Thursday, August 27, 2009

Missing Link


One fine morning, Natesan found his daughter was not sleeping in the place normally she sleeps. Has she changed places? He was wondered and searched all over the place. The place was small and there was no need for a search. She was not there. Has she got up early? And if so why and where she has gone? He waited in the faint hope that she might have gone to market or her friend’s house or Temple. Hours passed and there was no news about her. He started frantically searching for her. His neighbour’s maid gave a hint that Natesan’s cook was seen with her often. Natesan was furious. He could not go to police or cannot tell others to search for her. Now he recalled the occasions he had seen both of them talking or smiling together. They would stop on his arrival on the scene. Daughter of such a high caste Brahmin eloping with the third rate crook of a fellow, his cook. What will happen to his pride and place in the society? Everything has gone to the winds. He vowed not to see her face again for the rest of his life.
Natesan had a small sweet shop in this big village. He earned enough to run his family. But could not save much. His wife died long ago. He thought that nobody knew about his affair with his next door neighbour. His daughter might be aware of his affairs. Like doing his morning pooja reciting so many pious verses, he started another pooja of cursing his daughter with vengeance. There were many foul words in Tamil and some he invented. There was no time fixed for this. Whenever, someone took her name he had to curse her. That became the routine. Most of the neighbours knew about his affair. His voice would be louder if he could guess the person he is talking to is aware of the affair. Just to hide his guilt. After three months they came back. They had spent all the money they had. They looked very thin and malnourished. He threw them out. After all it is the question of his pride and place in the society. Now he went to the police and filed a case of kidnapping and forceful confinement.
Lawyer Muthu became a judge only three months ago after a long chase of his dreams and spending a lot of time, if not, money, for the powers that be. For him it was his first case of love. He never failed in his love or duty. He asked Valli and Karuppasamy whether they are willing to marry. He conducted their marriage in Court hall.
After thirty years he had become a Judge in a higher court. His own daughter wanted to marry someone from a different region, language and community, He was furious and threw his daughter out of his house. His daughter married in front of a marriage registrar. He refused to see his daughter ever.
The funny thing is that the women who married in front of the Judge thirty years ago or the Judge himself do not know these incidents that happened in the gap of thirty years.. Life is too long and memories too short. Faith in freedom of choice. Is it a principle to be followed in life or a principle to be enforced only if it is part of duty?

