Friday, January 29, 2010

விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் (இது டி.வி. பற்றிய பதிவல்ல)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றிய விமரிசனம் தேவையற்றது. அவை அவ்வளவு மோசம்.

நான் பேசப் போவது ‘நாங்களெல்லாம் பெரிய ஆட்களாக்கும்’ என்று பறையடித்துக் கொண்டு, தமிழ்நாட்டில் வலம் வரும் இலக்கியக்காரர்களைப் பற்றியது. ஒவ்வொருவரின் எழுத்தைப் பற்றி நான் பேசப் போவதில்லை. தம்பட்டம் அடிப்பதையே தொழிலாக்க் கொண்டிருக்கும் எழுத்தர்களைப் (எழுத்தாளர்களைப் பற்றியதல்ல)
மனிதன் என்று பிறந்து விட்டால், அடக்கமுடைமை வேண்டும். உன்னதமான மனிதர்கள் எப்போதும் அடக்கத்துடனே வாழ்ந்திருக்கிறார்கள். இலக்கியம் படைப்பவன் உன்னதமானவன். மனிதனின் உன்னதமான உணர்ச்சிகளை (அவை எவ்வளவு மோசமான உணர்ச்சிகளாக இருந்தபோதிலும் – மனிதன் கொள்வதனாலேயே உன்னதமாகிவிடுகின்றன) எழுத்தில் வடிப்பவர்கள். அதை மனிதன் முன் கண்ணாடியைப் போல் நீட்டிக் காட்டுபவர்கள். சாதாரண மனிதர்களிடம் நாம் எதிர்பார்க்கும் பண்புகளை, இப்படி உன்னதமான இலக்கியம் படைக்கிற, அல்லது படைப்பதாகச் சொல்லிக் கொள்கிறவர்களிடம் எதிர்பார்க்கிறோம். தன்மானமும், சுயமரியாதையும், சுயஎள்ளலும் எளியமக்களின் வாழ்வுடன் தங்களை அடையாளம் காண்பதிலும் அவர்களின் உன்னதங்களை வெளிக்கொணர்வதும், கரிசனங்களை கவலைகளை உரைத்து, கீழ்மைகளை சுட்டிக்காட்டுவதும் அவன் பணி. இதையெல்லாம் பழங்கால பாணி என்று ஒதுக்கிவிடுதல் எளிது. ஆனால் உன்னத்துக்கு வழிகாட்டும் மனிதர்கள் உன்னதங்களை தங்களின் கொண்டிருக்க வேண்டும். உன்னதங்களுக்கான உணர்வும் உழைப்பும் இருக்க வேண்டும். ‘நான் படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்று சொல்வதானால் அந்த உன்னத நோக்கம் வேண்டும்.

இப்போது நாம் பார்க்கின்ற எழுத்தாளர்கள் பலர் நான் எழுதியது தான் எழுத்து. நான் சொன்னது தான் கருத்து அதற்கு மேல் எதுவும் இல்லை என்கிற வகையில் தம்பட்டம் அடித்துத் திரிவதைப் பார்க்க முடிகிறது. தன்னம்பிக்கை என்பது வேறு. தன்னை யார் கீழ்மைப் படுத்தினாலும் தன்னிலை தவறாமல் இருப்பது. இழிவான விமரிசனங்களை ஒதுக்கிவிடுவது. மலிவான விளம்பரம் தேடும் வகையில், என்னை ஆங்கிலத்தில், பிரெஞ்சில் மொழிபெயர்த்து விட்டார்கள் ஆகவே நான்தான் தமிழ் இலக்கியத்தில் இன்று பெரியமனிதன். என்னை மலையாளத்தில் கொண்டாடுகிறார்கள் தமிழர்கள் பார்ப்பது கூட இல்லை. என்று புலம்புகிறார்கள். தங்களுக்குள் நான் பெரியவன் நீ பெரியவன் என்று அடித்துக் கொள்கிறார்கள். வாசகர்களிடம் ஏதோ தாங்கள் கடவுள் போலவும், தங்களிடம் தொடர்பு கொண்டால் அது வாசகர்களுக்குச் செய்யும் பெரிய உபகாரம் என்று தோன்றும் வகையில் பேசி வருகிறார்கள். சிலர் தான் உலகம் சுற்றிப் பார்க்க சந்தாப் பிரிக்கிறார்கள். இலக்கிய சேவையை யாருக்கு எதற்காக வாசகன் செய்யவேண்டும்? அவன் புத்தகம் படித்தால் போதாதா? அதுக்கே வழியில்லை. (மீண்டும் ஞாபகம் வருகிறது ஐநூறு பிரதிகள்)
சிரிப்பு வரும் இவர்களில் வாசகர்கள் எத்தனை பேர் என்று அறிந்தால். தமிழில் ஒரு புத்தகம், 500 பிரதிகள் பதிப்பது பெரிய விஷயம். விற்குமா என்றால் சொல்ல முடியாது. அரசு நூலகங்களுக்கான ஆணையில் 600 பிரதி போனால் மிச்சம் விற்பது ஆயிரம் பிரதிகளுக்குள் அடங்கிவிடும். 74 சதவீதம் படித்தவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில், அதாவது குறைந்தது நாலு கோடிப்பேர் படித்தவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் 500 பிரதி என்பது எவ்வளவு கேவலமானது?. அதைப் பெருமையாகப் பேசுவதும் கேவலமானதே. நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு இது கேவலம்தான். ஆனால் எழுத்தாளர்கள் தங்கள் பெருமை பேசுவதென்பது கீழ்த்தரமானது. தமிழமக்கள் என்ன செய்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க எழுத்தாளர்கள் என்ன செய்தார்கள் என்பது நான் கேட்கும் கேள்வி. ஊர் ஊராகப் போய் கூட்டம் போட்டார்களா? நல்ல புத்தகங்களுக்காக அலைந்து திரிந்து, நல்ல எழுத்தாளர்களை, நேர்மையானவர்களை, உன்னதமானவர்களை மதித்தார்களா? எழுத்தாளனை மதிக்காத பதிப்பகத்தாரை ஒதுக்கினார்களா? அல்லது வெளிக்காட்டினார்களா? வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு, டிவியிலும், வலைத்தளத்திலும் தங்கள் பெருமையையும், வலிமையையும் அடுத்த எழுத்தாளரின் சிறுமையையும் அறியாமையையும் பற்றிப் பேசி தெருச்சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்களா?

