Monday, July 14, 2014

நமது பண்பாடு.

 

நமது பண்பாடு என்ற வார்த்தையும் கருதுகோளும் அடிக்கடி நம் காதில் விழுகிறது.  யாருடைய வாயிலிருந்தும் எளிதாக வெளிவரும் இந்த வார்த்தைகளுக்கான பொருளை முழுவதும் அறிந்து கொண்டுதான் பேசுகிறோமா? என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது.  ‘நமதுஎன்ற வார்த்தையிலும், கருதுகோளிலும், ‘பண்பாடுஎன்ற வார்த்தையிலும் கருதுகோளிலும் மிகப் பெரிய குழப்பங்கள் இருக்கின்றன.  எப்போதுமே எதையும் அறுதியிட்டுச் சொல்பவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள்.  ஏனெனில் இந்த உலகமும், அதில் உள்ள எதுவுமே எந்த ஒழுக்கத்தின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படவில்லை.  எனவே எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிந்த்தாக நினைத்துக் கொண்டிருப்பவன் அடிப்படையில் முட்டாளாகவே இருக்கிறான். 

 

        முதலில் நாம்என்ற கருதுகோளை எடுத்துக் கொள்வோம்.  அந்த வரையறைக்குள் எதையெல்லாம் அடக்குகிறோம் என்பது அவரவர் சமூகநிலை, அரசியல் நிலைப்பாடு என்பனவற்றை உள்ளடக்கியது.  இந்த நாமும் கூட காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம்மாறிக் கொண்டே இருப்பது. உதாரணமாக, பாண்டிய சேர சோழ அரசுகள் இருந்த காலத்தில், பாண்டிய நாட்டில் வாழும் ஒருவர் அங்கு வாழும் மக்களை ‘நாம்என்று கருத வேண்டிய கட்டாயம் இருந்திருக்கும்.  சேர நாட்டில் வாழ்ந்தவர் அவரைப் பொறுத்தவரை வேற்று நாட்டவர்.  1946ஆம் ஆண்டில் லாகூரில் வாழ்ந்த ஒரு பஞ்சாபி தன்னை இந்தியர் என்றே அடையாளம் கண்டிருப்பார்.  ஆனால், 1949ஆம் ஆண்டில் அவர் தன்னை ஒரு பாகிஸ்தானி என்றே அடையாளம் காணவேண்டி இருந்திருக்கும். 

 

        பண்பாடு என்பதும் இவ்வாறே இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  கோமணம் கட்டிக் கொண்டே வாழ்வது பழைய பண்பாடு, ஆண்கள் குடுமியோ சடைமுடியோ வைத்துக் கொள்வதும் நமது பண்பாடு, இப்போது நவீனமுறையில் ‘பங்க்வைத்துக் கொள்வதும் நமது பண்பாடுதான். ஆடைகள் அலங்காரங்களுடன் உள்மனதும் மாறி விடுகிறது.  தமிழகத்தில் பெண்கள் சைக்கிள் விட ஆரம்பித்ததில் இருந்து அதற்குத் தகுந்தாற்போல் பேண்ட் அல்லது சல்வார் கமீஸ் அணிவது அதிகமாகிவிட்ட்தைக் காணமுடிகிறது. 

 

        எனவே நாம்’ , ‘பண்பாடுஎன்ற கருத்தாக்கங்கள் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன.  இன்று நாம் அணிந்திருக்கும் உடைகள், பேண்ட், சட்டை, காலணிகள், எதுவும் நமது பண்பாட்டில் பிறக்கவில்லை. நாம் எழுதும் பொருட்கள், அலுவலகத்தில் பயன்படுத்தும் பொருட்கள் எதுவும் நமது பண்பாட்டில் கண்டுபிடிக்கப் பட்டவை அல்ல. செய்தித்தாள், கணினி, பேருந்து, விமானம் ரயில் என்று நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எதுவும் நமது நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.  ஏன் தமிழர்களின் அடையாளமாக நினைத்துக் கொண்டிருக்கிற, நாம் அதிகம் விரும்பி உண்ணுகிற, சாம்பார் வெளிமாநிலத்தில் இருந்து வந்தது.  இட்லி கூட தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் இருந்து வந்த்தாம். தேங்காயும் அங்கிருந்தே வந்ததாம். மிளகாய், தென்னமரிக்காவில் இருந்தும், காபி அரேபியாவில் இருந்தும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.  இந்த நிலையில் நாம் நமது என்றோ நமது பண்பாடு என்றோ சொல்வதை, சில ஆண்டுகள் வரை பார்த்த்து கூடக் கிடையாது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த பண்பாடு என்றும் அதைக் காக்க வேண்டும் என்று கூச்சல் கேட்கும் போது நாம் உண்மையிலேயே மெய்மறந்துபோய்விடுகிறோம். அதாவது உண்மைகளை மறந்து போகிறோம்.

 

       எப்போதும் மாறிக் கொண்டே இருக்கிற ஒன்றை, ஏதோ அது நிலையானதே போல், பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது தவறு என்றுதான் தோன்றுகிறது. அதைக் காப்பாற்றச் சிலபேர் அரசியல் பேசுவதும், அதை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துவதும் அவ்வாறே தவறே ஆகும்

No comments:

Post a Comment