Monday, August 24, 2009

வன்முறையும், உண்முறையும்

வன்முறை என்ற கருதுகோள் மிகவும் சிக்கலானது. விலங்குகள் விலங்குகளை உண்பதற்கும் மனிதன் விலங்குகளை உண்பதற்கும் வேறுபாடு உண்டா என்பதைக் கூட நம்மால் தீர்மானிக்க இயலாது. உலகிலிருக்கும் தாவரங்கள், உயிர்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பயோஸ்பியர்(Biosphere) பல உயிர்களாகவும், தாவரங்களாகவும் வடிவெடுத்துள்ளது. அடிப்படை அலகான செல்’தான் அனைத்தின் கட்டுமானப் பொருள். அனைத்து உயிர்களும் (இதில் தாவரங்களும் வைரஸ்களும் அடக்கம்). இயற்கை என்னும் (உயிரற்ற) கைவினைஞன் எண்ணிலடங்காத செல்களாலான பயொஸ்பியரை, கலைத்துக் கலைத்துப் போட்டும் புதிய பொருள்களைச் புதிய உயிர்களைச் செய்கிறான் என்று புரிந்து கொள்வதற்காகச் சொல்லிக் கொள்ளலாம். பிறக்கும் குழந்தை புதியதாகத் தோன்றினாலும், அது எதிலிருந்து தோன்றியதோ அது ஏற்கனவே இருந்த பொருள்களிலிருந்து ஆனதே ஆகும். ஆகவே உயிர்களின் சாரம் (உயிரியல் ரீதியில்) ஒன்றுதான்.
இப்படியிருக்கும் உயிர்வகைகளில் ஒன்று மற்றொன்றை உட்கொண்டாலும் அடிப்படையான செல்லின் தளத்தில் வன்முறை நிகழ்வதில்லை. நம் உயிர்களை செல்களின் காலனி(colony) என்று கொண்டால் ஒரு உயிரின் பகுதியாக இருந்த செல்கள் இன்னொரு உயிரின் பகுதியாக மாறுவது தான் நிகழ்கிறது. உதாரணமாக கோழியின் உடற்பகுதியாக இருக்கும் செல்கள் மனிதன் கோழியை உண்ணும் பொழுது, மனிதனின் உடற்பகுதி செல்களாக மாறிவிடுகின்றன. பூமியின் அளவில் நடக்கும் இந்த மாற்றத்தால் பயோஸ்பியரில் எந்த மாற்றமும் நடக்குமா என்பது கேள்வி. இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இப்படியொரு நிலையில் வன்முறை என்பது உண்பதற்காக செய்யப்பட்டால் அதை வன்முறை என்றழைப்பதைவிட கொள்முறை என்றழைபதே பொருத்தமானது. சின்ன மீனின் செல்களை பெரிய மீன் (உட்)கொள்ளுகிறது. மிருகங்கள் பசியில் தன் இனத்தையே உண்டுகொள்ளும் முறையில் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். இதைத்தான் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற பழமொழியும் சுட்டுவதாக இருக்கலாம். உண்பதற்காக கொன்ற பொருளை, தின்னாமல் விட்டால் தான் பாவம் என்ற தொனியும் இந்தப் பழமொழியில் இருக்கிறது.
வன்முறையின் இன்னொரு வடிவம் உண்டு. வைக்கோல் போரை நாய் காத்தது போல என்ற பழமொழியின் வகை. கொல்வதற்காகவே கொல்வது. இதில் தான் மனிதன் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறான். தானும் கொள்ளாமல், அடுத்தவரையும் கொள்ளவிடாமல் வீணாக மனிதர்களைச் சாகடிக்கிறான். பசியில்லை எனில் மிருகங்கள் மற்ற மிருகங்கள் கண்ணெதிரே இருந்தாலும் கொல்வதில்லை. மனிதனின் மூளையில் தான் பசியிருக்கிறது. தான் மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்ற பசி. பூமியின் வளங்கள் தனக்கு மட்டும் வேண்டும் என்ற பசி. இப்படி நிகழும் வன்முறையில், மரணத்தில் நமது(பயொஸ்பியரின்) அடிப்படை அலகான செல்கள் வீணாகின்றன. இதுதான் உண்மையான வன்முறை.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தின் உணவாகும் போது, செல்கள் இடம் மாறுகின்றன. அதாவது ஒரு உடலைவிட்டு இன்னொரு உடலுக்கு. அப்படி ஆகாத வன்முறையும் மரணமும் வீணாக விரையமாவதால் அதையே உண்மையான யாருக்கும் பயனிலாத வன்முறை என்று மறுக்கலாம்.
எல்லாரும் கறி உண்பவர்களாக ஆனாலும் சிக்கல். யாருமே கறி உண்பவர்களாக இல்லாவிட்டாலும் சிக்கல். ஏனெனில், எல்லோரும் உண்ணும் அளவுக்கு உலகில் மிருகங்கள் கிடையாது. எல்லோரும் தாவர வகை உணவு உண்டாலும், அவர்களுக்கு வேண்டிய அளவு உணவு கிடைக்காது. எனவே, இருக்கிற வகை உணவுகளைப் பகிர்ந்து கொள்வதே சரி. அதற்காக நாம் ஏற்றுக் கொள்கிற வேஷந்தான், புலால் உண்பவன், புலால் உண்ணாதவன் என்ற வேறுபாடு. எப்படியோ மனிதன் வாழ உணவு வேண்டும். அதில் வேற்றுமை காட்டி,ச் சச்சரவு கொள்வது புரிந்து கொள்ள முடியாதது. நமக்கு இதில் தேர்ந்தெடுக்கும் உரிமை மெத்த இருப்பதாகத் தெரிந்தாலும், உண்மையில் பூமியில் உள்ளவர்கள் அனைவருக்கும் கறி உண்ணலாமா அல்லது வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு,மிகக் குறுகலானதே.

Sunday, August 16, 2009

கமலஹாசன் என்னும் நடிகர்.

கமலஹாசனுக்கு விழா எடுக்கிறார்களாம். ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டதாம். அதனால் என்ன? அதனாலேயே அது பெருமை கொண்டதாகி விடுமா?. அவர் ஐம்பதாண்டுகளின் தமிழ் சினிமாவை எந்த அளவு உயர்த்தினார் என்பதே கேள்வி.
தமிழ்க்கலாச்சாரத்தின் வழக்கமான மிகை தொடர்கிறது. சினிமாவில் கொஞ்சம் பிரபலமாகிவிட்டால் போதும். காக்கையை, குயிலென்றும், நரியைப் பரியென்றும் கூக்குரலிட்டு தொழுகையைத் தொடங்கிவிடும். வாய்ப்புக்கிடைத்தால் உட்னே பரிசுகளை வழங்கி தன்னையும், பரிசு வழங்குவோரையும் கௌரவித்துக் கொள்ளும். ஞானியென்றும் மேதையென்றும் சிலரைக்குறித்துக் கொள்ளும். அதுவும் அதற்கான் செலவுகளை விளம்பரதாரர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு.
முதலிலேயே ஒன்றை மிக மிக தெளிவாகச் சொல்லிவிட விரும்புகிறேன். எனது குரல் கமலஹாசன் என்ற தனி மனிதனின் பயணம் பற்றியதல்ல. தமிழ் சினிமாவுக்கு அவர் கொடுத்தது என்ன என்பதை மட்டுமே பற்றியது.
ஐம்பது ஆண்டுகளாக சாதனை புரிந்து வருவதாய், பஜனைக்கூட்டங்கள் கூக்குரலிடுவதை முதலில் பார்க்கிறேன். தமிழ் சினிமாவிம் வரலாற்றில் ஒரு திரைப்படம் கூட, மிக சிறப்பானதாக, உலக அளவில் சிறப்பாக பேசப்படும் அளவில், இல்லை என்பது என் கருத்து. இந்தக் கருத்தை எதிர்க்க உங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு உரிமை அதற்கு மாற்றான கருத்தைச் சொல்வதற்கு எனக்கும் உண்டு. இந்த லட்சணத்தில் ஐம்பது ஆண்டுகள் சினிமா வட்டாரத்தில் கழித்துவிட்டார் என்பதே ஒரு சாதனையாவது மிகவும் பின் தங்கிய நமது சினிமா மற்றும் கலாச்சார வெளியைத்தான் சுட்டுகிறது.
அவருக்கு திரைப்படத்துறை பற்றிய ஞானம் உண்டு என்பது அவரை அறிந்த சினிமாக்காரர்களும், மற்றவர்களும் சொல்லுகிறார்கள். இது பத்திரிக்கை, ஊடக வெளிகளில் அடிக்கடி வெளிப்படுகிறது. என்னைப் போல் அவரை தனிப்பட்ட முறையில் அறியாதவர்களுக்கு அவரது திரைப் படங்களே அவரைப் பற்றிய முடிவுகளுக்கான அடிப்படை.. அப்படிப் பார்த்தால், விளம்பரப்படுத்தப் படுகிறபடி மாபெரும் சாதனைகள் எதையும் அவர் செய்யவில்லை என்றே எனக்குப் படுகிறது. அவரை நேசிப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். தனிப்பட்ட வாழ்வில் அவர் அறிஞராகவோ, கலைஞானியாகவோ இருக்கலாம். அது அவர் நடித்த அல்லது இயக்கிய படங்களில் முழுதாக வெளிப்படவில்லை. முழுதாக என்பதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். அங்கங்கே சில படங்களில், சில இடங்களில் துண்டு துண்டாக வெளிப்படும் நல்ல காட்சிகளும், வசனங்களும், உத்திகளும் பிய்த்துப் போடப்பட்ட ரொட்டித்துண்டுகளைப் போல தென்படும். நல்ல திரைப்படத்துக்கான அனைத்தும் இணைந்து முழுத்திருப்தி தரும் படைப்பாக எதுவும் இல்லை. அவர் தரம் தாழ்ந்த தமிழ்ச்சினிமா உலகிற்கு நாயகனாக இருக்கலாம். உலக நாயகனாக ஒருபோதும் இல்லை.(உலக சினிமா நாயகன் இல்லையாம், உலக நாயகன் – அது அவரே அனைத்துக்கும் நாயகனோ?),
மசாலப் படங்கள், மசாலாப்படங்களிலிருந்து வேறுபட முயன்று நிற்கும் படங்கள் என்று தான் அவருடைய திரைப்படங்களை பிரிக்கலாம்.
நிறைவாக, உலகத்தரத்தில் ஒரு திரைப்படத்தைக் கூட தராத தமிழ் திரைப்பட உலகம், ஒன்று சேர்ந்து, பணம் வசூல் செய்து, மேலோட்டமாக ஒரு விழாவைக் கொண்டாடி ரசிகர்களிடமிருந்து பணத்தைக் கறக்கப் போகும் விழாவாகத்தானிருக்கும் அது. வருவோரும் போவோரும், அவர் புகழ்பாடி, அவர் தாள் பணிந்து ஏத்தி, வியாபார ரீதியில் விழாவை வெற்றிகரமானதாக்கி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மனிதனின் வெற்றி என்பது வியாபாரமாவது மட்டுமல்ல. அது வியாபாரிகளின் வெற்றி. சினிமாக்காரர்களின் வெற்றியல்ல.
இனிமேலாவது அவர் உலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா எடுக்கவேண்டும். அது குறும் படமாகக் கூட இருக்கலாம்.

