Monday, August 14, 2023

 

3  வரலாற்றில் மூவர்; காந்தி, அம்பேத்கர், சாவர்க்கர்

 

       மனிதர்கள் உருவாக்கும் மிகச்சிறந்த கலைப்படைப்பு வரலாறு ஆகும். அது முழுமையாக மக்கள் முன் நிகழ்த்தப்பட்ட உண்மையான நாடகம். அதில் நிகழும் காட்சிகள் வேறு எந்தக் கலைப் படைப்பிலும் அடையாத, அடைய முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புகளை பெருமளவில் உண்டாக்குகின்றன. அந்த ஒரு நாடகத்தில் மட்டும்தான் மனிதர்கள் ஒரே சமயத்தில் பார்வையாளர்களாக வும் பங்கேற்பவர்களாகவும் இருக்கிறார்கள். நாடகம் சினிமா போன்றே யார் அதிகப் பார்வையாளர்களை பெரும் உணர்ச்சிப் பெருக்குக்கு ஆளாக்குகிறார்களோ அவர்கள் வரலாற்றில் கதைத் தலைவர்கள் ஆகி விடுகிறார்கள். மக்களையும், வரலாற்றையும் கொஞ்சமேனும் தங்கள் வழியில் செலுத்துகிறார்கள்.

    இப்படி ஒரு கலைப்படைப்பாக வரலாற்றை ஏன் அணுக வேண்டும்? வரலாறு ஒரு கலைப்படைப்பு என்று கருதுவதில் சில சாதகங்கள் இருக்கின்றன. ஒன்று, அது ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட பிரதி. நிகழ்ச்சிகளை மாற்ற முடியாது. எனவே, விளக்கங்கள், பார்வைகள், மீள் பார்வைகள் மட்டுமே சாத்தியம். இரண்டாவதாக, பிரதியிலிருந்து விலகி நின்று ஒரு கலைப்படைப்பை உணர்ச்சிவசப்படாமல், (முதல் முறையில் அது சாத்தியம் இல்லையென்றாலும்) ஆய்வு செய்வது போல ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முடியும். வரலாற்றையும் மனிதர்களையும் புரிந்து கொள்ள இந்தப் பார்வை உதவும். நல்ல கலைப் படைப்பில் மனிதர்களை இயக்கும் ஆசைகள், தவிக்க முடியாத சூழல்களின் தர்க்கங்களை நாம் புரிந்து கொள்வது போலவே வரலாற்றில் பங்கெடுத்துக் கொண்ட மனிதர்களின் தவிர்க்க இயலாத சூழல்களை அவர்களின் பங்களிப்பைப் பூரிந்து கொள்ள முடியும். கலைப்படைப்பு க்களில், அதைப்படைக்கிறவனுக்கு எத்தனை விதமான சாத்தியக்கூறுகள் இருக்குமோ அதைவிட அதிகமான சாத்தியக்கூறுகள் வரலாற்றிலும் இருந்திருக்கும். ஒருகுறிப்பிட்ட நிகழ்வு அரங்கேறிய போது அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தனிமனிதர்கள், மக்கள்திரள்  எதிரிகள், தோழர்கள் அனைவரின் (இயக்கங்களும்)/ அசைவுகளும் சிறு பங்கையும் வகிக்கின்றன. 'கலைக்கண்'  கொண்டு வரலாற்றைப் பார்த்தால், அதில் பங்கெடுத்துக் கொண்ட மனிதர்களை, விருப்பு வெறுப்பின்றி, காத்தல் உவத்தல் இன்றிக் காணமுடியும். 'சொல்லுவது யார்க்கும் எளியவாம்'; முயன்று பார்க்கலாம்.

   சுதந்திரப் போராட்டம் என்பதை  வரலாற்றுக் கலைப் படைப்புகள், அதில் தொடர்புடைய மூன்று கதைமாந்தர்கள் பற்றி நாம் பார்க்கலாம். காந்தியின் தலைமையில் நடந்த அஹிம்சைப் போராட்டம் வெற்றி பெற்றது. அதனாலேயே அவர் தேசத் தந்தை ஆகிவிடுகிறார். ஒருவேளை காந்திக்குக் கிடைத்த அளவு ஆதரவு சாவர்க்கருக்குக் கிடைத்திருந்தால், ஓர் ஆயுதப் புரட்சி வெடித்திருக்கும். உண்மையில் 1857க்குப் பிறகும் சிறு அளவில் அங்கங்கே வன்முறைப் போராட்டங்கள் நடந்துகொண்டுதான்  இருந்தன. காந்தி 1869இலும் அம்பேத்கர் 1881இலும் சாவர்க்கர் 1883இலும் பிறந்தனர்.

