Saturday, January 30, 2021

 

                                                         தண்டனை 

தாயம்மாள் சராசரி உயரமென்றாலும், நெடுநெடு என்று வளர்ந்ததவள் போல் தெரியும்.  ஆறு பிள்ளைகளைப் பெற்றவள். ஒல்லியாகத்தான் இருந்தாள்.  தலையில் இருபது பக்கா அரிசியை துணிமூட்டையில் சும்மாடு கட்டியிருந்தாள்.     வேகமாக நடைபோட்டாள்.  விருசலாக ஸ்டேஷனுக்குப் போய்விட்டால் பத்துமணி வண்டியைப் பிடித்துவிடலாம்.  பிறகு எந்த ஊரில் இறங்குவது, அரிசியை பக்கா பக்காவாக யாருக்கு விற்பது என்பதெல்லாம் அன்றைய நாளின் தலையெழுத்தைப் பொறுத்தது.  புதுரோடு முக்கில் கருப்பாயி நிற்பது அவள் கண்ணில் பட்டது. கருப்பாயி இருந்தாள் தாயம்மாளுக்கு தைரியம் அதிகமாக இருக்கும்.  யாரும் பிடித்துக் கேள்விகேட்டாலும் நன்றாகப் பதில் சொல்லுவாள்.  தாயம்மாள் கெஞ்சிப் பேசித்தான் பழக்கம்.  ‘ஐயா ஏதோ ரெண்டு பக்கா அரிசிவித்தா அஞ்சி ரூபாகிடைக்கும்’ என்று அவர்களின் கருணையில் நம்பிக்கை வைத்திருப்பாள்.  கருப்பாயி அப்படிக் கிடையாது.  ’சாமி, உங்களுக்கு இரண்டு ரூபா தாரேன்’ என்று நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுவாள்.

  கருப்பாயியின் தலையிலும் ஒரு சும்மாடு இருந்தது. அவளுக்கும் மெலிந்த உடம்புதான்.  இரண்டு நாட்களுக்கு ஊர் சுற்றி அரிசியை விற்று ஊருக்குத் திரும்பி வரும்போது கையில் மூன்று ரூபாய் கிடைத்தால் அன்றைக்கு அதிர்ஷ்டம்.  சில நாட்கள் போலிஸ்காரன் அல்லது இன்ஸ்பெக்டர் பிடித்து விசாரித்தால், ஒரு ரூபாய் மிஞ்சுவதே கஷ்டம்.  வழக்குப் போட்டு நீதிபதியின் முன்னால் சென்றால், கையிலிருந்த காசையும் செலவழிக்க வேண்டியிருக்கும். தாயம்மாவுக்கும், கருப்பாயிக்கும் இவர்களைச் சமாளிப்பது எப்படி என்று தெரியும்.

போலிஸ்காரர்களுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் தினப்படி கிடைத்தால் போதுமென்று இவர்களைப் போல ‘அரிசி கடத்துகிறவர்களிடமிருந்து’ கிடைத்ததை வாங்கிக் கொள்வார்கள்.  அவர்களை விடப் பெரிய அதிகாரிகள், லாரியில் அரிசி கடத்துகிறவர்களிடம் வாங்கிக் கொள்வார்கள்.  எல்லாம் ஒரு தனி உலகம் போலத்தான் இயங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் காசுபார்த்துக் கொண்டார்கள்.  அரிசி கிடைகாமல் திண்டாடுகிறவர்கள்தான் இவர்களுக்கெல்லாம் மூலதனமாக இருந்தார்கள்.  அரிசிப் பஞ்சம் வந்ததால் நிறையப் பேருக்குப் பிழைப்பு நடந்து கொண்டிருந்தது.

தாயம்மாளும், கருப்பாயியும் ஸ்டேஷனை அடைந்த போது வெய்யில் ’சுள்’ளென்று அடித்தது.  இருவர் முகத்திலும் உடம்பிலும் வியர்வை துடைக்கத் துடைக்க வழிந்தோடிக் கொண்டிருந்தது.  இருபது பக்கா அரிசியை ஒரு மைல் தூரத்துக்கு மேல் சுமந்ததன் விளைவு.   இருவரும் சேலையின் முந்தானையில் முடிச்சுப்போட்டு வைத்திருந்த காசை எடுத்து டிக்கெட் எடுத்தார்கள்.  டிக்கட் கொடுப்பவர் வேண்டா வெறுப்பாக டிக்கெட் கொடுத்தார்.  பிளாட்பாரத்தில் நிற்பவர்களும் இவர்களை ஏதோ வினோத மிருகங்கள் போலப் பார்த்தார்கள்.  ரயிலில் ஏற நிற்பவர்கள் டிப்டாப்பாக உடையணிந்திருக்க, இவர்கள் மட்டும் குளிக்காத முகத்துடன், வியர்வைபட்டுக் கசங்கிய உடைகளுடன் இருந்தார்கள். பாசஞ்சர் வண்டி வந்ததும் எல்லோரும் ஏறிக் கொண்டனர்.   

அந்த அத்துவானக் காட்டிலிருந்த பட்டிக்காட்டில் கடைகளே கிடையாது.  கடைக்குச் செல்ல வேண்டுமென்றால், இரண்டு மைல் வடக்கே நடக்க வேண்டும்.  இப்படிப்பட்ட ஊர்களில்தான் தாயம்மாள் அரிசி வியாபாரம் செய்வாள்.  ஒரு பக்கா அரைப்பக்கா என்று வீடுகளில் வாங்கினாலும் ஒன்றிரண்டு ஊர்களைச் சுற்றினால், இரண்டு நாட்களில் இருபது பக்கா அரிசியை விற்றுவிடலாம். 

ஊரில் தெருவுக்குள் நுழையும் போது வெய்யிலின் உக்கிரம் அதிகமாகிவிட்டது.  முதலில் இருந்த ஒரு காரை வீட்டின் முன்னால் தாயம்மாள் நின்று கொண்டு, ‘அரிசி, அரிசி’ என்று கூவினாள்.  ‘அரிசி, அரிசி, நில்லும்மா’ என்று நடுக்கூடத்திலிருந்து கேட்டது.  ‘அரிசி எப்படி வச்சிருக்க.  நல்ல அரிசியா, அல்லது புழுத்த அரிசியா’ என்று கேட்டுக் கொண்டே ஒரு மகராசி உள்ளே இருந்து வந்தாள்.

தாயம்மாளுக்கு இப்படியெல்லாம் பேசினாலும் கோபம் வராது.  அவர்களை நம்பித்தானே வியாபாரம் நடக்கிறது. ‘ரொம்ப நல்ல அரிசிம்மா.  இல்லாட்டி நாங்க பொழப்பு நடத்த முடியுமா? பிறகு எல்லோரும் ரேஷன் அரிசி வாங்கப் போயிருவாங்க..’ என்றாள்.