Wednesday, August 12, 2009

நாறிக்கிடக்கும் தமிழ்நாடு

நாறிக்கிடக்கும் தமிழ்நாடு
கூவம் நதியின் குமட்டும்பீ நாற்றத்தில் எத்தனையொ ஆண்டுகளாய் வாழ்ந்து வரும் தானைத் தலைவர்களின் கூட்டத்தில் கொஞ்சநாள் முன் தான் சேர்ந்தேன். மொகஞ்சோதாராவிலேயே கழிவுநீர் சாக்கடைகள் கட்டிய திராவிட இனம் அத/ற்கப்புறம் இன்னும் சாக்கடையைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. பரியை நரியாக்கி நரியைப் பரியாக்கியவர் பரம்பரையில் நதியைப் சாக்கடையாக்கிய திருவிளையாடல் நடத்தியவர்கள் தமிழர் தலைவர்கள். இதைப்பற்றி எதாவது தலைவரோ தொண்டரோ மூச்சு விடுவது கூடக் கிடையாது. பன்றிக் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று விளம்பரப்படம் எடுத்துப் போட நேரமுண்டு.
ரேஷன் கார்டு வாங்க அப்ளிகேஷன் கொடுத்ததிலிருந்து ஒருவருடம் வரை காத்திருக்க வைப்பதுதான் அரசு அதன் இணைய தளத்தில் கொடுத்திருக்கும் வாக்குறுதி. ஒரு குடிமகன் நான் இந்த முகவரியில் குடியிருக்கிறேன் என்று விண்ணப்பித்தால் அதை வந்து பார்த்தோ பார்க்காமலோ சரியென்று சொல்லி ரேஷன் கார்டு கொடுக்க ஏன் இத்தனை காலம் ஆகவேண்டும்? ஒரே நாளில் முகவரியை சரிபார்த்து தொலைபேசி இணைப்புக் கொடுக்கும் தொலைபேசிக் கம்பெனிகள் தமிழ்நாட்டில் உண்டு. அது போன்று ரேஷன் கார்டு கொடுக்க முடியுமே. ஆனால் கொடுக்க முடியாது என்கிறது தமிழக அரசின் இணையதளம். ஆனால் ஒரே மாதத்தில் பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை தொடங்கிவிடலாம். பாவம் அரசுக்கு எத்தனையோ வேலைகள். அத்தனை அரசு ஊழியர் சங்கங்களையும் பிடித்திருப்பது தி.மு.க. அல்லது இடதுசாரித் தொழிற்சங்கங்கள். ஒரு அலுவலகத்திலாவது கையூட்டின்றி எந்த வேலையும் நடவாதென்பது எல்லோரும் அறிந்திருக்கின்றனர்.
சினிமாக்காரர்களுக்கு எல்லா வசதியும் செய்துதர எப்போதும் தயாராக இருக்கும் அரசு, எப்போதும் கூட்டமாக இருக்கும் பஸ்கள், அரசு ஆஸ்பத்திரிகள், கூவம் பற்றி சிந்திப்பதே இல்லை. அரசு விழாக்களுக்கென்று கோடிக்கணக்கில் பணம் விரையமாகிறது. அதைக் கேட்பவர் கிடையாது. திருவள்ளுவருக்கு சிலைசெய்ய நேரமுண்டு. தமிழைக் கொலை செய்ய பள்ளிகளுண்டு.
கூகுளில் இருக்கும் சாட்டிலைட் மேப்பில்(Map) சென்னையைப் பார்த்தால் எதோ அங்கங்கே தண்ணீருக்கு நடுவில் இருக்கும் ஊராக இருக்கிறது. அத்தனையும் தண்ணீர் தேக்கங்களாக இருந்திருக்க வேண்டும். இப்போது அனேகமாக, விதிவிலக்கின்றி, சாக்கடைத் தேக்கங்கள்தான்.
பத்திரிக்கைகளோ, தொலைக்காட்சியோ சினிமாவோ மக்களின் பிரச்சனைகள் பற்றிப் பேசுவது கிடையாது. சினிமாக்காரி என்ன ஜட்டி போட்டிருந்தாள் என்பது தான் மக்களுக்கு விருப்பமானது. உப்புக்குச் சப்பில்லாத நடவடிக்கைகளை, பக்கம் பக்கமாக நிரப்பி, உண்மையான பிரச்சனைகளை ஒதுக்க நல்லவழி.
பெரிய பெரிய கட்டடங்கள், கொஞ்சம் பைசாப்படைத்த கூட்டம், வெளிநாட்டைப் பற்றியே கனவு காணும் இளவட்டங்கள். கல்விக்கூடங்களிலிருந்து பட்டங்களைப் பெற்றுவரும் இவர்கள் அறிவை மதிப்பதில்லை. அறிவுத்தாகமற்று கூலிக்கு மாறடிக்கும் பட்டதாரிகள். கூலிக்கு மாறடிக்க மட்டுமே கூலி கொடுக்கும் பள்ளிகள், கல்லூரிகள்.
இன்னும் வரும்…….கோபம்

Friday, August 07, 2009

ஒரு சந்தேகம்

தத்தி நடந்துவரும்
தமிழ்க்குழந்தை நானென்று
புத்தியில் படுகிறது
போதாதென்று தெரிகிறது
பித்தேறிக் கிழமாகி
பீற்றிக் கொண்டிருத்தல்
எத்தனைதான் நன்றாக
இருந்தாலும் மோசந்தான்

நிலவை பாடுவதா?
நீளுலகைப் பாடுவதா?
கலவியில் தூங்கும்
காதலரைப் பாடுவதா?
புலவனென்று காட்ட
புற்றீசல் போலப்
பொலபொல வென்று
புறப்பட்ட எழுத்தாளர்
உலகினிலே சண்டையிட்டு
ஒருகவிஞன் ஆவதா?

வே. ராஜகோபால்

உருவமற்று ஓடும் கல்

எத்தனை முறை எழுதினாலும்
கவிதை எழுத முடிவதில்லை.
எத்தனை முறை முயன்றாலும்
ஒரு நல்ல கதையும் உருவாகவில்லை
என்ன தான் செய்தாலும்
பணத்திப் பெருக்கும் வழி
பிடிபடவில்லை பிடிக்கவும் இல்லை
அறிவுரைகள் பல கிடைத்தாலும்,
தகிடுதத்தங்கள் கைவரவில்லை.
ஒழுங்காக வேலை செய்தால்,
அதுமட்டும் போதவில்லை
நல்லவனாய் இருப்போமே என்ற
ஆசைமட்டும் குறைவதில்லை
இருப்பதை வைத்து வாழ்வோமெனில்
உறவுகள் விடுவதில்லை
பலபல ஊர்கள் அனுபவங்கள்
பெற விரும்புகிறேன் ஆனால்
ஒரே இடத்தில் நிற்பதற்குக் கூட
ஓடிக் கொண்டிருக்கிறேன்
புத்தகங்கள் படிக்கின்ற ஆசை
தீரவில்லை
பூவுலகில் வலிகளுக்கு வழி தேடி
சிந்திப்பது நிற்கவில்லை
புத்திசாலி இல்லையென்று
நன்றாகத் தெரிகிறது
முட்டாளாய் இருக்கவே
மனம் விழைகிறது
குழப்பங்களின் மடியினில்
அசந்து உறங்குகிறேன்
பகலில் உலகை மாற்றும்
கனவுகளைக் காண்கிறேன்
மனிதர்கள் அனைவரையும்
நேசிக்க விரும்புகிறேன்
உன்னதக் காரியங்களில்
உழைக்க விரும்புகிறேன்
மஹாத்மாவாகத்தான் மாற வேண்டுகிறேன் மனிதனாக இருப்பதற்கே தட்டுத் தடுமாறுகிறேன்
எதுவுமிவை கூடாமல்
இருட்டில் தவிக்கின்றேன்
நான் யாரென்று நீங்கள் சொல்ல
எதிர்பார்த்திருக்கின்றேன்

