Monday, July 07, 2014

ஸ்ரீகாந்த் சரத் சந்திர சட்டோபாத்யாய்

:சமூகத்தின் மீது அக்கறை உள்ள அனைவருக்கும் சில பொதுவான சிந்தனைகள் உண்டு.  அவற்றில் ஒன்று சமூகத்தில் பெண்களின் நிலைமை.  இந்த நவீன காலத்தில் அதற்குப் பெண்ணியம் என்று பெயரிட்டுக் கொண்டாலும், நவீனகாலச் சிந்தனைகள் தொடங்கிய, ஜனநாயகச் சிந்தனைகள் மலரத் தொடங்கிய காலத்தில் இருந்தே இது குறித்த கவலைகள் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சிந்தனையாளர்கள் படைப்பாளிகளுக்கு இருந்தே வந்துள்ளன.

 

        ஒருவகையில் பார்த்தால், நாவல் என்ற வடிவம் தொடங்கும் காலத்தில் இந்தச் சிந்தனைகளை முன்வைத்த ஆங்கிலேயப் பெண் எழுத்தாளர்களின் (உதாரணமாக, Virginia wolf, Bronte sisters),  படைப்புக்களின் பெண்களின் குரல் தனித்து ஒலிக்கத் தொடங்கியது. நாவல் என்ற வடிவம் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்படும் போதும் இதன் பாதிப்பு இருந்தது. வங்காளத்தில் எழுதப்ப்பட்ட முதல் நாவலின் பெயர் கூட அதனைச் சுட்டும். (துர்கேஷ் நந்தினி - பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயா). அவரைத் தொடர்ந்து நாவல்களில் யதார்த்த உலகை சித்தரித்த்தும், அதுவும் இடைத்தட்டு, கீழ்த்தட்டு மக்களின், குறிப்பாகப் பெண்களின் நிலையைச் சித்தரித்தவர்களில் சரத் சந்திர சட்டோபாத்தியாயா மிகவும் முக்கியமானவர்.

 

        சரத் சந்திர சட்டோபாத்தியாயாவின் நாவல்களில் பெண்களின் சித்தரிப்பில் உயிர்ப்பும், சத்திய ஆவேசமும் அடிநாதமாக இருக்கும்.  ஆனால் எதுவும் ஓங்கி ஒலிக்காது. அடிநாதம் என்பது கூட நாமாகப் புரிந்து கொள்வது தான்.  ஆனால், கதையின் சித்தரிப்பில் யதார்த்தமே பரவி இருக்கும். பெண்களை இவ்வளவு கனிவோடு சித்தரித்த அவர் வாழ்ந்து இறந்தது, 1938ஆம் ஆண்டு. அவருடைய படைப்புக்களில் மிகச் சிறந்த படைப்பாக்க் கருதப்படுவது, ஸ்ரீகாந்த்.  அவருடைய மற்றக் கதைகளிலும் வங்காளத்தில் பெண்களில் நிலைமை பற்றிய சித்தரிப்புக்கள் யதார்த்தமாக இருந்த போதிலும், ஸ்ரீகாந்த் நாவலில் அது உச்சத்தை அடைந்துவிடுகிறது.  என்னுடைய வங்காளி நண்பரிடம் கேட்டேன் “சரத் சந்திர சட்டோபாத்தியாவின் வாழ்க்கை வரலாறு நூல் ஏதாவது சொல்லுங்கள்அவர் சொன்னார் ‘நீ ஸ்ரீகாந்த் படித்துவிட்டாய் அல்லவா? அதுதான் அவரது வாழ்க்கை வரலாறு”.  எனக்கு வியப்பு மிகுந்தது.  ஒன்று இப்படி ஒரு நாவலை ஒருவர் அந்தக் காலத்து இந்தியப் பண்பாட்டுச் சூழலில் எழுதியது. இரண்டாவது, அதில் எழுதப்பட்டது அவருடைய சொந்த அனுபவங்களின் பெரும்பகுதியாக இருந்தது.   

