன் சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் தன்னை மிக வேகமாக மாற்றிக் கொள்ளும் மிருகம்இந்தக் குணத்தின் காரணமாகத்தான் மற்ற மிருகங்களைப் போல் அப்படியே இருந்து விடவில்லைமற்ற மிருகங்களும் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்கின்றன.   ஆனால் மனிதனைப் போல அவை முன்னரே திட்டமிட்டுச் சிந்தித்துஎன்ன நடக்கும் என்று எதிர்காலத்தைப் பற்றி யோசித்து எந்த மிருகமும் செயல்படுவதில்லைஅதனால் மனிதனுக்கும் அடிப்படையில் எதையும் பயிற்சியின் மூலம் கற்றுக் கொண்டுவிடலாம் என்ற அறிவும், நம்பிக்கையும் இருக்கிறதுபூமியில் மிக வெற்றிகரமாக  (‘வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா’ – கம்பன்) எல்லா உயிர்களுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறான்.

            நவீன காலத்து மனிதர்கள், இந்த அறிவின் அடிப்படையில் வேலைகளுக்கான பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள்டாக்டராகப் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி இன்னும் பல.   இதன் நீட்சியாக, டாக்டராக பயிற்சி பெறச் செல்லும் கல்லூரியில் சேர நிகழ்த்தப்படும் தேர்வுகளுக்கும் பயிற்சி,  இந்திய குடிமையியல் பணியில் (ஐ ஏ எஸ்) தொடங்கி, வங்கி எழுத்தர் தேர்வுக்கான பயிற்சி வழியாக, ராணுவ வீரர் தேர்வுகளில் தேர்வு பெறுவதற்கான பயிற்சி என்று நடக்கின்றன.

            தேர்வுகள் வைப்பதற்குக் காரணம் என்ன? ஒரு மனிதன் அந்தப் பணிக்குத் தேவையான அறிவு, மற்றக் குணங்கள்உதாரணமாக டாக்டருக்கு எல்லா நோய்களைப் பற்றிய அறிவும், மருந்துகள் பற்றிய அறிவும் இருந்தால் மட்டும் போதாது, அது நோயாளி தன் முன் நிற்கும் போது ஞாபகம் வர வேண்டும், அவனுக்குத் நோயைப் பற்றி விளக்கக் கூடிய பொறுமை வேண்டும், குறிப்பாக மரணத் தருவாயில் இருக்கும் நோயாளி அல்லது மரணம் நிகழ்ந்துவிட வாய்ப்புக்கள் இருக்கும் போது அவனுடன் அவனுடைய குடும்பத்தினருடன் எவ்வாறு பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும்அந்தத் துறையில் ஆர்வம் இல்லாமல் பணம் சம்பாதிக்க வந்த மருத்துவர்களுக்கு அல்லது அம்மா அப்பா கொடுத்த மிகையான உந்துதலில் வந்தவர்களுக்கு, அது அது சாத்தியமில்லைதேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மாணவர்களின் மனம் குறித்து, ஆர்வம் குறித்துக் கவலைப் படுவதில்லைதேர்வு, கேள்விகள், பதில்கள் இவைதான் அவற்றின் மையப் புள்ளி, அத்துடன் பணம் சம்பாதிப்பது மிக முக்கியம்.  100 இடங்கள் இருந்தால் அதற்கு பல லட்சம் பேர் போட்டியிட்டால் அந்த நிறுவனங்களுக்கு மிக நல்லது. அவ்வளவு அதிகமானவர்கள் பயிற்சிக்கு வருவார்கள், அதிக வருமானம் கிடைக்கும். கல்வி எவ்வளவு கேவலமான தொழிலாகி விட்ட்து என்பதற்கு இது உதாரணம்.

            சரி, இப்படித் தேர்வு பெற்றவர்களுக்கு தொழில் மீது என்ன ஆர்வம் இருக்கும்? பணம் போட்டோம் அதை எடுக்க வேண்டும் பலகோடிகள் சம்பாதிக்க வேண்டும்ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல் மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது தான் அவர்களது கனவு.

            இதன் இன்னொரு பக்கமாக, பயிற்சிவகுப்புக்களின் மூலம் செயற்கையான மேல் பூச்சான அறிவையும் ஆர்வத்தையும் அளிக்கிறோம்உதாரணமாக, ஒருவன் விற்பனையாளனாக வேண்டுமெனில் நுகர்வோரைக் கண்டு புன்னகைக வேண்டும். பயிற்சியின் மூலம் அவன் சிரிக்க ஆரம்பித்து விடுவான் ஆனால் அவன் தனக்கோ அல்லது நுகர்வோருக்கோ உண்மையாக இருக்கிறானா என்றால் இல்லை.

            பயிற்சிகள் மூலமாக நாம் ஒருவனிடம் இல்லாத ஒரு குணத்தை அவனிடம் மேல் பூச்சாக இருப்பதுபோல காட்டுகிறோம்.  இல்லாத ஆர்வத்தை, (passion) உருவாக்க அது உதவாதுஅது அவன் தொழில் நடத்தும் விதத்திலும் வெளிப்படும்.  தன்னைத் தானே அவன் ஏமாற்றிக் கொள்ளவும், மற்றவர்கள் முன்னால் தன் இயல்புக்கு மாறாக நடிப்பதையும் அவன் உணர்ந்தே இருப்பான்.  ஒருவன் தன் அடையாளங்களை இழந்து வாழ்வதென்பது இல்லாமல் இருப்பதற்கு சமமானதே.


            நாம் நாமாக இருப்பதற்கு என்று எங்கேனும் பயிற்சி உண்டா?  பல சமயங்களில், நமக்குப் பிடிக்காத வாழ்க்கை வாழவேண்டி நேரலாம். ஆனாலும், தனக்குப் பிடித்தமான ஒன்றை மனிதன் மனதினுள்ளே தீபமாகப் ஏற்றிப் பிடித்திருப்பான்.  எப்போதாவது ஏற்ற சூழல் வாய்த்தால் அதை அவன் வெளிக்காட்டுவான்.  அது தான் வாழ்க்கை என்றே தோன்றுகிறது. 

1 comment:

  1. ஆனாலும், தனக்குப் பிடித்தமான ஒன்றை மனிதன் மனதினுள்ளே தீபமாகப் ஏற்றிப் பிடித்திருப்பான். எப்போதாவது ஏற்ற சூழல் வாய்த்தால் அதை அவன் வெளிக்காட்டுவான். அது தான் வாழ்க்கை என்றே தோன்றுகிறது. Perfect concluding remarks. I love this.

    ReplyDelete