2 கொள்ளை போன ஒரு பேரரசு
நாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலேயரின் ஆட்சி பற்றி இந்தியர்களின் பார்வையில் படித்திருக்கிறோம். அதைத் தவிர, கிழக்கிந்தியக் கம்பெனியின் தோற்றம், இந்தியாவிற்குள் எப்படி அது வணிகம் செய்ய நுழைந்தது, எப்படி இந்தியத் துணைக்கண்டத்தை ஆளும் சக்தியாக மாறியது என்பது குறித்து நான் படித்த முதல் புத்தகம் இதுதான்.
நூற்றுக் கணக்கான குறுநில மன்னர்கள் ஆண்ட (இப்போது நாம் இந்தியா என்று அழைக்கிற) ஒரு பெரும் நிலப்பரப்பின் அரசியல் சூழலை இன்று கற்பனை செய்வது கடினம். இருபது முப்பது மன்னர்கள் ஆண்ட அரசுகள், ஒன்றிரண்டு பெருமன்னர்கள் ஆண்ட அரசுகள், இருந்தன. இந்தத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி ஒரு மாபெரும் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஒவ்வொரு பகுதியை ஆண்ட ஒவ்வொரு மன்னனும் தன் ஆட்சிப் பரப்பை எந்த வழியிலாவது அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். படை பலம், பொருளாதார வளர்ச்சி, தனது கீழிருக்கும் பெருநிலக்கிழார்கள். உழுகுடிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் துணையுடன் பெற்ற அரசியல் ஆதரவு, இவற்றின் அடிப்படையில் தான் அரசுகள் நிலைபெற்றிருந்தன.
தந்தையரிடமிருந்தும், சகோதரனிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் பதவியை ஆட்சியைப் பறிக்க வன்முறையும் சூழ்ச்சியும் தான் பயன்படுத்தப்பட்டன. மன்னருக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று குடிமக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆட்சியிலிருந்தவருக்கு விசுவாசமாக இல்லை என்றால் குடிமக்களுக்கு மரண தண்டனை அல்லது வேறு தண்டனை, ஆட்சி செய்கிறவன் விருப்பப்படி வழங்கப்பட்டது. தேசம், தேசத் துரோகி என்ற நவீனக் கருத்துக்கள் அப்போது இல்லை. ஏனெனில் அரசரிடம் தான் விசுவாசம் காட்ட வேண்டிய அவசியம் இருந்தது. குடிமக்கள், (சிடிசன்) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் அரசுகள், தேசங்கள் அமைந்திருக்கவில்லை. ஆள்பவர்களின் நேரடியான ஆதிக்கம் எதுவரை இருந்ததோ அதுவே அதிகாரத்தின் எல்லைகளைத் தீர்மானித்தது. நேரடி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரே வழி வன்முறை, அதாவது, அழிவைச் சந்திக்க நேரும் என்ற பயம்தான். அது முற்றிலும் வேறான உலகம். தேசம், குடியுரிமை, பண்பாட்டு ஒருமை அல்லது வேறுபாடு என்ற நமது இன்றைய கருத்துக்களை அந்தக் கால நிலமைக்குப் பொருத்திப் பார்க்க முடியாது. ஒரே 'நாடு' என்ற நவீன கருத்தாக்கம் தோன்றுவதற்கான அனைத்து அரசியல் சூழல்களும் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் பதினைந்து - பதினாறாம் நூற்றாண்டுகளில் அது குறித்து யாரும் (இந்தியாவில்) கருதவில்லை. முதல் சுதந்திரப் போர் என்று நாம் குறிப்பிடும் சண்டையின் (நவீன கருத்தாக்கத்தின் படி, உண்மையில் அது சுதந்திரப் போர் அல்ல) குறிக்கோள் முகலாயப் பேரரசரை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பதே. அதற்கு மேல் எதுவும் இல்லை.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்த அரசியல் நிறுவனங்களின், சாயலில் பிரித்தானிய மன்னராட்சி முறைக்கு மாற்றாக, நமது விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் போராளிகள் ஒரு அரசியல் அமைப்பைக் கற்பனை செய்தார்கள். அந்தக் காலத்தின் வரலாற்றைப் பயில்வதற்கு முன்னால் இதை நினைவில் கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், 'அகண்ட பாரதம்' என்ற கற்பனை, அரசியல் ரீதியாகவோ பண்பாட்டு வகையிலோ இருந்ததில்லை.