 

        சமூக மதிப்புகளைத் தூக்கி வைத்துவிட்டு ஸ்ரீகாந்த் கொண்டிருந்த உறவுகளைப் பற்றி எந்தவிதமான மதிப்புக்குறைந்த வார்த்தைகளும் இன்றி, ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்து, (அவர் கதைகளை எழுதிய காலத்தில் மிக மிக அரிது), முழுவதும் பெண்கள் மீதான அனுதாபத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

 

        நாவலின் மையப் பாத்திரமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து நேசிக்கும் ஒரு பெண்ணாக வரும் ராஜலக்ஷ்மி, பெரிய பணக்காரர்கள் வீட்டில் சங்கீதம் பாடி சம்பாதிப்பவள், சமூகத்தின் ஒழுக்க வரையறைகளை மீறி நடப்பவள்.  , அதற்கும் மேலாக அவளது நடவடிக்கைகளை வாசகன் தான் யூகிக்க வேண்டி இருக்கிறது. நாவலில் ஓரிடத்திலேனும் அவள் கொள்ளும் உறவுகள் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை.  அவளுடைய கௌரவத்தை நாவல் கேலி செய்வதும் இல்லை.  சரத் சந்திரர் அந்தப் பெண் பாத்திரத்தின் மீது கொண்ட மரியாதையும் அதில் வெளிப்படுகிறது.  அதைப் பற்றி ஸ்ரீகாந்த் உள்ளுக்குள் உணர்ந்தாலும், வருத்த்த்தை வெளிக்காட்டுவதில்லை. அதனாலெல்லாம் அவள் மீது அவன் கொண்ட அன்பைக் குறைத்து விட முடியாது.  இந்த நேசம்தான் காதல் என்ற சொல்லைப் புனிதமாக்குகிறது.  உடல் ரீதியில் அவள் அவனுக்கு அன்னியமானாலும், அவன் கடல்கடந்து பர்மா சென்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் மறக்க முடிவதில்லை.  இருவரின் நேசமும் ஒரு அமைதியான ஆற்றைப் போல கதை முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறது.  விவரிக்கப்படாத பகுதிகளில் கூட  மறைமுகமாக அந்தக் காதலின் நிழல் படிந்திருக்கிறது. ஸ்ரீகாந்த் பல பெண்களுடன் பழகுகிறான் – (பழகுதல் என்ற சொல்லின் மிகச் சரியான நல்ல பொருளில்)-.  ஒவ்வொரு பெண்ணும் சமூகத்தால் ஆண்களால் வஞ்சிக்கப்படுவதையும், அவர்கள் தங்களை எந்த அளவுக்குத் தியாகம் செய்து ஒரு ஆணின் துணையைப் பெற வேண்டியிருக்கிறது என்பதையும் அழகிய, அனுதாபமுள்ள ஓவியமாக வரைந்து காட்டுகிறது.  சரத் சந்திர்ர் காட்டும் பெண்ணியம், கூச்சலிடும் பெண்ணியம் அல்ல (கூச்சல் இடுவது தவறானது அல்ல என்ற போதும்).  மனதைத் தொட்டுவிடும் பெண்ணியம்.  தமிழ்நாட்டு எழுத்தாளரான லக்ஷ்மி போன்று ‘கண்ணீர் இழுப்பிகளை சரத் சந்திரர் எழுதவில்லை, நியாயமான ஆனால் கௌரவமான பார்வையில், பெண்களின் அந்தக் காலத்துப் பிரச்சனைகளை முன்வைக்கிறார்.  இதை மறுபடி மறுபடி சொல்ல வேண்டியிருக்கிறது. பெண்களுக்காக ‘இரங்கும்பார்வை இருந்தாலும், அது அவமானப்படுத்தும் வகையில் இருப்பதில்லை.   

No comments:

Post a Comment