வீட்டுக்காரம்மா முன்னால் அரிசி மூட்டையை இறக்கிவைத்து விட்டு, கயிற்றை அவிழ்த்து, அரிசியைக் கையில் எடுத்துக் காட்டினாள்.  வீட்டுக்கார அம்மா, ஒரு குத்து அரிசியை எடுத்து, அதிலிருந்து கொஞ்சத்தை வாயில் போட்டு மென்று பார்த்தாள்.  ‘பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டு, பேரம் பேச ஆரம்பித்தாள்.  அரிசி நன்றாக இருந்தால் கூட, ‘பரவாயில்லை’ என்று சொன்னால்தான் விலையைக் குறைக்க முடியும் என்று வீட்டுக்காரம்மா நினைப்பது தாயம்மாவுக்குப் புரியும்.  ஆனாலும் ஒன்று சொல்ல மாட்டாள்.  முதல் ஆள்.  எட்டணா கிடைத்தாலும் விற்றுவிடலாம்.

அன்று மாலைக்குள் இருவரும் நான்கு ஊர்களைச் சுற்றியதில் பத்து ரூபாய் மிச்சம் பார்த்தார்கள்.  தாயம்மா வீட்டுக்கு வந்து சேரும் போது இரவு மணி பதினொன்றாகிவிட்டது.

ஆறு குழந்தைகளும் தலை ஒருபுறமும் கால் ஒரு புறமுமாக ஒரு வகையில்லாமல் தூக்கிக் கொண்டிருந்தார்கள்.  பெரியவள் சங்கரி மட்டும் விழித்துப் பார்த்துவிட்டு, அம்மா என்று உறுதியானதும் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.  பெரியவன் கணேசனும், சின்னவன் கோபாலும் வராந்தாவில், தீப்பெட்டி ஒட்டும் பலகைக்கருகில் கிடந்தனர். பசை காய்ச்சியிருந்த பாத்திரம் காலியாக இருந்தது. அதனருகே அன்று காலையிலிருந்து பிள்ளைகள் நீலக்கலர் தாள்ஒட்டி மடித்து வைத்த தீப்பெட்டிப் பெட்டிகளின் மேல்ப்பகுதி மூலையில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.  பிள்ளைகள் விரசலாகத்தான் ஒட்டுகிறார்கள்.  உள்ளறையில் அடுக்கி வைக்கப்பட்ட குச்சிக் கட்டைகள் கிடந்தன.  நாளைக்கு கம்பெனிக்குப் போனால், இந்த வாரத்துக்கான கூலியாக பத்துப் பதினைந்து ரூபாய் கிடைக்க வாய்ப்பிருந்தது.  

தாயம்மாள் குளித்துவிட்டு, மண்பானையில் தண்ணி ஊற்றிக் கொஞ்சம் மீதமிருந்த சோற்றில் உப்பை மட்டும் போட்டுக் குடித்து விட்டு வராண்டாவருகில் இருந்த படியில் ஆசுவாசமாக அமர்ந்தாள்.

பிள்ளைகள் யாரும் பள்ளிக் கூடத்துக்குப் போவதில்லை என்ற கவலை எழுந்தது.  சங்கரி மட்டும் காலையில் சோற்றை வடித்துவிட்டுப் ஹைஸ்கூல் போய்வந்தாள்.  இரண்டாமவன், நாலாவதற்கு அப்புறம் போகமாட்டேன் என்று அடம்பிடித்துவிட்டான்.  மற்றப் பெண் பிள்ளைகளும் பள்ளிக் கூடத்துக்குப் போகவில்லை.  கோபால் மட்டும் ஏனோதானோவென்று அக்காவின் அறிவுரைக்காக அவ்வப்போது போய்வந்தான்.

ஆம்பிளை இருந்தும் இல்லாதது போலத்தான்.  அரசு வேலை பார்த்த தாயம்மாளின் கணவன், அவளை விட்டுவிட்டு, கூட வேலை பார்த்த ஒருத்தியை இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொண்டு போய்விட்டான்.  மாதம் ஒருநாள் வந்து ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டுப் போய்விடுவான். அதையும் சண்டை போட்டுத்தான் வாங்கவேண்டியிருந்தது.  கூட வாழ்ந்திருந்தால், அரசாங்க உத்யோகத்தில் இருந்தவன் பிள்ளைகள் இப்படித் தீப்பெட்டிக் கட்டை ஒட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. பள்ளிக் கூடம் போயிருப்பார்கள். அவளும், நாய்படாத பாடுபட்டு அரிசி வியாபாரம் பார்க்கப் போக வேண்டியதில்லை.  ஆனால் போக வேண்டியிருந்தது. 

தாயம்மாள் முந்தானையில் இருந்த முடிச்சை அவிழ்த்துப் பார்த்தாள். ஐம்பத்தி ஆறு ரூபாய் இருந்தது.  நாலு ரூபாய் மிச்சம். மத்தது முதல்.  நாளைக்குச் சனிக்கிழமை கம்பெனியில் பதினைந்து இல்லாவிட்டால் பன்னிரண்டு ரூபாயாவது கிடைக்கும்.  அடுத்த வாரத்தை ஓட்டிவிடலாம்.  கதவு நிலையிலேயே தலையை வைத்து நிம்மதியாகத் தூங்கிப்போனாள்.

Saturday, January 09, 2021

                                                      மாபெரும் டிஜிடல் சிறை

 

            வீடுகளில், அலுவலகங்களில், தெருக்களில், கோயில்களில், பள்ளிகளில், பொது இடங்களில் என்று எல்லா இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகின்ற ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.  சிறைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.  அங்கே தான் காமிராக்கள் முதலில் பொருத்தப்பட்டிருக்கக் கூடும்.  இதற்குச் சொல்லப்படும் காரணம் நமது பாதுகாப்பு.  இவற்றையெல்லாம் வைத்த பின்னும் நாம் பாதுகாப்பாக உணர்கிறோமா?.

            நான் பயன்படுத்தும் கைபேசி தொடங்கி, இணையத்தில் நாம் எதைச் செய்தாலும் அதை ஒரு இயந்திரமோ அல்லது மனிதனோ கண்காணிக்கிற நிலை இப்போது இருக்கிறது. 

            மேற்கண்ட இரண்டையும் இணைத்துப் பார்த்தால், நம்மை யாரோ கண்காணித்துக் கொண்டே இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.  நாம் சுதந்திரமானவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது.

            இயந்திரங்கள் நாம் முன்னர் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள் அல்லது வேறு எதுவென்றாலும் அவற்றின் மூலம் நமது விருப்பங்கள் தேர்வுகளைக் கண்டுகொண்டு, மேலும் அவை போன்ற பொருட்கள் புத்தகங்கள் அல்லது வேறு எவையென்றாலும் அவற்றை நம் முன் கொண்டு நிறுத்துகின்றன.  அந்த இயந்திரங்களின் வழியே நமக்குத் தெரியாத ஒருவர் நமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தெரிந்துகொண்டு, நம்மை நாம் அறியாமலேயே வழிநடத்த முடியும்.  இதன் சாத்தியங்கள் மிகவும் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன.  ஏதோ சிறைக்கதவுகளுக்குள் வாழ்வது போன்ற உணர்வை இவை தருகின்றன. இனி இதிலிருந்து யாரும் மீள முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது.

