Monday, July 14, 2014

 

நாம் ஏன் பிறந்தோம்?

 

        இந்தக் கேள்வியை வாழ்நாளில் ஒரு முறையேனும் தமக்குள் கேட்டுக் கொள்ளாத மனிதன் இருக்க மாட்டான்.   கடவுள் படைத்தார்.  அதனால் ஏதாவதொரு காரணம் இருக்கும் என்று ஊகிப்பவர்கள் உண்டு.  கடவுள் படைக்கவில்லை.  காரணமும் தெரியவில்லை என்று பகுத்தறிவு பேசுகிறவர்களும் உண்டு.  தற்காலிகமாக இப்படி ஒரு பதிலை அவ்வப்போது சொல்லி, நமது கேள்வி கேட்கும்மனதை அடக்கி வைத்தாலும், நாம் ஏன் பிறந்தோம் என்ற கேள்வி அடிக்கடி தலையை நீட்டித் தொந்தரவு செய்கிறது. 

       

        அலகிலா விளையாட்டுடையார்இறைவன் அவருடைய திருவிளையாடல்களில் நாமும் ஒன்று என்று எளிய விடைகளில் மனம் நிறைவடைந்து விடுவோருக்கு, இந்தப் பிரபஞ்சத்தில் அளவும் விரிவும், புரிவதில்லை. நாமிருக்கும் சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய பால்வெளி  (Milky way galaxy) யின் விட்டம் ஒரு லட்சம் (100000) ஒளி வருடங்கள். (அதாவது, ஒளியின் வேகத்தில் ஒரு லட்சம் வருடங்கள் பயணம் செய்தால் எவ்வளவு தூரம் போக முடியுமோ, அவ்வளவு தூரம்).  அருகருகில் இருக்கும் இரண்டு ‘கேலக்ஸி களுக்கு இடையில் உள்ள தூரம், சராசரியாக முப்பது லட்சம் ஒளி வருடங்கள் (ஒளியின் வேகத்தில் முப்பது லட்சம் வருடங்கள் பயணம் செய்தால் கடக்கும் தூரம்).  நினைத்தாலே வியக்க வைக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக பூமியும் அதிலே எதற்கும் புலப்படாத மனித உயிர்களும் இருக்கின்றன. 

 

        கற்பனை கூடச் செய்ய இயலாத அளவுக்கு விரிந்திருக்கும், விரிந்து கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் அழகை, அதில் கண்காணாப் புள்ளியாக, துகளாக இருக்கும் பூமியை, பூமிக்குள் ஒரு துகள் ஆக இருக்கும் மனிதன், இந்தப் பூமியும் இதில் உள்ள மற்ற உயிர்களும், தாவரங்களும் தனக்காகவே படைக்கப்பட்டிருப்பதாக நினைத்தால், அது, மனிதனின் அறியாமையின் விளைவாக, தன்னைச் சுற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் சுயமோகத்தின் விளைவாக இருக்குமே தவிர வேறெதுவும் இல்லை.  ஏதோ இறைவன் கனிகளை, மரங்களை, ஏரிகளை மலைகளை எல்லாம் மனிதன் அனுபவிப்பதற்காகத்தான் படைத்தான் என்று நாம் இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்வதற்கான காரணமாக வரித்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையை அறிய வேண்டுமெனில் நாம் புறவயமான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  அது மனிதனால் முடியுமா?  கடலுக்குள் வாழும் சிறு மீன் தனது பார்வையின் பரப்பையும் அறிவையும் வைத்துக் கொண்டு கடலை அளக்க முயல்வது போன்றதுதான் இது.  கடலுக்கும் எல்லைகள் உண்டு.  அதை மீனால் அளக்க முடியாது. கடலை விட்டு வெளியே போனால் மீனால் உயிரோடு இருக்க முடியாது.  ஆனால் சில மனிதர்களால் கற்பனையில் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை அனுமானத்தில் அளக்க முடிந்திருக்கிறது.  அவர்கள் விஞ்ஞானிகள்.  (நாம், அதாவது மனிதர்கள் எல்லோரும் விஞ்ஞானத்தின் வாதத்தைப் புரிந்து கொள்ள முடியும், அறிந்து கொள்ள முடியும். அவர்கள் ஒன்றும் அதி மனிதர்கள் அல்ல.  இதில் தான் அவர்கள் ஞானத்தை அடைந்து விட்ட்தாகப் பீற்றிக் கொள்ளும் மதவாதிகளான குருக்களை மிஞ்சி விடுகிறார்கள். ஏனேனில் மதவாதிகள் தாங்கள் ஏதோ இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்களுக்கு மட்டுமே உண்மை விளங்கும், தாங்கள் மட்டுமே அதைப் புரிந்து கொண்டவர்கள், இறைவனைத் தாங்கள் மட்டுமே கண்டவர்கள் என்று உலகத்துக்கும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், உள்ளர்த்த்த்துடன் பறைசாற்றுகிறார்கள் – அதுவும் ஆங்கிலத்தில் கொஞ்சம் பேசத் தெரிந்து விட்டால் போதும் அப்பப்பா...).  .

 

        மனிதனுக்கும் தாவரங்களுக்கும் உள்ள உறவை ஒரு உதாரணம் மூலம் அறிய முயல்வோம்.  தனது இனத்தைப் பெருக்குவதில் மனிதனுக்கும் தாவரங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.  உதாரணமாக மாமரம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்.  அது இடத்துக்கு இடம் நகர முடியாது.  தனது இனத்தைப் பெருக்க வேண்டும் என்றால், ஒரே இடத்தில் இருந்து கொண்டும் பெருக்க முடியாது.  ஒரே இடத்தில் இருந்தால் இடம், நீர் மற்ற வளர்வதற்கான வசதிகள் வேண்டிய அளவு கிடைக்காது, இட நெருக்கடி வேறு.  தனது விதைகளைப் பரப்ப வேண்டுமெனில், இடம் விட்டு இடம் நகரும் மிருகங்கள் மூலமாகத்தான் பரப்ப முடியும்.  மாமரம் அதை எவ்வாறு நிகழ்த்துகிறது? மாங்காய் விதையாகப் பக்குவப்படும் வரை அதை மிருகங்களோ பறவைகளோ உண்டால், அந்த பிஞ்சு விதையால் மரம் ஒன்றை உருவாக்க முடியாது.  அதனால், புளிப்புச் சுவையை, மனிதனாலோ வேறு மிருகங்களாலோ எளிதில் உண்ண முடியாத சுவையுடன், மென்மையின்றி இருக்கிறது.  மாங்காய், கனியாக மாறும் பருவத்தில், உண்ண எளிய பதார்த்தமாக, சுவை அதிகமாக, மென்மையாக, இருக்கிறது. அதுதான் விதை மரத்தை விட்டு இடம் பெயரச் சரியான நேரம்.  விதை புதிய இடத்தில் விழ வேண்டுமானால் மனிதன் அல்லது குரங்கு அல்லது வேறொரு மிருகம் சுவையான கனியை உண்ண வேண்டும், மீதமிருக்கும் கொட்டையை வீசி எறிய வேண்டும்.  அப்போது புதிய மாமரக் கன்று ஒன்று புதிய இட்த்தில் உருவாகும் சாத்தியக் கூறு ஏற்படுகிறது.

 

        நமக்காகத்தான் மாமரம் கனிகள் தருகிறது என்று மனிதன் எண்ணிக் கொண்டால், அது எவ்வளவு தவறான பார்வையாக இருக்கிறது.  மாமரம் தன்னைத் தக்க வைத்துப் பெருக்கிக் கொள்ள, இப்படி வழியை வைத்திருக்கிறது.  மனிதன் மாங்கனியை உண்டு வாழக் கற்றுக் கொண்டு, அதைப் பயிர் செய்யக் கற்றுக் கொண்டதனால் அதை மாமரம் வளர வசதியான சூழ்நிலை உள்ள இடத்தில் பயிரிட்டுக் கொள்கிறான்.  இயற்கையிலேயே உண்டான மரத்தை, அதை அவதானித்துப் படித்துப் பார்த்து, அதைப் பயன்படுத்தத் கற்றுக் கொண்டிருக்கிறான். அதனால், அவன் தான் மாமரத்தை உண்டாக்கியவன் போல நினைத்துக் கொள்ள முடியாது.  மனிதனுக்கும் உபயோகம் ஆகும் என்ற காரந்த்தினாலேயே மாமரத்தின் குலம் விருத்தி அடைகிறது.  அது மாமரத்துக்கும் ஏற்பட்ட லாபம்.  ஏனெனில் அதன் இனம் பெருத்து வாழ்கிறது.  இன்னொரு உதாரணம் சொல்ல்லாம்.  கோழிகளை மனிதன் சாப்பிடாவிட்டால், கோழிகள் இவ்வளவு எண்ணிக்கையில் பெருத்திருக்குமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.  தம்மை மனிதனுக்கு உண்ணத் தருவதன் மூலம், தமது எண்ணிக்கையைப் பெருக்கி, தமது இனத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது கோழியினம்.   புலிகளை யாரும் சாப்பிடுவதில்லை.  அதனால் மனிதனுக்கு நேரடியான எந்தப் பலனும் இல்லை.  அதை வீடுகளில் வளர்க்கலாம், கறி சமைத்துச் சாப்பிடலாம் என்று வழக்கம் ஏற்பட்டால்,  புலியினம் பெருக வாய்ப்பு இருக்கிறது.  மற்றப்படி காடுகள் குறைந்து, மிருகங்கள் குறைந்து வரும் இந்தக் காலத்தில் புலியினம் மட்டும் மறைகிறது என்று கவலைப் படுவதில் அர்த்தமில்லை.  பரிணாம வளர்ச்சியின் பல கால கட்டங்களில் பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான உயிரினங்கள் அழிந்திருக்கின்றன.  அவற்றையெல்லாம் காப்பாற்றி இருக்க முடியுமா? அல்லது காப்பாற்ற வேண்டுமா?

 

எதற்காகப் பிறந்தோம் என்று யோசிக்கலாமே தவிர, அதற்கு விடை என்னவோ ஒன்றுதான்.  நாம் எதற்காகவும் பிறக்க வில்லை.  இந்தப் பதில் மிகவும் சுவராஸ்யம் அற்றது.  கற்பனையின் குதிரைகளை முடக்கிப் போடுவது.  அதனாலேயே அதைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை. இது மனிதனின் ஈகோ தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம். அதாவது உலகம் பிறந்தது எனக்காக என்று நம்பிக்கையை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் மனித ஈகோ வின் தற்கொலை.    நாம் என்னவோ மாபெரும் சாதனைகளைச் செய்ய வந்திருக்கிறோம், நாம் எவ்வளவு பெரிய மனிதர், என்று எத்தனை பெரிய ஈகோவும் காற்றூதப்பட்ட பலூனில் இருந்து காற்றைப் பிடிங்கி விட்ட்து போன்று உண்மையைச் சந்திக்கும் தருணம் இது.

 

எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?என்று எதையோ பூடகமாக, மர்மமாக அவிழ்த்து விட்ட கட்டுக் கதைகளின் நடுவே, நாம் நாமாகவே இருக்கிறோம், எந்தக் கடவுளின் அல்லது மாபெரும் சக்தியின் திட்டத்தில் நாம் பிறக்க வில்லை என்று உணர்வது பெருங்கடினமான செயல்.   

        இந்தப் பிரபஞ்சத்தில், சூரியனும், பூமியும் தோன்றியது ஒரு நிகழ்வு.  அதற்கு ஒரு பொருளும் இல்லை.  அது ஒரு விபத்தாகக் கூட இருக்கலாம்.  அதை யாரும் நிகழ்த்தி இருக்கவும் முடியாது.