ஓர் அரசன் இன்னொரு அரசனைத் தோற்கடித்தால், தோற்ற அரசனில் ஆட்சி நடந்த இடம் முழுவதும் அல்லது அதன் ஒரு பகுதி வென்றவனிடம் சேரும். இப்படி அடிக்கடி அரசுகளின் எல்லைகள் மாறிக் கொண்டே இருந்தன. அவுரங்கசிப் பேரரசராக இருந்த போது, முகலாயப் பேரரசு காபூலில் இருந்து கர்னாடிக் வரை பரவியிருந்தது. மற்ற காலங்களில் அரசர்களும் பேரரசர்களும் ஆண்ட நிலப்பரப்புகள் வெவ்வேறாக இருந்தன.
கிழக்கிந்தியக் கம்பெனி நூறு பங்குதாரர்களுடன் தொடங்கப்பட்டது. 'கிழக்கு இந்தியாவிலும் இன்னும் பல தீவுகளிலும் அதையட்டிய இடங்களிலும்' வணிகம் செய்து கொள்ள இங்கிலாந்தின் அரசியிடம் இருந்து அனுமதி பெற்றுக் கொண்டது.
அந்தக் காலத்தில், இங்கிலாந்து ஏழ்மையான நாடாக, விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த நாடாக இருந்தது. ஒரு நூற்றாண்டுக் காலமாக, பிரிவினைகளை உருவாக்கும், மதம் என்ற நிறுவனத்துக்காக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்தது. (நூலாசிரியர் போப்பையும், கத்தோலிக்கக் கிறித்தவத்தையும் இங்கே குறிப்பிடுகிறார். இங்கிலாந்து மத மற்றும் அரசியல் விவகாரங்களில் போப்பின் அதிகாரத்தை நிராகரித்தது. இங்கிலாந்து அந்த நேரத்தில் உலக அளவில் சந்தைகளை, வணிகம் செய்யும் வாய்ப்புக்களை 'கடற்கொள்ளையர்களுக்கிருக்கும் பேராசையுடன்' தேடிக் கொண்டிருந்தது. அவர்கள் ஸ்பானிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கழுதைக் கூட்டங்களை கொள்ளையடித்தார்கள், கப்பல்களைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள். இவர்களில் சிலர் கிழக்கிந்தியக் கம்பெனியை உருவாக்கிய பங்குதாரர்களாக இருந்தனர்
முகலாயப் பேரரசு, அவுரங்கசீப்பின் ஆட்சியில் அதுவரை இல்லாத பேரெல்லைகளை எட்டியிருந்தது என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இந்தத் துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதிகள் முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற பேராசையில் நிகழ்த்திய படையெடுப்புகளில் பெரும் பொருளாதார, ராணுவச் செலவுகளை செய்திருந்தார். அவருக்குப் பின் ஆண்டவர்களால் பெரும் தொலைவிலும் பேரரசின் விளிம்புகளிலும் இருந்த பகுதிகளை நிர்வகிக்க இயலவில்லை. அவ்வப்பகுதிகளில் இருந்த மன்னர்களும், முகலாய ஆளுனர்களும் அரசியல், ராணுவ பலம்பெற்று தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினர். பெயருக்கு மொகலாயப் பேரரசின் கீழ் ஆட்சி புரிந்தனர். இவ்வாறாக, பேரரசின் மையம் மெல்ல மெல்லச் சிதைவடையத் தொடங்கியிருந்தது.
நாதிர்ஷா பாரசீகத்தின் மன்னராக இருக்கும் போது முகலாயப் பேரரசின் செல்வங்கள் மீது கண்வைத்திருந்தார். 1732ஆம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலம் அவர் ஆட்சியைப் பிடித்தார். ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து முகலாயர்கள் வசமிருந்த காபூலைப் பிடித்துக் கொண்டார். அதற்கடுத்த மூன்றே மாதங்களில் டில்லியிலிருந்து 100 கி.மீ தூரமே உள்ள கர்னால் நகரை வந்தடைந்து விட்டார். நாதிர் ஷாவின் பலத்தையும் தனது பலமின்மையையும் உணர்ந்து கொண்ட முகலாயப் பேரரசர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போது நாதிர்ஷா அவரைச் சிறைவைத்து விட்டார். ஸ்வைவல் என்றழைக்கப்படும் சிறிய ரகக் குண்டுவீசிகள் நாதிர்ஷாவிடம் ஏராளமாக இருந்தன. நாதிர்ஷாவுக்கும் முகலாயர்களின் படைகளுக்கும் நடந்த ஒவ்வொரு மோதலின் வெற்றியையும் அவை தீர்மானித்தன. முகலாயர்களிடமும் மற்றவர்களிடமும் சண்டையிட கைவாள்கள் மட்டுமே இருந்தன.