            அடுத்ததாக, பஸ் டிக்கெட்டிலிருந்து எதை வாங்கினாலும், தொலைபேசி எண், ஆதார் அடையாள எண் அல்லத் வருமான வரி எண் என்று எங்கே சென்றாலும், நாம் எதை வாங்கினாலும் நமது அடையாளத்தை நாமே ஏதாவது ஒரு சான்று கொடுத்து நிரூபிக்க வேண்டியிருக்கிறது. நமக்கே நம் பெயர் இதுதானா என்று சந்தேகம் வரும் அளவுக்கு அடையாள அட்டை தலையாய இடம் வகிக்கிறது.  ஒவ்வொருவரிடமும், குறைந்தது இருபத்தி ஐந்து அடையாள அட்டைகள் இருக்கக்கூடும். ரேஷன் கார்டு தொடங்கி கிரிடிட் அல்லத் டெபிட் கார்டு வரை என்னென்ன செய்ய வேண்டியிருந்தாலும் ஒவ்வொரு கார்டு நமக்குத் தரப்படுகிறது. 

            அதற்கு அடுத்தபடி, எதற்கெல்லாம் கார்டு இருக்கிறதோ அதற்கெல்லாம் புதிய பாஸ்வேர்ட்கள் புனையவேண்டும்.  எத்தனை பாஸ்வேர்ட்களைத்தான் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்? எழுதியும் வைக்க வேண்டாம் அது ரிஸ்க் என்று எல்லா நிறுவனங்களும் சொல்கின்றன.  எல்லா இடங்களிலும் கை ரேகை அல்லது கண் மூலம் அடையாளம் காண்பது என்று வைத்து விடலாம் என்றே தோன்றுகிறது. 

            இப்படி எத்தனையோ விதங்களில் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதும், எத்தனையோ பாஸ்வேர்ட்கள் இருந்தபோதும் ஏமாறுகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

            இதனால், நாம் எப்போதுமே விழிப்பாக அதாவது அலர்ட் ஆக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  இது எவ்வளவு சாத்தியம் என்று புரியவில்லை.  அதைவிட அலர்ட்டாக இருக்க வேண்டுமே என்ற கவலையும், பயமும் இருந்து கொண்டே இருக்கின்றன.  இந்த பயம் எந்தக் குறிப்பிட்ட  உருவத்தையோ அல்லது கருதுகோளையோ பற்றியதல்ல.  உருவமற்ற, எப்போதும் நம்முடன் இருக்கிற பயம்.  நாகரீகமடைந்து வருகிறோம் புதிய புதிய கண்டுபிடிப்புகளை அனுபவிக்கிறோம் என்பது எவ்வளவு மனச்சுமையை நம்மீது சுமத்துகிறது?

            டிஜிடல் வசதிகள் தேவையில்லை என்று சொல்ல முடியாத காலத்தில் வாழ்கிறோம்.  மேற்சொன்ன ரிஸ்க்களை சந்தித்தே ஆகவேண்டும். அடுத்து டி.என்.ஏ அடையாளத்தை வைத்து மனிதர்களை அடையாளப்படுத்தத் தொடங்கிவிட்டால் மற்ற எல்லா அடையாள அட்டைகளையும் தொலைத்துவிடலாம் என்று கற்பனை செய்கிறேன். எங்கே சென்றாலும் ஒரு சொட்டு ரத்தம் அல்லது எச்சில் அல்லது முடி என்று சோதனை செய்து வசதிகளைப் பெறுகின்ற காலம் வந்துவிடலாம். 

            அடிப்படையில், நம் ஒவ்வொருவருக்குமான உடைமைகளை (பணம், சொத்து, பொருள் அனைத்தும் இதில் அடங்கும்) அடையாளப்படுத்தி அனுபவிப்பதற்குத் தானே இத்தனை தடைகளைக் தாண்ட வேண்டியிருக்கிறது. அதிலிருந்து மீள, கற்பனாவாத வழி ஒன்று எனக்குப்படுகிறது.  எல்லாவற்றையும் அதாவது நம் உழைப்பை அதன் ஊதியத்தை பணமாக மாற்றாமல், டி-மானிடைஸ் (demonetize) செய்துவிட்டால் என்ன? இருக்கிற பொருட்கள் எல்லாம் நமக்குக் கிடைக்க வேண்டும். ஆனால் எதற்கும் பணம் செலுத்தத் தேவையில்லை.  இதன் தொடக்கமாகவே நாம் உழைப்புக்கு ஊதியமாக எதையும், பணம் உட்பட பெறக் கூடாது.  இப்படி ஒரு உலகத்தைக் கற்பனை செய்து பார்க்கிறேன்.  இது சோஷலிசம், கம்யுனிசம் அல்லது முதலாளித்துவம் என்ற பெயர்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

            பரஸ்பரம் நம்புவதாலேதான், வெற்றுக் காகிதம் ஆயிரம் ரூபாய் நோட்டாகிறது.  எல்லோரும் நம்புவதாலேதான் தேசம், பொருளாதாரம், பணம், கணக்கு, கழித்தல் கூட்டல் எல்லாம் வருகிறது.  இது ஒரு வகையான புராதன மனநிலை என்று தோன்றக் கூடும்.  ஆனால் நாம் தேசம், பணம், பொருளாதாரம், பணம் ஈட்டுதல் என்றெல்லாம் கட்டமைத்துக் கொண்டது எதற்காக? நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே? டிஜிடல் உலகில் அந்தப் பாதுகாப்பு, சற்றும் இல்லாத நிலை வரும்போது என்ன செய்யலாம்? உதாரணமாக நாடகத்தில் நடிப்பதற்காக, நாம் வேஷம் போடுகிறோம்.  நாடகம் என்ற ஒன்று தனியாக இல்லை.  வாழ்வே நாடகமாகிவிடும்போது அரிதாரம் தேவையற்றதாகிவிடுகிறது அல்லவா? 

Monday, January 04, 2021

                                              அடிவானில் மறையும் நிழல்கள்

            காரைக்கால் கடற்கரையிலிருந்து கப்பல் புறப்பட்டு பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது.  கரை வெகு தூரத்தில் மறைந்து பல நாட்களாகிவிட்டது.  காத்தமுத்து பள்ளிக் கூடத்துக்குப் பக்கத்தில் கூடப் போனதில்லை. பத்துக்கு மேல் அவனுக்கு எண்ணிக்கை தெரியாது. பத்துக்குள் எண்ணும் போதே பல முறை சரிபார்த்துக் கொள்வான்.  கப்பலில் ஏற்றுவதற்கு முன்னால், மாடசாமி அண்ணாச்சி ஐந்து ரூபாயைக் கொடுத்து, அவனுடைய சம்பளத்திலிருந்து மாதா மாதம் ஒரு ரூபாய் வீதம் ஐந்து ரூபாய் கம்பெனிக்காரன் கழித்துக் கொள்வான் என்று சொல்லிவிட்டார். அவனைக் கப்பலில் ஏற்றுவதற்கும் வேலைக்குச் சேர்த்துவிடுவதற்குமான அவருடைய கூலி.

