Monday, August 14, 2023

 இன்றைய அறம்

            ’மனிதன் ஒரு சமூகமாக வாழும் மிருகம். முதலில் தனது கூட்டத்தில் வாழ்ந்த மனிதக் குரங்குகள், இனக் குழுக்களாக மாறும் போது மற்றக் கூட்டங்களில் உள்ள மனிதர்களுடன் உறவு கொள்ள வேண்டியிருந்திருக்கும். மனிதர்கள் மனிதர்களாக வாழ, மிருக குணங்களிலிருந்து விலகிச் செல்லத் தொடங்குகிறார்கள். மற்ற மனிதர்களுடன் சேர்ந்து வாழப் பழகப் பழகப் பண்பாடு வளர்கிறது.

 மனிதர்கள் மிருக குணங்களை முற்றிலும் விட்டுவிட முடியாது. பெரும்பாலான மனிதர்களின் நலன்களுக்காக சுயநலனை விட்டுக் கொடுப்பதையே நாகரீகத்தின் வளர்ச்சி காட்டுகிறது. சமூகமாக வாழப்பழகிய மனிதக் குரங்குகள் கூட, அவற்றின் எண்ணிக்கை 150ஐத் தாண்டும் போது பிரிந்து விடுகின்றன. ’மனிதர்கள், மற்ற மிருகங்களை விட மேன்மைப்பட்டிருப்பதற்குக் காரணம் அவர்கள் லட்சக்கணக்கானவர்கள், கோடிக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்கிறார் பேராசிரியர் யுவல் நோவா ஹராரிகோடிக்கணக்கான மனிதர்கள் சேர்ந்துதேசம் என்ற அமைப்பைச் சட்டங்கள் என்ற கற்பனை வரையறைகளால் நிறுவுகிறார்கள். அந்தச் சட்டங்களின்படி நடந்து கொள்வதன் மூலம் பல இனக்குழுக்கள் அடங்கிய  ‘தேசம் என்ற அமைப்பை காப்பாற்றிக் கொண்டு, தம்மையும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை அமைப்புக்குள் கொண்டுவருகிறார்கள். ஒரு மனிதக் குரங்கின் பார்வையில் பார்த்தால், இத்தனை மனிதர்களின் நலனைக் கணக்கில் எடுத்துக் கொள்வதே கற்பனை செய்ய முடியாதது.   ஆனால் மனிதர்கள் நடத்திக் காட்டுகிறார்கள். நாகரீக வளர்ச்சி இதை சாத்தியமாக்குகிறது.

மனிதர்களிடம் வளர்ச்சியடைந்திருக்கும் இந்த ஒன்றிணைந்து, ஒத்திசைந்து இயங்கும் இந்தத் திறமைகள் எளிதில் வந்தவைகள் அல்ல, என்பதைத்தான் நாம் இன்னும் நமது வீட்டில், உறவினர்களினிடையில் தெருவில்,, ஊரில், தேசத்தில், சர்வதேச அளவில் நடத்திக் கொண்டிருக்கும் சண்டைகளும் போர்களும் நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. சுயநலம் என்பது நமது உள்ளுணர்வு (இன்ஸ்டிங்ட்). அதற்காகப் போராடுவது மிருகங்களின் உள்ளுணர்வு. அது மனிதர்களிடமும் இருக்கிறது. அனைவரின் நலத்தையும் கணக்கில் எடுக்கிற இயல்பே நாகரீகம் என்று அழைக்கலாம். அதிகபட்ச மனிதர்களின் அதிகபட்ச நலன்களைப் பேண விரும்புகிறவர்கள், அதிக நாகரீகமடைந்த மனிதர்களாகக் கருதப்படவேண்டும்.