Saturday, August 01, 2009

கல்விக்கூடத்தின் வன்முறை
ஒரு பெண் மாணவி பதினோராம் வகுப்பில் தகுதியான மதிப்பெண்கள் பெறவில்லை என்று மத்திய அரசின் பள்ளியிலிருந்து அவளை மாற்றச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றி விட்டார்கள். சாதாரணமாக பன்னிரண்டாம் வகுப்பில் எங்கும் குழந்தைகள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தே இது செய்யப்பட்டிருக்கிறது. கபில் சிபல் (மத்திய கல்வி அமைச்சர்) பள்ளிக் கல்விச் சீர்திருத்தம் பற்றிப் பேசும் புதுடில்லியில் அவரது அலுவலகத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் கூட இல்லாத இடத்தில் நடைபெற்றிருக்கிறது. ப்ள்ளியில் சேர்ந்து படித்த குழந்தை மேலே என்ன செய்யும் என்று சிறிது கவலைப்படாமல் செய்த கொடுஞ்செயல் இது.

இதிலிருந்து பல கேள்விகள் முறைதவறிய நடைமுறைகள், அவைகளைச் செய்யச் சிறிதும் அஞ்சாத கல்வியாளர்கள் பற்றி பார்க்கவேண்டியிருக்கிறது.
சில அடிப்படையான விஷயங்களிலிருந்து ஆரம்பிப்போம்.

1. பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகமாக வேண்டுமென்றுதான், விஞ்ஞானப் பிரிவில் குறைவான மதிப்பெண் பெற்ற அந்த மாணவியை வெளியேற்றி இருக்கவேண்டும் அந்தப்பள்ளி. குறைவான மதிப்பெண் பெறுவது அப்படியென்ன குற்றமா?

2. மனிதத்தன்மையில்லாமல் குழந்தைகளை நடத்துவதைத்தான் பள்ளிகளில் முன்னுதாரணமாக காட்டவேண்டுமா? இந்தக் கல்வியாளர்களும், நிர்வாகமாக இருக்கும் அரசும், இது மாதிரி நடந்தால் மற்றவர்கள் மீது இழைக்கப்படும் தவறுகளை எவவாறு எதிர்கொள்ளுவார்கள்? கொஞ்சம் மந்தமான பிள்ளைகளுக்கு தாங்கள் விருப்பிய பாடத்தில் ஃபெயிலாகக்கூட உரிமையில்லையா?

3. இதே வேகத்தில் போனால், இன்னும் கொஞ்ச நாளில் அறிவு, "அதுவும் பள்ளிகளும், அரசும் வரையறுக்கும் அறிவு" இல்லாதவர்கள், வாழவே தகுதியற்றவர்கள் என்ற நிலைதான் ஏற்படும். இந்த நேரத்தில் பெர்னார்ட் ஷா வின் கூற்றொன்று நினைவில் வருகிறது. "எனது கல்வி பள்ளிகளால் தடைப்பட்டது"(my education was interrupted by schooling"). ஒரு மாணவி தேரவில்லை என்றாலும், பள்ளிக்கு அவமானமென்று நினைக்கும் பள்ளி நிர்வாகங்கள் எதை முன்னுரிமைப் படுத்துகின்றன. கல்வி அல்லது மனிதம் என்ற இரண்டைக் கொடுத்தால் கல்விக்குத்தான் முன்னுரிமை. இதனால் கல்விக்கு, பள்ளிக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் இத்தகைய செயல்கள் மனிதனை கீழே தள்ளுகின்றன. கல்விதான் மனிதனை மனிதனாக்குகிறது. இங்கோ கல்வியின் பெயரால், மனிதனை, குழந்தையை, மனிதத் தன்மையை, இழிவு செய்கிறார்கள்.

இன்னும் கொஞ்ச நாட்களில், பள்ளித் தேர்வில் தேரவில்லையெனில், வாழத் தகுதியில்லை யென்று தூக்குத்தண்டனை கூடக் கொடுக்கலாம். முட்டாள்களைக் குறைத்தால் கணிசமாக ஜனத்தொகை குறையுமே.

இஞ்சினியர் ஆகவில்லையென்று காட்டுக்கு அனுப்பலாம். டாக்டர் ஆகவில்லை என்று ஒரு வேளைச் சாப்பாட்டைக் குறைக்கலாம். அறிவைக் கூட்ட, குழந்தைகளின் முயற்சியை, செயல் திறனைக்கூட்ட எத்தனையோ வழிகள்.