 

        உயிரிங்களில் நாம் எவ்வகையில் (உடற்கூகளைப் பொறுத்தவரை) உயர்ந்தவர்கள்?  நம்மை விடப் பெரிய மிருகங்கள் இருக்கின்றன. நம்மை விட அதிக தூரம் பார்க்கக் கூடிய பறவைகள், நம்மை விட அதிக தூரம் ஒலியைக் கேட்கக்கூடிய மிருகங்கள், இதுமாதிரி நம்மை விட அதிகத் திறமை மிகுந்த மிருகங்கள் ஏராளமானவை இருக்கின்றன.  அவற்றை விட நாம் எந்த வகையில் உயர்ந்தவர்கள்?   நமக்குச் சாதகமான அளவுகோல்களை வைத்துக் கொண்டு, அப்படி அளவுகோல்களை வைத்துக் கொள்ளும் உரிமையும் திறமையும் நமக்கு மட்டுமே உண்டு என்று நினத்து கொண்டு நாம் மற்ற மிருகங்களை, உயிரின்ங்களை, அவை நம்மை விடத் தாழ்ந்த நிலையில் உள்ளவை என்று நினைக்கிறோம்.  இந்த உலகத்தை, இப்போது நாம் ஆண்டு கொண்டிருப்பதால், அப்படி நினைக்கிறோம்.  ஒரு காலத்தில், டைனொசோர்கள் ஆதிக்கம் செலுத்தின.  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு உயிர்கள் ஆதிக்கம் செலுத்தின. இன்னும் கொஞ்சகாலம் போனால், மனிதனைவிட சக்தி வாய்ந்த ஒன்று வேறு ஏதாவதொன்று தோன்றி பூமியை ஆதிக்கம் செலுத்தலாம் என்பது உயிரியலில் இயலாத, நிகழ முடியாத ஒன்றா?

 

ஒரு விஷயத்தை அளக்கும் அளவை நாம் தீர்மானம் செய்து கொண்டு நாம் ஏதோ பழங்களும் தோட்டங்களும் நமக்காகத்தான் இருக்கின்றன என்று ஒரு தோட்டத்தின் முதலாளி மாதிரி யோசித்துப் பழகிவிட்டோம்.   எதுவும் யாருக்காவது சொந்தமாகத்தான் இருக்க வேண்டும். அல்லது யாராவது பிரபஞ்சத்தைப் படைத்துத்தான் இருக்க வேண்டும் என்று யோசிக்காமல் மாற்றி யோசிக்கும் வழி இருக்கிறதா?

 

        நாம் அறிந்தவரை பிரபஞ்சம் விரிந்து கொண்டிருக்கிறது.  அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை நாம் ஊகிக்க முடியவில்லை.  நமக்குத் தெரியாது.  அது ஏதோ ஒரு சக்தியாக இருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.  அதனாலேயே அந்த சக்தி நாம் கற்பனை செய்து கொண்டிருக்கும் கடவுளாக இருக்க வேண்டும் என்று வாதிப்பதில் அர்த்த மில்லை.  சந்திரன் கடவுள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம்.  அங்கே மனிதன் போனதும் அது கடவுள் இல்லை என்று தெரிந்து விடவில்லையா? – ஆனாலும் சந்திரனைக் கும்பிடுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  கும்பிடாவிட்டால் ஏதாவது கெடுதல் நேர்ந்துவிடும் என்ற பயம். –

 

        பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாத ஒரு பேருண்மை அதன் விரிவும் பரப்பும்.  புராணத்திலும், கதையிலும் படித்த, கற்பனை செய்த அளவுகோல்கள் பிரபஞ்சத்தை அளக்கப் போதுமானவை அல்ல.  மீண்டும் மீனின் உதாரணத்துக்கே வருவோம்.  ஒரு அரைசெண்டிமீட்டர் அளவுள்ள மீன் எதை வைத்துக் கடலின் பரப்பை, ஆழத்தை அளக்க முடியும்?  அளக்க முடியாதது, குணங்கள் அற்றது என்று பக்தி இலக்கியத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் கடவுளை வர்ணிப்பதற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு.  அவர்கள் தங்கள் கற்பனைக்கு எட்டிய வகையில் கற்பனை செய்து கொண்டார்கள்.  சந்திரன் கூட அவர்களுக்கு அளக்க முடியாத தூரமாக இருந்திருக்கலாம்.  இப்போதிருக்கும் அளக்க முடியாத தூரம் என்பது விஞ்ஞானம் சார்ந்தது.  இதுவரை தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் அளக்க முடியாத தூரம் என்பது புதிய அளவு கோலின் படி குறிப்பிட வேண்டி இருக்கிறது.

 

        சூரியனினை விட, 1900 மடங்கு மீண்டும் சொல்கிறேன், 1900 மடங்கு, பெரிய நட்சத்திரத்தை மனிதன் அடையாளம் கண்டிருக்கிறான்.  அதன் முன்னால் சூரியன் ஒரு சிறு புள்ளி.  அதை யார் எதற்காகப் படைத்திருக்க முடியும்.? இத்தனூண்டு என்று கூடச் சொல்ல முடியாத பூமியில் கண்ணுக்குத் தெரியாத அணுத்துகளாக இருக்கும் மனிதனின் கற்பனையில் யாராவது படைத்துத்தான் ஏதாவதொன்று தோன்றி இருக்க முடியும்.  ஏனெனில் நாம் பூமியில் பார்ப்பதெல்லாம் அப்படித்தான் இருக்கிறது.  அதை மீறி நம்மால் யோசிக்க முடியவில்லை.  வேதியியலின் முதல் விதி என்ன சொல்கிறது. பொருளை யாராலும் உருவாக்கவோ அழிக்கவோ முடியாது.  ஆனால் இதை வேதியியல் பாடத்தில் மதிப்பெண் பெறும் விடையாக மட்டும் எழுதுகிறோம்.  பிரபஞ்சத்தைப் பொறுத்தவரையும் இதுதான் உண்மை.  அதை யாரும் படைக்க வில்லை. யாரும் படைத்திருக்கவும் முடியாது.  இந்த உண்மையை நாம் செரித்துக் கொள்ள முடியவில்லை என்றால், நாம் எப்போதும் போல எல்லாம் வல்ல இறைவனைச் சரணடையலாம்.  ஒன்றும் குறைந்துவிடாது.  ஆனால், நம்மால் உண்மையைச் சந்திக்கும் மனத்திடம் இல்லை.

 


        நாம் எதற்காகப் பிறந்தோம்?  நிச்சயமாக கடவுளின் லீலா வினோதத்தின் ஒரு பகுதியாக அல்ல.  அப்படிக் கற்பனை செய்து கொள்வது மனதுக்கு இதமாக இருக்கிறது.  நாம் என்ன செய்ய விரும்புகிறோம்? என்று இந்தக் கேள்வியை மாற்றிக் கேட்டால் ஒரு வேளை பதில் கிடைக்க வாய்ப்பு இருகிறது.  இருக்கின்ற வாழ்வின் சராசரி 70 ஆண்டுகளில், பணம் சேர்ப்பது ஒருவரது கனவாக இருக்கலாம்.  அல்லது பெரிய பெரிய கட்ட்டங்களைக் கட்டுவது ஒருவரது கனவாக இருக்கலாம்.  பெரிய மருத்துவராக இருப்பதோ, இலக்கியவாதியாக இருக்க விழையலாம்.  எதுவாக வேண்டுமானாலும் நாம் வாழலாம்.   நாம் எதற்காகப் பிறந்தோம் என்பதற்கான பதில் நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதுதான். 

No comments:

Post a Comment