நாதிர்ஷாவின் படைகள் டெல்லியைச் சூறையாடின. ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். மயிலாசனம் உட்பட முகலாயர்கள் சேர்த்து வைத்திருந்த அத்தனை செல்வங்களையும் நாதிர்ஷா எடுத்துச் சென்றுவிட்டார். 700 யானைகள், 4000 ஒட்டகங்கள், 12000 குதிரை வண்டிகளில் தங்கமும், வெள்ளியும், விலையுயர்ந்த கற்களும் அவற்றில் அடக்கம். ஏறக்குறைய முகலாயர்களின் பொன் மற்றும் பொருட்கள் அனைத்தும் டெல்லியிலிருந்து ஈரான் போய்விட்டன. தனது படைகளின் அட்டகாசத்தை நிறுத்த வேண்டும் என்று முகலாயப் பேரரசர் நாதிர்ஷாவிடம் மண்டியிட்டு மன்றாடினார். ஒருவகையில் இந்தப் படையெடுப்பு முகலாயப் பேரரசின் முடிவுரையை எழுதிவிட்டது. தங்களது வலிமை, முகலாயர்களின் பெருமை நம்பகத்தன்மை அனைத்தும் இத்துடன் ஒரேயடியாக மறைந்து விட்டன.
நாதிர்ஷா மட்டும்தான் இவ்வளவு கொடுமையாக நடந்து கொண்டார் என்பதில்லை. எல்லாப் போர்களிலும் எல்லாக் காலங்களிலும் இது நிகழ்ந்தது. கலிங்கத்தின் மீது படையெடுத்த சோழர்களின்போர் இதைவிட எந்த விதத்திலும் குறைந்ததல்ல. தமிழில் கலிங்கத்துப் பரணி அப்போது நிகழ்ந்த வன்முறையைக் கொடுமைகளை விவரிக்கின்றது. மிகைப்படுத்திச் சொல்லப்பட்டாலும் வெற்றி பெற்ற பின்னர் நிகழும் கொடுமைகளும் கொண்டாட்டங்களையும் இது தொட்டுக் காட்டுகிறது. கலிங்கத்தின் மீது படையெடுத்து அசோகப் பேரரசு பெற்ற வெற்றியை இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம். அது அசோகரின் வாழ்க்கையையே மாற்றி விட்டது. போரின் காட்டுமிராண்டித்தனத்தை அது விளக்குகிறது.
முகலாயப் பேரரசரிடமிருந்து வணிகம் செய்ய அனுமதி பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனி காலம் கனியட்டும் என்று காத்திருந்தது. முதலில் வங்காளத்தில் தொடங்கி மெல்ல மெல்ல தங்கள் காய்களை நகர்த்தினர். திட்டமிட்டு செயல்பட்டு, ஒவ்வொரு அரசருக்கும், முகலாய ஆளுனருக்கும் எதிராக உள்ளவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு தங்களுடைய செல்வாக்கையும் பலத்தையும் அந்தக் கம்பெனி வளர்ந்து வந்தது. ஒவ்வொருவராக முகலாய ஆளுனர்களை தங்களின் கீழ் கொண்டு வந்தது. பிறகு திப்பு சுல்தானை 1799இலும் அதன்பிறகு மராட்டியப் பகுதிகள் முழுவதையும் கைப்பற்றிக் கொண்டது.
இதற்காக எல்லா விதமான தந்திரங்களையும் கம்பெனி கையாண்டது. கையூட்டு, கட்சி மாறுதல், துரோகம் இவையெல்லாம் அவற்றில் சில. ஆனால் இவற்றுக்கெல்லாம் கிழக்கிந்தியக் கம்பெனியை மட்டும் குறை சொல்ல முடியாது. ஒவ்வொரு அரசனும், கவர்னரும் பதவியையும், பலத்தையும் தன்னிடம் தக்க வைத்துக் கொள்ள செய்ய வேண்டியதை மட்டும் செய்தனர். குறுகிய நோக்கத்தில் மற்றவர்களுக்கு உதவ முன்வரவில்லை. ஒரே ஒரு மராட்டியத் தளபதி மட்டும் மற்ற அனைவரையும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகத் திரட்ட வேண்டும் என்று கருதினார். ஆனால் மற்ற அரசர்கள் அவரது சூழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்தனர். மராட்டிய ஆளுனர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருந்தன. புனேவிலிருந்த ஆளுனர் மற்றவர்களுடன் ஒன்றுபடவில்லை. இவ்வாறாக, ஒவ்வொரு அரசும் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் தனியே போரிட்டு தங்கள் நிலங்களை இழந்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியிடம் வலுவான அடிப்படைக் கட்டமைப்பும், துப்பாக்கிகளும், ஒழுக்கம் விசுவாசம் மிகுந்த படைகளும் இருந்தன. படையணிகளுக்கும் அவர்கள் காலந் தவறாமல் ஊதியம் அளித்தனர்.
