Friday, January 29, 2010

விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் (இது டி.வி. பற்றிய பதிவல்ல)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றிய விமரிசனம் தேவையற்றது. அவை அவ்வளவு மோசம்.

நான் பேசப் போவது ‘நாங்களெல்லாம் பெரிய ஆட்களாக்கும்’ என்று பறையடித்துக் கொண்டு, தமிழ்நாட்டில் வலம் வரும் இலக்கியக்காரர்களைப் பற்றியது. ஒவ்வொருவரின் எழுத்தைப் பற்றி நான் பேசப் போவதில்லை. தம்பட்டம் அடிப்பதையே தொழிலாக்க் கொண்டிருக்கும் எழுத்தர்களைப் (எழுத்தாளர்களைப் பற்றியதல்ல)
மனிதன் என்று பிறந்து விட்டால், அடக்கமுடைமை வேண்டும். உன்னதமான மனிதர்கள் எப்போதும் அடக்கத்துடனே வாழ்ந்திருக்கிறார்கள். இலக்கியம் படைப்பவன் உன்னதமானவன். மனிதனின் உன்னதமான உணர்ச்சிகளை (அவை எவ்வளவு மோசமான உணர்ச்சிகளாக இருந்தபோதிலும் – மனிதன் கொள்வதனாலேயே உன்னதமாகிவிடுகின்றன) எழுத்தில் வடிப்பவர்கள். அதை மனிதன் முன் கண்ணாடியைப் போல் நீட்டிக் காட்டுபவர்கள். சாதாரண மனிதர்களிடம் நாம் எதிர்பார்க்கும் பண்புகளை, இப்படி உன்னதமான இலக்கியம் படைக்கிற, அல்லது படைப்பதாகச் சொல்லிக் கொள்கிறவர்களிடம் எதிர்பார்க்கிறோம். தன்மானமும், சுயமரியாதையும், சுயஎள்ளலும் எளியமக்களின் வாழ்வுடன் தங்களை அடையாளம் காண்பதிலும் அவர்களின் உன்னதங்களை வெளிக்கொணர்வதும், கரிசனங்களை கவலைகளை உரைத்து, கீழ்மைகளை சுட்டிக்காட்டுவதும் அவன் பணி. இதையெல்லாம் பழங்கால பாணி என்று ஒதுக்கிவிடுதல் எளிது. ஆனால் உன்னத்துக்கு வழிகாட்டும் மனிதர்கள் உன்னதங்களை தங்களின் கொண்டிருக்க வேண்டும். உன்னதங்களுக்கான உணர்வும் உழைப்பும் இருக்க வேண்டும். ‘நான் படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்று சொல்வதானால் அந்த உன்னத நோக்கம் வேண்டும்.