மிருகங்களிடம் இருக்கும் வன்முறை உள்ளுணர்வு இயல்பானது. அதனால் மனிதர்களிடம் (அவன் இன்னும் ஒரு மிருகம் என்பதால்) அதன் பாதிப்புக்கள் இருக்கின்றனஆனால் வன்முறையை, சண்டையிடுவதை, போரிடுவதைத் தவிர்ப்பதும், மற்றவர்களுடன் ஒத்துழைத்து, ஒத்திசைந்து வாழ்வது செயற்கையானது. மனித அறிவின் வளர்ச்சியால், வாதங்களின் அடிப்படையில், இவ்விரண்டையும் பயன்படுத்தி, அதிகபட்ச மனிதர்களின் அதிகபட்ச நலன்களைக் காக்க வேண்டும் என்ற முடிவை அவன் எட்டுவது சிந்தனை செய்வதன் பலனாகும்இது நமக்கு நாமே இட்டுக் கட்டிக் கொள்வது. பெரும்பாலானோரின் அதிகபட்ச நலம் என்ற முடிவை முதலிலேயே தீர்மானித்து அதை நோக்கிய வாதங்களை நாம் கட்டமைக்கிறோம்மனிதர்களிடையே இந்தச் சிந்தனை இல்லையெனில் காட்டு மிருகங்களைப் போலவே ஒவ்வொரு துண்டு மாமிசத்துக்கும் நாம் போரிட்டுக் கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும். நாகரீக வளர்ச்சி அடைந்ததாக நாம் கருதிக் கொண்டிருக்கும் நாம், ஒவ்வொரு அடி நிலத்துக்கும், ஓரடி வரப்புக்கும், சண்டையிடுவதும் நீதி மன்றங்களில் வருடங்கணக்கில் வழக்காடுவதும் இந்த உள்ளுணர்வின் விளைவுகள் என்று கொள்ளலாம். இவை மிருக குணத்தின் வெளிப்பாடுகள் அன்றி வேறென்ன?

 எனவே, எல்லா வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் எல்லோருடைய நலன்கருதி உரையாடி உடன்பாடு அடைந்து, தீர்த்துக் கொள்வதே, மனித குணத்தின் உச்சபட்சச் சிறப்பாகும்அதாவது தன்னலம் ஒன்றையே உள்ளுணர்வில் கொண்டிருக்கும் விலங்குகளைப் போலல்லாமல் இருப்பதே மனிதனாக இருப்பதற்கான அடையாளமாக வரையறுத்துக் கொள்ள வேண்டும்இது உள்ளுணர்வினால் எழுவதல்ல என்பதனால், நமக்கு நாமே வாதங்களின் அடிப்படையில், நாம் எழுப்பிக் கொள்ள வேண்டியதுஇதை லட்சியம் அல்லது குறிக்கோள் என்று வைத்துக் கொள்ளலாம் அல்லது மானிட அறம் என்று அழைக்கலாம்.

சமூக நடைமுறைகள், பொருளாதார, அரசியல் மாற்றங்கள் மனித சமூகத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ‘மாற்றம் ஒன்றே மாறாதது என்பது நமக்குத் தெரிந்த புத்தரின் மகா வாக்கியம். அவ்வக் காலத்துக்கான அறங்களை, விழுமியங்களை அவ்வக் காலத்து அறிஞர்கள் வரையறுக்கிறார்கள். ஒரே காலத்தின் வெவ்வேறு ஆளுமைகள் ஒரே விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் பார்ப்பதும் நடந்திருக்கிறது. இவையெல்லாம் இயங்குவதன் விளைவாக புதிய விழுமியங்கள், அறங்கள் தோன்றுகின்றன.

மரபு வழியாக வந்த சிந்தனைகளின் அடிப்படையில் பல ஆயிரம் ஆண்டுகளாக இப்படிப்பட்ட அறங்களை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இன்று இந்தியா முழுவதும் பெரும்பான்மையானவர்கள்  (குறிப்பாக, நாகரீகம் அடைந்தவர்கள் என்று கருதிக் கொள்கிறவர்கள்) தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமலே மனு நீதி எடுத்துரைக்கும் அறங்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்சாதி, பெண்கள் நிலை, சமூக உறவுகள் இதில் அடங்கும்இதற்கு மாறாக, சமண புத்த மதங்கள் சற்று வேறான மாற்றுப் பாதையை வைக்கின்றனஇவற்றையும் பின்பற்றுகிறவர்கள் இருக்கிறார்கள்.   ஆனால் பெரும்பான்மை மக்கள் வைதிக ஆச்சாரங்கள்  (அவை என்னவென்று தெரியாமலே)மீது நம்பிக்கைகள் வைத்திருக்கிறார்கள். சமண, புத்த மத நம்பிக்கைகள் கூட சில அம்சங்களில் இன்றைய சமூக நாகரீகத்துக்கான அறங்களில் இருந்து சற்றே விலகியே உள்ளன.            

