Thursday, April 27, 2017

வரலாற்றின் ரகசியங்கள்

வரலாற்றின் புதைகுழிகள்
மூடியே இருக்கட்டும்

அழுகிப்போன கதைகளைக் கூறும்
அடிவாங்கிய எலும்புகள்
வெளியே வரக்கூடும்

நமது கற்பனையில்
உருவான ராம, சோம, காம ராஜியம்
புழுத்துப் போன பண்பாட்டின்
நாற்றமாக வெடிக்கக்கூடும்

ஆங்கிலேயர்களுடன்,
ஆண்டவர்களுடன்,
கைகோர்த்து ரத்தத்தை உறிஞ்சிய
நம்ம ஊர்ப் புண்ணியவான்களின்
அடையாளம் தெரிந்துவிடக் கூடும்

வரலாற்றின் இருளில் மறைந்த
புதிய முகங்கள்,
மதமென்னும் பேயினால் நிகழ்ந்த
கொலைகள்
மீண்டும் மீண்டும்
நினைவுக்கு வரக்கூடும்

பசிக்கும் பட்டினிக்கும்
பயந்து
கொலைகாரக் கூட்டத்தில்
சேர்ந்த
இளிச்சவாயர்களும்
மன்னிப்புக் கோரக்கூடும்

சாத்திரங்களில் பெயரில்
தமக்குச் சாதகமாகப் பேசும்
சதிகாரக் கும்பல்
கூச்சல் இடக்கூடும்
அதில் அடிபட்ட வலிகளின் அலறல்கள்
மூழ்கிவிடக்கூடும்

வரலாற்றின் சவக் குழிகள்
மூடியே இருக்கட்டும்

பேரரசர்களைக் கொலைகாரர்கள் என்றும்,
கொலைகாரர்களாய் அறியப்பட்டவர்கள்
பேரரசர்களின் கையாட்கள் என்றும்
பேரரசராக விரும்பியவர்கள் என்றும்
நாம் அறிந்துவிடக்கூடும்

புனிதர்களாய், ஞானவான்களாய்,
தர்ம ராஜாக்களாய் சொல்லப்பட்டவர்களின்
போஸ்டர்கள் கிழியக்கூடும்
அவர்களின்
குருதிவழியும் கோரைப்பற்கள்
தெரியக்கூடும்

மனிதர்களை மனிதர்களாய்ப்
பார்க்கத் துணிவிருந்தால் மட்டுமே
வரலாற்றின் புதைகுழிகளைத்
திறந்துவிடு
புதிய உண்மைகள்
ஒவ்வொரு காலத்திலும்
ஒவ்வொருத்தர் பார்வையிலும்
கேலியாய்ச் சிரிக்கக்கூடும்.

No comments:

Post a Comment