Tuesday, July 22, 2014

ஞானம் என்பது.....

 

       பக்தி இயக்கத்தின் காலத்தில் (இந்தப் பெயர் கூட நாமாகப் பின்னால் இட்டுக் கொண்டதுதான்.  அடியார்களும், ஆழ்வார்களும் நடமாடிய காலத்தில் ‘பக்தி இயக்க காலம்என்ற பதம் வழக்கின் இருக்க வாய்ப்பில்லை), படிக்கத் தெரிந்த அதாவது வாசிக்க்த் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தயக்கமாக இருக்கிறது.  குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர வேறு யாரும் கல்வி பயில முடியாது என்ற நிலைமை இருந்தவரை, சிறுபான்மையினர் தான் கல்வி பயின்றிருக்க முடியும்.  அதிலும் பாடல் பாடி, இறைவனைப் பரவுவதென்பது, அதனினும் மேலான நிலையில் இருப்போர்க்கே வாய்த்திருக்கும். எனவே, நாயன்மார்களும், ஆழ்வார்களும் எந்தச் சமூகப் பிரிவுகளில் இருந்து தோன்றியிருப்பார்கள் என்பதில் சந்தேகம் எழ வாய்ப்பில்லை. 

 

       இப்படிப்பட்ட சிறுபான்மையினர் எதை ஞானம் என்று வரையறை செய்தார்கள்? அதை அடைவதற்கான வழி என்னவென்று கண்டார்கள் அல்லது விண்டார்கள்? என்பது காணவேண்டிய ஒன்று.  ஞானம் என்பது இறைவனை அறிந்து கொள்வது, அவனுடைய திருவிளையாடல்களை அறிந்து கொள்வது என்பதாகவே கொள்ளப்பட்டது.  

 

 

       விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, அறிதல் என்பது ஒரு பொருளை அவதானித்து அதன் குணங்களைச் சோதித்து அறிகிற வழியாகும்.  அப்படிச் சோதித்துச் சோதித்து அறிந்த விஷயங்களை தொகுப்பை அதன் மூலம் இயற்ற்கையைப்  பற்றிய நமது புரிதலை ‘ஞானம்என்று சொல்லலாம். ஆனால் பக்தி இலக்கியத்தைப் பொறுத்தவரை, ஞானம் என்பது இறைவனுக்கு அடிமையாவதன் மூலம் அவன் அருளால் கிடைப்பது.  ஞானம் என்பது அவனை அறிவது. அதற்கு மேல் எதுவும் இல்லை. ஆனால் விஞ்ஞானத்தின் வழியில் ஞானம் என்பதை ‘அறிவு என்ற பொருளில் கொண்டோமெனில், எந்த ஒரு பொருளை, அல்லது இயற்கை நிகழ்வைப் பற்றிய அறிவு என்று வரையறுக்கலாம். உதாரணமாக, கடலைப் பற்றி மனிதன் அறிந்து கொண்டதையெல்ல்லாம் தொகுத்தால், அது ஒரு விஞ்ஞானப் பிரிவாக ஆகிவிடும். அதைப் பற்றி அறிந்து கொள்ளும் விதம் என்பது, கடலில் சென்று அதில் உள்ளவற்றை அவதானித்து, சோதனைகள் செய்து, மறு சோதனைகள் செய்து, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு மனிதர்களால், வெவ்வேறு சூழ்நிலைகளில் சோதித்து, கடைசியில் அனைத்தையும் தொகுத்துக் கிடைப்பதை கடலைப் பற்றிய ஞானம் என்று சொல்லிக் கொள்ளலாம்.  இறைவனைப் பொறுத்தவரை, அவரிடம் கேள்வி கேட்காமல் சரணடைவதென்பதே ஞானம். 

 

       அடுத்ததாக, பக்தி இயக்க்காலத்தில் நாயன்மார்களும் பாடிப் பாடிப் பரவியதெல்லாம் இறைவனின் பெருமைகளை மட்டுமல்ல. முதலடியாக, வாழ்வின் யதார்த்தத்தில் இருந்து விலகுதல், அதாவது குடும்பம் என்ற பொறுப்பில் இருந்து விலகுவது, பெண்ணாசையில் அதீதமாக ஈடுபட்டு பின்னர் அதை வெறுத்து, சமூகத்தை வெறுத்து இறைவனிடம் செல்வது. மனித சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, இயற்கையை மீறிய ஒரு சக்தியை அதாவது தனக்குப் பிடித்தமான ஒரு தெய்வத்தை வணங்குவது, அதனிடம் தன்னை இழப்பது.  அதற்கு அடுத்த படியாக, இந்தப் பிறவி வேண்டாம், சொர்க்கம் வேண்டும், அல்லது உன் காலடியில் விழவேண்டும் என்றெல்லாம்  இறைவனிடம் கையேந்திப் பிச்சை எடுப்பது. பக்திப் பாடல்களை இந்த வரையறக்குள் அடக்கி விடலாம்.

 

       பக்திப் பாடல்களில் துலங்கும் இலக்கியத் தரம் என்பது, உணர்ச்சி வேகத்தில் எழுகிற கவித்துவ உணர்வைப் பிரதிபலிக்கலாம்.  ஆனால் இறைவனைப் பாடுவதாலேயே அது இலக்கியமாகிவிடாது.  பக்திப் பாடல்களில் உன்னதமான மனிதக் குரல்கள் ஒலிக்காமல் இல்லை.  ஆனால் அவை அதற்காகவே எழுதப்பட்டவை அல்ல.

உதாரணமாக, “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்  என்று கம்பீரமாக தொடங்கும் குரல் முதல் நான்கு அடிகளில் உச்சத்தை எட்டி, அடுத்த நான்கு வரிகளில் தன் கம்பீரத்தை இழந்து, மீண்டும் சூம்பிப்போய் விடுவதைக் கவனிக்கலாம்

 

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான    

  சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

     

.      ஆக, ஞானம் என்பது விஞ்ஞானத்தின் பொருளின் ஞானமாக இல்லை.  பக்தி இலக்கியத்தில் இலக்கியத் தரம் என்பது அவ்வப்போது வெளிப்பட்டாலும், அதற்குள் அழகியல் உள்முரண்பாடுகள் உண்டு. 

No comments:

Post a Comment