முந்தி எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள் செய்தது போல மோதிக்கொண்டு தரந்தாழ்ந்தால், அதேமாதிரி ரசிகர்கள் தான் கைதட்டுவார்கள். அரைகுறை ஆங்கிலம் படித்துவிட்டுத் தமிழையே நன்றாக படிக்க எழுதப் பயிலாத ஒரு இஞ்ஜினீயர் கூட்டம் டாலர்களை வாங்கி அடையாளத்தைத் தொலைத்துவிட்டு தேட வந்திருக்கிறது. அது அவர்கள் குறையல்ல. ஆனால், அவர்களுக்குப் பாவலாக்காட்ட இந்த மாதிரி எழுத்தாளார்கள் தேவைப்படுகிறார்கள். இந்த இன் ஜினீயர் கூட்டம் இவர்களின் அரைவேக்காட்டுக் டவுண்லோடு நாவல்கள், கதைகளைப் படித்துவிட்டு ஏதோ தமிழ் இலக்கியம் படித்துவிட்டதாய்ப் பாவலாப் பண்ணுகிறது. இது எல்லாம் நாடகந்தான், ஐநூறு பிரதிகள் நாலைரைக்கோடி மக்கள். இது ஒன்றே போதும்.

ஒருவரை ஒருவர் மேடைகளில் தாக்கிக் கொண்டு, அரசியல் வாதிகளை விட மோசமாக வார்த்தையாடுபவர்கள் அதிலிருந்து வரும் அந்த விளம்பரத்துக்காகத்தான் குதிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. தமிழ் இலக்கியதின் நிலையும் விளம்பரதாரர் நிகழ்ச்சியாகவே மாறிப்போனதில் ஒன்றும் அதிசயம் இல்லை.அது தொற்று நோய். சினிமாவில் தொடங்கி, டிவியில் தொடர்ந்து, அரசியலில் உயர்ந்து, இலக்கியத்தில் நுழைந்து விஷமாய்ப் பரவிவரும் நோய். இந்த விவகாரங்களில் விமரிசனங்களுக்கான பொறுப்புணர்வோ, நிதானமோ, முதிர்ச்சியோ இருக்க வேண்டிய தேவையில்லை. மனம்போன போக்கில் போகலாம். தமிழ் வாசகர்களும் அப்படித் தான் போவார்கள். அவர்களின் ஹீரோக்கள் அப்படித்தானே போகிறார்கள்.

Thursday, January 21, 2010

கண்ணாடி பொம்மையின் எதிர் பிம்பம்

கண்ணாடி பொம்மைகள்( (Glass Managerie) என்ற டென்னிஸி வில்லியம்ஸின் நாடகத்தைப் படித்தபோது அது தன் வாழ்வின் எதிர் முனையாக இருப்பதாக அவன் எண்ணினான். தன்வாழ்விலும் அது நிகழ்ந்திருக்க்க் கூடும் என்றே நம்பினான்.

நாடகத்தில் டாம் முக்கிய பாத்திரம். டாம் நாடகத்தை தன்னுடைய நினைவுகளின் நாடகமாக, கடந்த காலத்தின் நினைவாக, அறிமுகம் செய்து தொடங்குகிறான். ஒவ்வொரு பாத்திரமாக அறிமுகம் செய்கிறான். நாடகத் தொடக்கத்தில் விங்ஃபில்ட் குடும்பம் இரவு உணவு கொள்வதை காட்டுகிறது. அமெண்டா உணவைச் சவைத்து உண்ணுமாறு டாமிடம் சொல்லுகிறாள். ரொம்பவும் எரிச்சலுற்று மேஜையை விட்டெழுந்து புகைபிடிக்கச் செல்கிறான் டாம். அமெண்டா தன்னை எவ்வாறு 17 நல்லவர்கள் (வரன்கள்) அழைத்த கதையைச் சொல்கிறாள். அடுத்தநாள், லாரா தன்னுடைய மேஜையில் அமர்ந்து டைப்ரைட்டர் (பழகும்) அட்டையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அமண்டா கோபமாக வருகிறாள். லாராவிடம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் பற்றிக் கேட்டுவிட்டு லாரா வகுப்புகளுக்குச் செல்வதில்லை என்பதைத் தான் கண்டுபிடித்ததைச் சொல்கிறாள். வகுப்புகளுக்குத் தன்னால் செல்லமுடியவில்லை என்றும் தினமும் அந்த நேரத்தில் சும்மா ஒரு நடை சென்று வருவதாகவும் லாரா சொல்கிறாள்.

பின்னர் அமெண்டா லாராவுடன் உட்கார்ந்துகொண்டிருக்கும் போது அவளுக்குப் பிடித்த ஒரு பையனைப் பற்றிக் கேட்கிறாள். லாரா பள்ளியில் தன்னுடன் படித்த பையனை (அந்த வருடத்துப்) பள்ளி ஆல்பத்தில் காட்டுகிறாள்.

பிறகு டாமுக்கும் அமெண்டாவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. டாம் தினமும் ஏன் சினிமா பார்க்கச் செல்கிறான் என்று அமெண்டாவுக்குப் புரியவில்லை. குடும்பத்துக்காக தான் இப்படி வேலை செய்வது பிடிக்கவில்லை என்று சொல்கிறான். கோபத்தில் ஏதோகொலைகாரனைப் பற்றிப் பேசிவிட்டு சினிமாவுக்குப் போகிறான். இரவில் வீட்டுக்கு வரும்போது குடித்திருக்கிறான் வீட்டுச் சாவியைத் தொலைத்துவிட்டான். லாரா வீட்டுக் கதவைத் திறக்கிறாள். அவளிடம் தான் பார்த்த சினிமாவைப் பற்றியும், மேஜிக் ஷோ பற்றியும் சொல்லி மேஜிக் ஷோவில் கிடைத்த கழுத்துப் பட்டையை அவளிடம் தருகிறான்.

