Tuesday, January 19, 2010

கடவுளும் கருணையும்

பக்தி இலக்கியங்களில் வன்முறை மிக இயல்பானதாக இழையோடுகிறது. எல்லையில்லாக் கருணையுள்ள கடவுள் எல்லையற்ற வன்முறையைக் கடைப் பிடிப்பது இந்துக்களாகிய நம்மில் யாருக்கும் முரணாகத் தோன்றவில்லை. ஏன் தோன்றவில்லை என்பதுதான் புதிர்.

இந்தப் புதிரை அவிழ்ப்பதற்கு யாரும் முயலவில்லை. அன்பே சிவமென்னும் சைவர்களோ எட்டாயிரம் சமணர்களைக் கழுவேற்றியதைப் பெருமையாக, ஆனால் கொஞ்சம் அடக்கிவாசித்து, தயக்கத்துடன் பேசுகிறார்கள். வன்முறை அந்தத் ‘திருவிளையாடலில்’ மட்டும் இருந்தால் விதி விலக்கென்று விட்டு விடலாம். ஆனால், பெரிய புராணம் முழுவதும் இந்த வன்முறை நிகழ்வுகள் பரவிக் கிடக்கின்றன. மற்றப் புராணங்களிலும் வன்முறை பரவிக் கிடைக்கிறது. காஞ்ச ஐலய்யா தன்னுடைய ‘Why I am not a Hindu’ புத்தகத்தில் சொன்னதைப் போல ஹிந்து தெய்வங்கள், குறிப்பாக பெருந்தெய்வங்கள் அழிப்பதை தங்கள் வாழ்வாகக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அவதாரமும் ஒரு அல்லது பல அரக்கர்களை அழிப்பதாகவே புராணங்கள் சொல்லுகின்றன.

பக்தி இயக்கம் ஒரு இயக்கமாக நடத்தப்பட்டிருக்கிறது. அதன் நோக்கம் என்ன? மக்களின் மனதிலும், சமூகத்திலும் ஏற்கனவே இடம்பிடித்த ஒரு மதத்தின் நம்பிக்கைகளை மாற்றி இன்னொரு மதத்தின் நம்பிக்கைகளைத் திணிப்பது மட்டும் அந்த இயக்கத்தின் குறிக்கோளாகவும் விளைவாகவும் இருக்க முடியும் என்பது எளிமையான, மேலோட்டமான முடிவாகவே இருக்கும். சிறுதெய்வங்களை வழிபட்டு வந்த, சிறுசிறுகுழுக்களாக அல்லது இனங்களாக பிரிந்து கிடந்த சமூகத்தில் பெரிய, மாபெரும் தெய்வங்களுக்கான தேவை இல்லாதிருந்தது. சிறு சிறு குழுக்கள் குறுநிலங்களாகவும், குறுநிலங்கள் அரசுகளாகவும், பேரரசுகளாகவும் மாறுகின்ற அதே நேரத்தில், தெய்வங்களின் பதவியும் உயர்வு பெறுகின்றது. தெய்வங்கள் கொண்டிருக்கும் சக்தியும் இதற்கேற்றாற்போல அதிகமாகிக் கொண்டே வருகிறது. நடுகற்களாக இருந்த தெய்வங்கள் மாபெரும் கோயில்களில்(தஞ்சைப் பெருவுடையார் கோவில்) குடியேறுகின்றனர். குறுநில மன்னர்களை வன்முறையால் அடக்கி சிற்றரசுகளும் சிற்றரசுகளை வன்முறையால் அடக்கிப் பேரரசுகளும் எழுந்ததைப் போலவே அதே காலகட்டங்களில் சிறு தெய்வங்கள் பின்சென்று பெருந்தெய்வங்கள் காட்சிக்கு வருகின்றனர். சிறு தெய்வங்களுக்கு இல்லாத சொத்துக்கள் பெருந்தெய்வங்களுக்கு கிடைக்கின்றன. சொத்துக்கள் பெரும்பாலும் நிலமாகவும் வரியாகவும் இருப்பதால், பக்தர் கூட்டம் என்பதும் அதன் ஆதிக்கம் என்பதும் சொத்தின் மீதான ஆதிக்கமாகவும், கலாச்சாரத்தின் மீதான ஆதிக்கமாகவும் வளருகின்றது. ஆதிக்க வளர்ச்சியின் அடிப்படை என்ன என்று நோக்கினால் வன்முறை என்ற பதில் தான் கிடைக்கும். உரிமைகளைப் பறிப்பதற்கும், மற்றவர்கள் கொண்டிருக்கும் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை மீறுவதற்கும் வன்முறைதான் பெரும்பாலும் உதவுகிறது. இந்தப் பின்னணியில் பக்தர்கள் கூட்டம் என்பது, குறிப்பிட்ட இறைவன் மீதான பக்தியுடன் (அதாவது இறைவன் மீதுள்ள அன்பாக) மட்டும் நின்றுவிடாமல், அரசியல் சமூக, பொருளாதார உரிமைகளை தங்கள் நலத்துக் கென்று வென்றேடுக்கும் செயல்பாடாகிவிடுகிறது. தற்காலத்தில் அரசியல் கட்சிகள் இயங்கும் முறையும் இத்தகையதே. தங்கள் கட்சிக்காரருக்காக வாதிடும், போராடும், சண்டையிடும், இறக்கவும் தயங்காத மக்கள் இப்போதும் இருக்கிறார்கள். கொள்கை, குறிக்கோள் என்பதெல்லாம் வெறும் கோஷங்கள் என்பதை அறிந்தே கட்சிகள் செயல் படுகின்றன. கொள்கைகளும் கோஷங்களும் கட்சியின் பிரச்சாரத்துக்கும், கட்சியின் அரசியல் நடைமுறைகளை எழுத்தாக்கம் செய்யும் போது கவர்ச்சியாக ஒலிக்கவும், இருக்கவும் பயன்படுகின்றன. இதே போல பக்தி இயக்கமும், கொள்கையில் சமத்துவத்தைப் போதித்தாலும் நடைமுறையில் அவ்வாறு இருந்திருக்க வாய்ப்பே இல்லை. சமத்துவம் அவ்வாறு கட்டப்பட்டிருந்தால், அதற்கான போராட்டங்கள் இன்றுவரை நடத்தப் படுவதற்கான தேவை இருந்திராது. எனவே, அஹிம்சையும், சமத்துவமும் நல்ல கோஷங்கள் என்பதை அக்கால சமூகம் தெரிந்து வைத்திருந்தது. அதற்கு அடியில் ஒளிந்திருந்தது அஹிம்சையும் சமத்துவமும் நல்ல, ஆனால் ஒருபோதும் நிறைவேற முடியாத மாபெருங்கனவு என்ற புரிதலும் அதைக் கனவாகவே வைத்துச் செயல்படுத்துவதில் உள்ள திறமையும். அதனால் வன்முறை தவிர்க்க முடியாத்தாகவே இருந்தது, இருந்துவருகிறது.