மனுநீதி அல்லது புத்த சமண மதங்கள் வலியுறுத்திய அறங்கள் அந்தக் காலகட்டங்களுக்குப் பொருத்தமானவையாக இருந்திருக்கக் கூடும்இந்த மரபுகளில் அறங்கள் சொல்லப்படக் காரணங்கள் அப்போது இருந்திருக்கக் கூடும்இவை அவற்றிற்கு முன்னிருந்த மோசமான அறங்களை  விட  அந்தக் காலத்தின் முன்னேற்றமான, சமூக வளர்ச்சிக்குத் தேவையான கருத்துக்களாக இருந்திருக்கக் கூடும். ஆனால் இன்று, மனிதர்களின் அடிப்படை உரிமைகள் என்று (Rights of Man, Thomas Paine)  சில அறங்கள், விழுமியங்கள், உலகமெங்கிலும் நிறுவப்பட்டிருக்கின்றனஎல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்கள், எல்லா மனிதர்களும் சமம், அவர்களுக்கென்று அடிப்படை உரிமைகள் இருக்கின்றன.   முன்பு போர்கள் கொலைகள் என்று வன்முறை மூலம்  நிறைவேறி வந்த அதிகாரப் போட்டிகள், மக்களாட்சி என்ற அமைப்பில் வாக்குகள் மூலம் முடிவு செய்யப்படுகின்றன. மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகள் அரசியல் நிர்ணயச் சட்டங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த உரிமைகள் அறங்கள் அல்லது விழுமியங்களே இன்றைய சமூக அறங்களின் செயல்பாடுகளின் அடிப்படையாக இருக்கின்றன.

பின்னால், பழைய மனுநீதியோ, புத்த சமண மதங்கள் சொல்லிய அறங்களோ பயன்படுமா என்ற கேள்வி எழுகிறது.

மக்களாட்சிக்கு முந்தைய கால கட்டங்களில் மிக முக்கியமான இரண்டு நிறுவனங்கள், (1. அரசு, 2. மதம்) பெரும்பாலான சமூகம் முழுவதையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தன. (விதிவிலக்குகள் இந்த விதியையே நிறுவுகின்றன). இந்த இரண்டு நிறுவனங்களும் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை உறுதி செய்யும் நிறுவனங்களாக இருந்தன. மக்களாட்சித் தத்துவம் நிலைபெறுவதற்கு முன்னால் எழுந்த அறங்கள், விழுமியங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்ய வேண்டிய அளவு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன, நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. எல்லாக் காலகட்டத்துக்கும் பொருந்தும் அறங்கள் விழுமியங்கள் இல்லவே இல்லை.

 ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குரல் கருத்தியல் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது தகாது என்கிறது. அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் ஒலித்த லட்சியக் குரல். அது கனவாகவே இருந்துவந்தது. ஆனால், எல்லோரும் சமம் என்ற கருத்தாக்கம் இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்னர், மக்களாட்சித் தத்துவம் உயிர்பெறும் போதுதான் உலகெங்கும் அரசியல், சமூக வெளியில் உரத்து ஒலிக்கிறது, பல நாடுகளில், பல விஷயங்களில் நடைமுறைச் சாத்தியமாகியிருக்கிறது.

