Thursday, June 23, 2016



நான்
உங்களைக் கொத்திவிடும் விஷப்பாம்பல்ல
வேண்டி வணங்கும் பிச்சைக்காரனும் அல்ல

எந்த ராமனிடமாவது தீயை மூட்டி
மூக்கறுபடும் சூர்ப்பநகையும் அல்ல
ராவணனாக வந்து எனக்காகப் போரிட வேண்டாம்

எந்த ராவணனாவது தூக்கிச் சென்றுவிடுவான்
என்று அஞ்ச வேண்டாம்
நான் சீதையாகவும் நீங்கள் சடாவுவாகவும் இல்லை

காட்டில் ஏதோ ஒரு சாதாரணச் செம்பருத்தி போல்
மலர்ந்து விடுகிறேன்


எந்த மாபெரும் கடலிலாவது
கலந்து மறையத் துடிக்கும் நதியல்ல

எந்த மரத்திலாவது படர்ந்துவிடத்தவிக்கும்
கொடியும் அல்ல

சொட்டுச் சொட்டாக வடிந்து
வீட்டின் முன் சிறுகுழிக்குள் மறைந்துவிடும்
கூரைத் தண்ணீர்

கரைந்து போய்விடுகிறேனே
கோடானுகோடி மணற் துகள்களுக்குள் 

பிறந்து, கரைந்து விடுகிறேன் காற்றில்

உயரக் கம்பத்தில்
ஒரு கந்தைத் துணி போலவே
இந்தச் சமூகத்தில்
பட்டோளி வீசி விட்டுப் போகிறேன்
உங்களுக்குப்
பாரம் ஆகாமலேயே

No comments:

Post a Comment