Tuesday, February 07, 2017

ஒரு சிறு இசை – வண்ணதாசன்

                 வண்ணதாசனுடைய இந்தக் கதைத் தொகுப்பை வாசிக்கும் முன்னர் அவரது முதல் தொகுப்பான ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்” வாசித்தேன்.  என்னுடைய பார்வையில் அவரிடம் நிகழ்ந்த மாற்றம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.

            ஏற்கனவே நான் முந்தைய பதிவில் சொன்னது போல வண்ணதாசனின் பார்வை நுண்ணோக்கியில் (மைக்ரொஸ்கோப்) பார்ப்பது போன்றது. ஒரு போஸ்ட்கார்ட் சைசில் உள்ள புகைப்படம் போல வாழ்வின் ஒரு சிறு பகுதியை மிக விரிவாகச் சொல்கிறவர்.  சில நேரங்களில் புகைப்பட்த்தில் என்ன இருக்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரியும். சில படங்களில் நாமே ஒரு சலனத்தைக் கற்பனை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

            அவருடைய கதைகளில் பெரும்பாலும் கதை நிகழ்களங்களின் பெயர்கள், தெருக்கள், ஊர்கள் அரிதாகவே சொல்லப்படும்.  ஆனாலும் எல்லா ஊர்களிலும், எல்லோர் வாழ்விலும் நிகழக்கூடியவையாகவே கதைகள் இருக்கும்.  இதில் ஒரு 'யுனிவர்சல்' தன்மை இருப்பதைக் காணலாம்.

            இத்தொகுப்பில் மிகச் சிறந்த கதைகள் என்று சிலவற்றைச் சொல்ல்லாம். ‘கல்பனா ஸ்டூடியோவில் ஒரு போட்டோ’, ‘சந்தனம்’ ஒரு பறவையின் வாழ்வு’ ‘தண்ணீருக்கு மேல் தண்ணீருக்குக் கீழ்’ இவைகளில் சில.  இவற்றில் உறவுகளில் நிகழும் அகப் புறச் சிக்கல்கள் மென்மையாக, இயல்பாக அழகாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. 

            ’கல்பனா...’ கதையில் போகிற போக்கில் ஒரு லாரி டிரைவரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு பழைய உறவின் புதிய பரிணாமம் பல ஆண்டுகளுக்குப் பின் அவருக்கும் நமக்கும் தெரியவருகிறது.  எந்த உணர்ச்சியும் மிகைப்படாமல், தெளிவாக, அறம்பற்றிய தீர்ப்புகள் இன்றி, இயல்பாக கதை சொல்கிறார்.  

            வண்ணதாசனின் கதைகளில் யார் மையப் பாத்திரம் என்பது முதலிலேயே தெரிவதில்லை.  கதையைப் படித்து முடித்ததும் தெரியலாம்.  ஏதோ ஒருவரியில் வருகிற யாரோ எதுவோ கதையின் மையப் புள்ளியாக இருக்கலாம்.  அந்த ஆச்சரியத்துக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.  ’தண்ணீருக்கு மேல்...’  கதையை இந்த வகையில் சேர்க்கலாம்.

            முதல் தொகுப்பிலும் இத் தொகுப்பிலும் இயல்புக்கு மீறீச் சில நிகழ்வுகள், மனிதர்கள் சொல்லாடல்கள் ஒன்றிரண்டு இருக்கின்றன. உதாரணமாக, ‘மன்மத லீலை’ கதையில் வயதில் மூத்த ஒருவர் தன் மகனைப் போன்ற வயதில், உறவில் உள்ளவனிடம் சொல்லும் வார்த்தைகள் இவை “உன் வீட்டுக்காரியை... சொப்பனத்தில் பாத்தேன். எப்படித் தெரியுமா? நிறை அம்மணமா. அரணாக் கொடி கூட இல்லை’.    ’கனியான பின்னும்’ கதை இயல்பான மொழியில் சொல்லப்பட்டாலும் கொஞ்சம் மெனக்கெட்டு அழகு பூசியது போல் தெரிகிறது.  வண்ணதாசனில் பலம் நுண்ணோக்கிப் பார்வை.
 
         பொதுவாக புகழ்பெற்ற மூத்த எழுத்தாளரை யாரும் எதுவும் சொல்ல விரும்புவ்தில்லை.  ஆனாலும் இதைக் கவனப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

            சிறு அல்லது எளிய குடும்பங்களின் அல்லது மனிதர்களின் எளிய பிரச்சனைகளை சொன்ன முதல் தொகுப்பிலிருந்து ஒரு வேறுபாடு தெரிகிறது.  கொஞ்சம்  டெலிகேட் ஆன ’அடல்ட்’ பிரச்சனைகளைக் கையாளும் முதிர்ச்சியும், அறம் குறித்த பார்வைகளை அவற்றின் மீது திணிக்காமல் இயல்பாக நிகழும் நிகழ்வுகளாக அவற்றை சொல்லிச் செல்வதில் இத் தொகுப்பு முதல் தொகுப்பிலிருந்து வேறுபட்டது. இது மற்றத் தொகுப்புகளினூடே நிகழ்ந்த விதம் குறித்து இப்போது என்னால் பேச முடியாது.  முதல் தொகுப்பில் தனது வார்த்தைகள், விவரணையில் அழகில் மயங்கிக் கதை சொல்லி, சில நேரங்களில் முடிவைத் திணிப்பது போன்ற முடிவுகள் உண்டு. உதாரணம் குற்றாலம் கதையில் வரும் கடைசி வரிகள் ‘குற்றாலத்துக்கு’ (போயிருக்கிறான்) என்ற உருவகம்.  

 இத்தொகுப்பிலும் சில இடங்களில் அழகில் மயங்கி வார்த்தைகள் அதிகமாக வரும் சில பகுதிகள் இருக்கின்றன. இந்தப் பண்பு, முதல் தொகுப்புடன் ஒப்பிடும் போது கடைசியாக வந்த தொகுப்பில் கொஞ்சம் குறைவுதான் என்றாலும், தன் அழகின் போதையில் மயங்குவது நமது இயல்பு என்ற வகையில் அவற்றைத் தள்ளிவிடலாம்.  ஏனெனில் பலகதைகள் நன்றாக இருக்கின்றன.  நல்ல தொகுப்பு. ***

No comments:

Post a Comment