      காந்தி மிகச் சாதாரணமான மாணவர். அவரது கனவு பாரிஸ்டர் ஆகிவிட வேண்டும் என்பது. இங்கிலாந்து சென்று, உறவினர் உதவியுடனும் சொந்த செலவிலும். படித்தார். சுதந்திரம் பெற வேண்டும் அல்லது வாங்கித் தர வேண்டும் எனபதெல்லாம் அவருடைய எண்ணத்தில் இல்லை. அவருடைய தந்தையார் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். அங்கேயிருந்த ஆங்கிலேயப் பிரதிநிதியின் அதிகாரத்தைப் பார்த்தவர்.

    சாவர்க்கர் சமூக நிலையில் கல்விப் பயிற்சியுள்ள பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டவர். சிறு வயதிலிருந்தே எழுத்தும் பேச்சும் கைவரப் பெற்றவர். இன்னொன்றை இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இந்திய நிலப்பரப்பில் ஆங்கிலேயர்களிடம் கடைசியாகத் தங்கள் நிலத்தையும் அரசையும் அதிகாரத்தையும் இழந்தவர்கள் மராட்டியத்தில் ஆண்ட பேஷ்வாக்கள். ஆங்கிலேயர் தங்கள் அரசை நிறுவ விரும்பிய போது இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டு கொண்டிருந்தவர்கள். அவர்கள் பிராமணர்கள். 1900 ஆம் ஆண்டுவாக்கில் இழந்துவிட்ட ஆட்சியை, அதிகாரத்தை, கவுரவத்தை மீண்டும் பெற, ஆங்கிலேயர்களைக் கண்டு கொதித்துக் கொண்டிருந்தவர்கள். ஆண்ட பரம்பரையாதலால் வாளின் வலிமையை அறிந்தவர்கள். இப்படிப்பட்ட வகுப்பிலிருந்து வந்தவர் வன்முறையில்,  நம்பிக்கை வைத்திருந்ததும் தாங்க முடியாத வன்மம் கொண்டிருந்ததும், வியப்புக்குரிய உரியதல்ல. ஆனால், அவருக்கிருந்த நாட்டுப்பற்று அதே பகுதியைச் சேர்ந்த மற்றவர்களுக்கு இல்லாமல் இருந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அம்பேத்கர், சமூகத்தின் அடித்தளத்தில் எந்த வாய்ப்புகளும் அற்ற இடத்தில் பிறந்தவர். ஆங்கிலேயர் வந்ததனாலேயே கவனத்துக்கு வந்த பல சமூக அநீதிகளால் பாதிக்கப்பட்டவர். ஆங்கிலக் கல்வியினால் பலன் பெற்றவர், பெறவிரும்பியவர்.

   இந்த மூன்று ஆளுமைகளின் அனுபவங்களில் இருந்து அவர்கள் கண்டடைந்த பாதைகளின் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும்.

     காந்தி சிறு வயதிலிருந்தே பல தரப்பட்ட மனிதர்களைச் சந்தித்தவர், பழகியவர். பள்ளிப் பருவத்தில் அவரது தோழராக இருந்தவர் முஸ்லிம் மதத்தவர். பம்பாய் நீதிமன்றங்களில் தன்னால் பணி புரிய இயலாது என்று கண்டு கொண்ட போது, அவருடைய தந்தையின் நண்பரான தாதா அப்துல்லாவிற்காக வழக்காட தென்னாப்பிரிக்கா சென்றார்.  அங்கு பிரிட்டோரியாவிலிருந்து ஜோகனஸ்பர்க் ரயிலில் பயணம் செய்யும்போது, முதல்வகுப்புப் பெட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அதே பயணத்தில் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து  பிரிட்டோரியா திரும்புகிறார். அப்போதும் முதல் வகுப்பில் பயணம் செய்கிறார். கூபேயில் வெள்ளையர் ஒருவர் பயணம் செய்வதால் வேறிடத்துக்குச் செல்லுமாறு பரிசோதகர் சொன்னார். ஆனால் அங்கிருந்த வெள்ளையர் காந்தி பயணம் செய்வதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என்று சொல்லிவிட்டார். அது தவிர, காந்தியிடம் வேலை பார்க்கும் வெள்ளையர்களும் வெவ்வேறு இனத்தை, மதத்தை, மொழியைச் சேர்ந்தவர்களும் (வெள்ளையர், யூதர், தமிழர், தெலுங்கர்) அவருடைய மனிதாபிமானத்தை,  புரிதலை வேறு தளங்களுக்குக் கொண்டுசென்றிருக்கலாம். மனிதகுலம் என்ற கருத்தியல் காந்தியின் மனதில் பதிந்து விட்டது.