அடுத்தநாள் அமெண்டா எப்போதும் போல் அவனை எழுப்பி வேலைக்கு அனுப்பத் தயார் செய்கிறாள். அவன் வெளியே செல்லும் முன் லாராவுக்காக யாராவது ஒரு பையனை அழைத்துவரும்படி கூறுகிறாள். ஜிம் கானர்’ ஐ அடுத்தநாள் இரவுச் சாப்பாட்டுக்கு அழைத்த்தாக அன்றிரவு டாம் அம்மாவிடம் சொல்கிறான். அடுத்தநாள் லாராவும் அமெண்டாவும் இரவு விருந்து தயாரிப்பதிலும், வீட்டை அலங்காரப் படுத்துவதிலும் நன்றாக உடுத்திக் கொள்வதிலும் தீவிரமாக இருக்கிறார்கள். இரவில், ஜிம்முடன் டாம் வருகிறான். விருந்து உண்டதும் மின்சாரம் தடைப்பட்டு விளக்குகள் அணைந்துவிடுகின்றன. அமெண்டா மெழுகுவர்த்தி எடுத்துவருகிறாள். லாரா ஜிம்முடன் தனியே அமர்கிறாள். கொஞ்சநேரம் பேசுகிறார்கள். ஜிம் லாராவை முத்தமிடுகிறான். ஆனால் அதற்காக வருத்தப்படுகிறான். தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று அவளிடம் சொல்கிறான். லாரா மிகவும் அதிர்ச்சி அடைகிறாள். அவனுக்கு ஒற்றைக் கொம்புள்ள சிறு கண்ணாடிக் குதிரைப் பொம்மையைப் பரிசு கொடுக்கிறாள். அது உடைந்தும் விடுகிறது. ஜிம் விடைபெறுகிறான். ஜிம்முக்கு நிச்சயமாகிவிட்ட்தை ஏன் டாம் சொல்லவில்லை என்று அமெண்ட்டாவுக்கு கோபம். டாம் தனக்குத் தெரியவே தெரியாது என்கிறான். டாமும் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். எங்காவது போய்விட.

ஜிம் வந்த இரவில் விளக்கணைவதும் கண்ணாடி பொம்மை உடைவதும் லாராவுக்கு எதிர்காலத்தில் நிகழ்வதை குறிப்பிடுகிறது. அவள் நொறுங்கிவிடுகிறாள். மனதாலும் உடலாலும். சினிமாவுக்கும் மேஜிக் ஷோவுக்கும் டாம் செல்வது தன் துயரங்களிலிருந்து தப்பவே. அதை லாராவுக்கும் தர விரும்புகிறான். தன்னால் அவர்களுக்காக பிடிக்காத வேலை செய்யமுடியாதென்று சொல்லுகிறான். அதற்காகவே வீட்டைவிட்டு வெளியேறுகிறான். ஒரு வேளை தன் கனவுகளைத் தொடர்ந்து செல்வதற்காக இருக்கலாம்.
லட்சியத்துக்காகவோ அல்லது குடும்பத்துக்கு உழைத்துச் சலித்த்தாலோ சிலர் வாழ்வில் நிகழக்கூடியது தான். இந்தியாவில் இப்படி நடப்பவர்கள் மிகவும் குறைவு. குடும்பத்துக்காக தன்னலத்தைத் தியாகம் செய்பவர்களே அதிகம். லட்சியத்துக்காக குடும்பத்தைச் தியாகம் செய்யத் தயங்காதவர்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தனர். அது தியாகங்களின் காலம்.

அவனுக்கும் சகோதரியும் அப்பாவும் அம்மாவும் உண்டு. லட்சியக்கனவைத் தொடர்ந்து சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது நிச்சயமில்லை. ஆனால் கண்ணாடி பொம்மைகள் போல் ஆகிவிடுவதற்கு வாய்ப்பு உண்டு. கனவை மறந்து பிடிக்காத வேலைக்குச் சென்றதால் குடும்ப வருமானம் வந்து தடுமாற்றம் குறைந்தது. பெண்ணுக்கும் திருமணமானது.

டென்னிஸி வில்லியம்ஸ்ஸின் கதாநாயகன் செய்தது சரியா தப்பா என்று நாம் தீர்மானிக்க முடியாது. இதில் “அறம்” என்ற ஒன்று கிடையாது. டென்னிஸி வில்லியம்ஸ் குடும்பத்தைக் கவனித்திருந்தால் சாகாவரம் பெற்ற இந்த நாடகத்தைப் படைத்திருக்க முடியாது. அம்மாவின் இயலாமையும், சகோதரியின் மனநிலை பிறழ்ந்த நிலையின் அவலமும் கதாநாயகனின் இயலாமையும் கனவுகளுமே இந்த முரண்பாட்டுக்குக் காரணம். அது தீர வழி இல்லை.
காந்திஜி தன் குடும்பத்தை மட்டுமே கவனித்து இருந்தால், தலைவராகி இருக்க முடியாது. இதுதான் அவனுக்குப் புரிந்தது. லட்சியத்தைத் தொடர்ந்திருந்தால் சிகரங்களை ஒருவேளை தொட்டிருக்கலாம். தொடாமலும் இருக்கலாம். அதன் விலை என்ன என்பது இன்று கணிக்க முடியாத்தாகவே இருக்கிறது. அனைவரும் மீட்க இயலாத் துயரத்தில் வீழ்ந்திருக்கக் கூடும். அப்படித்தான் நடந்திருக்கும் என்று சமாதானம் செய்து கொண்டான். லட்சிய தீபம் அணைந்து விட்டதா? என்று தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறான். சிறு சுடர்போல் மனதில் ஒளிர்ந்து கொண்டிருப்பது போல்தான் தோன்றியது. என்றாவது காட்டுத் தீயாய் எரியுமா?

Tuesday, January 19, 2010

கடவுளும் கருணையும்

பக்தி இலக்கியங்களில் வன்முறை மிக இயல்பானதாக இழையோடுகிறது. எல்லையில்லாக் கருணையுள்ள கடவுள் எல்லையற்ற வன்முறையைக் கடைப் பிடிப்பது இந்துக்களாகிய நம்மில் யாருக்கும் முரணாகத் தோன்றவில்லை. ஏன் தோன்றவில்லை என்பதுதான் புதிர்.

இந்தப் புதிரை அவிழ்ப்பதற்கு யாரும் முயலவில்லை. அன்பே சிவமென்னும் சைவர்களோ எட்டாயிரம் சமணர்களைக் கழுவேற்றியதைப் பெருமையாக, ஆனால் கொஞ்சம் அடக்கிவாசித்து, தயக்கத்துடன் பேசுகிறார்கள். வன்முறை அந்தத் ‘திருவிளையாடலில்’ மட்டும் இருந்தால் விதி விலக்கென்று விட்டு விடலாம். ஆனால், பெரிய புராணம் முழுவதும் இந்த வன்முறை நிகழ்வுகள் பரவிக் கிடக்கின்றன. மற்றப் புராணங்களிலும் வன்முறை பரவிக் கிடைக்கிறது. காஞ்ச ஐலய்யா தன்னுடைய ‘Why I am not a Hindu’ புத்தகத்தில் சொன்னதைப் போல ஹிந்து தெய்வங்கள், குறிப்பாக பெருந்தெய்வங்கள் அழிப்பதை தங்கள் வாழ்வாகக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அவதாரமும் ஒரு அல்லது பல அரக்கர்களை அழிப்பதாகவே புராணங்கள் சொல்லுகின்றன.

