காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன் – 1
இருளில் நகரும் யானை - 2
மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரனுடைய
சில கவிதைகளை அவ்வப்போது படித்திருக்கிறேன்.
தொகுப்பாக இப்போது தான் படிக்கிறேன்.
தமிழகத்தின் தற்போதைய கவிஞர்களில் முக்கியமானவராக, பிரபலமானவராக இருக்கிறார்
என்பதனாலேயே ஒரு மனத்தடை இருந்தது. இங்கே பிரபலம்
பெறுவதற்காக பலரும் பல முயற்சிகளில் ஈடுபடுகின்ற செல்ஃபி பண்பாட்டில் எதையும் தானே
பயின்ற பின்னரே முடிவுக்வுக்கு வரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஆனால்
மனுஷ்யபுத்திரனைப் படித்து மிகவும் மகிழ்வு கொண்டேன். அவரிடம் எளிய மொழியும், அறச்சீற்றமும், அரசியல்
நிகழ்வுகளுக்கு உடனடியாக எதிர்வினையாக எழும் கவிதைளும் அவருடைய ஆளுமையில் எனக்குப்
பிடித்திருந்தன. தனிப்பட்ட முறையில் அவர் எப்படி
இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அது
தெரிந்திருக்க வேண்டியதில்லை என்றே நம்புகிறேன்.
1. காந்தியுடன்
விருந்துக்குச் செல்கிறேன்
முதல் கவிதை
நம்மை அதிர்ச்சிக்கும், உள்ளாக்குகிறது. ‘வாங்கடா
என்று தன் உறுப்பைக் காட்டிட்க்கொண்டு சவால் விடும் பெண்ணை நாம் எங்கும் இலக்கியத்தில்
சந்தித்திருக்கிறோமா? ‘இனி நகரங்கள் எரியப் போவதில்லை’ என்பது பெண்களுக்கு நேரும் நிலைகுறித்துக்
கேள்விகளை எழுப்புகிறது. மிகச்சிறப்பான கவிதைகளில்
ஒன்று.
சாமியார்களைப் பற்றி, ’கடவுள்கள் இறந்த உலகின், தனிமைக்குள்,
நுழைகிறார்கள், கள்ளத் தீர்க்க தரிசிகள்’ என்கிறார்.
’ஒரு சிந்துவும்
இன்னொரு சிந்துவும்’ கவிதை புதிய வடிவம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது விளையாட்டு வீராங்கனை
சிந்துவுக்கும், வாழ்விலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத்துடிக்கும் ‘இன்னொரு சிந்துவுக்கும்’
ஒப்பீடு செய்கிறார். ‘வெற்றியும் தோல்வியும் எப்படி ஒரே நேரத்தில் நிகழமுடியும்’ என்பவை
முக்கியமான வரிகள். (தங்கப் பதக்கத்தைக் கோட்டைவிட்ட சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளிப்
பதக்கம் வென்றது கண்டு இந்தியாவே மகிழ்ந்த தருணம் அது – தோல்வியிலும் மகிழ்வு உண்டு).
‘டம்மிகள்
இல்லாமல் நிஜங்கள் வெல்வது கடினம் அன்பே’ நமக்கும்
தெரிகிறது.
’தவறான முடிவுகளில்
நம்மைத் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. சரியான முடிவுகளில் உங்களை மாற்றிக்
கொள்வதற்கான எல்லா வாய்ப்புக்களையும் இழந்து விடுகிறீர்கள்’ என்ற வரிகள் பல உட்பொருட்களைக்
கொண்டவையாக இருக்கின்றன. ஒரு எதேச்சாதிகாரி’
’தவறான முடிவுகளை எடுப்பதே இல்லை’ என்றே நம்புகிறான். அவனை ஒரு போதும் திருத்த முடியாது. ஆனால் தான் தவறு செய்யக் கூடும் என்று நம்புகிறவன்
சரியான வழிக்கு வந்துவிடுவான்.
’அன்பு உபயோகிக்க
முடியாத கவிதையாகி விடுகிறது’ என்பதை நாம் ஒப்புக் கொள்வோம்.
‘சோக கீதங்கள்
இசைப்பவர்கள் மட்டும் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை
எவ்வளவோ சோகமானதாகா மாறியிருக்கும்’
காந்தியுடன்
இரவு விருந்துக்குச் செல்கிறேன் என்ற கவிதை, காந்திய வழிகளின் இன்றையத் தேவையை உணர்த்துகிறது.
இன்னும் பலகவிதைகளைச்
சொல்லிக் கொண்டே போகலாம். மிக நல்ல தொகுப்பு
2. இருளில்
நகரும் யானை – இத்தொகுப்பிலும் மிக நல்ல கவிதைகள். இருக்கின்றன. தினமும் நிகழும்வாடிக்கைகளைவேடிக்கைகளைக் கண்டு
கவிதை பிறக்கிறது, அது நன்றாகவே கவிதையாகி இருக்கிறது. அதன் மூலம் நித்தியமான கேள்விகள் எழுகின்றன. இவ்வளவு குறுகிய காலத்தில் எழுதினாலும் பல கவிதைகள்
நன்றாக இருக்கின்றன.
இன்னொன்றும்
தோன்றுகிறது. இன்னும் ஒருமுறை திரும்பிப் பார்த்திருந்தால் நன்றாக வந்திருக்கும் கவிதைகள்
மிகச் சிறப்பான கவிதைகளாக வந்திருக்கும். இது
ஒரு யூகம் தான். தவறாகவும் இருக்கக் கூடும்.
அடுத்த புத்தகம் ‘ பஷீரின் எடியே’ – வைக்கம் முகம்மது பஷீரின் மனைவி சொல்லச் சொல்ல தாஹா மாடாயி மலையாளத்தில்
எழுதியது. தமிழில் மொழிபெயர்த்தவர் சுகுமாரன்.
வைக்கம்
முகம்மது பஷீர் பெயரைக் கேட்டாலே சிலிர்க்கிற அளவுக்கு அவருடைய படைப்புகள் என்னைக்
கவர்ந்திருக்கின்றன. இந்தப் புத்தகத்துடன்
அவரது மற்றப் புத்தகங்கள் இரண்டையும் வாங்கியிருக்கிறேன். நினைவுகூரல் வகையில் எழுதப்பட்ட இச்சிறு நூலை ஒரே
மூச்சில் படித்துவிட்டேன்.(91 பக்கங்கள்)
எனது அபிமான
எழுத்தாளரின் ஆளுமையைப் புரிந்து கொள்ள உதவியது.
நல்ல மொழிபெயர்ப்பு.