     சாவர்க்கர் 'புண்யபூமி' 'கர்மபூமி' என்ற சனாதனக் கருத்தியலைக் கட்டமைத்து அதில் ஊறியவர். இந்துக்கள் மட்டுமே இந்தக் கர்ம பூமியில் வாழுகிற, ஆளுகிற உரிமை உடையவர் என்று கருதினார். மற்றவர்கள் அன்னியர். துரத்தப்பட்ட வேண்டியவர்கள், வெறுக்கப்பட வேண்டியவர்கள். உறவினர்களே ஆனாலும் கடமை என்று வந்தால் போரிட்டுக் கொலை செய்ய வேண்டும் என்ற கீதையின் கருத்தியலைப் பின்பற்றுகிறவர்.

     காந்தி, இந்துமதத்தைப் பின்பற்றினாலும், அதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தாலும், அந்த நம்பிக்கைகள், (கீதை உட்பட்ட) திருநூல்களில் உள்ள, பொதுவான மானிட குலம் முழுவதற்குமான அறங்களையே அதன் சாரமாக்கப்படும் புரிந்து கொண்டார். சாவர்க்கர் இந்து மதத்தின் மேலாண்மையை நிறுவ வன்முறையை நியாயப்படுத்தினார். காந்தி நேர் எதிர் நிலையில் அஹிம்சையை தனது செயல் திட்டமாக ஆக்கினார்.

     சாவர்க்கர் வன்முறையை தேர்ந்தெடுத்தால், அவரது செயல் திட்டம் பெருந்திரளான பொதுமக்களை ஒதுக்கிவிட்டு, வீரர்களாக தங்களை கருதிக் கொள்ளும் வன்முறையாளர்களை மட்டுமே, அதுவும் ரகசியமாகத் திரட்டுவதாக இருந்தது. அதுதான் இந்தியாவின் அரசியல் சூழலில் அவரது தோல்விக்கான காரணமாகவும் அமைந்தது.

    காந்தி இந்தியாவெங்கும் பயணம் செய்து அனைத்துத் தரப்பு மக்களையும் திரட்டினார். மக்களுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளப் பெரு முயற்சி எடுத்துக்கொண்டார். காந்தியின் வெளிப்படையான, வன்முறை தவிர்த்த போராட்ட வடிவத்தை மக்கள் அவரது தலைமையை ஏற்றனர். பெரும் மக்கள் திரளை அன்னியப்படுத்துகிற போராட்ட வடிவத்தைக் கையிலெடுத்த சாவர்காரும் அவரைப் போன்ற மற்றவர்களும் பின்தங்கி விட்டனர்.

    பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு முன்னால், சொந்தநாட்டுக்காரர்கள் தங்கள் மீது செலுத்திய வன்முறைக் கொடுமைகள் சாதாரண மக்கள் நினைவில் இருத்தியிருக்க வேண்டும். ஒரு வன்முறையாளன் போனால் இன்னொருவன் வருவான் என்ற பயம் இருந்திருக்க வேண்டும்.

அதற்கு மாறாக, அஹிம்சையை முன்வைத்த காந்தி பொதுமக்களின் உள்ளார்ந்த நினைவிலிருந்து புத்தர், மகாவீரர் இன்னும் பலரை அரசியலில் உயிர்ப்பித்தார். அறத்தையும், அஹிம்சையையும் முன்வைத்து, தங்கள் மன நிலைக்கேற்ப, தங்கள் நம்பிக்கையைப் போராடிப் பெற்ற தலைவர் பின் மக்கள் அணி வகுத்தனர். தலைவர் மக்களுக்கேற்ற போராட்ட வடிவத்தை முன்வைக்க, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். மக்கள் ஏற்றுக் கொண்டதுதான் முக்கியம். தங்களை முன்னிருத்தாதவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பல நாடுகளில் வன்முறைப் போராட்டங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதையே பின்பற்ற வேண்டும் என்பதில்லை. இங்கே அதற்கு ஆதரவில்லை. வன்முறையில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் பலர் (அரவிந்த கோஷ் போல) விரைவில் போராட்டத்திலிருந்து விலகி தவ வாழ்க்கை மேற்கொண்டது மக்களின் நினைவில் இருந்தது.