பக்தி இயக்கம் ஒரு இயக்கமாக நடத்தப்பட்டிருக்கிறது. அதன் நோக்கம் என்ன? மக்களின் மனதிலும், சமூகத்திலும் ஏற்கனவே இடம்பிடித்த ஒரு மதத்தின் நம்பிக்கைகளை மாற்றி இன்னொரு மதத்தின் நம்பிக்கைகளைத் திணிப்பது மட்டும் அந்த இயக்கத்தின் குறிக்கோளாகவும் விளைவாகவும் இருக்க முடியும் என்பது எளிமையான, மேலோட்டமான முடிவாகவே இருக்கும். சிறுதெய்வங்களை வழிபட்டு வந்த, சிறுசிறுகுழுக்களாக அல்லது இனங்களாக பிரிந்து கிடந்த சமூகத்தில் பெரிய, மாபெரும் தெய்வங்களுக்கான தேவை இல்லாதிருந்தது. சிறு சிறு குழுக்கள் குறுநிலங்களாகவும், குறுநிலங்கள் அரசுகளாகவும், பேரரசுகளாகவும் மாறுகின்ற அதே நேரத்தில், தெய்வங்களின் பதவியும் உயர்வு பெறுகின்றது. தெய்வங்கள் கொண்டிருக்கும் சக்தியும் இதற்கேற்றாற்போல அதிகமாகிக் கொண்டே வருகிறது. நடுகற்களாக இருந்த தெய்வங்கள் மாபெரும் கோயில்களில்(தஞ்சைப் பெருவுடையார் கோவில்) குடியேறுகின்றனர். குறுநில மன்னர்களை வன்முறையால் அடக்கி சிற்றரசுகளும் சிற்றரசுகளை வன்முறையால் அடக்கிப் பேரரசுகளும் எழுந்ததைப் போலவே அதே காலகட்டங்களில் சிறு தெய்வங்கள் பின்சென்று பெருந்தெய்வங்கள் காட்சிக்கு வருகின்றனர். சிறு தெய்வங்களுக்கு இல்லாத சொத்துக்கள் பெருந்தெய்வங்களுக்கு கிடைக்கின்றன. சொத்துக்கள் பெரும்பாலும் நிலமாகவும் வரியாகவும் இருப்பதால், பக்தர் கூட்டம் என்பதும் அதன் ஆதிக்கம் என்பதும் சொத்தின் மீதான ஆதிக்கமாகவும், கலாச்சாரத்தின் மீதான ஆதிக்கமாகவும் வளருகின்றது. ஆதிக்க வளர்ச்சியின் அடிப்படை என்ன என்று நோக்கினால் வன்முறை என்ற பதில் தான் கிடைக்கும். உரிமைகளைப் பறிப்பதற்கும், மற்றவர்கள் கொண்டிருக்கும் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை மீறுவதற்கும் வன்முறைதான் பெரும்பாலும் உதவுகிறது. இந்தப் பின்னணியில் பக்தர்கள் கூட்டம் என்பது, குறிப்பிட்ட இறைவன் மீதான பக்தியுடன் (அதாவது இறைவன் மீதுள்ள அன்பாக) மட்டும் நின்றுவிடாமல், அரசியல் சமூக, பொருளாதார உரிமைகளை தங்கள் நலத்துக் கென்று வென்றேடுக்கும் செயல்பாடாகிவிடுகிறது. தற்காலத்தில் அரசியல் கட்சிகள் இயங்கும் முறையும் இத்தகையதே. தங்கள் கட்சிக்காரருக்காக வாதிடும், போராடும், சண்டையிடும், இறக்கவும் தயங்காத மக்கள் இப்போதும் இருக்கிறார்கள். கொள்கை, குறிக்கோள் என்பதெல்லாம் வெறும் கோஷங்கள் என்பதை அறிந்தே கட்சிகள் செயல் படுகின்றன. கொள்கைகளும் கோஷங்களும் கட்சியின் பிரச்சாரத்துக்கும், கட்சியின் அரசியல் நடைமுறைகளை எழுத்தாக்கம் செய்யும் போது கவர்ச்சியாக ஒலிக்கவும், இருக்கவும் பயன்படுகின்றன. இதே போல பக்தி இயக்கமும், கொள்கையில் சமத்துவத்தைப் போதித்தாலும் நடைமுறையில் அவ்வாறு இருந்திருக்க வாய்ப்பே இல்லை. சமத்துவம் அவ்வாறு கட்டப்பட்டிருந்தால், அதற்கான போராட்டங்கள் இன்றுவரை நடத்தப் படுவதற்கான தேவை இருந்திராது. எனவே, அஹிம்சையும், சமத்துவமும் நல்ல கோஷங்கள் என்பதை அக்கால சமூகம் தெரிந்து வைத்திருந்தது. அதற்கு அடியில் ஒளிந்திருந்தது அஹிம்சையும் சமத்துவமும் நல்ல, ஆனால் ஒருபோதும் நிறைவேற முடியாத மாபெருங்கனவு என்ற புரிதலும் அதைக் கனவாகவே வைத்துச் செயல்படுத்துவதில் உள்ள திறமையும். அதனால் வன்முறை தவிர்க்க முடியாத்தாகவே இருந்தது, இருந்துவருகிறது.