தனிமனிதனின் உரிமைகள் என்றுதாமஸ் பெய்ன் என்ற அமெரிக்க அறிஞர் நூல் எழுதிய போதும், பிரஞ்சுப் புரட்சியின் போதும், அமெரிக்கப் புரட்சியின் போதும், இங்கிலாந்தில் நடந்த அரசருக்கெதிரான புரட்சிகள் மாற்றங்களின் போதும், முதல் முறையாக மனிதன், ‘தனித்துவம் பெற்றவன் என்ற குரல் அரசியல் போராட்டங்களில் எழுகிறது. இன்று வளர்ந்த நாடுகளில், ‘ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் பெற்றவன் என்ற கருத்து வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் இன்றும் கூட தனிமனிதனின் உரிமைகள் பற்றிப் பேச முடிவதில்லைதனிமனிதனை அவனது, சாதி, மத, இன, மொழி இன்னும் பல அடையாளங்கள் வழியே சமூகம் குறுக்கப் பார்க்கிறதுஒவ்வொரு மனிதனும் சிந்திக்கும் திறன் உள்ளவன் என்பதை இந்த அடையாளங்கள் மறைத்துவிடுகின்றனதனிமனிதனின் வாக்கு, அவனுடைய உரிமைகளின் அடையாளமாகும். இதை ஒப்புக்கொள்கிற மக்களாட்சியின் சக்திகளான அரசியல் கட்சிகள் கூட, தனிமனிதன் தன் தேவைகளின் அடிப்படையில், சுயதேர்வின் அடிப்படையில் கட்சிகளில் சேருகிறான் என்ற கருத்துக் கூட மறைக்கப்படுகிறதுஅவன் இன்னும் கூட்டு அடையாளங்களான, சாதி, மத இன, மொழி அடிப்படையிலேயே அரசியல் கட்சிகளிலும் மற்ற நிறுவனங்களிலும், பெரும்பாலான நேரங்களில் அங்கீகரிக்கப்படுகிறான். இல்லையெனில், அந்த அடையாளங்களின் அடிப்படையில் அவனுக்குக் கட்சிகளில், மற்ற நிறுவங்களில் உரிமைகளும் பொறுப்பும், பதவியும் அதிகாரமும் வழங்கப்படுகிறது. உண்மையைச் சொல்லப்போனால், அரசியல் சட்டம் முன்வைக்கும் சமத்துவம் என்ற அறம், எந்த சமூக நிறுவங்களிலும்  முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை. அதற்கான போராட்டம் எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

தனிமனிதனுக்கு உரிமைகள் உண்டென்றால், அவன் தனித்துவம் பெற்றவன் என்றால், அவனுடைய நடத்தை சமூகத்தில் அவனது இடத்தைத் தீர்மானிக்க வேண்டும். அதாவது, அந்தணன் செய்வதெல்லாம் அறம், அல்லது குலத்தின்படி, கோத்திரத்தின்படி மனிதர்களுக்கு அறமும் சமூக நிலையும் கிடைக்கும் என்பது மாறவேண்டும்அறம் செய்கிறவன்தான் உயர்ந்தவன் என்ற நிலை உருவாக வேண்டும். (’அந்தணன் என்போன் அறவோன்). இந்த தத்துவார்த்த நிலை, சமண, புத்த மதங்களில் இருந்தது என்றாலும், அவற்றில் இருந்த பல விழுமியங்கள்உதாரணமாக பெண்ணுரிமை குறித்த அறங்கள் காலத்திற்கு ஒவ்வாதவையாக இருக்கின்றன.

 இன்றைய அறம் என்பது எது? இந்திய மக்களின் மனதில், நூல்களில் செயல்முறைகளில், வாழ்வில் ஊடுருவி நிற்கும், பிறப்பால் தீர்மானிக்கப்படும், சாதிக்கொரு நீதி என்று பேசும் வைத்திக அறமா? அல்லது பிறப்பால் அல்லாமல், மனிதனின் நடத்தையால் அவனது மேன்மை தீர்மானிக்கப்படும் என்ற (புத்த, சமண மதங்களின் லட்சியமாக ஒலிக்கின்ற) அறமா?

நுட்பமாகப் பார்த்தால், புத்த சமண மதங்களும் சாதி இல்லையென்று சொல்லுவதில்லைஅவற்றின் அடிப்படையில் மேன்மை தீர்மானிக்கப்படுவதில்லை என்றே சொல்கின்றன. விடுதலையை நோக்கிய பார்வையில் அது ஒரு படிக்கல். புத்த பெண் துறவிகள், சமணப் பெண் துறவிகள் ஆண் துறவிகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற விதிகள் இருந்தன. பெண்ணடிமைத்தனம் என்பது இந்து மதத்துக்கே உரித்தானது அல்ல.