           பஞ்சைப் பராரியாகத் தோற்றமளித்த காத்தமுத்து அன்றையத் தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களில் ஒருவன். வேட்டி மிகவும் அழுக்கடைந்து மஞ்சளாகிவிட்டது.  மேலுக்குப் போர்த்திக் கொள்ள பெரிய துண்டு வைத்திருந்தான். அது காக்கிநிறமாகிவிட்டது.  அதை அவ்வப்போது நெஞ்சில் குறுக்குவாட்டில் போட்டுக்கொள்வான்.  வரவரக் குளிர் அதிகமாகிக் கொண்டே வந்தது.  அவன் போகிற இடத்தில் எவ்வளவு குளிரும் என்று அவனுக்குத் தெரியவில்லை.  குளிர்காலத்தையே பார்த்திராத தென் தமிழ்நாட்டில் வளர்ந்த அவர்கள் யாருக்கும் குளிர்காலத்தில் கம்பளி உடுப்புத் தேவை என்பதே தெரியாது. துண்டையும் வேட்டியையும் போர்த்திக் கொண்டே பொழுதைக் கழித்து வந்தனர்.  கப்பலின் கீழ்த்தளத்தில் ஜன்னல்களே இல்லை. வணிகச் சரக்குகளை அடைத்து வைக்கும் கூடத்தில் கூலிகள் அனைவருக்கும் இடம்கொடுத்திருந்தனர். 

            கப்பலில் இருந்த அனைவரும் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் ஏறியவர்கள். கூலிவேலை, அதிலும் மாசமாசம் சம்பளம் கிடைத்துவிடும் என்ற ஒப்பந்தத்தின் பேரில் நம்பிக்கையுடன் கப்பலில் ஏறியிருந்தனர். அங்கிருந்த எல்லோரையும் போலவே காத்தமுத்துவின் மெலிந்த தேகத்தில் எல்லா எலும்புகளும் வெளித்தெரிந்தன. ஏதோ ஒரு போர்வைபோல தோல் அவர்களைப் போத்தியிருந்தது. சரக்குக் கப்பலில் கூலிகளை ஏற்றுவதற்காக சிறு சிறு மாற்றங்களைச் செய்திருந்தனர்.  கப்பல் சிறியது. மேல் தளத்துக்கு அடுத்திருந்த கீழ்த்தளத்தில் அறுநூற்று அறுபது கூலிகள் அடைக்கப்பட்டிருந்தனர். கீழ்த்தளத்துக்கு இறங்கும் படியில் எப்போதும் ஒரு காவலாளி நின்று கொண்டிருந்தான். ஆட்களை உள்ளே விடும்போது எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டான். முன்னூற்றி எண்பத்தெட்டுப் பேர் ஆண்கள், இருநூற்றி ஒன்பது பெண்கள், எழுபத்தி மூன்று குழந்தைகள். அந்தக் காவலாளி கறுப்பினத்தவன்.  அவன் கறுப்புநிறம் கூட வேறுமாதிரியிருந்தது. முகத்தைக் கடுமையாக வைத்திருந்தானா அல்லது அவன் முகமே அப்படித்தானா என்று காத்தமுத்து முடிவு செய்ய முடியவில்லை.  அவனைக் கொஞ்சம் காக்காய் பிடித்தால் மேல்தளத்தில் கொஞ்ச நேரம் இருக்க விடுவான் என்று கேள்விப்பட்டிருந்தான்.  

            கடல்பயணம் காத்தமுத்து கற்பனை செய்ததுபோல் இல்லை.  ஓரு நிமிடம் கூட அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நிலையாக நில்லாமல் அசைந்து அசைந்து அவனை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.  சில நேரங்களில் பக்கவாட்டில் சில நேரங்களில் நெடுவாக்கில் அதன் அசைவு அவனுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டே இருந்தது.  சிறுவயதில் ஊரில் எப்போதாவது இரவில் அவர்கள் ஊர்ப்பக்கம் வண்டிகள் செல்லும் போது பின்னால் நீட்டிக் கொண்டிருக்கும் மரக்கட்டையில் கைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு செல்லும் போது கூட இவ்வளவு அசௌகரியமாக அவன் உணர்ந்ததில்லை.  

            திருநெல்வேலிப் பக்கம் செவல்குளம் கிராமத்திலிருந்த அவன், வீட்டில் தகப்பன் தாய், அவனுக்குப் பதினைந்து வயதாகும் போது அவனைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்த கருப்பாயி மூவரும்  வாரத்தில் இரண்டு நாட்கள் கஞ்சி குடிப்பதற்கே பெரும்பாடு பட வேண்டியிருந்தது. கிளம்பி எங்கே போவது என்று தெரியாமல், பட்டினி கிடந்தாலும், ஒரு நாளைக்கு அரைவயிற்றுக் கஞ்சி கூட கிடைக்காமல் தவித்தாலும், இத்தனை வருடங்களாக பண்ணையாளாக வேலைபார்த்த நல்லாப்பிள்ளையின் பாதுகாப்பிலிருந்து விலகிவர முடியாமல் அங்கேயே இருந்தார்கள்.  நல்லாப்பிள்ளையும் பஞ்சகாலத்தோடு வந்த காலராவில் மறைந்துவிட்டார்.  அவர் வீட்டுக்காரி கோமதி அம்மாளுக்குத் துணையாக அவர்கள் இருந்துவந்தார்கள்.

காத்தமுத்துவுக்கு தன் குடும்பம் குலைப்பட்டினியாக அங்கேயே காலம் கழிப்பது பிடிக்கவில்லை. கோமதியம்மாளும் அனாதையாகிவிட்ட நிலையில்  எதை நம்பி அங்கே இருப்பது? நிலங்கள் இருந்தாலும் பஞ்சகாலத்தில் தண்ணீரோடு, வேலை செய்யும் ஆட்களும் எங்கெங்கோ போய்விட்டார்கள்.  எல்லாம் தரிசாகிக் கிடந்தன.  காத்தமுத்து ஊரைவிட்டு வந்து பல மாதங்களாகின்றது. வயிற்றுப் பிழைப்புக்கு நல்லஇடம் கிடைத்தால் வந்து கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். அந்தப் பஞ்சகாலத்தில் எங்கெங்கெல்லாமோ வயிற்றுக் கஞ்சிக்கு  அலைந்து திரிந்து, ஒன்றும் சரியாக வசப்படாமல், பண்ணையாள் என்றதைக் கேட்டு, மாடசாமி ஆள்பிடித்துக் கப்பலில் ஏற்றிவிட்டார்.  அவனுக்கும் வேறுவழி தெரியவில்லை. கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யவேண்டும்.  ஆனால் இவ்வளவு தூரம் கப்பலில் போக வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை.