இன்றும் கடவுளின் பேரால் வன்முறை நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதற்கான நியாயத்தை பெரியபுராணம் வழங்குகிறது. இறைவனுக்காக தன் மகனை அறுத்துக் கறிவைத்துக் கொடுத்த பக்தனைக் காணும் போது, மதத்துக்காக இறைவன் பெயரால் இன்னொரு மதத்தவனைக் கொல்வது அவசியமான, குற்றமற்ற செயலாகிறது. தன்கண்ணையே பிடுங்கி இறைவனுக்கு வைத்த நாயன்மாரைச் சேவிக்கும் போது இறைவனின் மீதுள்ள அன்பைவிட வெறி பிரதானமாகி, தன் இறைவனுக்காக அடுத்தவனுடைய கண்ணைப் பிடுங்குவதும் நியாயமுள்ள செயலாகிறது. இனக்குழுவாழ்வின் எச்சமான தனது குழு வாழ்வதற்கான நியாயம் எல்லாவற்றையும் விட மேலான குறிக்கோளாகிறது. இது மிருகங்களின் உயிர்வாழும் முறையைவிட மிகவும் மேம்பட்ட்தென்று சொல்ல முடியாது. மதத்திலிருந்து வன்முறையை எடுத்துவிட்டால் மதம் ஒன்றும் இல்லாததாகி விடுகிறது. அதன் ஆதிக்கத்திற்கு வன்முறையும், கேள்வி கேட்காத கீழ்ப்படிதலும் மிகவும் அவசியமானவை. ஏனெனில், கடவுளை வழிபடாவிட்டால், அவர் சொன்னதைக் கேட்காவிட்டால், தண்டனை நிச்சயம். கடவுள் ஏன் இவ்வளவு கொடூரமானவராக இருக்கிறார்? தன்னைப் பூஜிக்கும், பக்தர்களுக்கு மட்டும் அருள் தரும், ஊழல்காரராக ஏன் இருக்கிறார்? எல்லா மனிதர்களையும் நன்றாக ஏன் அவர் நடத்துவதில்லை? இந்தக் கேள்விகளுக்கு எப்போதும் விடையில்லை. கேள்விகள் சரியானவை. ஆனால் விடைதர அவரில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் தண்டிப்பதற்கும், அரக்கர்கள் என்று சிலரைச் சொல்லி அழிப்பதற்கும் அவர் வருவார். அரக்கர்கள் யாரென்பதையும் அவரே தீர்மானிப்பார். அவர் கொலைசெய்ய வரும்போது மனிதர்களின் ஆயுதங்களையே உபயோகிப்பார். இப்போதெனில் ஏ.கே. 47. பிறகு, அவரை அழிப்பதற்கு இன்னொரு கடவுளை நாம் உருவாக்க வேண்டியிருக்கும். இருவரில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களின் புராணம் எழுதப்படும். அது பக்தி இலக்கியம் என்ற பெயரில் பின்பு வரும் தலைமுறைகளுக்கு ஓதப்படும். இதுதான் அலகிலா விளையாட்டு. Ruleless game.

Friday, January 08, 2010

தமிழ் சினிமாத் துறையின் திருடர்களும் கொள்ளைக்காரர்களும்
தமிழ் சினிமாத் துறையினர் மீண்டும் திருட்டு டிவிடி பற்றிய பெரும் சர்ச்சை ஒன்றைக் கிளப்பி இருக்கின்றனர். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்று பேசாமல் இருக்கலாம். ஆனால் பெரிய பெரிய கொள்கைகளைப் பற்றி கொள்ளைக்காரர்கள் பேசும் போது கேட்டால் கோபம் வந்து விடுகிறது.
ஜக்குபாய் என்ற படத்தின் திருட்டு டிவிடி வெளிவந்துவிட்டதாம். அதனால் திரைப்படத்துறைக்கு நட்டமாம். டைரக்டர் சொல்லுகிறார். இது கொலைக்குற்றம் என்று. இது கொலைக்குற்றம் என்று கூப்பாடு போடுகிறவர் என்னென்ன கொலைகளை செய்திருக்கிறார் என்று பார்ப்போமா? திருட்டு டிவிடி பார்த்தால் விற்பனையின் மூலம் வருவது கள்ளப்பணம். என்று கமலஹாசன் சொன்னாராம். கள்ளப்பணம் பற்றி எத்தனை கவலை அவருக்கு. கவலைப் படாதீர்கள் படம் நன்றாக ஓடும் என்றார் ரஜினி. எப்படி நிகழ்ந்த்து என்றும் அதைத் தடுக்க என்னென்ன செய்யலாமென்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
சாதாரணப் பொதுமக்களின் வாழ்வில் தமிழ் சினிமாவின் பாதிப்பு என்ன? முன்னெல்லாம் பாமர ஜனங்கள் நடிகர் திலகமென்றும் மக்கள் திலகமென்றும் வழங்கிய திரைப்பட்த்துறையின் முடிசூடா மன்னர்களுக்கு அப்பாவித்தனமாக தங்கள் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர். இப்போது நிலைமை அப்படியா? Age of innocence has passed. இப்போது யாரும் அவ்வளவு அப்பாவிகள் இல்லை. ரஜினி ரசிகர்கள் அவரை அரசியலில் இறங்கச் சொல்கிறார்களா? அதற்கு காரணம் அதன் மூலம் அவர்கள் அடைய நினைக்கும், பொருளாதார, சமூக, ஆதாயம். நடிகர்களும் பணம் பெருக்கவே படம் எடுக்கிறார்கள். தங்களை சூபர் ஸ்டார் என்றும் உலக நாயகன் என்றும் அதென்றும் இதென்றும் கூறிக் கொள்வதும் கூற வைப்பதும் தங்கள் சம்பளத்தைப் பெருக்கும் ஆதாயத்துக்காகத்தான். சம்பளம் என்பதை கள்ளப்பணம் மூலமும், வெள்ளைப் பணம் மூலம் பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். கொடுப்பவர்களும் அப்படியே.
இந்தப்பணத்தை வைத்துக் கொண்டு சமூகத்தின் மீது தங்களுக்கு அக்கறை இருப்பது போல நடிக்கிறார்கள். சிலர் சேவை நிறுவன்ங்களை ஆரம்பித்து, வரிச் சலுகை பெற்று, தங்கள் சம்பாத்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைக்க வழி செய்கிறார்கள். அரசியல் தலைவர்களில் வால் பிடித்து தங்களுக்கு வேண்டிய சலுகைகளை, ஏழை எளிய மக்களின் சேவைக்குப் போய்ச் சேரவேண்டிய பணத்தை பிடுங்கிக் கொள்ளுகிறார்கள்.
சம்பந்தா சம்பந்தம் இல்லாத கதைகள் காட்சிகள் காட்டி ஏழைகளையும் பாமர்ர்களையும் ஏமாற்றி பணம் சம்பாதித்துவிட்டு, ஏழைகளுக்கு இது தான் பிடிக்கும் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஏழைகளின் வாழ்வில் உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் வாழ்வின் சமூகத்தின் நிஜத்தைப் புரிந்து கொள்ளும்படங்களை அல்லவா எடுக்க வேண்டும். ஏழைகளைப் பிச்சைக்கார்ர்களாகவே வைத்திருப்பதும், அவர்களுக்கு ஏதோ சேவை செய்து தாங்கள் பெரிய மனசு கொண்டவர்கள் என்று காட்டுவதும் தான் இவர்கள் செய்யும் சேவை.
ஒரு படத்துக்கு நாற்பது கோடி சம்பளம் வாங்கும் ஒருவர் தன்னுடன் நடித்தவருக்கும் தகுதியான அல்லது சரியான விகிதத்தில் சம்பளம் கிடைக்கப் பாடுபட வேண்டாமா? இதைச் செய்ய முடியாதவர்கள் சமூகத்துக்குச் சேவை செய்வதாகவும், சாமியார் போல வாழ்வதாகவும் நடிப்பது எவ்வளவு நகைப்புக்குரியது. உலகத்திலேயே பெரிய ஜோக் நடிகர்கள் கருப்புப்பணம் பற்றிப் பேசுவது. அதிலேயே மிதப்பவர்கள் அவர்கள்.
நீங்கள் இப்படிக் கோடிக் கோடியாக கொள்ளையடித்தால், அதை இன்னொருவன் கொள்ளையடிக்கக் கூடாது என்பது கொள்ளைக்காரர்களின் அறம். அதை அவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதைக் கேட்டுவிட்டு நாமும் சும்மா இருப்போம்.
சில நேரங்களில் பரம்பரையைப் பற்றிப் பேச வேண்டியதாகி விடுகிறது. நாம் தரித்திரராக இருக்கும்போதோ, ஏதாவது குற்றம் செய்து மாட்டிக்கொண்டு விட்டாலோ பரம்பரை நமக்குக் கைகொடுக்கும்.