புத்த மதத்தில் மனிதர்களின் அறச் செயல்பாட்டின் அடிப்படையில் இருபிரிவுகள் இருந்தன. ஒன்று துறவிகள். மற்றொன்று துறவிகளின் தேவைகளை நிறைவேற்றும் குடும்பத்தினர். துறவு என்பது வாழ்நாள் தேர்வாக இருந்தது. இரண்டுமே பெரும்பாலான மக்களின் ஆசாபாசங்களை அடக்கிவைக்கும் நிலைகளாக இருந்தன. அவற்றைப் பின்பற்றுவது கடினம்பலவிதத் தொழிகளைச் செய்யும் பெரும்பாலான மனிதர்களின் சாதாரண வாழ்வுக்கு புத்த சமண மதங்களின் போதனைகள்  நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராததாக இருந்தன.

இந்துமதத்தில், துறவும், உறவும், அறமும் நடைமுறை வாழ்வுக்கேற்ப எளிமையாக்கப்பட்டன. ஏற்கனவே இருந்த வர்ணப் பிரிவினைகள் அறத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டன. பெண்கள் ஆண்களுக்கும், கீழ்சாதிக்காரர்ககள் மேல் சாதியினரின் அடிமைகள் என்று நியாயப்படுத்தப்பட்டனர்பல நூற்றாண்டுகளாக இவை மக்களின் வாழ்வில் நிலைபெற்றுவிட்டன.

புத்த, சமண மதங்களின்நன்னடத்தைக் கோட்பாடுகளை மடைமாற்றி, ஏற்கனவே இருந்த சாதியை இந்து மதம் அறமாக்கியது. அது போலவே, துறவிகள், இல்வாழ்க்கை வாழ்வோர் என்ற இரு பிரிவுகள் சமண, புத்த மதக் கொள்கைகளில் இருந்தன. அதற்கேற்ப இவ்விரு பிரிவுகளுக்கான நன்னடத்தை விதிகள் வரையறுக்கப்பட்டனஇவற்றை உள்வாங்கியும், சிறிது மாற்றங்கள் செய்தும், வைத்தீக மதக் கோட்பாடுகளில்  வாழ்க்கை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இவை முறையே பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வனப்பிரஸ்தம், சன்யாசம். அதாவது புத்த சமண மதங்களில் (வாழ்நாளெல்லாம் இருந்த) பிரிவினை, ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒவ்வொரு கால கட்டத்தில் பின்பற்றப்படவேண்டிய அறங்களாக மாறினஇவை, கடுமையான நன்னடைத்தை விதிகளை உள்ளடக்கிய சமண, புத்த நெறிகளைவிட, பின்பற்ற எளிதாக இருந்திருக்க வேண்டும்.

பிரம்மச்சாரியாகவே அல்லது துறவியாகவே வாழ்நாள் முழுவதும் இருப்பதே எல்லாவற்றிலும் சிறந்தது என்ற புத்த சமண மதங்கள் எங்கே? கொஞ்ச காலம் பிரம்மச்சாரியாக, கொஞ்ச காலம் சுகங்களை அனுபவித்துக் கொண்டு, கொஞ்ச காலம் வீட்டிலேயே பற்றற்றவராக இருந்து கொண்டு, வயதானதும் சன்னியாசம் வாங்கிக் கொள்வதும் பின்னர் காட்டுக்குச் செல்வதுமானது எளிய நடைமுறையாக இருந்திருக்க வேண்டும்நம் நாட்டின் அந்தக் காலத்தில் வாழ்நாளின் நீட்சி குறைவு என்பதை கருத்தில் கொண்டால், இந்த நான்கும் தத்துவார்த்தமாக இருக்குமே தவிர, பெரும்பாலானோர் இரண்டாம் மூன்றாம் கட்டங்களிலேயே இறந்திருக்கக்கூடும். தவிர, வயது இருக்கும் போது லௌகிக சுகங்களை அனுபவித்துவிட்டு, கடமைகளை முடித்துவிட்டு பிறகு, ஆசாபாசங்களைத் துறந்து, சொர்க்கத்துக்குப் போகலாம் என்பது சமூகத்தின் தேவைகளை, வீட்டில் தேவைகளை முழுமையாக செய்ய இடம் தருகிறதுஉறவுகள் அறம், துறவறம் என்பன ஒரு சங்கிலியின் நீட்சி என்று சனாதனம் நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இந்த நான்கும் முடிந்த பின்னால் சனாதன மரபுகளைப் பின்பற்றினால் சொர்க்கம் கிடைக்கும்.

