காட்டுக் குட்டி (நாவல்) – மலர்வதி
வழக்கம் போல யூ டியூபில் இலக்கியத்துடன் தொடர்புள்ள காட்சிக் கோர்வைகளைப் பார்த்துக்
கொண்டிருக்கும் போது இந்த நாவலைப் பற்றிய ஒரு காட்சியைப் பார்த்தேன். அதில் தங்கர் பச்சான் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சுக் கேட்டதும்,
பின்னர் அதைத் தொடர்ந்து, நாவலை எழுதிய மலர்வதியின்
பேச்சைக் கேட்டதும் நாவலைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அதைத் தொடர்ந்து விநாயக முருகன் இந்த
நாவலைப் பற்றிப் பேசியதைக் கேட்டேன்.
இந்த நாவலின் மொழி கடினமாக இருப்பதாகவும், அதுவே தடையாக இருப்பதாகவும் பேசினார். அதை மீண்டும் சாதாரண மொழியில் எழுத
வேண்டும் என்றும் அறிவுரை சொன்னார். அது எனக்கு உறுத்தலாக இருந்தது. மக்கள் பேசுகிற மொழியைப் பதிவு செய்தால்
அது புரியவில்லை என்று சொல்வது பொருத்தமானதல்ல என்று நம்புகிறேன். பேச்சு வழக்கில் இருந்துதான் இலக்கியம்
தொடங்குகிறது.
சென்னையில் இருப்பவர் நாகர்கோவில் பகுதியில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால்,
அவர் எந்தத் தடையும் இல்லாமல் அந்தப் பகுதியின் மொழிவழக்கைக் கற்றுக்
கொள்ள முடியும். (வேற்று
மொழிக்குக் கூட இது பொருந்தும்). தமிழ்வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு வட்டார மொழி எப்படி அன்னியம் என்று
சொல்லி நாம் படிக்காமல் இருந்துவிட முடியும்? ஒரு நாவலின் மொழி அந்தப் பகுதி மக்களின்
மொழியில் இருப்பதே தனிச்சிறப்பு. அப்படிச் செய்யாவிட்டால் அந்த வட்டார மொழியின் வழக்குகள் விரைவில் ஒழிந்துவிடும். அது தமிழ்மொழிக்கான இழப்பு.
இன்னொரு ஆங்கில இலக்கிய உதாரணம் ஞாபகம் வருகிறது. ‘As I lay dying’ என்ற நாவலை எழுதிய William Faulkner மீதும் இப்படி ஒரு
விமரிசனம் வைக்கப்பட்டது. அந்த நாவலின் மொழியும் ஒரு குறிப்பிட்ட
பகுதியில் பேசப்பட்ட மொழி. அதை சாதாரண ஆங்கிலம் அறிந்தவர்கள் படிப்பது சிரமம். ஆனாலும் அதை ஆங்கிலம் அறிந்த,
அறியாத எல்லோரும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அது ஒரு மிகச்சிறந்த நாவலாகவும் கருதப்படுகிறது.
இறக்கும் தருவாயில் உள்ள ஒரு பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட நாவல் அது. இது போன்று இன்னும் பல உதாரணங்கள்,
தமிழிலும் இருக்கக் கூடும். இப்போது ஞாபகம் வந்ததை
எழுதுகிறேன். இப்படிப் பல வட்டார மொழிகள் இலக்கியத்துக்குள் வந்தால்தான்
மொழி வளம் பெறும். மலர்வதி
இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த ஒரு விஷயத்துக் காகவே அவருக்கும்
எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் ஒரு மொழிவழக்கைக்
காப்பாற்றி இருக்கிறார் என்பது மிக முக்கியமானது.
இந்த நேரத்தில் இன்னொரு நாவல் ஞாபகம் வ்ருகிறது. Nathaniel
Hawthorne எழுதிய ’The Scarlet Letter’. இதில் கணவன் யாரென்றும், அவளுடைய குழந்தைக்குத் தந்தை யாரென்றும் ஊர் அறியாததால், (அந்தப் பெண்ணும் சொல்வதில்லை)
தண்டனைக்கு ஆளாகவிருக்கும் ’ஹெஸ்டர் பிரின்’
என்ற பெண்ணைப் பற்றிய கதை.
