Sunday, September 18, 2016

விநாயக முருகனின் ‘சென்னைக்கு மிக அருகில்’

விநாயக முருகனின் முதல் நாவலான ‘ராஜீவ் காந்தி சாலை’யைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை அதைப் படிக்க முடியவில்லை.  ‘வலம்’ படித்தேன். அதன் மையக் கருத்து நன்றாக இருந்தாலும், ’நரிகள்” மனிதர்களை நினைவூட்டினாலும்,  சரித்திர நிகழ்வுகளை மீளூருவாக்கம் செய்தாலும் அதன் மொழியில் இருந்த ‘Objectivity’ யின் காரணமாக நேரடியாக பாத்திரங்களின் துயரங்கள் செய்திகளாகப் பதிந்தனவே அன்றி, உணர்ச்சிபூர்வமாக என்னைத் தொடவில்லை. இன்னும் நெகிழ்வான மொழி தேவை என்று நினைத்தேன்.

            ’சென்னைக்கு மிக அருகில்’ நாவலின் தலைப்பு சென்னையின் நில வேட்டைத் தொழிலில்  (ரியல் எஸ்டேட்’ டை வேறு எவ்வாறு அழைப்பது) மிக அதிகமாகப் பயன்படும் ஒரு மாயச் சொற்றொடர்.  திருச்சியைக் கூடச் சென்னைக்கு மிக அருகில் என்று சொல்லும் காலம் வரும் என்கிறார் வி.மு.

            பயிர்த்தொழில் செய்பவர்களின் நிலைமை, சென்னைக்கு அருகாமையில் இருப்பதன் காரணமாக நலிந்து, பணமென்னும் மாயையில் சிக்கி அழிவதையும், அவர்களது நிலங்களைப் பெரும் முதலைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொள்வதையும் கருப்பொருளாகக் கொண்டிருக்கிறது இந்த நாவல்.

            நிலத்தையும், அதன்மூலம் பணத்தையும் வெகுவாகச் சேர்த்தவர்கள் பண்பாட்டுத் தளத்தில், தொலைக்காட்சி நிறுவன்ங்களையும், நடிகைகளையும், தயாரிப்பாளர்களையும் தமதாக்கிப் பண்பாட்டு ஆதிக்கத்தைச் செலுத்துவதையும் சொல்கிறது கதை.

            விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு எந்த இடமும் இல்லை.  மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கனவுகளைக் காட்டி நிலத்தை அபகரித்து, வீடு தேவைப்படுவோருக்கு கனவுகளைக் காட்டிப் பணமூட்டைகளைச் சேர்த்து நிகழும் இந்த விளையாட்டில், எளியவர்கள் யாவரும் தமது இடம் எது என்று தெரியாமலேயே தடுமாறி அலைந்து ஓய்கிறார்கள் அல்லது தோற்று ஓடுகிறார்கள்.

        மிகச் சிறப்பாக அமைந்திருக்கும் கதையோட்ட்த்தில் பண்பாட்டுச் சீரழிவின் அம்சங்கள் மிக நன்றாக காட்டப்பட்டாலும், உடற்களி பற்றிய நேரடி வர்ணனைகள் அடிக்கடி தேவையில்லாமல் சேர்க்கப் பட்டவை போல் தோன்றுகிறது.  பூடகமாகச் சொல்லி விட்டிருந்தால் நாவலின் போக்கில் எதுவும் பாதித்திருக்காது.  நாவலாசிரியரின் ‘அறம்’ குறித்த சந்தேகத்தை அது எழுப்புகிறது.

            விட்டு விலகி நின்று கதை சொல்லும் பாணியைக் கடைப்பிடிக்கும் விநாயகமுருகனின் கதாபாத்திரங்களின் துயரங்கள் மனதைத் தொடுவதில்லை. மூளையைத் தொடுகின்றன.  ஒரு கலைப்படைப்புக்கு உணர்ச்சிகளை எழுப்புவது சிறப்புச் சேர்க்கும்.  அல்லது அது ஒரு வெற்று விவரிப்பாகவே நின்றுவிடும் ஆபத்து இருக்கிறது.  இதற்கு முந்தைய நாவலிலும் இதை நான் உணர்ந்தேன்.  வாசகனுடைய உணர்ச்சியைத் தீண்டும் படைப்புகள் அவனை மிகவும் பாதிக்கும் என்பதை நாம் அறிவோம்.  தமிழ்நாவலில் உச்சத்தைத் தொடும் கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் உணர்ச்சிகளின் வழியே நம் உள்ளத்தில் புகுந்தவர்களே.


            இந்த நாவலின் போக்கில் அறம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது தவறில்லை. அறம் என்பதன் மீதே நம்பிக்கையற்றுப் போக சமூகத்தில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஆனால் ஆசிரியன் அறத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதன் காரணமாகத்தான் எழுதுகிறான்.   அதனால் மதிபீட்டுச் சரிவுகளைக் காட்டும் இந்த நாவலில் அறத்தில் குரலைக் கேட்க முடிவதில்லை.  எல்லாமே நடந்தே தீரவேண்டும் என்ற விதியின் கீழ் நடப்பது போல நிகழ்கின்றன.  ஆசிரியனின் பார்வை என்ன என்பது நமக்குத் தெரிவதில்லை. அவசியம் இல்லை என்று அவர் நினைத்திருக்கலாம்.  நிலவேட்டைத் தொழிலில் அது காணாமல் போய்விட்டதை நாவல்  பதிவு செய்கிறது. 

No comments:

Post a Comment