இன்றைய அரசியல் சூழலில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காக முகலாய அரசப் படைகள் நிகழ்த்திய கொடுமைகளை 'முஸ்லிம்கள் நிகழ்த்தியதாக' விவரிப்பது நாகரீகமாகி வருகிறது. அரசர்களும் ஆளுனர்களும் அந்தக் காலத்தில் எவ்வளவு பெரிய நிலப்பரப்பை தங்களின் கீழ் கொண்டுவர முடியுமோ அவ்வளவு பகுதிகளையும் அடைய விரும்பினர். அப்படித் தங்களின் கீழ் கொண்டுவர படையெடுத்தல் என்ற ஒரே வழிதான் இருந்தது. அது வன்முறைதான். அது மன்னர்களுக்கும் படையணிகளுக்கும் எதிராக மட்டுமல்ல சாதாரணக் குடிமக்கள் மீதும் நிகழ்த்தப்பட்டது. பலம் பெறவும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் வன்முறை உறுதியாக உதவியது. அந்தக் கொடுமைகளை அவர்கள் நிகழ்த்துவதற்குக் காரணம் அவர்கள் ஆட்சியாளர்கள் என்பதுதான். அரசர்கள் முஸ்லிம்களாக அல்லது இந்துக்களாக இருந்தது காரணம் அல்ல.
போர்க்காலங்களில் எந்த அளவு வன்முறை சாதாரண மக்கள் மீது ஏவி விடப்பட்டது என்பதற்கு இந்நூலில் சான்றுகள் உள்ளன. உதாரணமாக, 1740களில் மராட்டியப் பெரும்படைகள் வங்காளத்தின் மீது போர் தொடுத்த போது தாங்கொணாத வன்முறை நிகழ்ந்தது. 4 லட்சம் குடிமக்கள் கொல்லப்பட்டனர். பாஸ்கர பண்டிட் என்ற மராட்டிய ஆளுனரின் படைத் தலைவரான போன்ஸ்லே 20000 காலாட்படைகளுடன் போர் தொடுத்தார்.
பர்த்வான் பகுதியின் மன்னரிடம் வேலை பார்த்த வானேஷ்வர் வித்யாலங்கார் என்ற பண்டிட் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்: “மராட்டியர்கள் கொஞ்சம் கூடக் கருணை இல்லாதவர்கள், கருவுற்ற பெண்கள், குழந்தைகள், பிராமணர்கள் ஏழைகளைக் கொல்கிறவர்கள், முரட்டுத்தனமான மனமும் குணமும் கொண்டவர்கள், எல்லோருடைய சொத்துக்களையும் கொள்ளையடிப்பதில், ஒவ்வொரு பாவத்தையும் செய்வதில் வல்லவர்கள், பெரும் அழிவுகளைக் கொண்டுவரும் வால் நட்சத்திரங்களைப் போல, மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தி எல்லாவற்றையும் ஒன்றுகூட மீதமில்லாமல் வங்காளத்தின் கிராமங்களை முற்றிலும் அழித்தவர்கள்”
கங்காராம் என்ற வங்காளக் கவிஞர், தன்னுடைய மஹாராஷ்டிரப் புராணத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “பர்கீஸ் (மராட்டியர்கள்) என்ற பெயரைக் கேட்டதுமே கிராமத்தில் இருந்த அனைவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டனர். தெருக்களில் ஒருபோதும் கால்களை வைத்தறியாத மரியாதைக்குரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்மணிகள் தலைகளில் கூடைகளை வைத்துக் கொண்டு ஓடினர். தங்கள் வாளின் பலத்தில் நில உடமையாளர்களாக மாறிய ராஜபுத்திரர்கள் தங்கள் வாட்களைத் தூர எறிந்துவிட்டு ஓடிவிட்டனர். தங்கள் உழுகருவிகளை தோளில் சுமந்து கொண்டு, அடுத்த வருட விதைப்புக்கான விதைகளை மாடுகளின் மீது பாரம் ஏற்றிக் கொண்டு விவசாயிகளும் வெளியேறினர். நடக்க முடியாமல் நடந்த கருவுற்ற பெண்கள் ரோடுகளின் மீதே குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
மராட்டியர்கள் வந்தபோது தங்கம் வெள்ளி இவற்றைப் பறித்துக் கொண்டனர். மற்றப் பொருட்களை ஒதுக்கிவிட்டனர். சிலருடைய கையை வெட்டிவிட்டனர், சிலரது மூக்கை வெட்டிவிட்டனர்; சிலரை கொன்றுவிட்டனர். ஓட முயன்ற மிக அழகான பெண்களை இழுத்துச் சென்றனர். அவர்களது கழுத்திலும் விரல்களிலும் கயிற்றைக் கட்டி வைத்தனர். ஒருவன் ஒரு பெண்ணை முடித்ததும் அவள் அலறிக் கொண்டே இருக்கும்போதே அவளை இன்னொருவன் எடுத்துக் கொண்டான். பார்கிஸ் (மராட்டியர்) மோசமான, மிருகத்தனமான பாவச்செயல்களைச் செய்து முடித்து அந்தப் பெண்களை போக விட்டனர்.
