Tuesday, August 23, 2016

ஐயா, (தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார்)  நினைவுகள்

            ஐந்தாவது வகுப்பில் திருநெல்வேலி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் படித்த என்னை விடுதிப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அம்மா அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்அவருக்கு ஓட்டப்பிடாரத்தில் நானும் என் தங்கையும் பயின்ற பள்ளி, சரியான பள்ளி அல்ல என்ற கருத்து இருந்ததுமேலும், பல ஜோஸ்யர்கள் உங்கள் பிள்ளை உங்களுடன் இருந்தால் அவனது எதிர்காலம் நன்றாக இருக்காதுநீங்கள் பிரிந்து இருந்தால்தான் அவனது எதிர்காலம் நன்றாக இருக்கும். உங்களுடன் இருந்தால் உருப்படாமல் போய்விடுவான் என்று சொல்லுவதாகவும் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார்கள்

            இதன் விளைவாகவே விடுதியுடன் கூடிய பள்ளியில் சேர்க்க வேண்டிய  முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன்.   ‘சைனிக் ஸ்கூல்’, அமராவதி பள்ளியைப் பற்றிய தகவல் அறிக்கையையும் அந்த நேரத்தில் நான் பார்த்த ஞாபகம் இருந்தது.  இந்நிலையில்ஓட்டப்பிடாரத்தில் இருந்த ஹரிசன விடுதியின் பொறுப்பாளராக இருந்த சங்கரன் பிள்ளை என்பவரிடமிருந்து தெரிந்து கொண்ட தகவலின்படி கோயமுத்தூர் அருகில் இருந்த பெரியநாயக்கன்பாளையத்தில் இருக்கும்ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் சேர்த்துவிடலாம் என்று முடிவு செய்து என்னை அழைத்துக் கொண்டு அம்மா அங்கே சென்றார்கள். அம்மா அதற்கு முன்னால் அந்தப் பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை.  நுழைவுத் தேர்வு வைத்தார்கள். பின்னால் அந்தப் பள்ளியின் நூலகத்தில் ஓர் ஆசிரியர் எங்களை நேர்காணல் செய்தார்.

            பள்ளி மற்றும் விடுதிக் கட்டணம் அதிகமாக இருந்ததால் ,(1968 ஆம் ஆண்டு) அம்மா அந்த ஆசிரியரிடம் சலுகைக் கட்டணத்தின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டார்கள்அதாவது ஆண்டுக்கு ரூபாய் 40 கட்டணம் கட்டும் (அதிகபட்ச சலுகைப்) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மன்றாடினார்கள்ஆசிரியர் அந்தப் பிரிவில் இடம் கிடைப்பது மிகவும் கடினம் என்றும், அடுத்த பிரிவில் அதாவது ஆண்டுக் கட்டணத்தில் பாதிச் சலுகை கட்டுப் பிரிவில் சேர்க்கலாம் என்றும் இல்லையெனில் இடம் கிடைக்காது என்று சொன்னார்அம்மாவும் சரி என்று ஒத்துக் கொண்டார்கள்இப்படித்தான்                    ‘ஸ்ரீ ராம்கிருஷ்ணா மிஷன் வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் எனது 9 வயதில் சேர்ந்தேன்.