    இந்த வகையில் விதிவிலக்கு பாரதியார்.  தீவிரவாதியாகத் தொடங்கி, சமயவாதியாகவோ, அரசியலிலிருந்து தனிமைப்பட்டவர்களாகவோ ஆகிவிட்டவர்கள் நடுவில், தீவிரவாத நிலைப்பாட்டில் தொடங்கி, அரசியலில் ஏற்படப்போகும் மாற்றத்தைப் புரிந்துகொண்டு, குறைவாகவும், மறைவாகவுமே ஆனாலும், தொடர்ந்து செயல்பட்டு வந்தார். காந்தியின் வழிமுறைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை அறிந்து அவருக்கு வாழ்த்துப் பாடினார். இந்த மறுபரிசீலனைக்கான வாய்ப்பைப் பயன்படுத்தியவர்களே  போராட்டங்களைத் தொடர்கிறவர்கள்

    சாவர்க்காரின் மனம் கூட சனாதன நம்பிக்கைகளை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை. உதாரணமாக, ஜாதி ஒழிய வேண்டும் என்றே சொன்னார். அரசியல் ரீதியாகப் பல விஷயங்களில் அம்பேத்கரை ஆதரித்தார். (காந்தி, ஜாதி ஏற்றத்தாழ்வுகள் வேண்டாம் என்றாலும், ஜாதி அமைப்பைத் தீவிரமாக எதிர்க்கவில்லை).

   அம்பேத்கர் அனுபவங்கள், அரசியல் தொடங்கிய இடம், காலம் மிகவும் வேறுபட்டது. மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து புறப்பட்ட அவர் பொது வெளியில் வருவதற்கும், செயல்படுவதற்கும், தான் ஒரு அறிவுஜீவி என்று தன்னை நிரூபிக்கவுமே முதலில் போராட வேண்டியிருந்தது. கல்வி பெறுவதே பெரும் விடுதலையாக இருந்தது. உடைகள் கூட அணியாத, அணிவதற்குச் சுதந்திரமில்லாத சமூகத்தில், வெள்ளைக்காரர்களைப்போல் உடையணிவது அடையாள அரசியலாக இருந்தது. (காந்தி அரையாடை அணிந்தது ஏழைகளுடன்  தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளத்தானே). அம்பேத்கர் தன்னை ஒடுக்கப்பட்ட, தீண்டத்தகாதவர்களின் உயர்வுக்குப் பாடுபடுகிறவர் என்று வரையறை செய்துகொண்டார். சாவர்க்காரின் இந்துக்களுக்காகப் பாடுபட்டார். காந்தி ஒருவர்தான் நாட்டு மக்கள் அனைவருக்குமாகப் போராடினார். அதனால்தான் அனைவருக்குமான தலைவராக ஆனார். பல பண்பாடுகள் இருந்த நாட்டில் பகுதி வாரியாக/மொழிவாரியாக காங்கிரஸ் கமிட்டிகள் அமைத்தார். பல மதங்களைப் பின்பற்றுகிறார்கள் நிறைந்த நாட்டில் அனைத்து மதங்களையும் மதித்தார். விளிம்பு நிலையில் வாழ்ந்த தீண்டத்தகாதவர்களுக்காக இயக்கங்கள் நடத்தினார். பழங்குடி மக்களுக்காக டக்கர் பாபா மூலம் நடவடிக்கைகள் எடுத்தார்.

   அரசியல் எதிரிகளையும் மனிதர்களாக மதித்து, அவர்களுடைய கருத்துக்களைக் கவனத்துடன் பரிசீலித்தார். ஆங்கில ஆட்சியை எதிர்த்தார். ஆனால், ஆங்கிலேயர்களை வெறுக்கவில்லை. அவரிடம் பல முரண்பாடுகள் இருந்தன. ஏன் தவறான அணுகுமுறைகள் கூட இருந்திருக்கலாம். ஆனால் அனைத்தையும் தயக்கமின்றி வெளிப்படுத்தினார். தன்னிடம் உரையாட விரும்பும் எந்தப்பிரிவினரிடமும், முன் முடிவுகளின்றி  உரையாடல் தயாராக இருந்தார்.

