Wednesday, April 05, 2017

எந்தத் தியாகங்களும்
யாருக்கும்
நினைவிருப்பதில்லை
சில நாட்கள் கழித்து..

மாபெரும் பேரரசுகளை
ஆண்ட மன்னருக்காக
உயிர்விட்டவர்கள்

நாட்டுக்காகப்
போரிடப் பணிக்கப்பட்டு
மிக எளிதாக
ஏமாற்றிக் கொல்லப்பட்டவர்களும்,

பெரும் திட்டங்கள் தீட்டி
மரணத்தைத் தழுவியவர்களும்

யாரையும் நினைவுகூர்வதில்லை
யாரும்

பெயர் பொறிக்கப்பட்ட
பல கல்வெட்டுக்களை
வாசிக்கக் கூட முடிவதில்லை
அவற்றை மொழிபெயர்த்துப் போட்டாலும்,
யாருடைய முகமும்
பெயரும்,
ஆளுமையும் தெரிவதில்லை

வரலாற்றின் பக்கங்களை
வாசித்தவர்கள் கூட
மீண்டும் அதே தவறுகளைக்
குற்றங்களை, துரோகங்களைச்
செய்கிறார்கள்

இன்றைக்கு
நீதியை,
வாழ்வை
சொர்க்கத்தைத்
தரமுடியாதவர்களும்
பெற முடியாதவர்களும்
எதிர்காலத்திலோ
இறந்த பிறகோ
பெறுவது  எப்படி?

வாழ்க்கை என்பது நிகழ்காலம்
இங்கே
வேண்டும்
நீதியும் வசதியும்

கால காலங்களுக்கும்
நிலைத்திருக்க 
ஏன் இந்த மனிதர்களுக்குப் 
பேராசை?

ஒன்றும் ஆவதில்லை என்று
தெரிந்த பின்னும்
எதற்கு இந்த 
நினைவலைகள்
நினைவகங்கள்

No comments:

Post a Comment