            முன்பின் முகம் தெரியாத இத்தனை பயணிகளோடு பழகுவதற்கும் சிரமமாக இருந்தது.  யார் எப்படியோ? என்ற பயம்.  அவர்களில் யாரும் அப்படி ஒரு பயணம் செய்ததில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். பல நாளுக்குப் பிறகு பக்கத்தில் இருந்த ராமசாமி என்றவனுடன் பேசிக் கொள்ள ஆரம்பித்தான்.  தன்னைப் போலவே அவனும் வயிற்றுக்காகக் கப்பல் ஏறியவன் என்று முகத்திலும் உடையிலும் தெரிந்தது.  சொல்லப்போனால் எல்லோரும் அப்படித்தான் இருந்தார்கள்.

            காத்தமுத்து தன்னைப் பற்றி யோசித்தான்.  மீசைகூட அப்போதுதான் அரும்பத் தொடங்கியிருந்தது.  கைகால்களில் வலி எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.  முட்டெலும்புகூட தனியாக நீட்டிக் கொண்டிருப்பது போலத் தெரிந்தது.  உள்ளங்கால்களில் நடந்து நடந்து நிறைய வெடிப்புகள். நிற்கும் போது கூட வலித்தன.   ஊரில் ஒரு வேளைக் கஞ்சிக்குக் கூட வழியில்லை.  செவல்குளத்திலும் அருகிலிருந்த ஊர்களிலும் ஐந்து வருடமாகப் பஞ்சம்.  எப்போதாவது தூறிய மழையில் மேல்மண் கூட நனையவில்லை.  நல்லாப் பிள்ளையின் வீட்டம்மாள் கூட விதைக்கு வைத்த நெல்லில் கஞ்சி போட்டுக் குடிக்க ஆரம்பித்து விட்டாள்.  மிச்சமிருந்தால் காத்தமுத்துவின் வீட்டிற்குக் கொடுத்துவிடுவாள். அவளை நம்பி எப்படி வயிற்றைக் கழுவுவது?  ஊரில் ஐந்து வருடங்களாக ஒரு பொட்டுத் தண்ணீரில்லை. காய்ந்து கருகிவிட்ட மரங்களும், செடிகளும், குளங்களும்.  அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்க்கையும் காய்ந்தே போய்விட்டது.

            கப்பலில் கூலிகளுக்காக இருந்த சமையலறையில் தினமும் ஒரு வேளை கஞ்சியும் இரண்டு மீன் துண்டுகளும் கிடைத்தன. ஒவ்வொரு நாளும் அதே கஞ்சிதான்.  வேறு ஏதாவது கொடுத்தாலும் யாருக்கும் அது பிடிக்கவில்லை. ஊரை நினைவுபடுத்தியது அது ஒன்றுதான். அதையும் இழக்க அவர்களுக்கு மனமில்லை.  கீழ்த்தளத்தில் ஒரே நாற்றம்.  அங்கேதான் உண்டு உருண்டு, உறங்கி வாந்தி எடுத்து… எத்தனை முறைகழுவினாலும் நாற்றம் போகவில்லை.  வெளிக்காற்று உள்ளேவர இடமில்லை.  கக்கூஸ் கூட இத்தனை பேருக்கு நான்குதான் இருந்தது.  குளிப்பதற்கு இரண்டு இடங்கள்.  எலிப் பொந்தைப் பெரியதாக கட்டிவைத்தது போலிருந்தது அவர்கள் இருந்த இடம். 

            பெரிய கூடம் போல இருந்த இடத்தை இடுப்பளவு தடுப்பு வைத்து இரண்டாகப் பிரித்திருந்தார்கள். ஒருபுறம் ஆண்கள் மட்டும். இன்னொரு புறம் பெண்கள் குழந்தைகளுடன் வந்தவர்கள். அனைவரும் நெருக்கியடித்துக் குறுக்கும் நெடுக்குமாக மனம்போனபடி படுத்திருந்தார்கள்.  கூரையைப் பார்த்துக் கனவுகாண்பதும், இடம், முகம், மொழி தெரியாத இடத்தில் எப்படி வாழப்போகிறோம் என்ற கவலையும் சதா அவர்களை அரித்துக் கொண்டிருந்தது.  கொஞ்சம் சம்பாதித்து விட்டு திரும்பி வந்துவிட வேண்டும்.  அதற்குள் ஊரில் பஞ்சம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை தான் ஒரே வெளிச்சம்.

            காத்தமுத்துவுக்கு அடுத்துப் படுத்திருந்த ராமசாமி சலித்துப் போன குரலில் கேட்டான் ‘போய்ச்சேர எத்தனைநாளாகும்? இப்பவே ரொம்ப நாளாச்சு.  அவனுக பேசுற பாஷையும் புரியல்ல.  மேலயும் போக விடமாட்டக்கான்’

            காத்தமுத்துவுக்கும் தெரியாது. ‘பத்துநாளுக்கு மேலாச்சி.  மூணுநாலு மாசம் ஆகும்னு மாடசாமி சொன்னாரு. அவருக்கென்ன, காசு கிடைச்சிருச்சு.  கடக்கரையில சுத்துறாரு’.  அவனிடமும், அவர் சேர்த்துவிட்ட ஒவ்வொரு வரிடமும் ஐந்து ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தார்.  கரும்புத் தோட்டத்துக்குப் போய் வேலை செய்து மாதாமாதம் ஒருரூபாய் வீதம் பிடித்துக் கொள்வார்கள் என்று ஏற்பாடாகியிருந்தது.

            ’கஞ்சியாவது தினம் ஊத்துதானே. அதே பெரிசு.  ஊர்ல ரண்டு நாள், மூணுநாளுக்கும் ஒருதடவை கூடக் கஞ்சி கிடைக்குமான்னு இருக்கு நிலைமை’ சொல்லிவிட்டு தன் குடும்பத்தை நினைத்துக் கொண்டான். அவர்களுக்காவது அது கிடைக்கிறதா?’

            ’ஆனா இங்கே தினமும் வயத்தைக் கலக்குது’ என்றான் ராமசாமி.

            ’எப்பவும் கப்பல் ஆடிக்கிட்டே இருக்குதுல்ல, அதான். ஏர்ற அண்ணைக்கே சொன்னாங்க’

            ’ஆமா.  பத்துப் பதினைந்து பேருக்கு வாந்தி, பேதி காய்ச்சல்னு கிடக்காங்க.  டாக்டர் மருந்து குடுத்தாலும் நிற்க நாளாகுதாம். அங்கிட்டுப் பேசிக்கிடுதாங்க. ஒருத்தன் நிலமை ரொம்ப மோசமாம்.’

            மீண்டும் அமைதி நிலவியது.  முதல்நாள் கப்பலில் இருந்த ஆரவாரம் இப்போது இல்லை. குறைந்துகொண்டே வந்தது.  மேல் தளத்துக்குச் செல்லக் கூடாது என்று காவலாளி தடுக்கிறான். கடலைக் கூடப் பார்க்க முடியவில்லை. புதிய காற்று உடலில்படுவதில்லை. கப்பல் சில நேரங்களில் கடுமையாக ஆடியசைந்தது.  என்ன நடக்கிறது என்று அவர்களுக்குப் பீதியாக இருந்தது.  கப்பலின் அசைவுகள் காத்தமுத்துவுக்குப் பழகிவிட்டது. கால்கள் வலுவில்லாமல் இருந்தாலும், தடுமாறாமல் நிற்கப் பழகிக் கொண்டான். நிற்பது தொந்தரவாக இருந்தாலும், உட்கார்ந்திருந்தால் கொஞ்சம் பரவாயில்லை.  படுத்திருந்தால் ஆசுவாசமாக இருந்தது. அந்தக் கூட்டம் மிகுந்து நாற்றமடிக்கும் அறையில்  எவ்வளவு நேரம் படுத்தே இருக்க முடியும். வேறு வழியில்லை. சில நேரங்களில் தண்ணீரில் தான் மூழ்கிவிடுவதுபோல கனாக்கண்டு காத்தமுத்து திடுக்கிட்டு விழித்தான். அப்படியே கடலில் குதித்து விட்டால் என்ன? ஒரேயடியாகப் போய்ச்சேர்ந்துவிடலாம்.  அதற்காகவா இத்தனை கஷ்டப்பட்டு, குடும்பத்தை விட்டு, மனைவியை விட்டு வந்தேன். எப்படியாவது சகித்துக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது.  மாதச் சம்பளம் கிடைத்தால் ….

            கரையில் இறங்கிவிட்டால், கரும்புத் தோட்டத்தில் வேலை கிடைக்கும்.  மாதம் ஐந்து ரூபாய் சம்பளம்.  அதுவரை அவன் சம்பளத்துக்கு வேலை செய்ததில்லை.  பண்ணையார் கொடுக்கும் அரிசி பருப்பு, நிலத்தில் விளையும் ஒன்றிரண்டு காய்கறி, முயல் பாம்பு, அணில் எலி என்று ஏதாவது வேக வைத்துச் சாப்பிடுவது அவர்கள் வழக்கம்.  பஞ்ச காலத்தில் காட்டுக் கிழங்குகள் கிடைத்தால் அது ரொம்ப நல்லா இருந்தது. 

            இத்தனை நாட்களாகக் கப்பல் போய்க்கொண்டே இருக்கிறது.  இன்று வந்துவிடும், இப்போது வந்துவிடும் என்று நினைத்து நினைத்து மனம் கன்னிப் போய்விட்டது.  சில நேரங்களில் கப்பலின் ஆட்டம் அதிகமாக, நின்றவர்கள் தடுமாறிக் கீழே விழுந்தார்கள்.  சாமான்கள், துணி மூட்டைகள் அங்குமிங்கும் உருண்டோடின.  படுத்திருந்தவர்கள் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒருவர்மேல் ஒருவர் இடித்துக் கொண்டு புரண்டனர்.  அந்தச் சமயங்களில் கப்பல் மூழ்கிவிடுமோ என்ற பயம் துரத்திக் கொண்டே இருந்தது.  ஒருவருக்கும் நிம்மதி இல்லை.  தைரியம் ஊட்டவும் யாரும் இல்லை.  வயிற்றுப் பிழைப்புக்கு வந்து அநாதையாகக் கடலின் அடியில் கிடப்போமோ? என்றெல்லாம் காத்தமுத்து யோசித்தான்.

            ஒருநாள் மேல்தளத்திலிருந்து மூங்கில் கட்டைகளையும் மரப்பலகையையும் வைத்துச் செய்த படுக்கையைத் தூக்கிக் கொண்டு இரண்டுபேர் கீழ்த்தளத்திற்குள் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் இருவர், [அவர்களைப் பார்த்தால் பயணிகள் போலிருந்தது], வந்து அவனிருக்கும் இடத்தைச் தாண்டிச் சென்றனர். அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.  நோயாளியைத் தூக்குவதற்கோ என்று நினைத்தான்.  ஆனால் தடுப்புக்கு அந்தப் புறத்தில் அவர்கள் எடுத்து வைக்கிறபோது ஓவென்று அழும் பெண்களின் கூக்குரல் கேட்டது.  அவனுக்குத் திக்கென்றது. இப்படியும் ஆகலாம். தூக்கியதும் அந்த உடலை மேல் தளத்துக்கு எடுத்துச் சென்றனர்.

            கொஞ்ச நேரங்கழித்து, பாடையின் பின்னால் சென்றவர்கள் மூவர் திரும்பி வந்தனர்.  காத்தமுத்து அவர்களில் ஒருவனிடம் கேட்டான் ‘என்னாச்சு அந்தாளுக்கு?’

            ’’செத்துப் போய்ட்டான்’

            ’செத்துப் போய்ட்டானா? மேல எதுக்குக் கொண்டு போனாங்க?’

            ’அடக்கம் பண்ண’

            ’இங்க எப்படி அடக்கம் பண்ணுனாங்க?’

            ’கடல்ல தூக்கி எறிஞ்சிட்டாங்க’ சொல்லிவிட்டு அவர்கள் நகர்ந்து விட்டார்கள்.  எங்கிருந்தோ வந்தவன் கடலின் மடியில், மீன்களுக்கு இறையாகிவிட்டான்.  எந்தச் சடங்குகளும் நடக்கவில்லை.  யார் நடத்துவது? காத்தமுத்துவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  செத்தால், மயானத்தில் எரிப்பார்கள், குழிதோண்டிப் புதைப்பார்கள். ஆனால் இங்கே...’ அவனால் பொறுக்க முடியவில்லை.  மீன்களுக்கு உணவாக… சதையும் ரத்தமும்… அவனுக்குக் கற்பனை செய்யவே அருவருப்பாக இருந்தது.  இப்படியும் அடக்கம் செய்வார்களா? ஆனால் வேறு என்ன செய்வது?

