Saturday, January 30, 2021

 

                                                         தண்டனை 

தாயம்மாள் சராசரி உயரமென்றாலும், நெடுநெடு என்று வளர்ந்ததவள் போல் தெரியும்.  ஆறு பிள்ளைகளைப் பெற்றவள். ஒல்லியாகத்தான் இருந்தாள்.  தலையில் இருபது பக்கா அரிசியை துணிமூட்டையில் சும்மாடு கட்டியிருந்தாள்.     வேகமாக நடைபோட்டாள்.  விருசலாக ஸ்டேஷனுக்குப் போய்விட்டால் பத்துமணி வண்டியைப் பிடித்துவிடலாம்.  பிறகு எந்த ஊரில் இறங்குவது, அரிசியை பக்கா பக்காவாக யாருக்கு விற்பது என்பதெல்லாம் அன்றைய நாளின் தலையெழுத்தைப் பொறுத்தது.  புதுரோடு முக்கில் கருப்பாயி நிற்பது அவள் கண்ணில் பட்டது. கருப்பாயி இருந்தாள் தாயம்மாளுக்கு தைரியம் அதிகமாக இருக்கும்.  யாரும் பிடித்துக் கேள்விகேட்டாலும் நன்றாகப் பதில் சொல்லுவாள்.  தாயம்மாள் கெஞ்சிப் பேசித்தான் பழக்கம்.  ‘ஐயா ஏதோ ரெண்டு பக்கா அரிசிவித்தா அஞ்சி ரூபாகிடைக்கும்’ என்று அவர்களின் கருணையில் நம்பிக்கை வைத்திருப்பாள்.  கருப்பாயி அப்படிக் கிடையாது.  ’சாமி, உங்களுக்கு இரண்டு ரூபா தாரேன்’ என்று நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுவாள்.

  கருப்பாயியின் தலையிலும் ஒரு சும்மாடு இருந்தது. அவளுக்கும் மெலிந்த உடம்புதான்.  இரண்டு நாட்களுக்கு ஊர் சுற்றி அரிசியை விற்று ஊருக்குத் திரும்பி வரும்போது கையில் மூன்று ரூபாய் கிடைத்தால் அன்றைக்கு அதிர்ஷ்டம்.  சில நாட்கள் போலிஸ்காரன் அல்லது இன்ஸ்பெக்டர் பிடித்து விசாரித்தால், ஒரு ரூபாய் மிஞ்சுவதே கஷ்டம்.  வழக்குப் போட்டு நீதிபதியின் முன்னால் சென்றால், கையிலிருந்த காசையும் செலவழிக்க வேண்டியிருக்கும். தாயம்மாவுக்கும், கருப்பாயிக்கும் இவர்களைச் சமாளிப்பது எப்படி என்று தெரியும்.

போலிஸ்காரர்களுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் தினப்படி கிடைத்தால் போதுமென்று இவர்களைப் போல ‘அரிசி கடத்துகிறவர்களிடமிருந்து’ கிடைத்ததை வாங்கிக் கொள்வார்கள்.  அவர்களை விடப் பெரிய அதிகாரிகள், லாரியில் அரிசி கடத்துகிறவர்களிடம் வாங்கிக் கொள்வார்கள்.  எல்லாம் ஒரு தனி உலகம் போலத்தான் இயங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் காசுபார்த்துக் கொண்டார்கள்.  அரிசி கிடைகாமல் திண்டாடுகிறவர்கள்தான் இவர்களுக்கெல்லாம் மூலதனமாக இருந்தார்கள்.  அரிசிப் பஞ்சம் வந்ததால் நிறையப் பேருக்குப் பிழைப்பு நடந்து கொண்டிருந்தது.

