Friday, June 17, 2016

சரவணன் சந்திரன் - இரண்டு புதினங்கள்

           சரவணன் சந்திரன் என்ற எழுத்தாளரை இதுவரை எனக்குத் தெரியாது.  முதல் முதலாக பெயரைப் பார்த்ததும் ஆயிரத்தில் ஒன்று என்றே தோன்றியது.  மிகச் சமீபகாலத்தில் வந்த நாவல்கள் எதையும் படித்ததில்லை     என்பது என்னிடம் உள்ள குறை.
நவீனத்துவம் என்ற பெயரில் ஏதாவது பயமுறுத்தலாக இருக்குமோ என்றே தயங்கினேன்.  நண்பர் சுரேஷ் சுப்பிரமணியன் படிக்கச் சொன்னதால்  ஓசி  வாங்கிச் சென்றேன். அப்போதும் பயம் விடவில்லை.  படிக்க ஆரம்பித்த்தும் தொடங்கிய வேகத்தில் முடித்தும் விட்டேன். 

            வேகமான நடை. அதிவேகமான நடை. அப்போது ஒரு சந்தேகம் வந்தது. வேகத்தை முன்னிருத்தி, நாவலுக்குத் தேவையான தத்துவப்பார்வை தொலைந்து போய்விடுமோ என்று நினைத்தேன். முதல் நாவலான ‘ஐந்து முதலைகள்’ என்னுடைய எல்லாச் சந்தேகங்களுக்கும் விடையாக இருந்தது.  ராக்கெட் வேகத்தில் சென்றாலும் அதிலிருந்து பூமியை, வணிக முதலைகளை மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எந்தக் கவலையும் வருத்தமும் இல்லாமல் பணம் சேர்ப்பதையே மனிதனின் குணமாகக் கருதும் மனிதர்களின் உலகம். அதுவும் பல நாடுகளில் பயணம் செய்து வணிகம் மூலமாக எல்லையில்லாத செல்வத்தை அடையக் கனவு காணூம் மனிதர்களின் புற உலகமும் அக உலகமும் பதிவாகி இருக்கின்றன.

            ’ரோலக்ஸ் வாட்ச்’ நாவலும் ‘முதலைகளின் வேகத்திலேயே சென்றாலும் அது உள்ளூரின் வணிகப் பேயின் வரைபடமாக இருந்தது.  இரண்டு நாவல்களிலும் புதிய பாத்திரங்கள் வரிசையாக ஒவ்வொருவராக அறிமுகமாகும் புதிய முறையையும் கண்டேன்.  சிலபாத்திரங்கள் மட்டுமே நாவல் முழுவதும் வந்தன. ஐந்து முதலைகள் அந்த நாவலிலும், ரோலக்ஸ் வாட்சில்’ மூன்று நான்கு பாத்திரங்கள் தவிர மற்றவர்கள் அனைவரும், பயணத்தின் போது மாறி மாறி நம்மருகில் உட்கார்ந்து கொள்ளும் பயணிகள் போல வந்து போயினர்.  ஆனாலும் சொல்ல வந்ததை இரண்டு நாவல்களும் மிகத்தெளிவாகச் சொல்லுகின்றன.  ஆனால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அறவுரை வழங்காமல் அடங்கிய குரலில் பேசுகிற கதையின் நாயகன் நம் காலத்து வணிகன்.  அறம் என்பதற்கே இந்தக் காலத்தில் இடமில்லை என்பது போலத் தெரிந்தாலும் ரோலக்ஸ் வாட்சில் அது மறைமுகமாகவேனும் எட்டிப் பார்க்கிறது. அறம் குறித்த வெளிப்படையான மதிப்பீடுகளோ, தீர்வுகளோ இரண்டு நாவல்களிலும் இல்லை.  இன்றைய மனிதர்களை உந்தித் தள்ளும் பணம் மட்டுமே துருத்துக் கொண்டு நிற்கிற வாழ்வை இவை பதிவு செய்கின்றன.

            ரொம்ப நாள் கழித்து புதிய வகை எழுத்தைப் படித்த உணர்வு ஏற்பட்டது  தமிழில் இதுவரை கண்டிராத பதிவு இது. இப்படி வாழ்வு நமது வணிகர்களுடையது என்பதை நாமறிந்திருந்தாலும் அதைப்பேசினாலும் ஒட்டுமொத்தமான ஓர் ஓவியத்தை இங்கே காண்கிறோம்.


            எழுத்தாளர் இரண்டு நாவல்களிலும் படைத்த உலகத்தை இன்னொரு முறை படைக்க மாட்டார் என்று நம்புகிறேன். வேண்டுகிறேன்.  இன்னும் பல நாவல்களைப் படைக்க வேண்டும் என்றே வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment