நமக்குள் ஒளிந்திருக்கும் பூதம்
எப்போதும் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது
கண்ணாடி போல
அது நம்மை நமக்கே
காட்டிக் கொடுத்து விடுகிறது
நாமே வடித்துக் கொண்ட
முகத்தை
கிழித்தெறிய முடியாதது
போல
அதை எறிந்து விட முடியாது
அவ்வப்போது புதைத்தாலும்
அறியாத நேரத்தில்
எழுந்து விஸ்வரூபம் எடுக்கிறது
நமது கீரீடங்களின் பின்புறத்தில்
ஒட்டியிருக்கும் ரத்தக்
கறையைச்
சுட்டுகிறது
பொதுவெளியில் பட்ட
அவமானங்களின் பின்னிருக்கும்
நமது மேன்மையையும்
ஜொலிக்க வைக்கிறது
அரிதாரங்களைக் கழுவிவிட்டு
நம்மை நிர்வாணமாய்
நிறுத்துகிறது
அந்த
நமக்குள் ஒளிந்திருக்கும்
பூதம்.
எப்போதும் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது