Thursday, December 01, 2016

தமிழின் பெயரால்

                தமிழின் பெயரால் தமிழ்நாட்டில் அரசியல் சமூக இயக்கங்கள் இயல்பாகவும், பல நேரங்களில் மிகையாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.   சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னால் திராவிடம் என்ற கருத்தாக்கம் பெரும்பாலும் வழக்கில் இருந்தது.   அது தமிழ் தவிர மற்ற மொழி பேசும் பகுதியினரையும் குறித்தது.  அதற்கும் முன்னால், மத்திய காலத்திலும் அதற்கு முன்னும் தமிழ் பேசும் பகுதிகளை பல அரசர்கள் ஆண்டு வந்தனர்.   அவற்றில் சில ஆட்சிப் பகுதிகள், மற்ற மொழி பேசும் பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தன.  இந்தியா என்று இன்று அழைக்கப்படுகிற நிலப்பகுதியின் பெரும்பாலான நிலைமை இது தான்.  எனவே தமிழ் மொழி ஒரு அரசியல், புவியியல் வகைமையாக அந்தக் காலங்களில் உருப்பெற்றிருக்கவில்லை.  எனவே தமிழ்நாடு, தமிழ்நிலம் என்ற கருது கோள், இந்தியா என்ற புவியியல் வரையறை தோன்றிய பிறகே  அரசியல் வகைமையாக உருவாகியது,.

                கிழக்கிந்தியக் கம்பெனி வருவதற்கு முன்னால் அரசியல் நிலப்பரப்பை எடுத்துக் கொண்டால், தென் தமிழகத்தில் நாயக்கர்களும், தஞ்சாவூர்ப் பகுதிகளில் சரபோஜி போன்ற மராத்திய அரசர்களும், வட தமிழகத்தில் ஆற்காட்டில் ஆற்காடு நவாப் போன்ற வேற்று மொழி பேசும் மன்னர் பரம்பரையினர் நினைவுக்கு வரக்கூடும். அந்தந்தப் பகுதிகளில், தமிழ்நாடு என்ற அரசியில் புவியியல் கருதுகோள் இருந்த்தில்லை. புவியியல் அடையாளமாக, அதுவும் மிகத்தெளிவான வரையறைகளுடன்  இருக்க வாய்ப்பு இல்லை.  தமிழுக்காகவோ, தமிழ்மண்ணிற்காகவோ யாரும் உயிர்நீத்த வரலாறுகள் இல்லை. ஆனால், ஊருக்காகவும், ஜாதிக்காகவும் மதத்துக்காகவும் போர்களில், சண்டைகளில் பலியானவர்கள் உண்டு, உயிர்நீத்தவர்கள் உண்டு.  எனவே, தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வழங்கி வந்தாலும் அதன் அரசியல் வெளிப்பாடாக தமிழ்நிலம் என்ற கருதுகோள் இருபதாம் நூற்றாண்டு வரை எழவில்லை. இது இன்று அரசியல் தலைவர்களாக இருப்பவர்களுக்கு உவப்பானதாக இருக்காது.

                சேர சோழ, பாண்டிய அரசுகள் கோலொச்சிய காலத்திலும் அவை தமிழ் பேசும் பகுதிகள் தவிர, மற்ற மொழிபேசும் பகுதிகளை உள்ளடக்கி இருந்த்தால், அக்காலத்தில் தமிழ் தேசியம் பேச ஆட்கள் இல்லை. அரசர்களுக்கும் அது தொந்தரவாக இருக்குமே தவிர உவப்பானதாக இருக்காது.  பேரரசுகள் பல்மொழிப்பகுதிகளை ஆண்டன என்பதால்தான் அவை பேரரசுகளாக இருந்தன.

                தென்னாட்டில் சமணம் பௌத்தம் பரவிய காலத்தில்தான் எழுத்தறிவு பரவ ஆரம்பித்திருக்க வேண்டும்.  ஏற்கனவே பரவியிருந்த மதங்களை மீறீ புதிய தத்துவங்களை, புதிய புனிதங்களை, புதிய வழிபாட்டு முறைகளை, புதிய தேவதைகளை அறிமுகம் செய்ய இது இன்றியமையாதது.  மேலும் சமண, பௌத்த மதங்களுடன் எழுத்து முறைமட்டுமன்றி, வழக்கிலிருந்த வட மொழிகளும் (பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம்) பரவி இருக்க வேண்டும்.  எழுத்துமுறை அறிமுகமானதினாலும் அல்லது இன்னும் சிறப்பான எழுத்துமுறை பரவியதாலும், தமிழின் இலக்கண இலக்கிய நூல்கள் முதல் முறையாக இசைப்பாடல் வடிவிலிருந்து, எழுத்து வடிவில் மாறி இருக்கலாம்.  தொகை நூல்கள் தோன்றியதன் வரலாற்றுக் காரணங்களை இதிலிருந்து தேட வாய்ப்பு இருக்கிறது.  சமணத்தைப் பரப்பத் தமிழ்கற்று அதில் இலக்கியம், இலக்கணம் எழுதி சமணத்தைத் தமிழ்மூலம் வளர்த்தனர்.  அங்கும் தமிழ் என்ற அடையாளம் இரண்டாம் இடத்தில் தான் இருந்திருக்க வேண்டும். சமணத்தைப் பரப்பத்தான் தமிழே தவிர தமிழைப் பரப்பச் சமணம் இருந்த்தில்லை.

