Monday, August 14, 2023

 

1.                      புதிய பக்தியியக்கம்

 

இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நிலத்தில், இறைநம்பிக்கை என்றும் நிலைத்திருப்பதாகக் காட்சி தந்தாலும், அந்த நம்பிக்கைகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து தவிர்க்க இயலாத மாற்றங்களை அடைந்தே வந்திருக்கின்றன.  ஒவ்வொரு நூறு இருநூறு ஆண்டுகளுக்குள்ளாக, குறிப்பிட்ட கடவுள்களும் அவர்கள் குறித்துப் பெரும்பான்மை மக்களிடம் இருக்கும் மதிப்பீடுகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இது தவிர ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின், ஒவ்வொரு தனிமனிதனின்  கடவுள்களும் நம்பிக்கைகளும் கூட சிறிது காலங்களுக்குள் மாறிவிடும் நிலை இருக்கிறது.  உதாரணமாக, சங்ககாலத்தில், அல்லது அதற்குப் பிறகு வணங்கிய அதே கடவுள்களை வணங்குகிற பழக்கம் அரிதாக இருக்கின்றது.  பெரும்பாலும் வழிபாட்டுக்குரிய கடவுள்கள் மாறிவிடுகின்றனர். அது தவிரவும் நவீன யுகத்தில் புதிய ‘பகவான்கள் அவதாரம் எடுத்துவிடுகின்றனர். ‘சத்ய சாயிபாபா, ஷீரடி சாயிபாபா, மேல்மருவத்தூர் அம்மா வடக்கே ஓஷோ, இன்னும் பல பாபாக்களும், ஏன் சில ’பாபிக்களும் கூட (அம்மாக்களும்) உதாரணங்கள். புதிய நம்பிக்கைகள் வர வர, பழைய நம்பிக்கைகள், நிறுவனங்கள் தொடர்ந்தாலும் பெரும்பான்மை மக்களிடையே வழக்கொழிந்து போய்விடுகின்றன.  எனவே விஞ்ஞானத்தில் தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருப்பது போல கடவுள்களும், நிறுவனங்களும் அவற்றின் மீதான மக்களின் பெருவிருப்பங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. 

தமிழகத்தின் அறியப்பட்ட வரலாறு தொடங்கும் காலத்தில் சமண, பௌத்த மதங்களின் மேலாண்மைக்குக் காரணம் சமூகத்தில் வணிகம் மிகப்பெருகி, வணிகர்களின் மதிப்பு வெகுவாக உயர்ந்ததுவே ஆகும்.  வணிகர்கள் செலுத்தும் வரிகள், அவர்கள் ஆள்பவர்களுக்கு அளித்த பரிசுகள், பொன் அனைத்தும் அவர்களுடைய செல்வாக்கு வளர உதவின.  ஆளும் குழுக்களுடன் சமரசம் செய்து கொண்டு, தமது வாழ்வை உயர்நிலையில் வைத்துக் கொண்ட வணிகர்களின் தேவைக்குப் பொருத்தமான அறங்களை சமண பௌத்த மதங்கள் கொண்டிருந்தன.

சமண,பௌத்த மதங்களின் வளர்ச்சி பல நூறாண்டுகள் வரை தமிழக வரலாற்றில் பல தலையாய மாற்றங்களைக் கொண்டுவந்தது.  அவற்றில் ஒன்று அதுவரை வாய்ப்புக் கிட்டாத மக்களிடையே கல்வியைப் பரப்பியது ஆகும். அது மதம் சார்ந்த புனித நம்பிக்கைகளைப் பரப்புவதற்கே என்று கொண்டாலும், நெல்லுக்குப் பாய்ந்த நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்தது. அதன் பயன்கள் சிலரையாவது சென்றடைந்தன.  இரண்டாவதாக, வைத்தீக, சனாதன மரபுகள் முன்வைத்த பிறப்பின் வழி நிறுவப்பட்ட ஜாதி வரிசையை ஏற்றுக் கொள்ளாமல், அவரவர்கள் செயல்கள் மூலம் தத்தமது சமூக மதிப்பை, நிலையை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற கருதுகோளை பொதுவெளியில் கொண்டு வந்ததாகும். முதலில் இது மிகவும் கவர்ச்சிகரமான கருதுகோளாக, பெரும்பான்மையான அடித்தள மக்களுக்குச் சார்பானதாக இருந்தது.  இவ்விரண்டு மதங்களையும் பின்பற்றியோர் வணிகர்களாக இருந்தது தற்செயலாக நிகழ்ந்தது அல்ல.

சமணமும் பௌத்தமும், சனாதனத்தால் பிராமணர்களுக்கு அடுத்தடுத்த நிலையில் இருப்பவர்களாகக் கருதப்பட்ட, சத்திரியர்கள், வைசியர்கள் இரு குழுக்களையும் புனிதர்கள் நிலைக்கு உயர்த்தியதோடல்லாமல், அவர்கள் ஈட்டிய பொருள்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அறத்தின் சொல்லாடல்களை மாற்றியமைத்தன.  இதன்படி நல்லொழுக்கம் மூலமாக இம்மையிலும் மறுமையிலும் ஒருவன் மேல்நிலையை அடைய முடியும் என்று போதித்தன.  ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்தை முன்வைத்தது. (இதே கருத்தை சனாதனத்தின் ஜாதி நம்பிக்கைக்கு எதிராக இன்றைய அரசியலிலும் வைக்கிற இயக்கங்கள் உண்டு.  கன்னியாகுமரியில், விவேகானந்தர் பாறை, சனாதன இந்துத்துவத்தைச் (அதன் சீர்திருத்தக் கருத்துக்களையே விவேகானந்தர் சொல்ல முயன்றார் என்றாலும்) சுட்டி நிற்க, திருவள்ளுவரின் சிலை, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்தை அடையாளப்படுத்துவதாக அமைக்கப்பட்டிருக்கிறது.  இந்தப் போராட்டம் தொடர்கிறது.

 சமண பௌத்த நம்பிக்கைகளில் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட நிலவுடைமையாளர்கள், தங்கள் ஆதிக்கத்தை மீட்டெடுக்க சைவம், வைணவம் என்ற இரு சமயங்களை, பக்தியின் பெயரால் பெரும்பான்மை மக்களை ஒன்று திரட்டின. பக்தியினாலே இறப்புக்குப் பின்னர் எல்லாம் அடையலாம், இம்மை வாழ்வு வேண்டத்தக்கதல்ல, மீண்டும் பிறவாத வீடு பேறு அடைவதே வாழ்வின் நோக்கம் என்ற கருதுகோள்களை முன்வைத்தன.  எவ்வளவு தாழ்ந்த ஜாதியாக, வர்க்கமாக இருந்தாலும் கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை இந்தச் சமயங்கள் அந்தக் காலகட்டத்தில் முன்னிருத்தின. அதன் மூலம் அனைத்து மக்களையும் பக்தியின் பெயரால் அணிதிரட்டின. சமண பௌத்த மதங்களின் ஆதிக்கத்தை குறைத்து, சைவ, வைணவ மத நம்பிக்கைகளை பரப்பின. இந்த சமயப் போர்களின் பின்னால் நிகழ்ந்தது ஆதிக்கத்துக்கான போராட்டம் என்பது வரலாறு.  

ஆனால், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, மீண்டும் பலம் பெற்ற வைதீகம் ஏழையாக இருந்தாலும், (எண்ணிக்கையின்படி) அரசியல் சக்தியற்றவர்களாக இருந்தாலும் பிராமணர்களை உயர்ந்த இடத்தில் வைத்தது. அவர்களுக்கு சடங்காசாரங்கள் மூலம் அனைவரிலும் உயர்ந்த இடத்தை அளித்தது.  ஏனெனில் அவர்கள் ‘இப்பிறப்பில் உயர்வுக்காகவும், மறுபிறப்பு அல்லது அதற்கடுத்த படியான வீடுபேறு அடையவும் யாகங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடத்தும் வகையில் வேதம் கற்றவர்கள், சடங்காசாரங்களை நிறைவேற்றுகிறவர்கள்.   வர்ணங்களின் பெயரால், வர்க்க வேறுபாடுகளால், சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தியதும் அவற்றை தொடர்ந்து நிலைக்கச் செய்வதும் இதன் விளைவுகளாக இருந்தன.

இன்று, பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவும் அரசியல் பொருளாதாரத் தளத்தில்,  சமத்துவம் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முன்வைத்த கருத்தாக்கம் கேலிக் கூத்தாக ஆகிவிட்ட, ஆக்கப்பட்டுவிட்ட நிலை இருக்கிறது. மத நம்பிக்கைகளும், புதுப்புது துறவிகளால் கட்டப்படும் புதிய நவீனச் சொல்லாடல்களைப் பரப்பிவிடும் நிறுவனங்களும் பழைய நம்பிக்கைகளைப் புதுப்பிக்க உதவுகின்றன. இவற்றின் சொல்லாடல்கள் பழைய சமண, பௌத்த மதங்களுக்கு எதிரான சைவ, வைணவச் சொல்லாடல்களையே நினைவுபடுத்துகின்றன.

அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிகொடுத்த அரசியல் பொருளாதார மற்றும் அனைத்துச் சமத்துவங்களும் இன்றைய நிலையில் பெருவணிகம், உலகமயமாக்கல் என்ற பெயரில் ஆதிக்கம் செய்யும் பன்னாட்டு நிறுவங்கள், உள்நாட்டுப் பெருமுதலாளிகள் தங்கள் மேலாண்மையை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த யதார்த்தம், ’அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சமத்துவம் என்ற அரசியல் அமைப்புச் சட்டம் முன்வைக்கும் குறிக்கோளுக்குத் தடையாக இருக்கின்றது. 

இந்தியா போன்ற ஏழ்மையும் வறுமையும், கடும் ஏற்றத்தாழ்வுகளும் உள்ள நாட்டில், பொருளாதார வளர்ச்சி அனைவருக்கும் சென்றடையாத சமூகத்தில், அரசியலும், இயற்றப்படும் சட்டங்களும், நீதி மன்றங்களின் தீர்ப்புகளும் ’சமத்துவம் என்ற அனைத்திலும் மேலான கருதுகோள் என்ற சோதனையின் வெளிச்சத்தில் ஒவ்வொரு முறையும் விவாதிக்கப்படுகின்றன.  இந்த விவாதங்கள் பல நேரங்களில் பெருமுதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் இவற்றின் செயல்பாடுகளுக்கு அவ்வப்போது தடையாக இருக்கின்றன.  இதிலிருந்து விடுபடவே தாராளவாதம், உலகமயமாக்கம் என்ற பெயரில், ’எல்லா முன்னேறிய நாடுகளும் இதைத்தன் செய்கின்றன என்ற காரணத்தைக் காட்டி வணிகர்களுக்கும், பெருமுதலீட்டாளர்களுக்கும் சாதகமான அரசியல் பொருளாதாரச் சூழலை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன.  யார் வேண்டுமானலும் தொழில் தொடங்கலாம், வங்கிகளில் கடன் பெறலாம், முன்னேறலாம், முதலாளியாகலாம் என்ற கனவை இவை விதைக்கின்றன.  இது முந்தைய பக்தியியக்கக் காலத்தில் ஒலித்த ‘யார் வேண்டுமானாலும் பக்தியின் மூலம் வீடுபேறு அடையலாம் என்பதன் மறுவிளக்கமே ஆகும். முதலில் வருகிறவர்களுக்கு மட்டுமே பரிசு என்று அறிவித்து விட்டு, போட்டியின் பலன்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று ஓட்டப்பந்தயம் நடத்துவது போன்றதே இது.

இந்த இடத்தில் தான் இன்றைய அரசியல் பொருளாதாரத் தேவைகளுக்காக மதத்தையும் பக்தியையும் பயன்படுத்தும் ‘பக்தியியக்க கால உத்தி செயல்படுத்தப் படுகிறது.  மதத்தை முன்னிருத்தி அரசியல் செய்யும் கட்சி, இம்மையில் சமத்துவம் பெறமுடியும் என்று, அரசியல் சாசனம் கொடுத்த ஒரு அரசியல் பொருளாதாரக் கனவை மாற்றியமைக்கிறது.  அக்கட்சி பின்பற்றும் வலதுசாரிக் கொள்கைகள் மூலம் இந்தியாவில் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிக்கும்.  அதனால் லௌகிக வாழ்வில் துன்பங்கள் அதிகரிக்கும்.  அதற்குக் காரணம் தங்கள் சொத்துக்களை, வருமானத்தைப் பல மடங்காகக் பெருக்கிக்கொண்டிருக்கும் பெரும் பணக்காரர்கள், வணிகர்கள், அவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இருக்கும் ஏற்றத் தாழ்வு நிலை.  இதையெல்லாம் மறக்கடிக்கவேண்டியிருக்கிறது.  இம்மையில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் மறுமையில் அல்லது வீடுபேற்றில் பேரின்பம் காணலாம் என்ற மனநிலையை நிலைநிறுத்தி, இன்றைய அரசியல் சாசனக் குறிக்கோளான சமத்துவக் கொள்கையை தோற்கடிப்பதே இதன் நோக்கமாகும்.  இதையே ‘இரண்டாவது பக்தியியக்கம் என்று குறிப்பிட விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோயில், மதுராவில் கிருஷ்ணர் கோவில் என்ற கோஷத்தின் பின்னே ஒளிந்திருக்கும் கட்சியும் அதன் வலதுசாரி செயல்திட்டமும் பண்பாட்டுத் தேசியம் என்ற போர்வையில் முன்வைக்கும் வாதங்களையும் இரண்டாவது பக்தியியக்கம் என்றே குறிப்பிடலாம்.

            ஏற்கனவே ஓங்கியிருக்கும் இந்துமதவாதிகளும் நிறுவனங்களும், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துவதாகச் சொல்லி ஒரு மாயையை ஏற்படுத்துகிறார்கள்.  பிறகு, அதை ஒழிப்பதாகப் பாவனை காட்டி, தங்களின் அரசியல் மேலாண்மையைக் கட்டி நிலை நிறுத்த முயல்கிறார்கள். அதன் விளைவே இந்த இரண்டாவது பக்தி இயக்கம்

இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களே அதிகம் இருக்கும் இந்தியாவில், இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்களின் தாராளவாத, விடுதலையை நோக்கிய குரல்களை ஒடுக்கவும், சனாதன தருமத்தின் மேலாண்மையை நிறுவவும் இது தொடங்கப்பட்டிருக்கிறது.

            அரசியல் நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து, சனாதன தருமத்தின் நால்வருணக் கொள்கையை நேரடியாக ஆதரிக்காவிட்டாலும், அதன் முக்கியக் கூறுகளான, சடங்காசாரம், வேள்விகள் இவற்றை மீட்டுருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்துகிற  சனாதனிகளின் மேலாண்மையை நிறுவ எழுந்த இயக்கம்.  நேரடியாகச் சாதிய அமைப்பையும் அவற்றால் பயன்பெறும் ஜாதிகளின் மேலாண்மையையும் நிலை நிறுத்துவதற்காக உழைக்கின்றன. ஜனநாயக நாட்டில் அதை நேரடியாகப் பேச இயலாது என்பதால் கடவுள்களையும், பண்பாட்டுத் தேசியத்தையும் முன்னிருத்தி அதைச் செய்கின்றன.                                     

சிவனையோ திருமாலையோ பழைய பக்தியியக்கம் முன்னிருத்தியதைப் போல, சோழர்காலத்தில் சிவ வழிபாடு ஆதிக்கத்தின் குறீயீடாக இருந்தது போல, பலவித மத நம்பிக்கைகளையும் ஒடுக்கி, ராமன் அல்லது கிருஷ்ணன் என்னும் தெய்வங்களை  பெருந்தெய்வங்களாக்கி, நவீன இந்துப் பேரரசை நிறுவ முயல்கிறது. இந்தப் பேரரசின் ஒரே தன்னேரில்லாத் தலைவராக ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்யும் ஒருவர் வரவேண்டும். அவர் இருக்கிறார், எதிர்காலத்திலும் இருப்பார் என்றே அவர்களது கனவு தொடர்கிறது.  நிலமானிய, அரசாட்சிக் காலம் போல அனைவரும் அந்தப் பேரரசருக்கு அல்லது பேரரசுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

இந்துக்கள் ஒன்றிணைவோம் என்று முழங்கினாலும், ஜாதி வேறுபாடுகள் ஒழிய எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஜாதிகளைக் கணக்கில் கொண்டே தேர்தல் வியூகங்கள், பதவிகள் முடிவு செய்யப்படும். அம்பெத்கர் சொன்னது போல, ஜாதி வேறுபாடுகள் ஒழியாமல் இங்கே சமத்துவம் ஜனநாயகம் என்ற கருத்துக்கள் அரசியலில் நிலைபெற முடியாது.

முதல் பக்தியியக்கத்துக்கும், இன்றைய நிலையில் மதத்தை முன்னிருத்தி அரசியல் செய்யும் ‘இரண்டாம் பக்தியியக்கத்துக்கும் இடையில் முக்கியமான, நாம் அழுத்திச் சொல்லவேண்டிய வேறுபாடுகள் இருக்கின்றன.  இவைதான் நமக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட ‘சமத்துவம் என்ற குறிக்கோளை மீண்டும் அரசியல் யதார்த்தம் என்ற அரியாசனத்தில் அமர்த்த முடியும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.

முந்தைய பக்தியியக்கக் காலத்தில், நாத்திகத்தை, பொருள்முதல்வாதத்தைப் பேசியவர்கள் சமூகத்தில் விளிம்பு நிலைகளில் இருந்தார்கள்.  அவர்கள் சித்தர்கள் போன்ற வாழ்க்கை வாழ்ந்து தங்கள் கொள்கைகளைச் சொன்னார்கள், இன்றைய நிலையில், நாத்திகத்தையும் பொருள்முதல் வாதத்தையும் பேசுகிறவர்களுக்குப் பொதுவெளியில் பேச இடம் இருக்கிறது.  அவர்கள் மீது வன்முறைகள் ஏவப்பட்டாலும் ஏவப்படும் ஆபத்துக்கள் இருந்தாலும், டிஜிடல் ஊடகங்களின் மூலம் தமது கருத்தைச் சொல்வதற்கு வசதி இருக்கிறது. அதாவது தொடர்பு சாதனங்கள் இன்னும் முற்றிலும் அரசின் வசமாகவில்லை.  அதற்காக அரசு கடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்றாலும் கூட.

முந்தைய பக்திக்காலத்தில், தத்துவரீதியாக அதன் இயக்கத்தைப் புரிந்து கொண்டு, எளிய மக்களின் நலனை முன்னிருத்தும் எதிர்த்தத்துவங்கள் (காந்தியம், மார்க்ஸியம், சோஷலிசம், இன மொழி அடையாளங்களை முன்னிருத்தும் தத்துவங்கள், அரசியல் கட்சிகள் இன்னும்பல) உயிர்த்துடிப்போடு இயங்கவில்லை.  இயக்கங்கள் நடத்தி அதன் மூலம் பெற்ற அனுபவங்கள், தவறுகளை எடைபோட அறிவுஜீவிகளுக்காக ஊடகங்கள், பொதுவெளிகள் இப்போது இருப்பது போல் இல்லை.

எனவே இரண்டாவது பக்தியியக்கம் தோல்விஅடையும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.  ஆனால் அதற்காகக் கருத்து ரீதியாக இந்த இரண்டாவது பக்தியியக்கத்தை தொடர்ந்து பொது வெளியில் எதிர்கொள்ள வேண்டும். விஞ்ஞான ரீதியில் எதிர்கொள்வது அவசியம் என்றாலும், பெரும்பான்மை மக்கள் மிகத் தீவிரமாகக் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் இந்தியாவில், வர்ணாசிரமத்தை உள்ளடக்கிய மனுஸ்மிருதி, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, குர்-ஆன் போன்ற மதக் கொள்கைகளிலும், கோயில், மடங்கள் போன்ற மத நிறுவனங்களின் நடவடிக்கைகளிலும் முன்னேற்றக் கருத்துகளுக்குத் தடையாக இருக்கின்ற, ஏற்றத் தாழ்வுகளை முன்மொழிகிற அனைத்தையும் வெளிக்கொண்டுவர வேண்டும். 

இந்த இரண்டாவது பக்திக் காலத்தை உருவாக்கத் துடிக்கிறவர்கள், பழைய சனாதன நம்பிக்கைகளை மட்டும் கொண்டுவரத் துடிக்கவில்லை.  அவற்றின் மூலம் நவீன உலகில் வாழ முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.  பெரும்பான்மை மக்களை மதத்தின் பெயரால் ஒன்று திரட்டி அவர்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, பொருளாதாரத் துறையில் பிற்போக்குத்தனமான, பெருமுதலாளித்துவ, பன்னாட்டு நிறுவனங்களின் கைகள் ஓங்குவதற்கும், பெரும்பான்மை மக்களை உழைக்கும் இயந்திரங்களாக மாற்றுவதும் தான் குறிக்கோளாக இருக்கிறது.

 மனிதர்களால் உருவாக்கப்படும் ‘அரசியல் தத்துவங்கள், கருத்துகள் வரலாற்றை உருவாக்குவதில் பங்களிக்கின்றன என்று தாமஸ் பிக்கெட்டி என்ற பிரெஞ்சு சிந்தனையாளரின் சொற்கள் இங்கே நினைவுக்கு வருகின்றன.  எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான தத்துவம் என்ற ஒன்று இல்லை என்பதையும், ஒவ்வொரு காலத்துக்கு ஏற்ற தத்துவங்களை அவ்வக் காலத்து அறிஞர்கள் முன்வைப்பார்கள் என்பதையும் நினைவில் கொள்ளலாம். அவை வரலாற்றில் தமது முத்திரையைப் பதிக்கும் என்பது நிச்சயம்.  ஆனால் இவர்கள் ‘அவதார புருஷர்கள் அல்ல என்பதால், இப்படிப்பட்ட சிந்தனைகளை வளர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

No comments:

Post a Comment