விளைநிலங்களைக் கொள்ளையடித்த பிறகு கிராமங்களில் நுழைந்தனர். வீடுகளுக்குத் தீவைத்துக் கொளுத்தினர். சிறியதோ பெரியதோ பங்களாக்கள் குடிசை வீடுகள், கோயில்கள் எல்லாவற்றையும் கொளுத்தி விட்டனர். ஒரேயடியாக கிராமங்களை அழித்தனர். எல்லாத் திசைகளிலும் சுற்றிச் சுற்றி கொள்ளையடித்தனர்".
இது இப்படித் தொடர்கிறது. கருணையற்ற வன்முறைதான் அரசியலைத் தீர்மானித்தது. இப்போது கூட, போர் கடைசி வழியாக இருந்தாலும், அது தொடங்கி விட்டால், வன்முறையும், கொடூரங்களும், பெரும் எண்ணிக்கையில் சாதாரண மனிதர்கள் கொல்லப்படுவதும் தவிர்க்க முடியாதவையாகி விட்டன. சதாம் உசைனுக்கும் கர்னல் கடாஃபிக்கும் நடந்தது விதிவிலக்கு அல்ல. வரலாறு முழுவதிலும் இது நடந்து வந்திருக்கிறது. போர் நடக்கும் போதும் அது முடிந்த பின்னரும் நிகழும் காட்டுமிராண்டித்தனத்தில் 16ஆம் நூற்றாண்டுக்கும் 21ஆம் நூற்றாண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
மராட்டியர்கள் ஆங்கிலேய அல்லது ஐரோப்பிய வாழிடங்களை மிகக் கவனமாகத் தவிர்த்தனர். “ஏனெனில் அவர்கள் பீரங்கிகள், துப்பாக்கிகளை பயன்படுத்துவதில் திறமையானவர்கள்”. மராட்டியர்கள் தான் வங்காளிகளை ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகத் திருப்பியவர்கள் என்று தோன்றுகிறது. அவர்களது ஆதிக்கம் முகலாயர்களை விட சிறந்திருந்தது. ஒருவகையான சமூக ஒழுங்கை நிலைநாட்டினர்.
சுஷ்தாரி என்ற இன்னொருவர் இவ்வாறு எழுதினார்: “ஆங்கிலேயர்கள் யாரையும் மனம்போனபடி வேலையிலிருந்து விலக்குவதில்லை. திறமையான ஒவ்வொருவரும் அவராக வேலை வேண்டாம் என்றோ ஒய்வடைய விரும்புகிறேன் என்று சொல்லும் வரை வேலை பார்க்கலாம். குறிப்பிடப்பட வேண்டிய இன்னொன்று என்னவெனில் அவர்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவருடைய விழாக்களில் பங்கெடுத்துக் கொண்டார்கள். எல்லோருடனும் கலந்து பழகினார்கள். எந்த இனத்தைச் சேர்ந்த அறிஞர் என்றாலும் பெரும் மரியாதையுடன் நடந்து கொண்டார்கள்”.
