ஒவ்வொரு நல்ல புத்தகத்தின்
உள்ளும்
வலம் வருகிறது
ஒரு இதயம்
அதன் படபடப்பில்
நானும் மகிழ்ந்து
சிறகைப் படபடக்கிறேன்
சிலிர்த்தாட்டுகிறேன்
என் காக்கைத் தலையை
அதன் வார்த்தைகளில்
இருந்து
ரத்தம் பாய்கிறது
எனது உடலில்
சக்தி பீறிடுகிறது
எனது மூளையில்
அமெரிக்காவின்
ஒபாமாவின்
அடையாளக் குழப்பம்
எனதாகிறது
கார்ஸியா மார்க்வெஸ்ஸின்
கொலையுண்ட மனிதன்
என் ஊரிலிருந்தான்
ஜெ.எம் கோயட்ஸியின்
பேராசிரியர்
சிறுமையில் வீழும்
போது
அந்தப் பெண்ணின்
குரல்
இந்தியப் பல்கலைக்
கழகங்களில்
எதிரொலிக்கிறது
நாமெல்லாம் வெவ்வேறு
நாடென்றும் இனமென்றும்
மொழியென்றும்
யார் சொன்னது?
நாம் பறவைகள்
பூமியில் இருக்கும்
அத்தனை மரங்களும்
பழங்களும்
நமது சொந்தமே
ஒவ்வொரு புத்தகத்தின்
உள்ளும்
வலம் வருவது
ஒரு இதயம்
அது நமது.
No comments:
Post a Comment