            மாலை நெருங்கிய நேரம், மெல்ல எழுந்து மேல் தளத்துக்குச் செல்லும் படியில் ஏறினான்.  வழக்கமாக அங்கே நிற்கும் காவலாளியைக் காணவில்லை. மேல் தளத்தில் ஏறியதும் ஆளைத் தள்ளிவிடும் விதத்தில் முகத்தில் குளிர்ந்த காற்று வீசியது.  ஏன் இங்கே வர விடமறுக்கிறார்கள் என்று புரியவில்லை.  கடல் அமைதியாக இருப்பது போல் இருந்தது. அலைகள் தாய்போல மென்மையாகக் கப்பலை அணைத்துச் சென்றன. ஆனால் எப்போதும் இப்படி இருப்பதில்லை. கப்பல் லேசான அசைவுடன் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.  நுரைகள் கூட அதிகம் இல்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடந்த நீரலைகள்.  வானத்தைப் பார்த்தான்.  எல்லையற்று விரிந்து, எண்ணெற்ற நட்சத்திரங்கள் கண்சிமிட்ட, அமைதியாகக் கிடந்தது.  அவனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. இந்த நீரில் அவன் ஒரு துளி. அந்த வானில் ஒரு நட்சத்திரம்.  அவனைப் பற்றி யார் கவலைப்படமுடியும்? என்னதான் முயற்சி செய்தாலும் இந்த வாழ்விலிருந்து விடுதலை கிடையாது.  கடலில் குதித்துவிட்டால் சாவு நிச்சயம்.  ஆனால், இதற்காகவா இத்தனை துயரங்களையும் அனுபவித்தான்.  மாதம் ஐந்து ரூபாய் கூலி கிடைத்தால் ஒரு வேளை எல்லாம் மாறிவிடலாம்.

            இன்னும் கொஞ்ச நேரம் கடலையே பார்த்துக் கொண்டிருந்தான்.  சொந்த ஊரில் காய்ந்துபோன வயல்களினூடே நின்று பார்த்த காட்சி நினைவுக்கு வந்தது. கண் தெரியும் தூரம் வரை காய்ந்து போய்ப் பாளம் பாளமாய்ப் பிளந்து கிடந்த வறண்ட கரிசல் நிலம்.  கால்கடுக்கும் வரை நடக்கலாம்.  முயல், பாம்பு, நண்டு அணில் ஓணான் என்று ஏதாவது அகப்படும்.

            திடீரென்று யாரோ அவன் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டான்.  அதிர்ந்து கீழே உருண்ட காத்தமுத்து தடுமாறி எழுவதற்கு எத்தனித்தான்.  அவன் எதிரே காவலாளி புரியாத பாஷையில் கோபமாகத் திட்டிக் கொண்டிருந்தான். காத்த முத்துவின் ஒரு கையையும் கழுத்தையும் பிடித்து தரையோடு தரையாக இழுத்துக் கொண்டுபோய் கீழ்த்தளத்துக்குச் செல்லும் படிகளில் தள்ளிவிட்டான். காத்த முத்து படிகளில் உருண்டுபோய் தளத்தில் விழுந்தான்.  முகத்திலும் முதுகிலும் கைகளிலும் காலிலும் ஊமை அடிகள் பட்டிருந்தன.  கைகால்களில் சிராய்ப்புக்கள். எல்லாம் மொத்தமாக ரொம்ப வலித்தது.  கொஞ்ச நேர விடுதலை உணர்வின் விலை மிக அதிகமாக இருந்தது.  அதற்குப் பிறகு காத்தமுத்து மேல்தளத்துக்குப் போக முயற்சி செய்யவில்லை.

            பயணிகள் தங்கள் மூட்டை முடிச்சுக்களைத் தங்கள் அருகிலேயே வைத்துக் கொண்டு உண்டு உறங்கி எழுந்தனர். அது அவனுக்கு திருவிழாக் கூட்டத்தை நினைவுபடுத்தியது.  தளவாய்புரத்தில் குலதெய்வக் கோயில் படைப்பு நடக்கும் நாளில் கூட்டம் இப்படித்தான் அங்கங்கே உட்கார்ந்து, படுத்துக் கிடக்கும்.  ஆனால் இங்கே இருக்கும் மயான அமைதி இருக்காது. நையாண்டி மேளம், கரகாட்டம், வில்லிசை, கம்பு விளையாட்டு,  சாமியாடி வேட்டைக்குக் கிளம்பும் வேகம், திடீரென்று எல்லா ஓசைகளும் அடங்கி, பலியாடு அசையாமல் நிற்கும் போது அதன் கழுத்தில் ஓங்கி வேகமாக இறங்கும் அரிவாள், வெட்டுப்பட்ட வேகத்தில் தெறித்து விழுந்து துடிக்கும் ஆட்டின் தலை – இதையெல்லாம் நினைத்ததுக் மனது ஏங்கியது.  அங்கேயே இருந்திருக்கலாமோ? ஆனால் எந்தத் தொழில் செய்வது? வயிற்றுக்கு என்ன செய்வது?

            பல மாதங்களாகக் கடலில் போய்க் கொண்டிருந்தான். மாடசாமி சொல்லியிருந்தான் என்றாலும், ஓரே கூடத்துக்குள், எல்லாவிதமான நாற்றங்களுக்குள் வெறும் கஞ்சிக்காகக் காத்துக் கிடப்பதை எண்ணிச் சலிப்படைந்தான்.  கப்பலிலிருந்து தப்ப முடியாது.  கரை எங்கே என்று தெரியாத  கடலில் குதித்தால்…இத்தனை துயரங்களையும் தாண்டி போக வேண்டிய இடம் ஒன்று இருக்கிறதே.  தாய் தகப்பன் யாருக்கும் இவன் இப்படி இருப்பான் என்று தெரியாது.  இப்போது அதைத் தெரிவிக்கவும் முடியாது. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று இவனால் யோசிக்கக் கூட முடியவில்லை.  தன்னை எங்காவது விற்றிருக்கலாம்.  அவர்களுக்காவது பணம் கிடைத்திருக்கும்.  யாருக்கு விற்பது?  பஞ்ச காலத்தில் வேலையே இல்லை.  அதற்குக் கூட வக்கில்லாமல் போய்விட்டது.  விற்றுவிட்டாலும் மீண்டும் அவர்களைப் பார்ப்பது கஷ்டம். யார் வாங்குவாரோ?  அதற்கு இது தேவலை.  எப்போதாவாது ஊருக்கு வருவதைக் கனவுகாணலாம்.

ஊர்களிலிருந்து மக்கள் கூட்டங் கூட்டமாக வடக்கு நோக்கிப் போனார்கள்.   வடக்கிலிருந்து பலர் தெற்கே வந்தார்கள்.  கண்காணாத இடத்தில் தகுதிக்குக் குறைவான வேலைகளைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம்.  இருக்கும் இடத்தில் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

            கும்பினி அரசு பட்டணங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் கஞ்சி காய்ச்சி ஊற்றுவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.  அதற்கும் பெருங்கூட்டம் அடிதடி. கிராமங்களில் அதுவும் கிடையாது.  யாருக்கும் வயிறு நிறையவில்லை. வயிறு காயாமல் இருக்க அது உதவியது.