'கிழக்கிந்தியக் கம்பெனி என்ற வணிக நிறுவனம் அரசைப் போல ஆட்சி நடத்தியது' என்று நூலாசிரியர் கூறுகிறார். பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப் போர்புரிந்து தோற்கடித்த அமெரிக்கத் தேசபக்தர் கூறுவதை இவ்வாறு நினைவுகூர்கிறார்: “கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவைக் கொள்ளையடித்துவிட்டு, அமெரிக்கா என்ற புதிய களத்தில் கொள்ளையடிப்பதில், ஒடுக்குவதில் கொடுமைகள் இழைப்பதில் தனக்கிருந்த திறமைகளை நிகழ்த்தத் திட்டமிட்டது. வங்காளத்தில் இணையற்ற காட்டுமிராண்டித் தனத்தை, மிரட்டிப் பறிப்பதை, ஏகபோகத்தை நடத்திச் சீரழித்த கிழக்கிந்தியக் கம்பெனி அமெரிக்காவிலும் அதையே நடத்த விரும்பியது. நாம் (இந்தியச்) சிப்பாய்களோ மராட்டியர்களோ அல்ல. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்'.
மிகவும் அரசியல் பலமுள்ள வணிகர்கள் வங்காளத்தில் அன்று இருந்தனர். ஜகத் சேட் என்ற வட்டிக் கடைக்காரர்கள் வங்காளத்தை ஆள்கிறவர்களுக்கு நிதி ஆதாரம் அளிப்பவர்களாக, ஆள்கிறவர்களைக் கட்டுப்படுத்துகிறவர்களாக இருந்தனர். 1740இல் அலி வர்தி கான் அன்றைய ஆட்சியைக் கவிழ்த்துப் பதவிக்கு வருவதற்குப் பின் அவர்களே இருந்தனர். அதற்கு நிதியும் அளித்தனர்.
கிழக்கிந்தியக் கம்பெனி தனது அதிகாரிகள் இந்தியாவைக் கொள்ளை அடிக்கவும் அதனால் அவர்களுக்கு குறையேதும் நேராமலும் பார்த்துக் கொண்டது. ஒரு எழுத்தராக இருந்த ராபர்ட் கிளைவ் தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் உறுப்பினரானது நூலில் குறிப்பிடப்படுகின்றது. கிழக்கிந்தியக் கம்பெனி கொள்ளையடித்த லாபமனைத்தையும் இங்கிலாந்துக்கு அனுப்பியது. அதன் மூலம் பாராளுமன்றத்தில் செல்வாக்குப் பெற்று அதை வைத்து மேலும் லாபம் அடைந்தது. இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி ஆட்சியாளர்களை மாற்றுவதைப் போன்ற நிலை அன்றும் இருந்தது.
வணிகத்தின் மூலம் அரசியலைக் கட்டுப்படுத்தும் முதல் நிறுவனமாக கிழக்கிந்தியக் கம்பெனி திகழ்ந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியே கூட நினைத்திராத அளவுக்கு அதன் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறின. கிழக்கிந்தியக் கம்பெனி கடந்த காலத்தில் ஓர் அரசனுக்கு எதிராக இன்னொருவனை நிறுத்தி இருவரிடமிருந்தும் அதிகச் சலுகைகளை எப்படிப் பெற்றதோ அது போலவே இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பணபலத்தின் மூலம் தமது வருமானம், பலம், கௌரவம் இவற்றுக்கு ஏற்ற வகையில் அரசுகளின் கொள்கைகளை மாற்றும்படி செய்கின்றன.
இந்தப் புத்தகத்தில் போர்கள் அதனடிப்படையில் நிகழ்வுகள் குறித்துக் கால வரிசைப்படி தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய அரசர்கள் சிறந்த நிர்வாகிகளாக, மிகச்சிறந்த படைத்தளபதிகளாக இருந்த போதிலும் குறுகிய பார்வையுடன் செயல் பட்டதை இந்நூல் பதிவு செய்கிறது. பிரித்தானிய இந்தியப் படைபலம் பல போர்களில் வெற்றியைத் தீர்மானித்தது என்பதை மறுக்க முடியாது. அமைப்புரீதியாகச் சிறப்பாகத் திரட்டப்பட்ட நிறுவனத்துக்கு, வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்று சேர்ந்து போரிட முடியாத நிலையில் இந்திய மன்னர்கள் இருந்தனர்.