இன்றும் கடவுளின் பேரால் வன்முறை நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதற்கான நியாயத்தை பெரியபுராணம் வழங்குகிறது. இறைவனுக்காக தன் மகனை அறுத்துக் கறிவைத்துக் கொடுத்த பக்தனைக் காணும் போது, மதத்துக்காக இறைவன் பெயரால் இன்னொரு மதத்தவனைக் கொல்வது அவசியமான, குற்றமற்ற செயலாகிறது. தன்கண்ணையே பிடுங்கி இறைவனுக்கு வைத்த நாயன்மாரைச் சேவிக்கும் போது இறைவனின் மீதுள்ள அன்பைவிட வெறி பிரதானமாகி, தன் இறைவனுக்காக அடுத்தவனுடைய கண்ணைப் பிடுங்குவதும் நியாயமுள்ள செயலாகிறது. இனக்குழுவாழ்வின் எச்சமான தனது குழு வாழ்வதற்கான நியாயம் எல்லாவற்றையும் விட மேலான குறிக்கோளாகிறது. இது மிருகங்களின் உயிர்வாழும் முறையைவிட மிகவும் மேம்பட்ட்தென்று சொல்ல முடியாது. மதத்திலிருந்து வன்முறையை எடுத்துவிட்டால் மதம் ஒன்றும் இல்லாததாகி விடுகிறது. அதன் ஆதிக்கத்திற்கு வன்முறையும், கேள்வி கேட்காத கீழ்ப்படிதலும் மிகவும் அவசியமானவை. ஏனெனில், கடவுளை வழிபடாவிட்டால், அவர் சொன்னதைக் கேட்காவிட்டால், தண்டனை நிச்சயம். கடவுள் ஏன் இவ்வளவு கொடூரமானவராக இருக்கிறார்? தன்னைப் பூஜிக்கும், பக்தர்களுக்கு மட்டும் அருள் தரும், ஊழல்காரராக ஏன் இருக்கிறார்? எல்லா மனிதர்களையும் நன்றாக ஏன் அவர் நடத்துவதில்லை? இந்தக் கேள்விகளுக்கு எப்போதும் விடையில்லை. கேள்விகள் சரியானவை. ஆனால் விடைதர அவரில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் தண்டிப்பதற்கும், அரக்கர்கள் என்று சிலரைச் சொல்லி அழிப்பதற்கும் அவர் வருவார். அரக்கர்கள் யாரென்பதையும் அவரே தீர்மானிப்பார். அவர் கொலைசெய்ய வரும்போது மனிதர்களின் ஆயுதங்களையே உபயோகிப்பார். இப்போதெனில் ஏ.கே. 47. பிறகு, அவரை அழிப்பதற்கு இன்னொரு கடவுளை நாம் உருவாக்க வேண்டியிருக்கும். இருவரில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களின் புராணம் எழுதப்படும். அது பக்தி இலக்கியம் என்ற பெயரில் பின்பு வரும் தலைமுறைகளுக்கு ஓதப்படும். இதுதான் அலகிலா விளையாட்டு. Ruleless game.

No comments:

Post a Comment