சாத்தியங்கள்
மரியாவுக்கு,
எழுதத் தொடங்கும்போதே எனக்குப் பதட்டமாக
இருக்கிறது. எழுத நினைக்கும் போதே இந்தப் பதட்டம்
தொடங்கிவிட்டது. கடிதம் எழுதுகிற வழக்கம் மிகவும்
குறைந்துபோன ஒரு காலகட்டத்தில் நான் வாழ்கிறேன் என்பது எனக்குத் தெரியும். எந்த நிமிடத்திலும் யாருடனும் கைபேசி மூலம் தொடர்பு
கொண்டு பேசிவிடலாம். ஆனால் அப்படியெல்லாம்
பேசிவிட முடியாத விஷயங்கள் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கின்றன.
அறுபத்தி ஐந்து வயதில் இப்படி ஒரு கடிதம்
எழுத வேண்டிய அளவு நான் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்வாய்
என நம்புகிறேன். வேறு வழியில்லை. இது உன் கையில் கிடைத்ததும் உனக்குக் ஏற்படும் உணர்ச்சிக்
கொந்தளிப்பை என்னால் கற்பனை செய்ய முடிகிறது.
நீ கோபப்படலாம். நான் ஒரு பைத்தியக்காரன் என்று எள்ளி நகையாடலாம். இது ஒரு தகாத
செயல், ஏன் குற்றம் என்று கூட நீ கருதலாம்.
அதற்கான தண்டனை கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் முறையிடலாம் அல்லது போலீஸ்
உட்பட யாரிடமாவது இவருக்குத் தண்டனை வழங்குங்கள் என்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அல்லது படித்துவிட்டுக் கிழித்துப் போட்டு விடலாம். அது சுலபமானது. ஆனால் இவற்றையெல்லாம் விட இன்னொன்றும் நடக்கலாம்.
இதைப் பொறுமையுடன் படித்து அதில் சொல்லப்பட்டதை நீ கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். அந்த நப்பாசைதான் என்னை இந்தக் கடிதத்தை எழுதவைக்கிறது. கருத்தில் கொண்டபின்பு அவற்றை நிராகரிக்கலாம். அதற்கே அதிகம் வாய்ப்பிருக்கிறது. என் பேராசை என்று சொன்னால் அது இதுதான். இதுவெல்லாம்
நடக்காமல் நான் சொல்ல வந்ததை நீ ஏற்றுக் கொள்ளலாம். அது வெற்றி பெறுவதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பிருந்தாலும்
அதற்காகவே இதை எழுதுகிறேன்.
முதலில் உனக்கு ஏற்படக்கூடிய தயக்கம் இதுவாக
இருக்கலாம். இந்த வயதில் இது என்ன குழப்பம்? இது இந்த வயதில் ஏற்பட்ட குழப்பம் இல்லை என்றே நான்
சுட்டிக் காட்ட விழைகிறேன். நமது இளம்பருவத்தில்,
அதுவும் முதிர் இளம் பருவத்தில், அதாவது இருபத்திஐந்து வயதை ஒட்டிய பருவத்தில் நாம்
அடைந்த ஒருவரை ஒருவர் பார்ப்பதில் அல்லது பேசுவதில் அடைந்த பரவச நிலையில், அது காதல்
என்று தெளிவாகத் தெரியாத நிலையில் ஏற்பட்ட குழப்பத்தில் தான் இதன் தொடக்கம் இருக்கிறது. தயங்கித் தயங்கி நெருங்கிவந்து, பிறகு சொல்ல முடியாமல்
விலகிப் போன தவறுகளின் விளைவு இன்னும் என் நெஞ்சில் தொடர்ந்து கொண்டிருப்பதை நான் உன்னைத்
தவிர யாரிடம் தெரிவிக்க முடியும்.
இதைச் சொல்வதற்காக இத்தனை காலம் ஏன் காத்திருந்தேன்
என்று கேட்பாய். அதற்கும் உனக்கு விடை தெரிந்தே
இருக்கும் என்றே நினைக்கிறேன். பல கேள்விகளுக்கு நமக்கு விடைகள் தெரிந்திருந்தாலும்,
ஓர் கட்டத்தில் அவற்றைக் கேட்டே தீரவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறதல்லவா? அதுபோன்றதுதான்
உன் கேள்வியும். இதற்கு முதல் காரணம், நீ தான்.
நான் அன்று கண்ட உருவமும் உள்ளமுமாகவே நீ இருப்பதுதான். உன் முடி கொஞ்சம் வெளுத்திருப்பதும், நடை தளர்ந்திருப்பதும்,
முகத்தில் சில சுருக்கங்கள் இருப்பதும் ஒரு பொருட்டே அல்ல. அவற்றின் உள்ளுறைந்திருக்கும் நீ எதுவோ அதையே நான்
விரும்பினேன். வெள்ளிக் கம்பிகளாய் இருக்கும்
தலைமுடிக்குள் தெரிந்தும் தெரியாமலும் ஒளிந்துகொண்டிருக்கும் பல கருத்த முடிகளைப் போலவே
என் நினைவுகள், அவை நினைவுகளோ கனவுகளோ இல்லையென்றாலும் என்மீது நீ வைத்திருந்த எதுவோ,
அதைக் காதலென்று சொன்னாலும் சரி அல்லது வேறு ஏதோ என்று சொன்னாலும் சரி, அந்த உணர்வின்
மீது நம்பிக்கை வைத்தே இதை எழுதுகிறேன்.