            அந்தப் பள்ளியை நிறுவியவர்  ஐயா என்று எங்கள் எல்லோராலும் அழைக்கப் பெற்ற திரு. தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள்.  அப்பள்ளி 1934ஆம் ஆண்டு காந்தியடிகள் கோவைக்கு வந்தபோது ஒரு ஹரிஜன மாணவனுடன் தொடங்கப்பட்டது.  இன்று ஏதாவது சில நல்ல குணங்கள் என்னிடம் இருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் அந்தப்பள்ளியில் நான் கற்றுக்கொண்டவை என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது.  அய்யாவின் தினப்படி நடவடிக்கைகளை ஒரு சிறுவனாகக் கவனித்திருக்கிறேன்.  மிகவும் ஒழுக்கமான காந்திய வாழ்வு.   அவர் பள்ளி வளாகத்திலேயே வசித்து வந்ததால் இது சாத்தியமாக இருந்தது.   இப்போது அந்தப் பள்ளி எப்படி இயங்குகிறது என்று எனக்குத் தெரியாதுஆனால் நான் படித்த வேளையில், பத்து வயதிலிருந்து பதினைந்து-பதினாறு வயதுவரை அந்தப் பள்ளியின் பாதிப்பு, அதில் ஐயா அவர்களுடைய நேரடி, மற்றும் மறைமுகப் பாதிப்பு என்று இன்றுவரை என்னிடம் இருப்பதை என்னையன்றி யாரும் உணர முடியாது. நான் உணர்வதை, ஐயா அவர்களை ஒரு சிறுவனாக நான் பார்த்த்தைப் பதிவு செய்யலாம் என்பதே எனது எண்ணம்.   எந்தநூலையும் பார்த்து அல்லது எந்த தரவுகளையும் ஆய்வு செய்து எழுதியதல்ல இந்தப் பதிவு.

            அந்தப் பள்ளியின் சீருடை கதராடையால் ஆனது.  அடர்நீல (கடற்படை நீலம்) நிறத்தில் கால்சட்டையும், வெள்ளைநிற மேல் சட்டையும் சீருடையாக இருந்தன. அதுவும், பழைய காலத்து (அந்தக் காலத்திலும் அது பழையதான ஃபேஷன் தான்) அரைக்கைச் சட்டை, அதில் கழுத்துக்குக் கீழுள்ள இரண்டு பொத்தான்களுக்கான ஓட்டைகள் மட்டுமே உண்டு. அவையும் சட்டையில் தைக்கப்பட்டிருக்காது.   தனியாக ’டேப் பட்டன்’ வைத்துக்கொள்ள வேண்டும்.  அதற்குக் கீழ் பொத்தான்கள் கிடையாது.  ஜிப்பா போன்றிருக்கும் வடிவம்.  நான் ஆறாவது படிக்கும் மாணவன் – 9 வயதுநினைத்துக் கொள்ளுங்கள்அடுத்த ஆறு ஆண்டுகள் அதுதான் என் உடையாக இருந்தது. விடுமுறையில் வரும்போதுதான் வேறு உடை அணிய முடிந்ததுகதர் அல்லாத துணிகளை, மில் துணி என்று அழைத்தோம், அதை வைத்திருக்கவே கூடாது என்பது பள்ளி, விடுதியின் விதிஐயாவின் காந்தியத் தொடர்பு தனிப்பட்ட முறையில் என்னை தொட்ட தருணங்கள் அதிலிருந்து தொடங்குகின்றன. (இன்று அப்பள்ளியின் சீருடை வேறுமாதிரி இருக்கிறது என்பது இணையத்தில் பார்த்தால் தெரிகிறது). என்னிடம் அந்த ஆறாண்டுகளில் இரண்டு மூன்று சீருடைகளுக்கு மேல் எந்த உடையும் கிடையாது.  பனியனும் கதராடைதான்.  அது அனேகமான என்னிடம் இருந்ததே இல்லை.  

