கண்ணாடி பொம்மையின் எதிர் பிம்பம்
கண்ணாடி பொம்மைகள்( (Glass Managerie) என்ற டென்னிஸி வில்லியம்ஸின் நாடகத்தைப் படித்தபோது அது தன் வாழ்வின் எதிர் முனையாக இருப்பதாக அவன் எண்ணினான். தன்வாழ்விலும் அது நிகழ்ந்திருக்க்க் கூடும் என்றே நம்பினான்.
நாடகத்தில் டாம் முக்கிய பாத்திரம். டாம் நாடகத்தை தன்னுடைய நினைவுகளின் நாடகமாக, கடந்த காலத்தின் நினைவாக, அறிமுகம் செய்து தொடங்குகிறான். ஒவ்வொரு பாத்திரமாக அறிமுகம் செய்கிறான். நாடகத் தொடக்கத்தில் விங்ஃபில்ட் குடும்பம் இரவு உணவு கொள்வதை காட்டுகிறது. அமெண்டா உணவைச் சவைத்து உண்ணுமாறு டாமிடம் சொல்லுகிறாள். ரொம்பவும் எரிச்சலுற்று மேஜையை விட்டெழுந்து புகைபிடிக்கச் செல்கிறான் டாம். அமெண்டா தன்னை எவ்வாறு 17 நல்லவர்கள் (வரன்கள்) அழைத்த கதையைச் சொல்கிறாள். அடுத்தநாள், லாரா தன்னுடைய மேஜையில் அமர்ந்து டைப்ரைட்டர் (பழகும்) அட்டையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அமண்டா கோபமாக வருகிறாள். லாராவிடம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் பற்றிக் கேட்டுவிட்டு லாரா வகுப்புகளுக்குச் செல்வதில்லை என்பதைத் தான் கண்டுபிடித்ததைச் சொல்கிறாள். வகுப்புகளுக்குத் தன்னால் செல்லமுடியவில்லை என்றும் தினமும் அந்த நேரத்தில் சும்மா ஒரு நடை சென்று வருவதாகவும் லாரா சொல்கிறாள்.
பின்னர் அமெண்டா லாராவுடன் உட்கார்ந்துகொண்டிருக்கும் போது அவளுக்குப் பிடித்த ஒரு பையனைப் பற்றிக் கேட்கிறாள். லாரா பள்ளியில் தன்னுடன் படித்த பையனை (அந்த வருடத்துப்) பள்ளி ஆல்பத்தில் காட்டுகிறாள்.
பிறகு டாமுக்கும் அமெண்டாவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. டாம் தினமும் ஏன் சினிமா பார்க்கச் செல்கிறான் என்று அமெண்டாவுக்குப் புரியவில்லை. குடும்பத்துக்காக தான் இப்படி வேலை செய்வது பிடிக்கவில்லை என்று சொல்கிறான். கோபத்தில் ஏதோகொலைகாரனைப் பற்றிப் பேசிவிட்டு சினிமாவுக்குப் போகிறான். இரவில் வீட்டுக்கு வரும்போது குடித்திருக்கிறான் வீட்டுச் சாவியைத் தொலைத்துவிட்டான். லாரா வீட்டுக் கதவைத் திறக்கிறாள். அவளிடம் தான் பார்த்த சினிமாவைப் பற்றியும், மேஜிக் ஷோ பற்றியும் சொல்லி மேஜிக் ஷோவில் கிடைத்த கழுத்துப் பட்டையை அவளிடம் தருகிறான்.
அடுத்தநாள் அமெண்டா எப்போதும் போல் அவனை எழுப்பி வேலைக்கு அனுப்பத் தயார் செய்கிறாள். அவன் வெளியே செல்லும் முன் லாராவுக்காக யாராவது ஒரு பையனை அழைத்துவரும்படி கூறுகிறாள். ஜிம் கானர்’ ஐ அடுத்தநாள் இரவுச் சாப்பாட்டுக்கு அழைத்த்தாக அன்றிரவு டாம் அம்மாவிடம் சொல்கிறான். அடுத்தநாள் லாராவும் அமெண்டாவும் இரவு விருந்து தயாரிப்பதிலும், வீட்டை அலங்காரப் படுத்துவதிலும் நன்றாக உடுத்திக் கொள்வதிலும் தீவிரமாக இருக்கிறார்கள். இரவில், ஜிம்முடன் டாம் வருகிறான். விருந்து உண்டதும் மின்சாரம் தடைப்பட்டு விளக்குகள் அணைந்துவிடுகின்றன. அமெண்டா மெழுகுவர்த்தி எடுத்துவருகிறாள். லாரா ஜிம்முடன் தனியே அமர்கிறாள். கொஞ்சநேரம் பேசுகிறார்கள். ஜிம் லாராவை முத்தமிடுகிறான். ஆனால் அதற்காக வருத்தப்படுகிறான். தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று அவளிடம் சொல்கிறான். லாரா மிகவும் அதிர்ச்சி அடைகிறாள். அவனுக்கு ஒற்றைக் கொம்புள்ள சிறு கண்ணாடிக் குதிரைப் பொம்மையைப் பரிசு கொடுக்கிறாள். அது உடைந்தும் விடுகிறது. ஜிம் விடைபெறுகிறான். ஜிம்முக்கு நிச்சயமாகிவிட்ட்தை ஏன் டாம் சொல்லவில்லை என்று அமெண்ட்டாவுக்கு கோபம். டாம் தனக்குத் தெரியவே தெரியாது என்கிறான். டாமும் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். எங்காவது போய்விட.
