Friday, January 08, 2010

தமிழ் சினிமாத் துறையின் திருடர்களும் கொள்ளைக்காரர்களும்
தமிழ் சினிமாத் துறையினர் மீண்டும் திருட்டு டிவிடி பற்றிய பெரும் சர்ச்சை ஒன்றைக் கிளப்பி இருக்கின்றனர். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்று பேசாமல் இருக்கலாம். ஆனால் பெரிய பெரிய கொள்கைகளைப் பற்றி கொள்ளைக்காரர்கள் பேசும் போது கேட்டால் கோபம் வந்து விடுகிறது.
ஜக்குபாய் என்ற படத்தின் திருட்டு டிவிடி வெளிவந்துவிட்டதாம். அதனால் திரைப்படத்துறைக்கு நட்டமாம். டைரக்டர் சொல்லுகிறார். இது கொலைக்குற்றம் என்று. இது கொலைக்குற்றம் என்று கூப்பாடு போடுகிறவர் என்னென்ன கொலைகளை செய்திருக்கிறார் என்று பார்ப்போமா? திருட்டு டிவிடி பார்த்தால் விற்பனையின் மூலம் வருவது கள்ளப்பணம். என்று கமலஹாசன் சொன்னாராம். கள்ளப்பணம் பற்றி எத்தனை கவலை அவருக்கு. கவலைப் படாதீர்கள் படம் நன்றாக ஓடும் என்றார் ரஜினி. எப்படி நிகழ்ந்த்து என்றும் அதைத் தடுக்க என்னென்ன செய்யலாமென்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
சாதாரணப் பொதுமக்களின் வாழ்வில் தமிழ் சினிமாவின் பாதிப்பு என்ன? முன்னெல்லாம் பாமர ஜனங்கள் நடிகர் திலகமென்றும் மக்கள் திலகமென்றும் வழங்கிய திரைப்பட்த்துறையின் முடிசூடா மன்னர்களுக்கு அப்பாவித்தனமாக தங்கள் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர். இப்போது நிலைமை அப்படியா? Age of innocence has passed. இப்போது யாரும் அவ்வளவு அப்பாவிகள் இல்லை. ரஜினி ரசிகர்கள் அவரை அரசியலில் இறங்கச் சொல்கிறார்களா? அதற்கு காரணம் அதன் மூலம் அவர்கள் அடைய நினைக்கும், பொருளாதார, சமூக, ஆதாயம். நடிகர்களும் பணம் பெருக்கவே படம் எடுக்கிறார்கள். தங்களை சூபர் ஸ்டார் என்றும் உலக நாயகன் என்றும் அதென்றும் இதென்றும் கூறிக் கொள்வதும் கூற வைப்பதும் தங்கள் சம்பளத்தைப் பெருக்கும் ஆதாயத்துக்காகத்தான். சம்பளம் என்பதை கள்ளப்பணம் மூலமும், வெள்ளைப் பணம் மூலம் பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். கொடுப்பவர்களும் அப்படியே.
இந்தப்பணத்தை வைத்துக் கொண்டு சமூகத்தின் மீது தங்களுக்கு அக்கறை இருப்பது போல நடிக்கிறார்கள். சிலர் சேவை நிறுவன்ங்களை ஆரம்பித்து, வரிச் சலுகை பெற்று, தங்கள் சம்பாத்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைக்க வழி செய்கிறார்கள். அரசியல் தலைவர்களில் வால் பிடித்து தங்களுக்கு வேண்டிய சலுகைகளை, ஏழை எளிய மக்களின் சேவைக்குப் போய்ச் சேரவேண்டிய பணத்தை பிடுங்கிக் கொள்ளுகிறார்கள்.
சம்பந்தா சம்பந்தம் இல்லாத கதைகள் காட்சிகள் காட்டி ஏழைகளையும் பாமர்ர்களையும் ஏமாற்றி பணம் சம்பாதித்துவிட்டு, ஏழைகளுக்கு இது தான் பிடிக்கும் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஏழைகளின் வாழ்வில் உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் வாழ்வின் சமூகத்தின் நிஜத்தைப் புரிந்து கொள்ளும்படங்களை அல்லவா எடுக்க வேண்டும். ஏழைகளைப் பிச்சைக்கார்ர்களாகவே வைத்திருப்பதும், அவர்களுக்கு ஏதோ சேவை செய்து தாங்கள் பெரிய மனசு கொண்டவர்கள் என்று காட்டுவதும் தான் இவர்கள் செய்யும் சேவை.
ஒரு படத்துக்கு நாற்பது கோடி சம்பளம் வாங்கும் ஒருவர் தன்னுடன் நடித்தவருக்கும் தகுதியான அல்லது சரியான விகிதத்தில் சம்பளம் கிடைக்கப் பாடுபட வேண்டாமா? இதைச் செய்ய முடியாதவர்கள் சமூகத்துக்குச் சேவை செய்வதாகவும், சாமியார் போல வாழ்வதாகவும் நடிப்பது எவ்வளவு நகைப்புக்குரியது. உலகத்திலேயே பெரிய ஜோக் நடிகர்கள் கருப்புப்பணம் பற்றிப் பேசுவது. அதிலேயே மிதப்பவர்கள் அவர்கள்.
நீங்கள் இப்படிக் கோடிக் கோடியாக கொள்ளையடித்தால், அதை இன்னொருவன் கொள்ளையடிக்கக் கூடாது என்பது கொள்ளைக்காரர்களின் அறம். அதை அவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதைக் கேட்டுவிட்டு நாமும் சும்மா இருப்போம்.

No comments:

Post a Comment