            காலை ஐந்தே கால் மணிக்கு, 9,10,11 மாணவர்கள் துயிலெழ வேண்டும். 6,7,8 வகுப்புக்களின் மாணவர்கள் ஐந்தே முக்கால் மணிக்கு எழ வேண்டும். இன்றுவரை நான் 6 மணிக்கு மேல் தூங்குவதில்லை என்பதில் அதன் தாக்கம் தெரிகிறது. 6 காண்டா மணி அடிக்கப்படும். வரிசையில் நின்று பிரார்த்தனைக்குச் செல்ல வேண்டும். ஆறேகால் மணிக்குப் பிரார்தனை ஆரம்பமாகும்.  தீபாராதனையும் உண்டு.  மாணவர்களின் ஒருவர் பூசாரியாக வேலை செய்வார். கடைசியில் அவரே தீர்த்தமும் கொடுப்பார்.  ஒரு சமஸ்கிருதப் பாடல், இரு தமிழ்ப்பாடல்களுடன் பிரார்த்தனை முடியும். என் உச்சரிப்புகள் தமிழில் தெளிவாக இருப்பதற்கும், தேவாரம், திருவாசகம் பாடல்கள் நான் தெரிந்து வைத்திருப்பதற்கும் காரணம் அதுவே. அது தவிர, திருப்புகழ், இன்னும் பல பாடல்கள் சமயப் பாடல்கள் இன்றும் நினைவில் இருக்கின்றன.   அந்தச் சமயத்தில் எங்களின் பின்வரிசைக்கும் பின்னால் ஒரு சுவாமிஜியும் பல நேரங்களில், ஐயாவும் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடியும்ஐயா அவர்கள் அவருக்குத் தோன்றும் போதெல்லாம், பிரார்த்தனை முடிந்ததும் எங்களைப் பார்த்துப் பேச ஆரம்பிப்பார்.

நான் அடிக்கடி கேட்ட வார்த்தைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.  “நீங்கள் எல்லாம் பிற்காலத்தில் மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும்” “தரித்திர நாராயணர்களுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவை”.  இந்த வார்த்தைகள் இன்றும் என்மனத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறதுஒரு மகத்தான காரியத்தையும் செய்யவில்லை என்றாலும் ஒரு தீவிர வேட்கையைச் சிறுவர்களிடம் விதைக்கும் வார்த்தைகள்அந்த மகத்தான காரியத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பது என் விதிகாந்தியடிகளைப் பற்றி அடிக்கடி அந்த நேரத்தில் கேட்க நேரிடும். ஐயா காந்தியடிகளுடன் பலமுறை பழகியவர்.  அவர் அடைந்த புளகாங்கிதங்களை எங்களுக்கும் விளக்குவார்.  நேர்மை, உண்மை, போன்ற வார்த்தைகளை நான் முதலில் கேட்டது அங்கேதான்.
           
            வகுப்புகள் நடக்கும் போது இடைவெளி நேரத்தில், அல்லது ஆசிரியர் வரத் தாமதமாகும் நேரத்தில், அல்லது ஆசிரியர் வராத நேரத்தில், காந்தியடிகளுடையசத்திய சோதனை’ (முழுப்பதிப்பு – சுருக்கம் அல்ல) புத்தகத்தை மாணவர்களில் முதல் மதிப்பெண் பெறுகிறவர், முழு வகுப்புக்கும் கேட்கும்படி வாசிக்க வேண்டும்அடுத்தவர்கள் வாசித்து நான் கேட்ட முதல் புத்தகம் அது தான்இந்த வாசிப்புகள் 6 வது வகுப்பில் தொடங்கி குறைந்த்து ஒன்பதாவது வகுப்புவரை தொடர்ந்தனஒரு சிறுவனின் மனதில்சத்திய சோதனைஎன்ன விதமான பாதிப்பை நிகழ்த்தும் என்பது அதை வாசித்தவர்களுக்குத்தான் தெரியும்உண்மைக்கும் நேர்மைக்கும் என் வாழ்வில் கொஞ்சமேனும் இடம் இருக்கிறதென்றால் இதன் பாதிப்பு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.  சத்திய சோதனை புத்தகத்தைப் படிக்கிற நேரத்தில் கண் கலங்காமல் இருப்பது கடினம்.  யாருடைய இதயத்தையும் தொட்டுவிடும் உண்மை வார்த்தைகள் அவை.  இன்று படித்தாலும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்தால் என் கண்கள் கலங்கும்.  ஒருமனிதன் இவ்வளவு நேர்மையாக வாழ முடியுமா? அல்லது வாழ முயல முடியுமா? என்ற வியப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கும்.  