இப்போது நாம் பார்க்கின்ற எழுத்தாளர்கள் பலர் நான் எழுதியது தான் எழுத்து. நான் சொன்னது தான் கருத்து அதற்கு மேல் எதுவும் இல்லை என்கிற வகையில் தம்பட்டம் அடித்துத் திரிவதைப் பார்க்க முடிகிறது. தன்னம்பிக்கை என்பது வேறு. தன்னை யார் கீழ்மைப் படுத்தினாலும் தன்னிலை தவறாமல் இருப்பது. இழிவான விமரிசனங்களை ஒதுக்கிவிடுவது. மலிவான விளம்பரம் தேடும் வகையில், என்னை ஆங்கிலத்தில், பிரெஞ்சில் மொழிபெயர்த்து விட்டார்கள் ஆகவே நான்தான் தமிழ் இலக்கியத்தில் இன்று பெரியமனிதன். என்னை மலையாளத்தில் கொண்டாடுகிறார்கள் தமிழர்கள் பார்ப்பது கூட இல்லை. என்று புலம்புகிறார்கள். தங்களுக்குள் நான் பெரியவன் நீ பெரியவன் என்று அடித்துக் கொள்கிறார்கள். வாசகர்களிடம் ஏதோ தாங்கள் கடவுள் போலவும், தங்களிடம் தொடர்பு கொண்டால் அது வாசகர்களுக்குச் செய்யும் பெரிய உபகாரம் என்று தோன்றும் வகையில் பேசி வருகிறார்கள். சிலர் தான் உலகம் சுற்றிப் பார்க்க சந்தாப் பிரிக்கிறார்கள். இலக்கிய சேவையை யாருக்கு எதற்காக வாசகன் செய்யவேண்டும்? அவன் புத்தகம் படித்தால் போதாதா? அதுக்கே வழியில்லை. (மீண்டும் ஞாபகம் வருகிறது ஐநூறு பிரதிகள்)
சிரிப்பு வரும் இவர்களில் வாசகர்கள் எத்தனை பேர் என்று அறிந்தால். தமிழில் ஒரு புத்தகம், 500 பிரதிகள் பதிப்பது பெரிய விஷயம். விற்குமா என்றால் சொல்ல முடியாது. அரசு நூலகங்களுக்கான ஆணையில் 600 பிரதி போனால் மிச்சம் விற்பது ஆயிரம் பிரதிகளுக்குள் அடங்கிவிடும். 74 சதவீதம் படித்தவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில், அதாவது குறைந்தது நாலு கோடிப்பேர் படித்தவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் 500 பிரதி என்பது எவ்வளவு கேவலமானது?. அதைப் பெருமையாகப் பேசுவதும் கேவலமானதே. நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு இது கேவலம்தான். ஆனால் எழுத்தாளர்கள் தங்கள் பெருமை பேசுவதென்பது கீழ்த்தரமானது. தமிழமக்கள் என்ன செய்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க எழுத்தாளர்கள் என்ன செய்தார்கள் என்பது நான் கேட்கும் கேள்வி. ஊர் ஊராகப் போய் கூட்டம் போட்டார்களா? நல்ல புத்தகங்களுக்காக அலைந்து திரிந்து, நல்ல எழுத்தாளர்களை, நேர்மையானவர்களை, உன்னதமானவர்களை மதித்தார்களா? எழுத்தாளனை மதிக்காத பதிப்பகத்தாரை ஒதுக்கினார்களா? அல்லது வெளிக்காட்டினார்களா? வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு, டிவியிலும், வலைத்தளத்திலும் தங்கள் பெருமையையும், வலிமையையும் அடுத்த எழுத்தாளரின் சிறுமையையும் அறியாமையையும் பற்றிப் பேசி தெருச்சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்களா?

முந்தி எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள் செய்தது போல மோதிக்கொண்டு தரந்தாழ்ந்தால், அதேமாதிரி ரசிகர்கள் தான் கைதட்டுவார்கள். அரைகுறை ஆங்கிலம் படித்துவிட்டுத் தமிழையே நன்றாக படிக்க எழுதப் பயிலாத ஒரு இஞ்ஜினீயர் கூட்டம் டாலர்களை வாங்கி அடையாளத்தைத் தொலைத்துவிட்டு தேட வந்திருக்கிறது. அது அவர்கள் குறையல்ல. ஆனால், அவர்களுக்குப் பாவலாக்காட்ட இந்த மாதிரி எழுத்தாளார்கள் தேவைப்படுகிறார்கள். இந்த இன் ஜினீயர் கூட்டம் இவர்களின் அரைவேக்காட்டுக் டவுண்லோடு நாவல்கள், கதைகளைப் படித்துவிட்டு ஏதோ தமிழ் இலக்கியம் படித்துவிட்டதாய்ப் பாவலாப் பண்ணுகிறது. இது எல்லாம் நாடகந்தான், ஐநூறு பிரதிகள் நாலைரைக்கோடி மக்கள். இது ஒன்றே போதும்.

ஒருவரை ஒருவர் மேடைகளில் தாக்கிக் கொண்டு, அரசியல் வாதிகளை விட மோசமாக வார்த்தையாடுபவர்கள் அதிலிருந்து வரும் அந்த விளம்பரத்துக்காகத்தான் குதிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. தமிழ் இலக்கியதின் நிலையும் விளம்பரதாரர் நிகழ்ச்சியாகவே மாறிப்போனதில் ஒன்றும் அதிசயம் இல்லை.அது தொற்று நோய். சினிமாவில் தொடங்கி, டிவியில் தொடர்ந்து, அரசியலில் உயர்ந்து, இலக்கியத்தில் நுழைந்து விஷமாய்ப் பரவிவரும் நோய். இந்த விவகாரங்களில் விமரிசனங்களுக்கான பொறுப்புணர்வோ, நிதானமோ, முதிர்ச்சியோ இருக்க வேண்டிய தேவையில்லை. மனம்போன போக்கில் போகலாம். தமிழ் வாசகர்களும் அப்படித் தான் போவார்கள். அவர்களின் ஹீரோக்கள் அப்படித்தானே போகிறார்கள்.

No comments:

Post a Comment