உதாரணமாக நாம் தேர்தலில் தோல்வியுற்று, ஈ காக்காய் கூட நமது வீட்டை எட்டிப் பார்க்கவில்லை என்றால் அந்த நேரம் நிலமை தெரியாமல் நம்மிடம் மாட்டிக் கொண்டுவிடும் ‘பேக்கு’களிடம் கதைவிட பரம்பரைக் கதைகள் உதவும். பத்துரூபாய் பிக் பாக்கெட் அடித்து போலிஸிடம் மாட்டி, அவர்கள் கம்பை எடுத்து விளாச ஆரம்பிக்கும் போது என் அப்பா அந்தக் காலத்து சபாநாயகராக்கும், இப்போதிருக்கும் மந்திரிக்கு தம்பி மகனுடைய மாமியாருடைய பாட்டியின் சகோதரனின் பேத்திக்கு மருமகனாக்கும் என்று சொன்னால், அடி கொஞ்சம் லேசாக விழ வாய்ப்பு இருக்கிறது. வாய்ப்புத்தான்.

எட்டாங்கிளாசின் நம் பையன் பெயிலாகி விட்டால் எப்படிச் சமாளிப்பது? ஐயா எங்கள் தாத்தா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக வேண்டியவர். கொடுக்க வேண்டிய முப்பது லட்சத்தில் இரண்டு குறைந்ததாலும், முதல்வர் மகனுக்கு வேட்டியைத் தூக்கிப் பிடிக்க நின்று கொண்டிருந்த போது, இன்னொரு ஆளின் மனைவி முதல்வரின் மனைவியின் சேலைக்குப் பார்டர் தைத்துக் கொடுத்ததால் அவர் சிபாரிஸில் எங்கள் தாத்தாவின் வாய்ப்பு தட்டிப் போய்விட்டதென்றும் ஏதோ கிரகம் சரியில்லை அதனால் என் பையன் எட்டாங் கிளாஸே பாஸ் பண்ண முடியவில்லை என்றும் எல்லோருக்கும் கேட்க முனகுவது எளிது. அல்லது பக்கத்துவீட்டுக்காரி கண்போட்டு விட்டாள், என் சகலை செய்வினை வைத்துவிட்டான் என்று சொல்ல்லாம்.

வைக்கம் முகம்மது பஷீர் சொன்னதுபோல் “எங்கள் தாத்தாவுக்கு ஆனை இருந்தது” அல்லது டினொசார் இருந்தது என்று கதை சொல்லலாம். நம்ம நாட்டில் மேல்ஜாதி கீழ்ஜாதி இருப்பதால், நாங்கள் பெரிய முனிவரின், பிரம்ம ரிஷியின் வழித் தோன்றல்கள் என்றும், ரகுவம்சம், சந்திர வம்சம், சூரிய வம்சம் என்று பேர் வைத்துக் கொள்ளலாம். யாராவது கோத்திரம் கேட்கும் போது ஆகப் பெரியதாக எல்லோரும் கருதும் ஜாதியை கோத்திரத்தைச் சொல்லிவிட்டு கூட எங்கள் குலதெய்வம் திருப்பதி, மதுரை என்று சேர்த்துச் சொல்லிவிடலாம்.

பாழாப்போன பணம் வந்து எல்லாத்தையும் மாற்றிப் போட்டுவிட்டது. மேல்ஜாதிக்காரன் செருப்புக்கடை வைத்திருக்கிறான். கீழ்ஜாதிக்காரன் கோவில் கட்டி அதில் சம்பளம் கொடுத்து மேல்ஜாதிக்காரனை வேலைக்கு வைத்திருக்கிறான். பரம்பரை பற்றி யாராவது சொன்னால் கொஞ்சநேரம் கேட்டுவிட்டு “இந்தப் பய எப்பவும் இதே கதைதான் விடுகிறான்.அவன் கொடுக்கிற பிசினஸ், பணம் இரண்டுக்காகவும் கேட்க வேண்டியிருக்கிறது என்று அவன் போனபிறகு பக்கத்தில் இருப்பவரிடம் முழங்கலாம்.