            காலை வேளைகளில் ஐயா தினமும் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்திருக்கிறேன்.  அப்போது அவரது வயது 65-70 இருக்கும்.  கிண்ணென்று இருக்கும் உடலமைப்பு.  பல நேரங்களின் இரவில், புத்தர் மைதானத்தில் அமர்ந்து, வானொலிப் பெட்டியில் ஒலியளவை மிக மிகக் குறைவாக வைத்துக் கொண்டு செய்தி அவர் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்.  தனியாக ஒரு (புத்தர்) மைதானத்தில் நாற்காலியில் அமர்ந்திருப்பார்.  அருகில் சென்று அமர்ந்து பலதடவை செய்திகளைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவ்வளவு குறைந்த ஒலியளவில் அதற்குப் பிறகு எங்கும் எதையும் நான் கேட்டதில்லை.  அந்தப் பள்ளியின் சூழலிலேயே அமைதி இருந்தது.  தனிமையில் இருப்பதை, சும்மா இருப்பதை இயற்கையுடன் ஒன்றி இருப்பதை அங்குதான் கற்றேன். இன்றும் கூட, அமைதியான, இயற்கையான சூழலின் வாழும் அவா எனக்கு உண்டு.   உரத்துப் கூச்சலிட்டுப் பேசுவது எனக்கும் உகந்ததல்ல.  உணவு, மின்சாரம், நீர் எதையும் வீணாக்குவது எனக்குப் பிடிப்பதில்லை.  ஐயாவின் வழிகாட்டலில் அமைந்த பள்ளியின் வழிமுறைகள் என்னை இன்னும் வழிகாட்டுகின்றன.  (இருபதுகளில் காந்தியம் பிடிக்காமல் போனதுண்டு.  நாற்பதுகளுக்கு மேல் அதன் விழுமியங்களும் தேவையும் உணர்கிறேன்.  சில மாற்றங்களுடன் விமரிசனக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு காந்தியின் கருத்துகள் மிகவும் பொருத்தமானவை.  

புத்தர் மைதானத்தின் நடுவில் இருக்கும் புத்தர் சிலையை மாணவர்கள் வாரம் ஒருமுறை கழுவி, தினமும் பூவைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.  இன்றும் புத்தரின் வாழ்வும், சொல்லும் என்னைப் பாதிக்கின்றன.  

            விவேகானந்தர், பரமஹம்சர் இவர்களை மட்டுமன்றி, அப்பர் சுந்தரர் இன்னும் பல திருவாசகத் தேவாரப் பதிகங்கள், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள், திருக்குறள், இன்னும் பல தமிழ்ப்பாடல்களை இயல்பாகவே அங்கங்கே பாடும் போது கற்றேன்.  எந்த நாளிலும் ஒருமுறையாவது பாரதியாரின் பாடல்களையோ, திருக்குறளையோ சொல்லவோ பாடவோ வேண்டியிருக்கும். (ஐயா அவர்களால்தான் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் திருக்குறள் நுழைந்தது என்பதைப் பின்னால் தெரிந்து கொண்டேன்)

            பள்ளி மாணவர்கள்தான் வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும், உணவு பறிமாறும் பாத்திரங்களைக் கழுவ வேண்டும். புத்தர் சிலையைக் கழுவி எண்ணை தேய்க்க வேண்டும், ராமகிருஷ்ணர் படத்திற்குப் பூஜை செய்யும் போது ஒரு கையில் மணியை அடித்துக் கொண்டே இன்னொரு கையால் தீபாராதனை செய்ய வேண்டும்.  எந்தத் தொழிலும் குறைந்த்து அல்ல என்பது என்மனதில் ஊறிப் போனது அங்கேதான் என்றே கருதுகிறேன்.

            200 மாணவர்கள் இருந்த விடுதிப் பள்ளியில் விளையாடுவதற்கு, ஹாக்கி, கபடி, கூடைப்பந்து, கால்பந்து (2), டென்னிகைய்ட், கைப்பந்து என்று விளையாட்டு மைதானங்கள் இருந்தன. இன்றைய நகரத்துப் பள்ளி மாணவர்கள் இதை நினைத்துப் பார்ப்பதே அரிது.