இந்தியா என்ற அரசியல் கருத்துருவம் விடுதலைக்காகப் போரிட்டவர்களின் புனைவாக இருந்தது என்ற எனது புரிதல் இந்த நூலைப் படித்தது உறுதிப்பட்டது. அதற்கு முன்னரும் பண்பாட்டு ஒற்றுமை இருந்தது என்று நாம் வாதிடலாம். இந்தப் புனைவை நாம் நம்ப விரும்புகிறோம். இந்தப் புனைவு நாம் உற்சாகத்துடன் போராட்டக் களத்தில் இறங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இதன்படி பார்த்தால் கூட, தமிழகத்துக்கும் கர்னாடகாவுக்கும் பண்பாட்டுத் தொடர்பு இருந்தால் அது மஹாராஷ்டிராவுக்கு அப்பால் தொடர்ச்சியாக இல்லை. ஆனால் கர்னாடகத்துக்கும் மஹாராஷ்டிராவுக்கும் பண்பாட்டுப் பொதுமைகள் உண்டு. இதை எண்களின் மூலம் விளக்க முயற்சிக்கிறேன். ஒன்று என்ற எண்ணுக்கும் 2 என்ற எண்ணுக்கும் தொடர்பு தொடர்ச்சியும் உண்டு. அதுபோலவே 2 க்கும் 3க்கும் தொடர்பு உண்டு. அதுபோலவே அடுத்தடுத்த எண்களுக்கும் தொடர்ச்சி உண்டு. இந்த வாதத்தின்படி பார்த்தால் 1க்கும் 10க்கும் தொடர்பு உண்டு. ஆனால் அது 1க்கும் 2க்கும் உள்ள நெருங்கிய தொடர்பு போன்றது அல்ல. இந்த வகையில் பார்த்தால் உலகம் முழுவதும் பண்பாட்டால் ஒன்றுபட்டது என்றும் சொல்லலாம். வேற்றுமைகளை மட்டும் பார்த்தால் வேறுபட்டது என்றும் சொல்லலாம்.
ஈரானியத் திரைப்படங்களை நான் பார்த்தால் அவர்களுடைய பண்பாட்டுக்கும் வட இந்தியப் பண்பாட்டுக்கும் ஒற்றுமைகள் தெரிகின்றன. குறிப்பாக பஞ்சாபிகளின் முகவடிவங்கள் கூட ஈரானிய முகங்களை ஒத்திருக்கின்றன. தமிழ்நாடும், பஞ்சாபும் இந்தியநாட்டின் பகுதிகளாக இருப்பதால் அதே காரணத்தை வைத்து, தமிழ்நாட்டுக்கும் ஈரானுக்கும் பண்பாட்டு ஒற்றுமைகள் இருக்கின்றன என்று வாதிட முடியாது. அதுபோலவே இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் இருப்பவர்களுக்கும் பர்மிய மக்களுக்கும் பண்பாட்டுத் தொடர்புகளும் தொடர்ச்சிகளும் உண்டு. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, இலங்கை இவற்றுக்கிடையே பண்பாட்டுத் தொடர்பும் தொடர்ச்சியும் உண்டு. இந்தப் பண்பாட்டு ஒற்றுமைகளின் அடிப்படையில் பர்மா இந்தியா என்றோ அல்லது இலங்கையும் இந்தியா என்றோ வாதிட முடியாது.
இதற்கு நேர் மாறாக பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால், இந்திய பாகிஸ்தானிய மக்களின் பண்பாடுகள் மிகவும் நெருங்கியவை. சொல்லப் போனால் மதம் தவிர இரண்டும் ஒன்றேதான். நாம் ஒரே நாடாகத்தான் இருந்தோம் என்று சொல்வதில் பொருளில்லை. நாம் ஒரே நாட்டின் பகுதிகளாக இருந்ததில்லை. முன்பு இருந்த பல பேரரசுகளின் பகுதிகளாக இருந்தோம். தேசம் நாடு என்ற கருதுகோள்கள் விடுதலை அடைந்த நேரத்தில் உருவானவை.. அதனால், பண்பாட்டு ஒற்றுமை மட்டும் ஒரு தேசம் அமைவதற்கு அடிப்படையாக முடியாது.
நேரடி அரசியல் அனுபவங்கள், அரசியல் புனைவுகள் தேசங்களை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது நாம் பிரித்தானியர்களால் தங்கள் ஆட்சிக்காகப் பிரிக்கப்படவில்லை என்பதில் முடிகிறது. நாம் பிரிந்தே தான் இருந்தோம். பேரரசுகளின் கீழ் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தோமே தவிர ஒன்றாக இருந்ததில்லை. இந்தியா என்ற தேசம் பல்லாயிரம் வருடங்களாக இருந்தது என்று நாம் கற்பனை செய்து கொண்டால் அது உண்மையல்ல. நிலப்பரப்பு இருந்தது, மக்கள் இருந்தனர். அரசியல் ஒருமைப்பாடு இப்போது இருந்தது போல் இருந்ததில்லை. அதனால்தான் இந்திய தேசம் என்பது ஞானிகளான நமது விடுதலைப் போராட்ட வீரர்களால் உருவகிக்கப்பட்டது.