   சாவர்கர் வெள்ளையரை எதிர்த்து வன்முறைகளைத் தூண்டிவிடும் செயல்திட்டத்தில் உள்ளத்தில் உறுதியாக இருந்தாலும், செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது சிறையில் கொடுமைகளைச் துயரங்களைத் தாங்க முடியாமலோ, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறவராக இருந்தார். ஆங்கிலேய அரசுக்கு எழுதிய (குறைந்தது 6 ) மன்னிப்புக் கடிதங்களில் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு விலகி நின்றார்.

   இங்கிலாந்தில் டிங்கிராவைத் தூண்டிவிட்டு வெள்ளையன் ஒருவனைக் கொலை செய்யவைத்துவிட்டு, அதை ஏற்றுக் கொள்ளாமல், சிறையில் அடைபடாமல் தப்பவே முயன்றார். மராட்டியத்திலும் அபிநவ சமிதி போன்ற ரகசிய அமைப்புகளை நடத்த உதவி செய்தார் ஆனால் நேரடியாக எந்த (வன்முறைச்) செயலிலும் ஈடுபடாமல் தவிர்த்தார். (காந்தி கொலையிலும் இந்த வழியையே கடைப்பிடித்தார். காந்தி கொலை வழக்கில் மற்ற குற்றவாளி களுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் அவர் மனதை அப்படியே காட்டுவதாக அமைந்துவிட்டது.). 'பேசுவது வீரம், பேணுவது கள்ளம்' என்பதன் விளக்கமாக இருந்தார்.

   காந்தி சிந்தனை, பேச்சு, செயல் மூன்றும் இயைந்து வாழ்ந்தார், அல்லது அப்படி வாழக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். சாவர்க்கர், சிந்தனை ஒன்றாக, பேச்சு வேறொன்றாக, செயல் இன்னொன்றாக இருந்தார். அவர் வன்முறையை தனது திட்டமாக வைத்திருந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம். ஒருவேளை அவரது வழி வெற்றி பெற்றிருந்தால், அது பாராட்டும்பெற்றிருக்கும். வரலாறு வெற்றி பெற்றவர்களால்  எழுதப்படுகிறது.  ஆனால் பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெறாத எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது. காந்தி மிகப் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குக் கடுமையாக உழைத்தார், ஆதரவைப் பெற்றார். அம்பேத்கர் தனது சமூக மக்களிடமே பெரும்பாலும் ஆதரவு தேடினார். சாதி வெறுப்பின் காரணமாக பெரும்பான்மையான மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அவரது அறிவும், ஆளுமையும் சாதி வெறுப்பு என்ற கொடுந்தீயில் எரிந்து போயின. அரசியல் அமைப்புச் சட்டம் என்றும் அவர் புகழ்பாடும்.  விடுதலையைத் தேடும் எவருக்கும் அவரது எழுத்துக்கள் ஒளிவீசும். பொதுச் சமூகத்தில் அவருடைய மேதமைக்கு இன்றும் கூட அங்கீகாரம் இல்லை.

   அம்பேத்கரிடம் 'நீங்கள் ஏன் பழங்குடி மக்களுக்காகப் போராடவில்லை? 'என்று ஒருவர் கேட்டார். 'அவர்கள் அதற்கு இன்னும் தயாராகவில்லை' என்று பதில் சொன்னார். 'உயர் சாதியினர் இதைத்தான் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்கிறார்கள்' என்றார் கேட்டவர். 'பழங்குடிகளுக்காகப் போராடுவது என் வேலை அல்ல. நான் எனது மக்களுக்காகப் போராடுகிறேன்' என்றார் அம்பேத்கர். வரலாற்றின், காலத்தின் நிலை காரணமாக அவர் தன் மக்களுக்காகப் போராட வேண்டியிருந்தது. ஆனால் 'பழங்குடி மக்களுக்காகவும் போராடுவேன்' என்று அவர் நினைத்திருந்தால், சொல்லியிருந்தால் அல்லது போராடி யிருந்தால் இன்னும் பரவலாகச் சென்றடைந்திருப்பார். அவரது கருத்துக்களை அறிந்து கொள்ளாமல் இருப்பது எந்த இந்தியனுக்கும் பெருமைக்குரியதல்ல. இன்று அவருடைய ஆளுமைக்கு பெரும்பான்மையாக தலித்துக்களிடமும், அரசியல் சட்டம் குறித்த விவாதங்களில் சட்ட வல்லுநர்கள் இடையேயும் அவர் குரல் தவிர்க்க முடியாமல் ஒலிக்கிறது.

   சுருக்கமாகச் சொன்னால்,

1.காந்தி அரசியல் விடுதலையை தன் ஒரே வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். மற்றதெல்லாம் அதற்குத் துணை போகும் நடவடிக்கைகளாவே இருந்தன.

சிந்தனை, பேச்சு, செயல் மூன்றையும் முடிந்தவரை ஒன்றாக வைத்திருந்தார். வெளிப்படையாக யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்கப் தயாராக இருந்தார். கடவுள், மதம், இன்னும் சில சனாதன கொள்கைகளை நம்பினார். ஆனால், மனித குலம் முழுவதன் நலத்தையும் கருத்தில் கொண்டே தனது அரசியல், பண்பாட்டுக் கருத்துக்களை வடிவமைத்துக் கொண்டார். இன்றுவரை, அஹிம்சையின் ஊற்றாக, அநீதிக்கு எதிராகப் போராடுகிறவர்களுக்கு உற்சாகம் ஊட்டுகிறவராக, நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.

2.சாவர்கார், சாதனத்தை மிகவும் நேசித்தார். இந்துக்கள், இந்துமதம், இந்தியா இவை மற்ற எல்லாவற்றையும் விட சிறந்தவை என்று நம்பினார். இவற்றின் நலனை மட்டும் பேணுவதே இந்தியர்களின் கடமை என நினைத்தார். இவற்றின் பெருமையை நிலைநாட்ட வன்முறையைப் பயன்படுத்தத் தயங்க வேண்டியதில்லை என நம்பினார். மற்ற மதக் குழுக்கள் அன்னியமானவை. அவரது சிந்தனை, சொல், செயல் வேறு வேறாக இருந்தன. தனது பேச்சாற்றல், எழுத்துக்கள் மூலம் மற்றவர்களுக்கு எழுச்சியூட்டினார். ஆனார், தனது பங்களிப்புகளை ரகசியமாக வைத்திருந்தார். தான் ஆதரித்த எந்தக் கொலையிலும், வன்முறையிலும் நேரடியாக ஈடுபடுவதைக் தவிர்த்தார். கடைசிவரையில், வெள்ளைக் காரர்களுக்கு எதிராக அல்லது மாற்று மதத்தினருக்கு எதிராக நேரடி நடவடிக்கையில் இறங்கவில்லை.  விடுதலை வாங்கித் தந்த காந்தி கொலையில் சம்பந்தப்பட்டிருந்தார். வழக்கம் போல அதற்குப் பிறகும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்துவிட்டு அமைதியானார். மறைந்த பின்னும், இன்று வரை, மதத் துவேஷத்துக்கும், வன்முறை அரசியல் நடவடிக்கைக்கும் உற்சாகம் ஊட்டுகிறவராக இருந்து வருகிறார்.

3. அம்பேத்கர், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதர்சமாக, சட்டநிபுணர்களுக்கு முன்னுதாரணமாக, சட்ட வடிவப் போராட்டக் காரர்களின் விளக்காக, கல்விகற்கும் மாணவர்கள் எந்த மனநிலையுடன் கற்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.

    மூன்று ஆளுமைகளில் அனைவரையும் அரவணைத்துக் கொண்டு, ( சாவர்க்கர் நேசித்த இந்துக்கள், அம்பேத்கர் நேசித்த தலித்துகள் உட்பட) அனைவரின் நலத்தையும் கருத்தில் கொண்டு, விடுதலைக்காகப் போராடியவர் காந்தி ஒருவரே.

  ஒருவேளை சாவர்கார் தொடங்கிய வழி வெற்றி பெற்றிருந்தால் முடிவற்ற உள்நாட்டு வன்முறைகள் தொடர்ந்து இந்தியா சிதைந்திருக்கும் வாய்புக்கள் அதிகம். அல்லது வட கொரியாவைப்போல், அடக்குமுறை மிகுந்த நாடாக ஆகியிருக்கும்.

     இன்றைய நிலையில் இந்தியா போன்ற, பல மதங்கள், ஜாதிகள், பழங்குடிகள், மொழிகள், நிறங்கள் என பிரிந்து செல்லவும், அரசியல்வாதிகள் பதவிகளுக்காக மக்களைப் பிரித்துக் காட்டவும் வாய்ப்புக்கள் ஏராளம் உள்ள நாட்டில், யார் முன்னுதாரணம் தேவைப்படுகிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

No comments:

Post a Comment