            ஒன்றை மட்டும் கூறி விட வேண்டும்.  படிப்பில் நான் சுமார்தான்.  ஆனால் எட்டு, ஒன்பதாம் வகுப்பில் இருந்தே நூலகத்தில் புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிக்க ஆரம்பித்தேன்.  அதுவும் அந்தப் பள்ளியில் தான் தொடங்கியது.  இன்றுவரை புத்தகங்கள் படிப்பது எனது பெருவிருப்பமாக இருக்கிறது.  நான் வாழ்வில் அடைந்த முன்னேற்றங்களுக்கு (அது எவ்வளவு குறைவாக இருந்த போதிலும், என்னைப் பொறுத்த வரையிலான முன்னேற்றம்) அந்த வாசிப்புகள் காரணம் என்றே நினைக்கிறேன்.

            இதிலெல்லாம் ஐயாவின் பங்கு என்ன என்று நீங்கள் கேட்க்க் கூடும்.  எனக்கு வாய்த்த அனைத்தையும் முன்னரே திட்டமிட்டு வசதிகளை அமைத்துக் கொடுத்த அவரது தீர்க்க தரிசனம்தான் அதற்கெல்லாம் காரணம்.  எங்கும் காந்தியும், விவேகானந்தரும், பரமஹம்சரும் இன்னும் பல மேதைகளும் காதுகளிலோ கண்களிலோ வாசகங்களாகவோ, இந்தக் காலத்தில் காந்தியைப் புரிந்து கொள்ளப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் எத்தனை இருக்கின்றன?  

            ஐயாவிடம் பலமுறை நேரடியாக உரையாற்றும் வாய்ப்புக்கள் கிடைத்தன.  மொத்தமாக மாணவர்களாகச் செல்லும் போதெல்லாம், ‘ஓட்டப்பிடாரத்தான்’ என்று அன்புடம் அழைக்கும் அவரது குரல் மறக்க முடியாதது. ஒவ்வொரு பேச்சிலும் ஒருமுறையாவது ‘நீங்கள் மகத்தான சாதனைகளைப் புரிய வேண்டும்’ என்ற கருத்தைச் சொல்லிவிடுவார்.   அவரது கோபத்தில் அடிவாங்கிய சம்பவங்களும் உண்டு. இரண்டு முறை அடிவாங்கியது நன்றாக ஞாபகம் இருக்கிறது.

            ஒவ்வொரு தீபாவளி அன்றும் தன் நிறுவனங்களில் வேலை பார்க்கும் அனைவருக்கும் காதி வேட்டி ஒன்றும், துண்டு ஒன்றும் கிடைக்கும்.  தீபாவளி விடுமுறையில் ஊருக்குச் செல்லாத என்னைப் போன்ற ஒன்றிரண்டு மாணவர்கள் அவருக்கு அதை விநியோகிப்பதில் உதவிகள் செய்வோம்.  எங்களுக்கும் வேட்டியும் துண்டும் ஆறாண்டுகள் கிடைத்தன.

