நூகர்வோரின்
பார்வையிலிருந்து -
நாட்டுக் கோழி, இயற்கை விவசாயம் இன்ன பிற
’இயற்கைக்குத் திரும்புதல்’
என்ற
வாழ்க்கை முறையை நடைமுறையில் நடத்திக் காட்டிய ‘மசானபு புகோகா’
என்ற
ஜப்பானியரின் கொள்கைதான் ஒற்றை வைக்கோல் புரட்சி, இயற்கை விவசாயம், ஒன்றுமே செய்யத்
தேவையில்லாத விவசாயம் என்ற பெயர்களில் வழங்கிவருகிறது. இவர் எழுதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒற்றை
வைக்கோல் புரட்சி’ என்ற நூலை இயற்கை ஆர்வலர்கள் கண்டிப்பாகப் படிக்க
வேண்டும்.
நுகர்வோரின்
பார்வையிலிருந்து இன்றைய சந்தையில் இயற்கை விவசாயம், இயற்கை விவசாயப் பொருட்கள் என்ன
விளைவை ஏற்படுத்துகின்றன? இந்த விஷயத்தை வரலாற்றுப்
பெருமையுடன் அல்லது உணர்ச்சிபூர்வமாக அணுகாமல், இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக் காலத்தில்
இந்த மாதிரிக் கருத்துக்களின் தேவையும் பயன்பாடும் என்ன என்று பார்க்க விழைகிறேன்.
பொதுவெளியில்
உலவிவரும் கருத்துக்கள் சிலவற்றை கூற விரும்புகிறேன். ‘குக்கரில் சமைக்கும் உணவை விட மண்பானையில் சமைக்கும்
உணவு சிறந்தது’. ‘லெக்ஹார்ன் கோழிகளை விட
நாட்டுக் கோழிகள் சிறந்தவை’, (அமெரிக்காவில் கூட) பிட்சாவைவிட இட்லி சிறந்தது,
அல்லோபதியை விட சித்தா மருந்துகள், ஹொமியோபதி மருந்துகள் சிறந்தவை. இந்தக் கருத்துகளின் உண்மைத்தன்மை குறித்த விவாதத்தில்
நுழைய விரும்பவில்லை. இவைகள் சுட்டும் திசை
எது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
இயற்கை விவசாயம்
என்பது ஏதோ இப்போது கண்டுபிடித்துவிட்ட செய்தியைப் போல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் அதன் மேன்மையை உணர்த்தி (இதுவரை எனக்குப்
பிரச்சனை இல்லை), இயற்கை விவசாயப் பொருட்களின் விலையைக் கூட்டி விற்கிற, வணிகமயமாதலைத்தான்
நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்.
மசானபு ஃபுகோகாவின்
புத்தகத்தில் இதைக் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இயற்கை விவசாய முறையில் விளைவித்த பொருட்களை
சந்தையில் கடைக்காரனிடம் சொல்லி விற்றிருக்கிறார். ‘இயற்கை விவசாயம்’
என்ற
தலைப்பைப் வைத்துக் கொண்டு கடைக்காரன் அப்பொருட்களின் விலையை அதிகரித்து விற்பதைக்
கண்டு மனம் வெதும்பி இருக்கிறார். இன்னொன்றையும்
குறிப்பிடுகிறார். விவசாயியைப் பொறுத்தவரை ஆப்பிள் பழத்துக்கு அவன் தருகிற உழைப்பு
ஒரே வகையானது. மரத்தில் ஒரு பழம் சிறியதாகவும்
இன்னொரு பழம் பெரியதாகவும் இருப்பது இயற்கையின் செயல். சிறியதாக இருக்கிறது என்ற காரணம் காட்டி, அதன் விலையைக்
குறைப்பது அடாத செயல். விலையைக் குறைத்து
மதிப்பிட வணிகர்கள் செய்யும் தந்திரம் இது.
வணிகர்களின்
தந்திரத்திற்கும் நாட்டுக் கோழிக்கும் உறவு இருக்கிறது. இன்று லெக்ஹார்ன் கோழி விலை ஒரு கிலோ 240 ரூபாய்
என்றால், நாட்டுக் கோழி என்றழைக்கப்படுகிற கோழி ஒரு கிலோ 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லெக்ஹார்ன் கோழிமுட்டை ஒருடஜன் 70 ரூபாய் என்றால்,
நாட்டுக் கோழி முட்டை ஒரு டஜன் 170 ரூபாய்க்கு விற்கிறார்கள். நாட்டுக் கோழி மருந்து,
ஊசிகள் போடாமல் தானாகவே ’இயற்கையாக’ வளர்கிறதாம். இயற்கையாக வளர்ந்தால் விலை லெக்ஹார்ன் கோழிக்கு
இணையாகவோ அல்லது குறைவாகவோ இருக்க வேண்டுமல்லவா?