            ஒருவழியாக எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு காத்தமுத்து துறைமுகத்தில் இறங்கியபோது, குற்றுயிரும் குலையுயிருமாய்ப் பிழைத்துக் கிடந்தான்.  துணிமூட்டையைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அப்படியே விழுந்துவிடுவான் போல் தோன்றியது.  ஆட்களை கொஞ்சம் கொஞ்சம் பேர்களாகப் பிரித்து அங்கிருந்து தனித்தனி சரக்கு மோட்டார்களில் ஏற்றி உள்நாட்டுக்குள் அனுப்பிவைத்தார்கள்.  ஒவ்வொரு இடத்திலும் புரியாத மொழியில் பேசினார்கள்.  போ, வா என்ற சைகை மட்டும்தான் காத்தமுத்துவுக்குப் புரிந்தது.  ஒவ்வொரு இடத்திலும் ஆஜானுபாகுவான கறுப்புத் தடியர்கள், கைகளில் சாட்டைகள், கம்புகள் வைத்துக் கொண்டு வழிகாட்டினார்கள்.  மீறினால் எந்த மொழியில் பேசுவார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

            தப்பித்துச் செல்ல முடியாத இடத்தில் சிக்கிக் கொண்டோம் என்று புரிந்தது.  கூட வந்தவர்களுடன் பேசினால் கூட தடியர்கள் கோபத்தில் ஏதேதோ கத்தினார்கள். கடைசியாக அவன் இருக்க வேண்டிய இடம் வந்தது.  அப்பாடா என்று பெருமூச்சுவிட்டான்.  இனிமேல் பயணம் செய்ய வேண்டியதில்லை என்ற நினைப்பே அமைதியைத் தந்தது.  

            மரக் கம்புகளாலும், மூங்கில் தடிகளாலும் கட்டிய, தென்னை ஓலைகள் பரப்பிய குடிசைகளின் வரிசையில் இருந்த ஒரு குடிசையை அவனுக்குக் காட்டினார்கள்.  குளிர் மிக அதிகமாக இருந்தது.  அங்கிருந்தவன் தன்னை வேலூரைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.  அவனுக்கு மூன்று வருடங்கள் முடிந்து விட்டதென்று அடுத்த ஆண்டு ஆள் கிடைத்ததும் ஊருக்குப் போய்விடுவானென்றும் சொன்னான். 

            ’இவங்க எல்லாம், என்ன பாஷை பேசுராங்க,  வெள்ளைக் காரனும் இருக்கான், கறுப்பா எருமைமாடுமாதிரியும் இருக்கான்.  யாரு என்னன்னே தெரியலையே! இந்த பாஷை நல்லாத் தெரியுமா?

            வேலூர்க்காரன் சொன்னான் ‘அவங்க பேசுறது, ஃபிரெஞ்ச்’

            ’உனக்கு நல்லாப் பேசத் தெரியுமா?’ 

             கொஞ்சம் தெரியும்.  மீதி சாடையை வச்சு புரிஞ்சுக்குவேன்’ அவன் பேசியது காத்தமுத்துவுக்கு ஆசுவாசமாக இருந்தது. ஆனாலும் அவன் ஓரிரு வருடங்களில் போய்விடுவான் என்று வேதனையும் இருந்தது. 

            வேலூர்க்காரன் சொன்னான் ‘பாஷையை நல்லாப் பேசப் படிச்சுக்கோ. வெள்ளைக்காரனை நல்லாப் பாத்துக்கிட்டேன்னா கொஞ்சம் சுகம் உண்டு.

            ராமையா சொன்னது ஆசுவாசம் கிடைத்தமாதிரி இருந்தாலும், அவன் போய்விடுவான் என்ற கவலையும்  இருந்தது.    

            ’கவலைப்படாத, கூலி ஒழுங்காக் கிடைக்கும். கஞ்சி சாப்பாடு எல்லாம் நீயே பண்ணிக்க வேண்டியது தான். மீனும் கிடைக்கும், எல்லாக் கறியும் கிடைக்கும் ‘அதுவும் கிடைக்கும்’ என்று தூரத்தில் சென்ற கறுப்பினப் பெண்ணைக் காட்டிச் சொன்னான். வெள்ளைக்கார முதலாளி எல்லாத்துக்கும் ஏற்பாடு செஞ்சுருக்கான்.’

            நாளாக நாளாக கரும்புத் தோட்டத்தில் ஒரு உயிராக ஆகிவிட்டான் காத்தமுத்து. முதலில் ராமையாவுக்குத் துணையாக வேலைக்குப் போனான்.  ஒவ்வொரு வார்த்தையாக ஃபிரஞ்ச் மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான்.  வேலையும் தெரிந்து மொழியும் தெரிந்தால் பல சாதகங்கள் கிடைத்தன.  வேலை மிகவும் கடுமையாக இருந்தது.  பல மாதங்களுக்குப் பிறகு வயிறாரச் சாப்பிட்டான்.  உடல் தேறிவந்தது.  பதினைந்து நாட்களுக்குள் பல ஹெக்டேர் நிலங்களில் விளைந்த கரும்புகளை வெட்டி எடுக்க வேண்டியிருந்தது.  இவனைப்போலவே வேலை செய்ய பல விதமான மனிதர்கள் அங்கே இருந்தனர். கறுப்பர்கள், மஞ்சள் நிறத்தவர், தமிழர்கள், தமிழர்களைப் போலவே தெரிந்த தெலுங்கர்கள் வட இந்தியர்கள்.  அதுவெல்லாம் அவனுக்குப் போகப் போகத் தெரிந்தது.  வேலையில்லாமல், வயிறு நிறையாமல் திரிந்த பல வருடங்களை நினைத்துக் கொண்டான்.  இங்கோ வேலை வேலை எப்போதும் வேலை இருந்து கொண்டே இருந்தது.  கூலியும் கிடைத்தது.  ஆனால் ஆட்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்கும் அமைதியில்லை.

            நாட்கள் மாதங்களாகி, வருடங்களாகிவிட்டன. உடம்பு தேறி, உழைப்பால் அவனது தசைகள் இறுகி முறுக்கேறியிருந்தன.  அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உடம்பின் தசைகளை, அவற்றின் முறுக்கைக் காட்ட வேண்டுமென்று நினைத்தான்.  அப்போதெல்லாம், அவர்களும் இங்கே வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.  ஆனால் இத்தனை தூரம் கடல்பயணத்தை அவர்கள் உடம்பு தாங்காது.  நான் போக வேண்டும் என்று நினைத்துக் கொள்வான்.  இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு போக வேண்டும்.  ஆனால் அந்த இன்னும் கொஞ்சம் என்று அவனுக்குச் சேரவே இல்லை. சேர்த்த பணம் எல்லாம் கப்பல் செலவுக்கே போதுமானதாக இருந்தது. கூலி வேலை செய்து பிழைக்கலாம்.  கடல்பயணம் செய்ய முடியுமா?

            அவனுடைய குடும்பத்தினருக்கு அவன் உயிரோடு இருக்கிறான இல்லையா என்பது கூடத் தெரியவில்லை.  அவர்கள் இருக்கிறார்களா என்று அவனுக்கும் தெரியாமலே போய்விட்டது. அவன் திரும்பி வரவேயில்லை.