இன்றைய நிலையில் மனித வாழ்வின் உயரிய குறிக்கோள் என்னவாக இருக்க முடியும்? சொர்க்கத்தை அடைவதா? விண்ணையும் மண்ணையும் ஆய்ந்த அறிவார்ந்த விஞ்ஞானிகள் தரும் விடைகளின் அடிப்படையில், அறிவார்ந்த அரசியல் தலைவர்கள் சொர்க்கத்தை ஒரு குறிக்கோளாக வைக்க முடியாது. மத நம்பிக்கைகளை வைத்து அரசியல் செய்கிற கட்சிகள் கூட, இப்போது கடும் உழைப்பைத் தாருங்கள், நீங்கள் இறந்தபின் சொர்க்கத்தைத் தர உறுதியளிக்கிறேன் என்று எந்த அரசியல் வாதியும் உறுதி கொடுப்பதில்லை. அதன் அடிப்படையில் வாக்குகள் சேகரிப்பதில்லை. மக்கள் இந்த பூமியில் நல்வாழ்க்கை தருவேன் என்று வாக்குறுதி தருவோர்க்குத்தான் வாக்களிக்கிறார்கள். எனவே நடைமுறை வாழ்க்கையைப் பொறுத்தவரை, பக்தி உள்ளவர்கள் கூட ஆட்சி செய்கிறவர்கள் இந்தப் பிறவியில் நல்லாட்சியை, பலன்களை வழங்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

 நடைமுறையில் கடவுள் இல்லையென்று விஞ்ஞானம் நிறுவி விட்டாலும், மனிதர்கள் மனதிலிருந்து கடவுள் நம்பிக்கை போகவில்லை. ஆனால் மனிதர்கள் அனைத்துச் சுகங்களையும் இந்த பூமியிலேயே அனுபவிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்இது சொர்க்கத்தை இங்கே காணவேண்டும் என்ற  கவலையன்றி வேறென்ன?  ‘செத்த பிறகு சிவலோகம் போகலாம் என்று சொல்கிறவர்கள் கூட இறந்த பின் அது நடக்குமா என்ற சந்தேகம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அனைவருக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் விஞ்ஞான முன்னேற்றத்தின் பயன்களுக் கிடைக்க வேண்டுமென்றால், அனைவரும் அந்த வசதிகள் பெறத் தகுதி உள்ளவர்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்அப்படி ஏற்றுக் கொள்வதற்கு அனைவரும் சமம் என்ற அறம் மிகவும் அவசியமானது

இந்தியர்கள் அனைவருக்கும் அரசியல் பொருளாதார சமூக சமத்துவம் என்ற இந்திய அரசியல் சாசன வாசகம் தான் இன்றைய அறம். இதை மறுக்கும், இதை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் அனைத்தும் இன்றைய அறத்துக்கு எதிரான செயல்களாகவே கருதப்படவேண்டும்

யாரையும் வன்முறையின் மூலம் கொலை செய்வதற்கோ, உரிமைகளை மறுப்பதற்கோ முயற்சி செய்வது நமது மிருக உள்ளுணர்வின் வெளிப்பாடுஅனைவரும் சமம் என்ற அறத்தின் முன்னால் அடுத்தவன் மீது வன்முறையைப் பயன்படுத்துவது மிருகங்களின் உள்ளுணர்வை மட்டுமே தக்கவைத்துக் கொண்டிருக்கிறவர்களின் மனநிலை. நாம் நாகரீகமானவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்கு மூன்று தரவுகளை வைத்துக் கொள்ளலாம்:

1.         எல்லா மனிதர்களும் சமம் என்ற அரசியல் சாசனம் வகுத்த அறத்தை நம்மால் பின்பற்ற முடிகிறதா?

2.         மிருகங்களின் உள்ளுணர்வான வன்முறையின் பிடியிலிருந்து நம்மால் விடுபட முடிகிறதா?

3.         மனிதர்கள் சுதந்திரமானவர்கள், அவர்களுக்கென்று தனித்துவமான உரிமைகள் இருக்கின்றன என்பதை நம்மால் உணர முடிகிறதா?

இந்தக் கேள்விகளுக்கு விடைஆமாம் முடியும் என்றிருந்தால் நாம் நாகரீக மனிதர்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது

No comments:

Post a Comment