அதற்கு நேர் மாறாக, அதிக லாபம் அடையும் நோக்கில்தான் இந்த ‘இயற்கை’
என்ற
சொல்லைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த
வகையான வணிகமயமாகிவிட்ட இயற்கை விவசாயம் நமக்குத் தேவையா? அல்லது உரம்போட்ட விவசாயமே
பரவாயில்லையா? என்பது தான் கேள்வி.
இயற்கை விவசாயம்
என்பது என்ன? சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு
முன்னால், பசுமைப் புரட்சி என்ற பெயரில், உரங்கள், பூச்சி மருந்துகள், இன்னும் விளைவைப்
பெருக்கும் ரசாயன உத்திகள் நமது விவசாய முறைகளில் புழக்கத்துக்கு வருவதற்கு முன்னால்,
விவசாயம் செய்த முறையைத் தான் இயற்கை விவசாயம் என்கிறோம். அதாவது காலகாலமாக நாம் கடைப்பிடித்து இடைப்பட்ட
பசுமைப் புரட்சிக் காலத்தில் மறந்துவிட்ட விவசாய முறை.
நாட்டுக் கோழிகள்
லெக்ஹார்ன் கோழிகளை விட எந்த விதத்தில் உயர்ந்தவை என்பதை இன்னும் யாரும் விஞ்ஞான முறையில்
சான்றுகளுடன் நிறுவியதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால்,
கோழிப்பண்னைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு, கொடுக்கிற தீவனம், மருந்துகள் இன்ன பிற
அனைத்தும் ஏற்கனவே செய்து நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளில் தான் செய்கிறார்கள். குறைந்த கால அளவில், பெரிதாக வளர்ந்து, முட்டையிடும்
தகுதியை அடைய ஊசி போடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். இதை நெற்பயிருடன் ஒப்பிடுவோம். முற்காலத்தில் நன்றாக விளையும் நெற்பயிர் வளர எவ்வளவு
மாத காலம் ஆகும்? இப்போது எவ்வளவு மாத காலம் ஆகிறது? அது குறையவில்லையா? அதன் விளைவாக அதிக விளைச்சலும், அதனடியாக அதிகம்
பேருக்கு உணவும் கிடைக்கவில்லையா? இதையே கோழிக்கும்
குஞ்சுக்கும் செய்தால் என்ன வேறுபாடு? இதுதான்
நுகர்வோன் என்ற முறையில் எனக்குப் புரியாத புதிர். இதற்கு ஒரே விடை இருக்கிறது. அரிசி விற்பதில் அரசு சந்தையில் குறுக்கிட்டு விலையை
நிர்ணயிக்கிறது. கோழியில் இந்த நிலை இல்லாததால்,
நாட்டுக் கோழி, நாட்டுக் கோழி முட்டை என்ற பெயர்களில் அதிக லாபம் பார்க்க வணிகர்கள்
தயங்குவதில்லை.
வீடுகளில் வளரும் நாட்டுக் கோழிகளுக்கு
எந்தவித ஊசியும் மருந்தும் போடுவதில்லை என்றே வைத்துக்கொள்வோம். அதன் உடல்நிலை, அது உண்ணும் உணவு (உதாரணமாக அது
வெளியில் மேயந்து புழு பூச்சிகளை உண்ணும்) உணவு குறித்தும் எந்த தரமும் பார்க்கப்படுவதில்லை
அல்லவா? பண்ணைக் கோழிகளில் கட்டுப்பாடுகள்
அதிகம். கோழிகளின் உடல்நிலையும் பராமரிக்கப்படுகிறது.
அவை உண்ணும் உணவும் அதன் தரமும் அளவும் ஏற்கனவே திட்டமிட்டபடி தரப்படுகின்றன. இந்தத் தரக் கட்டுப்பாடு வீடுகளில் வளரும் நாட்டுக்
கோழிகளுக்கு உண்டா?
இரண்டாவது,
நாட்டுக் கோழிப் பண்ணைகளில் ‘நாட்டுக் கோழிகளுக்காக’
என்று
ஏதாவது தனிப்பட்ட கவனிப்புகள் இருக்கின்றனவா? இல்லை. அவையும் லெக்ஹார்ன் கோழிகளைப்
போலவே பராமரிக்கப்படுகின்றன. அவற்றின் ஜீனில்
ஒரிஜினாலிடி இருப்பதனாலேயே அவை சிறந்தவை என்று கருதலாமா?