இதைக் வயதான ஒருவனின் வயதுக்கு மீறிய காமம்
என்று மற்றவர்கள் சொல்லலாம். அப்படி நீ சொல்லமாட்டாய்
என்றே நினைக்கிறேன். என் மனைவி இறந்து மூன்று
ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. என் மகன் அமெரிக்காவிலும்,
மகள் ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறார்கள். எப்போதாவது
வந்து ஒருவாரமோ இரண்டு வாரமோ இருந்து தந்தைக்கு ஆற்றும் நன்றியை செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள். இந்த நிலையில் தனிமையில் வாடும் எனக்கு உன் நினைவு
வருவதை யார் தடுக்க முடியும். நான் விரும்புகிறேனோ
இல்லையோ உன் நினைவு வந்துவிடுகிறது. முப்பத்தி
ஐந்து ஆண்டுகள் கழிந்தபின் மீண்டும் ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு
வந்தது அதனால்தான்.
முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக நான் உன்னை
நினைக்கவே இல்லை என்று சொன்னால் அது பொய்யாக இருக்கும். அவ்வப்போது உன் நினைவுகள் அலைக்கழிக்க, நான் தவித்துப்
போயிருக்கிறேன். சமூகம் என்ற ஒன்று இளவயதில்
நம்மை ஒன்று சேர விடவில்லை என்பதை நினைக்கும் போதெல்லாம் என் நெஞ்சு கொதித்தது. ஆனால் பொங்கிவழியும் பால்போல அந்தக் கோபம், நிகழ்காலத்தின்
தீயில் பொங்கி வழிந்து கருகிவிட்டன.
நீ கிறித்தவ மதம் என்றும் நான் இந்துவென்றும்
அது ஏதோ இணைக்கவே முடியாத தடை, பாவம், மரபு, சமூக நடைமுறை என்றெல்லாம் நாமே கற்பித்துக்
கொண்ட எண்ணங்களால் ஒருவரிடம் ஒருவர் சொல்லமுடியாத பெருங்காதலுடன் நாம் பிரிந்தோம் என்றே
நான் நினைக்கிறேன். இத்தனை வருட வாழ்வில் இதுவெல்லாம் காதெலென்னும் உண்மையின் முன்
உதிர்ந்துவிடும் காய்ந்த இலைகள் என்று தெரிந்துகொண்டிருக்கிறேன். நீ இதுவரை திருமணம் முடித்துக் கொள்ளாமல் இருப்பது
என்னை இன்னும் துயரத்தில் ஆழ்த்துகிறது. அதில்
என் சுயநலம் உண்டு. நேற்றுவரை கனவாக இருந்த
ஒன்று இன்று நிறைவேறும் என்று தோன்றும் போது ஏற்படும் மகிழ்ச்சிதான் அது. சுயநலம் மட்டுமே அதற்குக் காரணம் அன்று. எத்தனையோ
வருடங்களாகத் துண்டிக்கப்பட்ட மின்சாரத் தொடர்பு இன்று மீண்டும் ஏற்படும்போது, மின்சாராம்
பாய்வதை எல்லோரும் உணரமுடியும். அது ஜிவ்வென்று
மனதிலும் உணர்விலும் பாய்வதை என்னால் நிறுத்த முடியவில்லை.
இறந்து போய்விட்ட உனது கணவனின் மீது நீ
வைத்திருக்கும் பற்று எனக்குத் தெரியும். அது
நீ அவன் மீது கொண்டிருக்கும் கடமை உணர்வை எந்த நேரமும் பறைசாற்றும். அவருடைய ஆன்மா உனக்கு என்றும் நன்றி சொல்லும். நீ
அவருக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும் செய்த சேவையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. நீ, நான் இப்போது வைக்கிற கோரிக்கையை பரிசீலிக்கிற
நேரத்தில் இவை யாவும் உன் மனக்கண்ணில் ஊர்வலம்
போகும்.
நீ தனிமையில் ஏதோ ஒரு முதியவர்களின் காப்பகத்தை
மூன்று வேளைச் சோறும், கொஞ்சம் பக்தியும் இருந்தால் போதும் என்று வாழப் பிறந்தவள் அல்ல.