தாயம்மாளும், கருப்பாயியும் ஸ்டேஷனை அடைந்த போது வெய்யில் ’சுள்’ளென்று அடித்தது.  இருவர் முகத்திலும் உடம்பிலும் வியர்வை துடைக்கத் துடைக்க வழிந்தோடிக் கொண்டிருந்தது.  இருபது பக்கா அரிசியை ஒரு மைல் தூரத்துக்கு மேல் சுமந்ததன் விளைவு.   இருவரும் சேலையின் முந்தானையில் முடிச்சுப்போட்டு வைத்திருந்த காசை எடுத்து டிக்கெட் எடுத்தார்கள்.  டிக்கட் கொடுப்பவர் வேண்டா வெறுப்பாக டிக்கெட் கொடுத்தார்.  பிளாட்பாரத்தில் நிற்பவர்களும் இவர்களை ஏதோ வினோத மிருகங்கள் போலப் பார்த்தார்கள்.  ரயிலில் ஏற நிற்பவர்கள் டிப்டாப்பாக உடையணிந்திருக்க, இவர்கள் மட்டும் குளிக்காத முகத்துடன், வியர்வைபட்டுக் கசங்கிய உடைகளுடன் இருந்தார்கள். பாசஞ்சர் வண்டி வந்ததும் எல்லோரும் ஏறிக் கொண்டனர்.   

அந்த அத்துவானக் காட்டிலிருந்த பட்டிக்காட்டில் கடைகளே கிடையாது.  கடைக்குச் செல்ல வேண்டுமென்றால், இரண்டு மைல் வடக்கே நடக்க வேண்டும்.  இப்படிப்பட்ட ஊர்களில்தான் தாயம்மாள் அரிசி வியாபாரம் செய்வாள்.  ஒரு பக்கா அரைப்பக்கா என்று வீடுகளில் வாங்கினாலும் ஒன்றிரண்டு ஊர்களைச் சுற்றினால், இரண்டு நாட்களில் இருபது பக்கா அரிசியை விற்றுவிடலாம். 

ஊரில் தெருவுக்குள் நுழையும் போது வெய்யிலின் உக்கிரம் அதிகமாகிவிட்டது.  முதலில் இருந்த ஒரு காரை வீட்டின் முன்னால் தாயம்மாள் நின்று கொண்டு, ‘அரிசி, அரிசி’ என்று கூவினாள்.  ‘அரிசி, அரிசி, நில்லும்மா’ என்று நடுக்கூடத்திலிருந்து கேட்டது.  ‘அரிசி எப்படி வச்சிருக்க.  நல்ல அரிசியா, அல்லது புழுத்த அரிசியா’ என்று கேட்டுக் கொண்டே ஒரு மகராசி உள்ளே இருந்து வந்தாள்.

தாயம்மாளுக்கு இப்படியெல்லாம் பேசினாலும் கோபம் வராது.  அவர்களை நம்பித்தானே வியாபாரம் நடக்கிறது. ‘ரொம்ப நல்ல அரிசிம்மா.  இல்லாட்டி நாங்க பொழப்பு நடத்த முடியுமா? பிறகு எல்லோரும் ரேஷன் அரிசி வாங்கப் போயிருவாங்க..’ என்றாள்.

வீட்டுக்காரம்மா முன்னால் அரிசி மூட்டையை இறக்கிவைத்து விட்டு, கயிற்றை அவிழ்த்து, அரிசியைக் கையில் எடுத்துக் காட்டினாள்.  வீட்டுக்கார அம்மா, ஒரு குத்து அரிசியை எடுத்து, அதிலிருந்து கொஞ்சத்தை வாயில் போட்டு மென்று பார்த்தாள்.  ‘பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டு, பேரம் பேச ஆரம்பித்தாள்.  அரிசி நன்றாக இருந்தால் கூட, ‘பரவாயில்லை’ என்று சொன்னால்தான் விலையைக் குறைக்க முடியும் என்று வீட்டுக்காரம்மா நினைப்பது தாயம்மாவுக்குப் புரியும்.  ஆனாலும் ஒன்று சொல்ல மாட்டாள்.  முதல் ஆள்.  எட்டணா கிடைத்தாலும் விற்றுவிடலாம்.

அன்று மாலைக்குள் இருவரும் நான்கு ஊர்களைச் சுற்றியதில் பத்து ரூபாய் மிச்சம் பார்த்தார்கள்.  தாயம்மா வீட்டுக்கு வந்து சேரும் போது இரவு மணி பதினொன்றாகிவிட்டது.