ராஜபரம்பரை என்று ஒரு ரகம் உண்டு. இந்த ஊருக்கே ராஜாவாக இருந்தோம். இப்போது தெருவுக்கு வந்தாச்சு எனலாம். அல்லது ராஜ பரம்பரையாக வந்த சொத்தை அனுபவித்துக் கொண்டு மற்ற எல்லா விஷயத்திலும் இந்தக் காலத்து வழக்கங்களைக் கடைப்பிடித்தாலும் என்னை ராஜா என்றுதான் மற்றவர்கள் அழைக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்களும் உண்டு. ஏதோ காசு கிடைக்குதே என்று வாய் நிறைய “ராஜா” என்று கூப்பிட்டுவிட்டு அவர்களின் பிச்சைக்காரத்தனத்தை மனசுக்குள் திட்டுபவர்களும் உண்டு.

எல்லாம் சரித்திரம் பண்ணும் வேலை. சரித்திரம் என்ற ஒன்றே இல்லை என்றால் இப்படி பரம்பரை பிரச்சனை வருமா? அதனால்தானோ என்னவோ சீனாவில் கடைசி சக்கரவர்த்தியை விவசாயப்பண்ணைக்கு அனுப்பி வேலை செய்யச்சொன்னார் மாவோ. ஆனாலும் என்ன பரம்பரை போச்சா. இத்தாலிய டிரெக்டர் ஒருவர் அதைப் பற்றிப் படம் எடுத்து ராஜ பரம்பரை ஆளை என்ன பாடு படுத்துகிறார்கள் சீனாவில் என்று காட்டினார். கடைசி சக்கரவர்த்தியின் துயரம் தெரிந்த டைரக்டருக்கு, அவர்கீழ் அடிமையாக இருந்த லட்சக்கணக்கானவர்களில் வலி தெரியாது பாவம்.

இதுமாதிரி பெரிய பெரிய பரம்பரைகள் போக, சின்னச் சின்னக் குடும்பங்களிலும் பரம்பரைப் பேச்சு பெருமையாகவோ அல்லது மற்றவர்களைச் சிறுமைப்படுத்தவோ எழும். “அவனைப் பத்தித் தெரியாதா கஞ்சிக்கு லாட்டரி அடிச்ச பய. அவங்க அப்ப தினமும் நம்ம தாத்தா கால்ல விழுந்து எந்திருப்பவந்தான”. அப்புறம் அவமட்டும் எப்படி? அவ பெரிய சிங்காரியாச்சே. சிலுப்பிக்கிட்டுத் திரிஞ்சா. இப்பம்பாரு பெரிய பங்களா அந்த ----அவர் வைச்சிருந்தார்ல அவளை” என்று யாரையாவது காட்டுவார்கள். அவளுடைய மகன் கலெக்டராகிவிட்டான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கும்.

இந்தப் பேச்சினால் ஒரு டீக்குடிக்க வழியிருக்குமா என்றால் இருக்காது. அதுதான் பரம்பரைப் பெருமை. பாரம்பரியைத்தை காக்க வேண்டியது நம் கடமை. சிலரது நிகழ்கால துயரங்களைத்/ பெருமைச் சிதைவுகளைத் தாண்டிவர உதவும்.

Wednesday, January 06, 2010

இசைக்கூடம்

அந்த இசைக்கலைஞன் தெருவில் நின்று தன் கொட்டாங்கச்சி வயலின் வாசித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தால் பலநாட்கள் பட்டினி கிடந்தவன் போலிருந்தான். எண்ணை தேய்த்துப் பலநாட்கள் ஆகியிருக்க வேண்டும். நீண்ட தலைமுடி மிகமிக அழுக்காக இருந்தது. குளித்திருக்க வாய்ப்பே இல்லை. காலையில் அலுவலகம் செல்லும் போதுதான் பார்த்தேன். யாரோ பிச்சைக்காரன் போல் தெரிந்தான். வயலின் எனக்குப் பிடித்த ‘கொடியசைந்ததும் காற்று வந்ததா? என்று இழைந்து கேட்டுக் கொண்டிருந்தது. சினிமாப் பாடல்கள் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தவன் கொஞ்ச காலமாக கர்னாடக இசைப் பாடல்களை வாத்திய இசைகளைக் கேட்கத் தொடங்கியிருந்தேன். குறிப்பாக கர்னாடக சங்கீதத்தில் எதை ரசித்தேன் என்று சொல்லத் தெரியவில்லை. ஒருவேளை இப்போது வரும் சினிமாப் பாடல்களின் வரிகளும் எப்போதும் குத்தாட்டம் போடும் இசையும் தாளமும் காரணமாக இருக்கலாம். குத்தாட்டம் போடும் வயது தாண்டிப் பலகாலமாகிறது. அன்று முழுவதும் அந்த தெருவில் நின்ற இசைக்கலைஞன் இசைத்த பாடல்கள் மனதில் ரீங்கார மிட்டுக் கொண்டிருந்தன. அவ்வப்போது தோன்றியது அவன் எந்த வித்வானிடம் படித்திருக்கக் கூடும். அவன் கைகளில் பத்துப் பதினைந்து வயலின்கள் வைத்திருந்தான். செய்து விற்பவனாக இருக்கக்கூடும். இவனே செய்கிறானா? இப்படிப் பட்ட இசையை வாசிப்பவன் கொட்டாங்கச்சியின் நாரைப் பிடிங்கிக் கொண்டிருப்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை. இது எனது மத்திய வர்க்கப் பிரச்சனையாக இருக்கக் கூடும் என்றாலும், கைவினைத் தொழில் செய்பவனுக்கு இசைபோன்ற மனதில் கணக்கிட்டு ரசித்து வாசிக்கும் திறன் இருக்காது என்று அதிகபட்ச உறுதியாக நினைத்தேன். அப்ஸ்ட்ராக்ட்(abstract) கலை சிந்திப்பவர்- களுக்கே கைகூடும். சரி மீண்டும் தெருக்கலைஞனிடமே வருகிறேன்.
சாயந்தரம் அலுவலகம் விட்டு வரும்போது என் வீட்டுக்கு எதிரிலிருந்த தேநீர்க்கடையின் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். கைகளிலிருந்த வயலின்கள் குறைந்தது போல் தெரியவில்லை. ஆனால் நடு நடுவில் யாரோ அந்தக் கொட்டாங்கச்சி வயலினை இசைக்க முயன்று கொண்டிருந்தார்கள். கம்பியை அறுத்து எடுப்பதுபோல் கேட்ட ஒலி அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. முயற்சித்தவன் என்னைப் போல் இசைமேதையாக இருக்க வேண்டும். என் மனைவி கொடுத்த தேநீர்க் குவளையுடன் வராண்டாவில் அமர்ந்த போதுதான் கவனித்தேன். எதிர்ப்புறம் மூன்றாவது வீட்டிலிருந்த பத்து வயதுச் சிறுவன் கையில் ஒரு கொட்டாங்கச்சி வயலின் இருந்தது.