                இந்த வளர்ச்சியின் போக்கில், கைலாயத்தில் இருந்த சிவனை, தென்னாடுடையா சிவனாக மாற்றி, தமிழ்வழியே வழிபாட்டை மாற்றும் முயற்சிகள் தொடங்கி இருக்கலாம்.  சிவன் கைலாயத்தில் இருந்து வந்த்தால் அவன் ‘பச்சைத் தமிழனாக இருக்க வாய்ப்பே இல்லை.  இடைப்பட்ட காலத்தில் பக்தியின் வழியே முக்தியைக் காண விரும்பியவர்களுக்கு ‘மொழி’ ஒரு தடையாக இருந்த்தில்லை.  சைவமும், வைணவமும், சமணமும் போட்டியிட்ட காலத்தில் யாரும் தமிழ் ஒன்றை மட்டுமே அடையாளமாக்கிப் போரிட்டதாக இல்லை.   தங்கள் வழிபாட்டு முறைகளைக் காக்கவோ அல்லது பரப்பவோ தான் அவர்கள் சண்டைகளில் சச்சரவுகளில் ஈடுபட்டனர்.  சிவனை வழிபடத் தமிழே சிறந்தது என்றால், சிவனுக்குத்தான் முதல் இடமே தவிர தமிழுக்கோ அதன் அடையாளத்துக்கோ அல்ல.  சிவனுக்கு அடுத்த நிலையில் தமிழை வைக்கும் அளவுக்கு முன்னேற்றம் இருந்தது.  அதற்கும் காரணம் உண்டு.  பெருவாரியான மக்கள் விருப்பத்துடன் சைவ, வைணவ சமயங்களைத் தழுவ வேண்டுமெனில் அவர்களின் மொழியில் பாடல்கள், வழிபாட்டு முறைகள் இருக்க வேண்டிய தேவை இருந்தது.

                ஜஸ்டிஸ் கட்சி தோன்றும் போது திராவிடம் பேசப்படட்து.  அது ‘திராவிட முன்னேற்றக்கழகம் தோன்றும் போது, தமிழ் இனமாக சுருங்கி விட்டது.  திராவிட முன்னேற்றக் கழகம் பெயரில் தான் திராவிடம் இருந்த்தே தவிர, செயல்களில் அல்ல.  தமிழ் அடையாளத்தையே முன்னிருத்தியது.  அதற்கு மாறாக, வடவர், வடமொழி, அந்தணர் எனும் எதிரிகளை வரித்துக் கொண்டது.

                எப்படி இந்தியா என்ற கருதுகோள் விடுதலைப் போராட்ட்த்தினடியாகத் தோன்றியதோ அது போலவே, சுதந்திரம் கிடைத்தபின், தமிழ்நாடு,  தமிழினம் என்ற கருதுகோள் நிலப்பரப்பை ஒட்டி, புவியியல் யதார்த்தமாக மாறியது.  தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாடு என்ற பெயர் வைக்க முடிந்தது. அப்போதுதான் தமிழ்ப்பகுதிகள் புவியியல் உண்மையாக, அரசியல் சாசனைத்தின் அரவணைப்புக்குள் தோன்றியது.

                தமிழின் வரலாறு, இலக்கியம் எவ்வளவு பழைமையானதாக இருந்த போதிலும், அது மக்களாட்சி வரும் காலத்தில் தான் பெரும்பாலான மக்களின் பேசு மொழி ஒரு அடையாளமாக, புவியியல் யதார்த்தமாக மாறியது. அதற்கு முன்னர் மன்னராட்சிக் காலத்திலும், கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியிலும் அப்படி நிகழவில்லை.

                இப்போதும் தமிழ் அடையாளம் என்பது மொழி அடையாளமே தவிர, இன அடையாளம் அல்ல. தமிழனின் வரலாறு என்பது தனிச்சிறப்பான வரலாறு அல்ல. மனித குல வரலாற்றின் ஒரு பகுதியாக, மிகச்சிறு பகுதியாக இருக்கும்.

                இப்போது தமிழ் தமிழ் என்று உரக்கக் கூச்சல் இடுகிறவர்கள், அடையாளத்தை நிலை நிறுத்த, கோமாளித்தனமாக (தமிழ்த்தாய்க்குச் சிலை செய்தல் போன்ற) செயல்களில் ஈடுபடுவதை விட்டு இலக்கியங்களைப் பயில்வதிலும், பரப்புவதிலும், ஈடுபடுவதே நல்லது. 

No comments:

Post a Comment