            அவர் ஓரைந்தாண்டுகள் சுதந்திரத்திற்கு முன்னால் மத்திய சட்ட அவையின் உறுப்பினராக இருந்தார்.  பாராளுமன்ற உறுப்பினராக ஒருமுறையும், மாநிலங்கள் அவை உறுப்பினராக இருமுறையும் தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினராக ஒருமுறையும், தமிழக அமைச்சராக ஒருமுறையும் இருந்தார் என்பதெல்லாம் எங்கும் எப்போதும் அவர் சொன்னதும் இல்லை.  இதையெல்லாம் நான் பின்னால் தான் தெரிந்து கொண்டேன்.  அந்த வளாகத்தில் அது பற்றிப் பேச்சே எழுந்ததில்லை.   இந்தக் காலத்தில் நகராட்சி உறுப்பினராக ஆனாலே என்ன நடக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  பள்ளியை விட்டு வந்த பின்னால் அவரைப் பார்க்கப் போனதே இல்லை.  ஒருவருடைய பாதிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்கும் போது, அவரை நேராகப் பார்ப்பது நல்லது என்றாலும், பார்க்காவிட்டாலும் ஒன்றும் குறைந்து விடவில்லை  என்றே இன்று தோன்றுகிறது. முக்கியமாக நான் காந்தியை உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் அறிந்து கொள்வதில் அவர் எங்களிடம் சொன்ன பல சொந்த அனுபவங்கள் மிகவும் பங்களித்திருக்கின்றன. (1934ஆம் ஆண்டு ஹரிசன நிதிக்காக காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது ஐயா பெரும்பாலும் அவருடனேயே பயணம் செய்தார் என்பதை பின்னால் அறிந்து கொண்டேன்).  அது போலவே விவேகானந்தரின் சமத்துவ நோக்கும், துடிப்பும் அவரது ஆளுமையின் மூலமாகவே (படித்து அறிந்ததை விட) அறிந்து கொண்டேன். 

அவர் காந்தியடிகளைப் பற்றிப் பலமுறை எங்களுக்குச் சொன்னவை அனைத்தும், அவரது நேரடி அனுபவங்களும் சிறு வயதிலேயே காந்தியை நான் மிக நெருக்கமாக உணர வைத்தன.  முடிந்த வரை நேர்மையாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது அதன் தாக்கமாகத்தான் இருக்க வேண்டும்.  மிகவும் புத்திசாலியாக இருந்தால் தான் பொய் பித்தலாட்டம் அனைத்தையும் செய்து வெற்றிபெற முடியும்.  அப்படி வெற்றி பெற்றாலும் அது என்றேனும் நம்மை கவிழ்த்துவிடும் என்ற எண்ணங்கள எனக்கு அப்போதே படிந்தன.  காந்தி இன்றும் எனக்குச் சொந்தக்காரத் தாத்தா போலவே உணர்கிறேன்.  அவர் தேசப்பிதா என்று சொல்லப்பட்டதால் அல்ல.  அவர் வாழ்வின் மூலம் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களே அதற்குக் காரணம்.  சின்ன வயதில் அவரை அனுபவம் மூலம் அறிமுகப்படுத்திய ஐயா அவர்களுக்கும் அதில் பெரும் பங்குண்டு.  

            நான் உணர்ச்சி பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும், நெருக்கமாக உணரும் காந்தியடிகள் எப்போதும் என்னுடன் உறவு கொண்டு இருக்கிறார்.   அவருடன் மிகவும் தீவிரமாக மாறுபடும் தருணங்கள் அனேகம் உண்டு.  அதே நேரம் மிகவும் இணக்கமாக உணரும் தருணங்களும் உண்டு.  அவர் எனக்கு மட்டும் உரியவர் அல்லர்.  பல கோடி மக்களுக்கும் உரியவர். ஆனாலும் எனது நேசத்துக்குரியவர்.  நாம் விவாதிப்பதன் மூலமே (அதாவது அஹிம்சை வழியில்) நமது பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்பதற்கு அவரே உதாரணம்.  அவரே அதன் ஒளி. 

       ஐயா அவினாசிலிங்கம் அவர்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு பெருமையுடன் பூரிப்பு ஏற்படுகிறது.  அப்படிப்பட்ட ஆளுமைகளை குறைவான மனிதர்களே சந்திக்க வாய்ப்புக் கிடைக்கிறது.  அதுவும் வாழ்வின் சில காலப்பகுதிகளில் மட்டுமே.  அதுபோன்ற, பொதுமக்களுக்காகப் பணிசெய்கிறவர்கள் யாவரையும் நேசிக்கிறேன்.


No comments:

Post a Comment