என்னிடமிருந்த கணினியில் ஒரு இணைய தளத்தில் சென்று வீணை இசையைக் கேட்கலாம் என்று சிட்டிபாபுவின் இசையைக் கேட்க ஆரம்பித்தேன். தெளிவான இசை மனதுக்கு இதமாக இருந்தது. இரவின் மெல்லிய குளிரில் இசை ஜிவ்வென்று பதமான வெப்பம் தருவதாகவும் அதே நேரத்தில் ரம்மியமாகவும் இருந்தது. அப்படியே தூங்கிப் போய்விட்டேன்.
அடுத்தநாள் லீவு எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அலுவலகத்தில் எழப்போகிற டென்ஷன் ஒருகாரணம். மேலதிகாரி என்னைத் திட்டப் போகிறார் என்பது நிச்சயமாகிவிட்டது. தெரிந்து கொண்டே ஏன் நரகத்தில் இறங்கவேண்டும் என்று தோன்றியது. ஆனாலும், போகாமல் வீட்டில் இருந்துகொண்டே ஏற்படும் டென்ஷனைவிட அங்கு போனால் நலம் என்று அறிவு உரைத்தது. எம் தோழன் ஒருவனின் அறையில் எழுதி வைக்கப் பட்டிருந்த வாசகம் “பிரச்சனைகள் நம்மிடம் வரும்போதே பாதியில் சென்று அவற்றைச் சந்திக்காதே. அவை முழு தூரத்தையும் கடந்து வர விடு. அவை உன்னிடம் வரும் போது முற்றிலும் மாறிவிட்டிருக்கும்”. எப்படியோ அன்று சீக்கிரம் அலுவலகம் சென்றுவிட்டேன்.
அறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக ஜன்னல் கதவுகளை வழக்கம் போலவே திறந்தேன். அங்கிருந்து ‘கொடியசைந்ததும்’ என்று கொட்டாங்கச்சி வயலின்காரன் இசைத்துக் கொண்டிருந்தான். எட்டிப் பார்த்தபோது எங்கள் அலுவலகத்தின் உதவியாளர்கள் சிலர் அவன் முன் நின்று புகை பிடித்துக் கொண்டும், வெற்றிலை போட்டுக் கொண்டும் இருந்தனர். கேட்டுக்கொண்டே நின்று விட்டேன். மனதுக்கு இதமாக இருந்தது.
இன்னும் சிலவருடங்கள் கடந்தன. அதற்குள் கர்னாடக இசையை நன்றாக அனுபவித்து மயங்கிக் கேட்கும் பக்குவம் வந்துவிட்டது. ஆனால் ராகம் தாளம் என்று குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. கேட்டால் சுகமாக இருப்பதை விட்டு அதை ஏன் உயிரியல் மாணவன் போல் அறுத்துப் பார்க்க வேண்டும். சுகமாம இருப்பதே சுகம். கேட்டுக் கேட்டு நான் சில நெளிவு சுளிவுகளைத் தெரிந்து வைத்திருந்தேன். கற்றுக் கொண்டேன் என்று சொல்ல முடியாது. ரொம்ப ஒன்றும் பெரிதாகத் தெரியாத ரசிகன். அவன் ஒரு இசையரங்கின் வாசலிலிருந்து தள்ளி நின்று ஏதோ வாசித்துக் கொண்டிருந்தான். அருகே ஒன்றிரண்டு பரட்டைத்தலைப் பையன்களும், கொஞ்சம் வயது முதிர்ந்தவர்கள் இருவரும் பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். உள்ளே பெரிய வித்வானுடைய கச்சேரி கேட்கத்தான் நானும் என் நண்பரும் நுழைந்து கொண்டிருந்தோம். தனக்குத் தெரிந்த்தை எல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்து அவர் என்னை எப்படியாவது தன்னைப் போல் வல்லுனராக்கிவிட வேண்டும் என்று அந்நாட்களில் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். ஏர்-கண்டிஷன் பொறுத்தப்பட்ட ஹாலில் எல்லா இருக்கைகளும் நிரம்பி வழிந்தன. அருகிலிருந்த என் நண்பர் கச்சேரியின் நுணுக்கங்களை அவ்வப்போது விளக்கிக் கொண்டிருந்தார். சரியாக எதுவும் புரியாமல். தலை ஆட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் வயலின் இசை மனதை மயக்குவதாக இருந்தது. பக்க வாத்தியம் மாலை, பாராட்டு, என்று முடித்து வரும் போது இரவு பத்தாகிவிட்டது. நண்பர் காரில் விட்டு விடுகிறேன் என்றார். நானும் ஏறிக் கொண்டேன்.
டிராபிக் சிக்னலில் நிற்கும் போது கொட்டாங்கச்சி வயலின் இசை கேட்டது. பலமுறை கேட்டுப் பழக்கமாகி விட்டது. கார் அங்குநின்ற ஒரு நிமிடத்தில் இனிமையாக ஒலித்தது. எங்கோ கேடமாதிரி இருக்கிறது என்றேன். அருகில் இருந்த நண்பர்தான் இசையரங்கிலும் இதே ராகம் இசைக்கப் பட்டது பிரமாதமாக இசைக்கப்பட்ட்து என்றார். இவன் இசை எப்படி என்றேன். “நன்றாகத்தான் வாசிக்கிறான்” ஒப்புக்குச் சொல்வது போலிருந்தது. ஆத்மார்த்தமாக இல்லை. அவனுக்கு இசையரங்கில் இசைக்க அனுமதி கிடைக்குமா? என்று நண்பரிடம் கேட்டேன். “இல்லை, கிடைக்காது. அதற்கு என்னென்னமோ தகுதிகள் வைத்திருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டுத் திரும்பி ரோட்டைப் பார்க்க ஆரம்பித்தார். பிச்சைக்காரனாக இருப்பது ஒரு தகுதி அல்ல என்பது புரிந்தது. அவருக்கு இசையை ரசிக்க சாய்ந்து கொள்ளும் நாற்காலியும் ஏர்-கண்டிஷனரும் தேவை. டிக்கெட்டிற்குச் செலவழிக்கக் காசும் தான். இசைதெரிந்தவராக இருப்பதும் காரணமாக இருக்க வேண்டும்.