பழைய கறியும்
புதிய பெர்கரும்
’மாற்றம் ஒன்றே
மாறாதது’ என்று நாம் அடிக்கடி
சொல்லிப்பார்த்துக் கொண்டாலும் மாற்றம் ஒன்றை
நிஜவாழ்வில் சந்திக்க நேரும்போது ஒரு எதிரிடையான மனநிலை நமக்கு ஏற்படுவதை பலர் கவனித்திருக்கக்
கூடும். ’சொல்லுதல் யார்க்கும் எளியவாம், அரியவாம் சொல்லிய வண்ணஞ் செயல்’. ’மண்பானையில் சமைத்த
சோறு’ என்ற வாசகத்தை அவ்வப்போது,
நாம் நகரங்களின் வீதிகளில் படித்திருக்கிறோம். இது போல கடந்தகாலத்தைச் சார்ந்த பண்பாட்டுக்
கூறுகளை நாம் விதந்தோதி, இழந்துவிட்ட பெருமைகளின் வரிசையில் அவற்றைச் சேர்ப்பது காலந்தோறும்
நடந்து வருகிறது.
பண்பாட்டுத் தளத்தில்
புதிய கருவிகள், புதிய உணவுப் பொருட்கள், (நமது பகுதிக்குப்) புதிய காய்கறிகள் அறிமுகம்
ஆகும் போது சமூகத்தின் சமநிலை குலைந்துவிடுகிறது. உதாரணமாக, சிலவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
பதினேழாம் நூற்றாண்டின்
துவக்கத்தில் போர்த்துக்கீசிய மாலுமிகளால் தென்னமரிக்கக் கண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டு,
வட இந்தியாவில் தொடங்கி இன் று குறைந்தது 23 மாநிலங்களில் உருளைக் கிழங்கு பயிராகிறது.
2002-03 ஆம் ஆண்டில் 25 மில்லியன் டன் கிழங்கு விளைந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு
இன்று அதைவிட மிக மிக அதிகமாக விளையும் என்பது தெளிவு.
தக்காளிப் பழங்களும்
16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீஸிய வணிகர்கள் மூலம் இந்தியாவுக்கு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியைப் பிடித்த பின்னர் பதினெட்டாம்
நூற்றாண்டில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்காக
தக்காளியை அதிகம் விளைவிக்க வேண்டும் என்று விவசாயிகளை ஆங்கில அரசு வற்புறுத்தியது.
இன்று இந்தியாவில்தான்,
அசாமில் மலைப்பிரதேசங்களில் உலகத்திலேயே அதிக
காரமான மிளகாய் விளைகிறது. உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம் மிளகாய் ஏற்றுமதியாகிறது.
இன்னும் சொல்லப் போனால்
எல்லா மாநிலங்களிலும், மாநிலங்களுக்குள் எல்லா நகரங்களிலும் பலப்பல விதமான பிரியாணி
ரகங்கள் தயார் செய்கிறார்கள். துருக்கிய-பெர்சியப் பகுதிகளிலிருந்து வந்த பிரியாணி
இந்தியா முழுவதும் ஆட்சி செய்கிறது.
உலகமெங்கும் இவ்வாறு
பலவகை உணவுகள் பரவுவது பல நூற்றாண்டுகளாகவே நடந்து வருகிறது. இட்லி தென்கிழக்கு ஆசிய
நாடுகளிலிருந்து வந்ததாக சில வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.
இதையெல்லாம் கருத்தில்
எடுத்துக் கொண்டால், இன்று இத்தாலிய பிட்சா, அமெரிக்கா சென்று அங்கிருந்து இந்தியா
வந்திருக்கிறது. இன்னும் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கத் துடிக்கும் இந்திய பொறியிலாளர்கள்,
அமெரிக்க உணவுகளை விரும்புவதில் அர்த்தம் இருக்கிறது. அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் பெரும்
புகழுடன் இருக்கும் அமெரிக்க நாட்டின் நாகரீகத்தைப் பின்பற்ற நினைப்பதில் என்ன தவறு
இருக்கிறது என்று எனக்குப் புரிவதில்லை.
உருளைக்கிழங்கும், தக்காளியும்,
மிளகாயும் செய்ய முடியாத காரியங்களை பிட்சாவும் பர்கரும் செய்துவிட முடியுமா? அல்லது
தேநீர் என்ற பானத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் வணிக லாபத்துக்காக அறிமுகம் செய்தனர். இந்தியப்
பொருளாதாரத்தில் தேயிலையின் பங்கு எவ்வளவு முக்கியமானது? இந்தியாவிலிருந்து ஒவ்வொரு
ஆண்டும் 25000 கோடி ரூபாய் வருமானம், எருமைமாட்டு இறைச்சியின் ஏற்றுமதிலியிருந்து வருவதாக
அறிகிறோம். எருமை மாடு இந்தியாவில் உருவான இனம்.
அதை உண்டு மற்ற நாட்டுக்காரர்கள், மகிழ்ச்சியாக இல்லையா?
உணவுக் கலாச்சாரத்தில்
நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உண்ணும் உணவின் அளவு. இந்திய மத்திய, மேல் வர்க்கங்கள்
தேவைக்கும் மிக அதிகமாக உண்பதாலேயே நோய்கள் அதிகம் வருகின்றன. இரண்டாவதாக, இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவு
மனித (குறிப்பாக இந்தியர்களின்) ஆயுட்காலம்
அதிகரித்திருக்கிறது.
சராசரியாக ஒரு பாலூட்டி
விலங்கின் இதயம் இரண்டு பில்லியன்கள் வரை துடிப்பதற்காக அதன் திறன் இருக்கிறது என்று
ஓரிடத்தில் பரிணாம வளர்ச்சியில் விஞ்ஞானியான ரிச்சர்ட் டாகின்ஸ் கூறுகிறார் . நாம் மருந்துகள் மூலம், மனிதனின் ஆயுளைக் கூட்டிக்
கொண்டே சென்றால், அதன் பக்க விளைவுகளாக, அதற்குத் தகுந்தபடி நோய்களும் வரத்தானே செய்யும்?
இதற்காக வெளிநாட்டு உணவைச்
சாப்பிடாதீர்கள் என்றோ வாழ்நாள் முழுவதும் இட்லி சாப்பிடுங்கள் என்றோ பேசுவது சரியாகாது
என்றே தோன்றுகிறது. மனித இனப் பரிணாம வளர்ச்சி, எத்தனையோ சிக்கல்களை, இயற்கை மாற்றங்களை
உள்வாங்கி வந்திருக்கிறது. அது பல்வேறு உணவுவகைகளை உண்டு அதற்கேற்றபடி தன்னைத் தகவமைத்துக்
கொள்ளும் வலிமை கொண்டது.
தினமும் இட்லி குறித்த,
தமிழ் உணவுகள், இந்திய உணவுகள், பண்பாட்டு உணவுகள், நல்ல உணவுகள் என்ற பிரச்சாரத்தின்
பின்னுள்ள, பழைய வாதங்களை நான் எடைபோட வேண்டும். பழைய சோறு சாப்பிட்டால் நல்லது என்று
பிரச்சாரம் செய்கிறவர்கள் மக்களை அளவுக்கு அதிகமாகப் பயமுறுத்துகிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பசு, எருமைப் பால்
சாப்பிடுவதால் அதையே சாப்பிட வேண்டும் என்று ஏதாவது தடை இயற்கையில் இருக்கிறதா என்ன?
ஒட்டகப் பாலை, கழுதைப்பாலைக் குடித்தால் கெட்டதா என்ன? அது போலவே, பிட்சா பர்கரை சாப்பிடுவதால்
மட்டுமே நோய்கள் வந்துவிடாது. இத்தனை காலமாகப்
பிரியாணி சாப்பிடுவதாலும் தான் நோய்கள் வரக்கூடும். மீண்டும் சொல்வது என்னவென்றால், எவ்வளவு நம்மால்
செரிக்க இயலுமே அவ்வளவு உண்பதே சரி.
இதே மாதிரியான வாதங்கள்,
சிகையழகு, உடைகளிலும் வருகின்றன. ஆனால் அவை
தோற்றுப் போய்விட்டன. புடவை கட்டினால், பாவாடை
தாவணி கட்டினால் லட்சுமிகரம் என்ற கருத்து முன்னர் நிலவியது. இன்று சல்வார் கமீஸ் நன்றாக,
வசதியாக இருக்கிறது. இன்னும் அந்தக் காலத்து ஆட்கள் தாவணியை மறக்கமுடியாமல் தவிக்கலாம்
ஆனால் இளைய சமூகம் தன் வசதிகள், தேவைகளுக்கேற்ப உடைகளை உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்.
புதிய பண்பாட்டு விழுமியங்களையும் தேர்ந்தெடுக்கும்.
வழக்கம் போல நமது மூக்குதான்
உலகத்திலேயே சிறந்த மூக்கு என்பது போல நமது
உணவுப் பொருட்களையும் வகைப்படுத்துவது, பழைய கறியை நினைத்துப் பெருமைப்படும், மண்பானைச்
சோற்றை நினைத்து ஏங்கும் ஒருவகை ஏக்கமே தவிர வேறொன்றுமில்லை. இன்னும் கொஞ்ச நாளில் உணவுப் பொருட்கள் பற்பசை குழல்களில்
வந்தால் இவர்கள் அப்போதும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். கைதட்டல்கள் வாங்குவதற்கு அவை உதவும். திறந்த மனதோடு
எதையும் சிந்திப்பதற்கும் நாம் தயாராக அவை உதவாது
No comments:
Post a Comment