நல்ல நாவல். அமெரிக்காவிலும் பெண்ணுக்கு
18ஆம் நூற்றாண்டில் இது போன்ற நிலை என்பதை அறிந்தால் நமது நாட்டிலும்
மாற்றம் வந்தே தீரும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மீண்டும் ‘காட்டுக்குட்டி’யிடம்
வருவோம்.
காட்டுக்குட்டியான
குட்டிமணி, ரமணியின் மகள். காதலித்தவன் அனுபவித்துவிட்டுக்
கைவிட்டுப் போன பதினைந்தாம் வயதில் விபரம் தெரியாத வயதில் தாயாகி அதையும் ஒன்றும் செய்யத்
தெரியாமல் குழந்தையைப் பெற்றெடுத்து, அன்றிலிருந்து இன்றுவரை வாழ்க்கையில் தட்டுத்
தடுமாறி வாழ்கிறவள். இன்னும் இரு ஆண்கள்
வாழ்க்கை தருவார்கள் என்று அவள் நம்பி இருக்க, அவர்களும் ஏமாற்றி விட்டுப் போய்விடுகிறார்கள். வேறுவழியின்றி உடலை விற்று வாழும் நிலைமைக்கு ரமணி தள்ளப்படுகிறாள். அவள் எதிர்கொள்ளும் மனிதர்கள், மனித மிருகங்களின்
சிதைகிறது அவளது வாழ்க்கை.
நாவலின் பயன்படும்
மொழியின் அழகு மிகச்சிறந்தது. முதலிலேயே அதன்
காரணங்களைச் சொல்லியிருக்கிறேன். தென்பாண்டித்
தமிழும் மலையாள வாசனையுள்ள சொற்களும், தமிழ்ப் பொதுவெளியில் சிறகடிக்கின்றன. அது முதலில் நமக்குப் பழக்கம் இல்லாதது. கொஞ்சம்
சிரமம் தருகிறது என்பதற்காக படிக்காமல் இருக்க முடியாது. புதிய புதிய தொழில்நுட்பங்களில் விளைவாக எதை எதையெல்லாமோ
கற்றுக் கொள்ளும் நாம், நமது மொழியின் ஒரு பகுதியைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க எந்தச்
சாக்கையும் சொல்வது சரியல்ல.
சிற்சில இடங்கள் மிகவும்
அழகான, காவியக் காட்சிகளாக வெளிப்படுகின்றன.
இயற்கையின் செடியும், மரமும், இருளும் ஒளியும் பல இடங்களில் கதாபாத்திரத்தின்
தன்மையை/நிலையை சொல்லாமல் சொல்கின்றன. சொல்வது சிறப்பல்ல, சொல்லாமல் சொல்வதே சிறப்பு.
குட்டிமணி மரத்தை அப்பாவாக நினைத்துப் புலம்பும்
ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். ஒரு பெண் என்ற
வகையில் பல இடங்களில் ரமணியின் மூலம் எழும் கேள்விகள் அனுபவத்தின் மூலம் இயல்பாக எழுகின்றன.
செயற்கையாகத் திணிக்கப்படவில்லை. அவை பெண்ணியவாதிகளின் குரலாக இருப்பது இந்த நாவல்
படைப்பின் சிறப்பு. எந்த இடத்திலும் யதார்த்தத்தை
மீறி எதுவும் நடப்பதில்லை. ரமணியின் பாத்திரம்
நெஞ்சைவிட்டு அகலாத பாத்திரமாக அல்ல, பெண்ணாகி விட்டார்.
சார்லி சாப்ளினுடைய அம்மாவை
விட்டுப் போய்விட்ட அவரது கணவர் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதே கடைக்கு வரும் சார்லி சாப்ளினுக்கு அவர்தான்
தன் தந்தை என்று தெரியும். உரிமை கொண்டாடும்
நிலையில் அவர் இல்லை. பார்த்து தந்தைப் பாசத்துக்காக
ஏங்குகிறார். இது சார்லி சாப்ளின் வாழ்வில்
நடந்த சம்பவம்.
ரமணியும், காட்டுக் குட்டியான
குட்டிமணியும் நம் கண்ணெதிரே உலவக் கூடும்.
நம் கண்களில் கருணை வேண்டும் அவர்களைக் காண்பதற்கு.
மலர்வதியினுடைய ’தூப்புக்காரி’
என்ற முதல் நாவலையும் படிக்கவேண்டும் என்று ஆவலைத் தூண்டுகிறது ‘காட்டுக்குட்டி’. இன்னும் பல நல்ல இலக்கியங்களைப் படைப்பார் என்று
எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment