Wednesday, November 25, 2020

 

மணம்

               என் மனைவியின் உடலைக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைப்பதற்கு முன்னால், அதை முத்தமிட்டுவிட வேண்டும் என்று நினைத்தேன்.  செய்ய முடியுமா என்று தெரியவில்லை.  குளிரூட்டப் பயன்படும் கண்ணாடிப் பெட்டி அப்போதுதான் ஆஸ்பத்திரியிலிருந்து வந்த வேனிலிருந்து வெள்ளை உடையணிந்தவர்கள் வீட்டுக்குள் கொண்டுவந்து இறக்கிவைத்தார்கள்.  ஏற்கனவே வீடெங்கும் மனிதர்கள் தென்படத்தொடங்கியிருந்தார்கள். இனி ஒருபோதும் என் மனைவியை முத்தமிட முடியாது, என்ற வேதனை என்னுள் இறங்கியது. இதுவரையும், அவளுக்கு  என் முத்தத்தைப் பெற விருப்பம் இருந்ததில்லை.  ஆனால் அந்த நாள் அவள் இறப்பதற்குள் வந்துவிடும் என்று கனவு காணும் வாய்ப்பு இன்றுடன் முடிந்துவிட்டது.  இடாத முத்தத்தை இப்போது இடுவது அவளுடைய ஆசைக்கு எதிரானது.  ஆனால் எனக்குள்ள ஆசையை இன்றே நிறைவேற்றிவிட வேண்டும்.  அந்த என் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இருக்கிற கடைசித் தருணம் இதுதான்.  அதற்கான நேரம் இன்று கடந்துவிடும்.

               அவளுடைய எதிர்ப்புக்கு இனி ஒரு மதிப்பு இல்லை. என் விருப்பமும், அவள் எதிர்ப்பைத் தெரிவிக்க இயலாத நிலையும். அப்படி எதிர்ப்புத் தெரிவித்திருந்ததையும் நான் பொருட்படுத்தவும் தேவையில்லை. ஏனேனில் அது அவளுக்குத் தெரியப்போவதில்லை. எனவே கடைசி முறையாக அல்லது முதல் முறையாக, அவள் உடலைக் கண்ணாடிப் பேழையுள்ளே வைப்பதற்கு முன்னால், என் மென்மையான, தடித்த, குறுகிய மீசை வளர்ந்து குத்தும்  கிழட்டு உதடுகளால், என் மனைவியின் உணர்வற்ற, உதடுகளில் ஒரு முத்தமிட அருகில் சென்றேன்.  அதற்குள் வேறு எதையோ யாரோ கேட்டார்கள்.  என் கவனம் சிதறிவிட்டது.  ஆஸ்பத்திரியிலிருந்து வந்த உடலைக் குளிப்பாட்ட வேண்டாம் என்று யார் யாரோ பேசி முடிவெடுத்திருந்தார்கள்.  நான் இங்கே இருக்கிறேன் என்பதை நானேதான் எனக்கே நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. இந்த மனிதர்களைப் பொறுத்தவரை நான் அவள் கணவன். இந்த சமயத்தில் அதற்குமேல் எதுவும் இல்லை. எனக்கும் அவளுக்கும் மட்டுமேயான தனியிடம் ஒன்று என்றுமே இருந்ததில்லை.  இருவரும் பேசிக்கொள்ளும் முறையும், வாதங்களும், நினைவுகளும், ஆர்வங்களும் ஏன் எதுவுமே பொருந்தியிருக்கவில்லை.  ஆனால் நாற்பது ஆண்டுகள் சேர்ந்தே வாழ்ந்துவிட்டோம்.

               நான் என் மனைவிக்குக் கடைசி முத்தம் இட்டு விடைபற்றுக் கொள்ள விரும்புவதை மற்றவர்கள் யாரும் புரிந்து கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு அது ஒரு சாதாரண விஷயமாக இருந்திருக்கலாம். ஆனால் அதை அனைவருக்கும் முன்னால் செய்வதோ அல்லது அறிவிப்பதோ என்னால் முடியாது.  அப்படிக் கொடுத்திருந்தால், மேற்கத்திய பண்பாட்டின் பாதிப்பில் வந்த முத்தம் என்று பலர் நினைத்திருக்கலாம்.  ஆனால் அவர்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் என்னிடம் உண்டு.  அதில் ஒன்று, நான் அது வரை என் மனைவிக்கு முத்தம் கொடுத்ததில்லை. முத்தம் கொடுக்காமலேயே கணவனும் மனைவியுமாக, பிள்ளைகளும் பெற்றுக் கொண்டோம்.  அதற்கெல்லாம் முத்தம் அவசியமில்லை என்பதைப் பின்னாளில் தெரிந்து கொண்டோம். என்னைப் பொறுத்தவரை என்னுடைய கடைசி முத்தம் என்ற ஒன்று இல்லாமலேயே என் மனவியின் உடல் சவப்பெட்டிக்குள் போய் முடங்கிவிட்டது.  அது தான் என் முதல் முத்தமாகவும் இருந்திருந்திருக்கக் கூடும்.  எனது துரதிருஷ்டம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் அவள் பார்வையில் அது அதிருஷ்டமாகிவிட்டது. அவள் என் முத்தத்திலிருந்து தப்பியே விட்டாள்.

               என் மனைவிக்கும் எனக்கும் உள்ள வேறுபாடுகளில் தலையாய வேறுபாடு திருமணம் முடிந்த அன்றே எனக்குத் தெரிந்து விட்டது. கருத்து ஒற்றுமை, கருத்து வேறுபாடுகளைப் பார்த்தா திருமணம் நடக்கிறது? மாடுகளுக்குப் பல்லையும் வேறு பலவற்றையும் பார்ப்பது போலப் பெண்ணையும் ஆணையும் பார்க்கிறார்கள். வெளிப்படையாகத் தெரிகிற குணங்களைப் பார்க்கத்தான் கற்றிருக்கிறோம்.  உள்ளிருப்பதை அறியவோ அதற்கு மதிப்புத்தரவோ இதுவரை நமது பண்பாடு நமக்குச் சொல்லித்தரவில்லையே. இப்படி அதையும் இதையும் பற்றி யோசித்து நான் வாழ்க்கையை வீணாக்கிவிட்டதாக அவள் கடைசிவரை சொல்லிக் கொண்டிருந்தாள்.  அது உண்மைதான் போலும்.

               இப்படி நான் யோசித்துக் கொண்டிருப்பதற்குள் உடலை கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துவிட்டார்கள். பக்கத்து வீட்டுப் பெரியவர் பவர் பிளக்கில் சுவிட்சையும் ஆன் செய்துவிட்டார். இனி நான் அவளைத் தொடமுடியாது. பிறகு என்ன ஏதேதோ நடந்து கொண்டே இருந்தது.  நானும் இருந்தேன். நடுநடுவில் அவள் உபயோகிக்கும் ஒரு சென்டின் மணம் அடித்துக் கொண்டிருந்தது. எனக்குச் சென்ட் வாசனை அவ்வளவாகப் பிடிப்பதில்லை.

No comments:

Post a Comment