ஜிம் வந்த இரவில் விளக்கணைவதும் கண்ணாடி பொம்மை உடைவதும் லாராவுக்கு எதிர்காலத்தில் நிகழ்வதை குறிப்பிடுகிறது. அவள் நொறுங்கிவிடுகிறாள். மனதாலும் உடலாலும். சினிமாவுக்கும் மேஜிக் ஷோவுக்கும் டாம் செல்வது தன் துயரங்களிலிருந்து தப்பவே. அதை லாராவுக்கும் தர விரும்புகிறான். தன்னால் அவர்களுக்காக பிடிக்காத வேலை செய்யமுடியாதென்று சொல்லுகிறான். அதற்காகவே வீட்டைவிட்டு வெளியேறுகிறான். ஒரு வேளை தன் கனவுகளைத் தொடர்ந்து செல்வதற்காக இருக்கலாம்.
லட்சியத்துக்காகவோ அல்லது குடும்பத்துக்கு உழைத்துச் சலித்த்தாலோ சிலர் வாழ்வில் நிகழக்கூடியது தான். இந்தியாவில் இப்படி நடப்பவர்கள் மிகவும் குறைவு. குடும்பத்துக்காக தன்னலத்தைத் தியாகம் செய்பவர்களே அதிகம். லட்சியத்துக்காக குடும்பத்தைச் தியாகம் செய்யத் தயங்காதவர்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தனர். அது தியாகங்களின் காலம்.
அவனுக்கும் சகோதரியும் அப்பாவும் அம்மாவும் உண்டு. லட்சியக்கனவைத் தொடர்ந்து சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது நிச்சயமில்லை. ஆனால் கண்ணாடி பொம்மைகள் போல் ஆகிவிடுவதற்கு வாய்ப்பு உண்டு. கனவை மறந்து பிடிக்காத வேலைக்குச் சென்றதால் குடும்ப வருமானம் வந்து தடுமாற்றம் குறைந்தது. பெண்ணுக்கும் திருமணமானது.
டென்னிஸி வில்லியம்ஸ்ஸின் கதாநாயகன் செய்தது சரியா தப்பா என்று நாம் தீர்மானிக்க முடியாது. இதில் “அறம்” என்ற ஒன்று கிடையாது. டென்னிஸி வில்லியம்ஸ் குடும்பத்தைக் கவனித்திருந்தால் சாகாவரம் பெற்ற இந்த நாடகத்தைப் படைத்திருக்க முடியாது. அம்மாவின் இயலாமையும், சகோதரியின் மனநிலை பிறழ்ந்த நிலையின் அவலமும் கதாநாயகனின் இயலாமையும் கனவுகளுமே இந்த முரண்பாட்டுக்குக் காரணம். அது தீர வழி இல்லை.
காந்திஜி தன் குடும்பத்தை மட்டுமே கவனித்து இருந்தால், தலைவராகி இருக்க முடியாது. இதுதான் அவனுக்குப் புரிந்தது. லட்சியத்தைத் தொடர்ந்திருந்தால் சிகரங்களை ஒருவேளை தொட்டிருக்கலாம். தொடாமலும் இருக்கலாம். அதன் விலை என்ன என்பது இன்று கணிக்க முடியாத்தாகவே இருக்கிறது. அனைவரும் மீட்க இயலாத் துயரத்தில் வீழ்ந்திருக்கக் கூடும். அப்படித்தான் நடந்திருக்கும் என்று சமாதானம் செய்து கொண்டான். லட்சிய தீபம் அணைந்து விட்டதா? என்று தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறான். சிறு சுடர்போல் மனதில் ஒளிர்ந்து கொண்டிருப்பது போல்தான் தோன்றியது. என்றாவது காட்டுத் தீயாய் எரியுமா?
No comments:
Post a Comment