சில நேரங்களில் பரம்பரையைப் பற்றிப் பேச வேண்டியதாகி விடுகிறது. நாம் தரித்திரராக இருக்கும்போதோ, ஏதாவது குற்றம் செய்து மாட்டிக்கொண்டு விட்டாலோ பரம்பரை நமக்குக் கைகொடுக்கும்.
உதாரணமாக நாம் தேர்தலில் தோல்வியுற்று, ஈ காக்காய் கூட நமது வீட்டை எட்டிப் பார்க்கவில்லை என்றால் அந்த நேரம் நிலமை தெரியாமல் நம்மிடம் மாட்டிக் கொண்டுவிடும் ‘பேக்கு’களிடம் கதைவிட பரம்பரைக் கதைகள் உதவும். பத்துரூபாய் பிக் பாக்கெட் அடித்து போலிஸிடம் மாட்டி, அவர்கள் கம்பை எடுத்து விளாச ஆரம்பிக்கும் போது என் அப்பா அந்தக் காலத்து சபாநாயகராக்கும், இப்போதிருக்கும் மந்திரிக்கு தம்பி மகனுடைய மாமியாருடைய பாட்டியின் சகோதரனின் பேத்திக்கு மருமகனாக்கும் என்று சொன்னால், அடி கொஞ்சம் லேசாக விழ வாய்ப்பு இருக்கிறது. வாய்ப்புத்தான்.
எட்டாங்கிளாசின் நம் பையன் பெயிலாகி விட்டால் எப்படிச் சமாளிப்பது? ஐயா எங்கள் தாத்தா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக வேண்டியவர். கொடுக்க வேண்டிய முப்பது லட்சத்தில் இரண்டு குறைந்ததாலும், முதல்வர் மகனுக்கு வேட்டியைத் தூக்கிப் பிடிக்க நின்று கொண்டிருந்த போது, இன்னொரு ஆளின் மனைவி முதல்வரின் மனைவியின் சேலைக்குப் பார்டர் தைத்துக் கொடுத்ததால் அவர் சிபாரிஸில் எங்கள் தாத்தாவின் வாய்ப்பு தட்டிப் போய்விட்டதென்றும் ஏதோ கிரகம் சரியில்லை அதனால் என் பையன் எட்டாங் கிளாஸே பாஸ் பண்ண முடியவில்லை என்றும் எல்லோருக்கும் கேட்க முனகுவது எளிது. அல்லது பக்கத்துவீட்டுக்காரி கண்போட்டு விட்டாள், என் சகலை செய்வினை வைத்துவிட்டான் என்று சொல்ல்லாம்.
வைக்கம் முகம்மது பஷீர் சொன்னதுபோல் “எங்கள் தாத்தாவுக்கு ஆனை இருந்தது” அல்லது டினொசார் இருந்தது என்று கதை சொல்லலாம். நம்ம நாட்டில் மேல்ஜாதி கீழ்ஜாதி இருப்பதால், நாங்கள் பெரிய முனிவரின், பிரம்ம ரிஷியின் வழித் தோன்றல்கள் என்றும், ரகுவம்சம், சந்திர வம்சம், சூரிய வம்சம் என்று பேர் வைத்துக் கொள்ளலாம். யாராவது கோத்திரம் கேட்கும் போது ஆகப் பெரியதாக எல்லோரும் கருதும் ஜாதியை கோத்திரத்தைச் சொல்லிவிட்டு கூட எங்கள் குலதெய்வம் திருப்பதி, மதுரை என்று சேர்த்துச் சொல்லிவிடலாம்.
பாழாப்போன பணம் வந்து எல்லாத்தையும் மாற்றிப் போட்டுவிட்டது. மேல்ஜாதிக்காரன் செருப்புக்கடை வைத்திருக்கிறான். கீழ்ஜாதிக்காரன் கோவில் கட்டி அதில் சம்பளம் கொடுத்து மேல்ஜாதிக்காரனை வேலைக்கு வைத்திருக்கிறான். பரம்பரை பற்றி யாராவது சொன்னால் கொஞ்சநேரம் கேட்டுவிட்டு “இந்தப் பய எப்பவும் இதே கதைதான் விடுகிறான்.அவன் கொடுக்கிற பிசினஸ், பணம் இரண்டுக்காகவும் கேட்க வேண்டியிருக்கிறது என்று அவன் போனபிறகு பக்கத்தில் இருப்பவரிடம் முழங்கலாம்.
ராஜபரம்பரை என்று ஒரு ரகம் உண்டு. இந்த ஊருக்கே ராஜாவாக இருந்தோம். இப்போது தெருவுக்கு வந்தாச்சு எனலாம். அல்லது ராஜ பரம்பரையாக வந்த சொத்தை அனுபவித்துக் கொண்டு மற்ற எல்லா விஷயத்திலும் இந்தக் காலத்து வழக்கங்களைக் கடைப்பிடித்தாலும் என்னை ராஜா என்றுதான் மற்றவர்கள் அழைக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்களும் உண்டு. ஏதோ காசு கிடைக்குதே என்று வாய் நிறைய “ராஜா” என்று கூப்பிட்டுவிட்டு அவர்களின் பிச்சைக்காரத்தனத்தை மனசுக்குள் திட்டுபவர்களும் உண்டு.
எல்லாம் சரித்திரம் பண்ணும் வேலை. சரித்திரம் என்ற ஒன்றே இல்லை என்றால் இப்படி பரம்பரை பிரச்சனை வருமா? அதனால்தானோ என்னவோ சீனாவில் கடைசி சக்கரவர்த்தியை விவசாயப்பண்ணைக்கு அனுப்பி வேலை செய்யச்சொன்னார் மாவோ. ஆனாலும் என்ன பரம்பரை போச்சா. இத்தாலிய டிரெக்டர் ஒருவர் அதைப் பற்றிப் படம் எடுத்து ராஜ பரம்பரை ஆளை என்ன பாடு படுத்துகிறார்கள் சீனாவில் என்று காட்டினார். கடைசி சக்கரவர்த்தியின் துயரம் தெரிந்த டைரக்டருக்கு, அவர்கீழ் அடிமையாக இருந்த லட்சக்கணக்கானவர்களில் வலி தெரியாது பாவம்.
இதுமாதிரி பெரிய பெரிய பரம்பரைகள் போக, சின்னச் சின்னக் குடும்பங்களிலும் பரம்பரைப் பேச்சு பெருமையாகவோ அல்லது மற்றவர்களைச் சிறுமைப்படுத்தவோ எழும். “அவனைப் பத்தித் தெரியாதா கஞ்சிக்கு லாட்டரி அடிச்ச பய. அவங்க அப்ப தினமும் நம்ம தாத்தா கால்ல விழுந்து எந்திருப்பவந்தான”. அப்புறம் அவமட்டும் எப்படி? அவ பெரிய சிங்காரியாச்சே. சிலுப்பிக்கிட்டுத் திரிஞ்சா. இப்பம்பாரு பெரிய பங்களா அந்த ----அவர் வைச்சிருந்தார்ல அவளை” என்று யாரையாவது காட்டுவார்கள். அவளுடைய மகன் கலெக்டராகிவிட்டான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கும்.
இந்தப் பேச்சினால் ஒரு டீக்குடிக்க வழியிருக்குமா என்றால் இருக்காது. அதுதான் பரம்பரைப் பெருமை. பாரம்பரியைத்தை காக்க வேண்டியது நம் கடமை. சிலரது நிகழ்கால துயரங்களைத்/ பெருமைச் சிதைவுகளைத் தாண்டிவர உதவும்.
No comments:
Post a Comment