பெரும் விடுதலைப் போராட்டத்தின் விளைவாக ஒன்றிணைந்த நாம் ஒற்றுமையாக இருக்க அரசியல் காரணங்களும் மற்ற காரணங்களும் இருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் உலகமயமாக்கல், கட்டுப்பாடுகளற்ற சந்தை என்ற பெயர்களில் நமது அரசியலில் செல்வாக்கு செலுத்த முனைகின்றன. தேசம் என்ற கருதுகோள் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. மனிதர்கள் ஒரு நாட்டில் பிறக்கிறார்கள், இன்னொரு நாட்டில் கல்வி பெறுகிறார்கள், வேறொரு நாட்டில் வேலைக்குச் செல்கிறார்கள் இப்படி நாடு விட்டு நாடு மாறிக் கொண்டிருக்கிறார்கள். கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதைப்போல், தனித்திறமைகள் உள்ளவர்களுக்கு எல்லா நாடுகளிலும் வரவேற்பு இருக்கிறது. தங்களது திறமை எங்கெல்லாம் மதிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அவர்கள் செல்வார்கள்.
தேசியவாதம் என்றும் தேசபக்தன் என்றும், தேசத் துரோகி என்றும் இந்தக் காலத்தில் பேசுவது கடந்த காலக் கதைகளாகவே இருக்கும். அடக்குமுறையைப் பின்பற்றும் அரசுகளுக்கும் ஆள்வோருக்கும் மட்டுமே அது பயன்தரும். படைபலத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் அல்லது உலகின் முதற்பெரும் வல்லரசு என்ற அளவில் பலம் பெற வேண்டும் என்று வாதிடுகிறவர்களுக்கே அது பயன்படும். ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவிய மானிட இனம் போலவே, தேசங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்றைய மனிதர்களும் உலகமெங்கும் சுற்றிவரும் சுதந்திரம் பெற வேண்டும். ஏனெனில் நாம் அனைவரும் அடிப்படையில் ஒரே மானிட இனம். நிர்வாக வசதிக்காக தேசங்கள் அரசுகள் என்று பிரிந்திருக்கிறோம். குடியுரிமை, அடிப்படை உரிமைகள், பல்வேறு இன மக்களுடன் நாம் செய்து கொண்ட சமரசங்கள் இவற்றின் காரணமாகவே இந்தியா என்ற அரசியல் கருதுகோளை நிதர்சனமாக்கி இருக்கிறோம். இவற்றின் அடிப்படையில்தான் நாம் தேசம் அரசு என்பதை அணுக வேண்டும்.
இந்த அரசியல் யதார்த்தம் நமது இன்றைய, எதிர்கால அரசியல் தேவைகளுடன் பொருந்தியிருக்க வேண்டும். அது நாம் கற்பனை செய்து கொள்ளும் கடந்த காலத்தின் அடிப்படையிலோ அல்லது அதன் பெருமையிலோ புதைந்து இருக்க முடியாது. தேசியவாதத்திற்கான இந்த நவீன அணுகுமுறைதான் வேற்றுமைகள் இருந்தாலும் நாம் தொடர்ந்து ஒன்றிணைந்திருக்க வழிவகுக்கும்.
இறுதியாக 'அராஜகம்' (அனார்க்கி) அன்று நம்மை ஆண்ட மன்னர்களால் உருவாகவில்லை. அதுதான் நமது அரசியல் யதார்த்தமாக இருந்தது. ஒவ்வொரு அரசனுக்கும் இன்னொரு அரசனுக்கும் உள்ள பேராசை, குறிக்கோள் இவற்றின் மோதல் இந்தப் பெரும் நிலப்பரப்பின் யதார்த்தமாக இருந்தது. அவை 1947இல் மூன்று நாடுகளாக உருவாயின.
நமது கடந்த காலம் பற்றிய பல கனவுகளை மிகச் சிறந்த இந்நூல் மாற்றி விடுகிறது. இன்னும் சிறந்த வகையில் நமது தேசியத்தை புனைந்து கொள்வது எவ்வாறு என்று தேடுகிற ஆவலைத் தூண்டுகிறது.
(இது நூல் குறித்த பதிவு அல்ல - இந்த நூலைப் படித்தபின் மனதில் ஏற்பட்ட எண்ணங்களின் தொகுப்பு)
No comments:
Post a Comment