இது போலவே, மரபணு மாற்றம் மூலம் விளைவிக்கப்படும்
தானியங்கள், காய்கறிகள் இவற்றிற்கும், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் தானியங்கள்,
காய்கறிகள் இவற்றிற்கும், நுகர்வோரைப் பொறுத்தவரை எந்த வேறுபாடும் இல்லை. விஷயம் மரபணு இருக்கிறதா இல்லையா என்பது அல்ல. அந்த உணவின் தரம் என்ன, அது உணவு என்ற வகையில் அதன்
மதிப்பீடு என்ன? இவைதானே முக்கியம். இது குறித்த
கேள்விகளுக்குப் பதில் இல்லை. வெறுமனே ‘நாட்டுக்
கோழி’ என்ற முத்திரையை குத்திவிட்டு மக்களின் வரலாறு நினைவை
வணிகத்தில் அதிகஆதாயம் பெறப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்ள முடியாது.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். நமது இட்லியின்
மேன்மை, தோசையின் பெருமை, உப்புமாவின் சிறப்பு என அடுக்கிக் கொண்டே போவார்கள். அமெரிக்காவில்
சென்று பேசும் போதும் இட்லிதான் சிறந்த உணவு என்று பேசுகிறவர்களைப் பார்த்திருக்கிறேன். இட்லி தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்தது, சாம்பார்
மராட்டியர் கண்டுபிடித்தது..மிளகாயும், தக்காளியும் தென்னமரிக்காவிலிருந்து வந்தவை..
தேங்காய தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்தது.
ஏதொ ஒரு காலத்தில் நமக்குப் புதிதாக வந்து சேர்ந்த உணவுகளை நாம் உண்ணவில்லையா?
அவை கொஞ்ச காலங்களுக்குப் பிறகு நமது உணவாக மாறிப்போகவில்லையா? வணிகமயமாதலை எதிர்ப்பதென்பது வேறு. வேறு நாடுகளில் இருந்து வருகிற உணவு என்பதனாலேயே
அவற்றை வெறுப்பது வேறு. உணவிலும் தேசியவாதம்
என்பது உணவிலும் சர்வதேசியவாதமாகிக் கொண்டிருக்கிற காலம் இது. அவை நமது உணவுகள் அல்ல என்று சொல்வது சரியாகப்படவில்லை.
உணவும், உடையும்
அந்தந்த சூழலுக்கேற்ப உருவாகின்றன என்பது உண்மைதான். ஆனால் அதையே என்றும் நிலைத்திருக்கும் உண்மை என்று
சொல்ல முடியாது. நூறு வருடங்களுக்கு முன்னால்
நாம் அனைவரும் என்ன உடை உடுத்தோம், என்ன கஞ்சி குடித்தோம் என்பதைப் பார்த்து அதையே
செய்ய வேண்டும் என்றால் இயலாத காரியம். புதிய
உணவுகள் நமக்கு ஒத்துவராது என்பது மனித உடலின் செரிப்புச் சக்தியை கேலிக்கு உள்ளாக்குகிற
செயல்.
ஆப்பிரிக்காவிலிருந்து
கிளம்பிய மனிதன் உலகின் எல்லாப் பாகங்களிலும் இருக்கிறான். அவன் எப்படி பரிணாக வளர்ச்சி அடைந்தானோ அதே மாதிரி
உணவு வகைகளை உண்பதிலும் பரிணாம வளர்ச்சி அடைவான்.
அதிர்ச்சி தரும் கருத்துக்களைப் பரப்புவதால், இட்லியின் புகழைப் பாடலாமே தவிர, மனிதர்களின் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிவிட
இயலாது. அதை முயற்சி செய்வது வீண்வேலை. உணவு மாறினால், நமது உடல் அதைச் செரிக்கும் சக்தியப்
பெற்றுவிடும். இது பரிணாமத்தின் தவிர்க்க இயலாத நடைமுறை. அதைப் பெறவில்லையெனில் மனிதன் அவ்வுணவை தன் போக்கிலேயே
கைவிட்டு விடுவான். (நாம் விஞ்ஞானத்தில் எவ்வளவு
வளர்ச்சி பெற்றிருந்தாலும் பத்தாயிரம் பதினையாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் கண்டுபிடித்த
தானியங்களைத் தவிர புதியதாக எந்தத் தானியத்தையும் நாம் கண்டுபிடித்துவிட வில்லை என்பதையும்
ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்)
நாட்டுக் கோழியோ
மண்பானைச் சோறோ எது விஞ்ஞான பூர்வமான உண்மை, எது காலத்திற்கு ஏற்ற மாற்றம், எது நமக்கு
நன்மை தருவது, எது விலை குறைவாக இருப்பது என்பதெல்லாம் பொருட்டாக இருக்க வேண்டுமே தவிர,
அந்தக் காலத்தில் அப்படி என்பதாலோ அல்லது நமது நாட்டுப் பண்பாடு என்பதாலோ ஒரு விஷயத்தைப்
பொருட்படுத்த முடியாது.
No comments:
Post a Comment