உல்லாசமாக ஒரு துணைவனுடன் இருக்கின்ற இன்பத்தை எந்தத் தத்துவஞானியும், எந்த சாமியாரும்
மறுத்துவிட முடியாது. அவர்கள் உண்மையான துறவிகளாக
இருப்பார்களே ஆனால் அதைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காதலுக்குக் காமம் துணைசெய்யும், என்பது இந்த வயதில்
உடலுறவில் ஈடுபட முடியாது என்ற நிலை வந்த பிறகே ஒவ்வொருவருக்கும் புரியும். உடலும் உடலும் உரசிக் உறவு கொள்ளும் போது ஏற்படும்
போதே காமம் என்று இளவயதில் நினைதிருந்தேன். ஆனால், தனிமையில் மூன்றாண்டுகள் தவித்த
போதே எனக்குப் புரிந்தது. என்னுடன் படுத்து,
கைமேல் கைபோட்டு, அல்லது கைகோர்த்துக் கொண்டு, உடலுறவு அற்று, உடலோடு உடல் உரச ஒரு
துணையாக இருப்பது எவ்வளவு ஆறுதலான உறக்கத்தைத் தரும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன்.
ஒரு தாயின் அரவணைப்பில் உறங்குவதுபோல நானும்,
ஒரு தந்தையின் அரவணைப்பில் உறங்குவது போல நீயும் இருப்பதைக் கனவு காண்கிறேன்.
சிறு வயதில் நாம் பேசிக் கொள்வதற்கு எத்தனையோ
விஷயங்கள் இருந்தன. அவற்றில் நமது காதல் ஒரு பொருளாக இருந்ததில்லை. அது, நம்மிடம் எல்லா நேரத்திலும் மறைந்திருந்த பேசாப்
பொருளாகவே நின்று விட்டது. நாடகம், சினிமா,
இலக்கியம், அரசியல் என்று பல விஷயங்களில் நான் பகிர்ந்துகொண்ட கனவுகள், சாத்தியங்கள்
எதுவும் நடக்காமல் போனாலும், இன்றும் எனக்கு அவற்றின் மீதான கவர்ச்சி குறையவில்லை.
உனக்கும் அப்படி இருக்கலாம் என்று நினைக்கிறேன். இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இப்போதும் நாம் அவற்றைப் பற்றிப் பேசும் போது அல்லது அவற்றின் சாத்தியங்களை நடைமுறைக்குக்
கொண்டுவருவது பற்றிப் பேசும் போது, காதலுடன் காமம் ஒரு பேசாப்பொருளாக நம்மிடையே ஒளிந்துகொண்டிருக்கும்.
ஆனால் அவையெல்லாம் ஒரு பொருட்டல்ல. நாம் ஒருவருக்கருகில்
ஒருவர் இருப்பதே போதுமானது. நமது உடல்கள் அழிந்துகொண்டிருக்கும் இந்த முதுமையில், இது
சாத்தியமானது என்றே தோன்றுகிறது. ‘அழிந்து
கொண்டிருக்கும்’ உடல்கள் அழியாத கனவுகளை இளமையில் சுமந்து கொண்டிருக்கும் போதே இது
உண்மையாகத்தான் இருந்தது. ஆனால் அவை நமக்கு,
குறைந்தபட்சம் எனக்கு, புரியவில்லை. பெற்றோரின்,
உலகத்தின் தடைகள், ஒழுக்க, சாதி, மத வரையறைகள் ஏதோ நிரந்தரமானவை போலத்தெரிந்தன. மரணம் என்னும் பேருண்மையின் அருகில் நாம் நெருங்க
நெருங்க அவையெல்லாம் பொசுங்கிப் போவதை என்னால் காண முடிகிறது. உன்னாலும் காண முடியும்
என்றே எனக்குத் தோன்றுகிறது.
இதைப்பற்றியெல்லாம் யோசிக்க ஏதுவான காரணங்கள்
போதுமானதாக இருக்கின்றன. ஆனால் இவையெல்லாம்
இல்லாத போது உன் மீது நான் கொண்ட நேசம் நிஜமானது.
அது சொல்லப்படாமலே போயிருக்கும் வாய்ப்பே அதிகம் இருந்தது. ஆனால் இன்று ஒரு வாய்ப்பு ஏற்படும் போது சொல்லிவிட
வேண்டும் என்றே முடிவு செய்தேன். நமக்கு வாழும்
காலம் அதிகம் இல்லை. ஆனால் அன்பு கொண்ட இருவர்
சேர்ந்து வாழ்வதற்கு மிகக் குறைந்த காலம் கூடப் போதுமானது. ஏனெனில் மனித வாழ்வின் உன்னதமான நோக்கம், நிகழ்காலத்தில்
மகிழ்ச்சியாக வாழ்வதுதானே! உனது உள்ளம் எனக்குத்
தெரியும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.
உனது பதில் எப்படியானதாக இருந்தாலும் அதை
ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது. எனது பேராசையை இப்போது வெளிப்படுத்தாவிட்டால்
அது காய்ந்து கருகிவிடும். ஒரு மலர் பூக்கும்
நேரத்திற்காகக் காத்திருக்கும் தோட்டக்காரன், அது வாடுவதை அந்த நேரத்தில் ஏன் நினைக்க
வேண்டும்?
தனிமையில்
வாடும்,
பஷீர்
No comments:
Post a Comment