ஆறு குழந்தைகளும் தலை ஒருபுறமும் கால் ஒரு புறமுமாக ஒரு வகையில்லாமல் தூக்கிக் கொண்டிருந்தார்கள்.  பெரியவள் சங்கரி மட்டும் விழித்துப் பார்த்துவிட்டு, அம்மா என்று உறுதியானதும் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.  பெரியவன் கணேசனும், சின்னவன் கோபாலும் வராந்தாவில், தீப்பெட்டி ஒட்டும் பலகைக்கருகில் கிடந்தனர். பசை காய்ச்சியிருந்த பாத்திரம் காலியாக இருந்தது. அதனருகே அன்று காலையிலிருந்து பிள்ளைகள் நீலக்கலர் தாள்ஒட்டி மடித்து வைத்த தீப்பெட்டிப் பெட்டிகளின் மேல்ப்பகுதி மூலையில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.  பிள்ளைகள் விரசலாகத்தான் ஒட்டுகிறார்கள்.  உள்ளறையில் அடுக்கி வைக்கப்பட்ட குச்சிக் கட்டைகள் கிடந்தன.  நாளைக்கு கம்பெனிக்குப் போனால், இந்த வாரத்துக்கான கூலியாக பத்துப் பதினைந்து ரூபாய் கிடைக்க வாய்ப்பிருந்தது.  

தாயம்மாள் குளித்துவிட்டு, மண்பானையில் தண்ணி ஊற்றிக் கொஞ்சம் மீதமிருந்த சோற்றில் உப்பை மட்டும் போட்டுக் குடித்து விட்டு வராண்டாவருகில் இருந்த படியில் ஆசுவாசமாக அமர்ந்தாள்.

பிள்ளைகள் யாரும் பள்ளிக் கூடத்துக்குப் போவதில்லை என்ற கவலை எழுந்தது.  சங்கரி மட்டும் காலையில் சோற்றை வடித்துவிட்டுப் ஹைஸ்கூல் போய்வந்தாள்.  இரண்டாமவன், நாலாவதற்கு அப்புறம் போகமாட்டேன் என்று அடம்பிடித்துவிட்டான்.  மற்றப் பெண் பிள்ளைகளும் பள்ளிக் கூடத்துக்குப் போகவில்லை.  கோபால் மட்டும் ஏனோதானோவென்று அக்காவின் அறிவுரைக்காக அவ்வப்போது போய்வந்தான்.

ஆம்பிளை இருந்தும் இல்லாதது போலத்தான்.  அரசு வேலை பார்த்த தாயம்மாளின் கணவன், அவளை விட்டுவிட்டு, கூட வேலை பார்த்த ஒருத்தியை இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொண்டு போய்விட்டான்.  மாதம் ஒருநாள் வந்து ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டுப் போய்விடுவான். அதையும் சண்டை போட்டுத்தான் வாங்கவேண்டியிருந்தது.  கூட வாழ்ந்திருந்தால், அரசாங்க உத்யோகத்தில் இருந்தவன் பிள்ளைகள் இப்படித் தீப்பெட்டிக் கட்டை ஒட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. பள்ளிக் கூடம் போயிருப்பார்கள். அவளும், நாய்படாத பாடுபட்டு அரிசி வியாபாரம் பார்க்கப் போக வேண்டியதில்லை.  ஆனால் போக வேண்டியிருந்தது. 

தாயம்மாள் முந்தானையில் இருந்த முடிச்சை அவிழ்த்துப் பார்த்தாள். ஐம்பத்தி ஆறு ரூபாய் இருந்தது.  நாலு ரூபாய் மிச்சம். மத்தது முதல்.  நாளைக்குச் சனிக்கிழமை கம்பெனியில் பதினைந்து இல்லாவிட்டால் பன்னிரண்டு ரூபாயாவது கிடைக்கும்.  அடுத்த வாரத்தை ஓட்டிவிடலாம்.  கதவு நிலையிலேயே தலையை வைத்து நிம்மதியாகத் தூங்கிப்போனாள்.

No comments:

Post a Comment