Monday, February 15, 2016

தாய்மை


        நம் சமூகத்தில் தாய்மை என்பது பெண்களின் உயர்ந்த பட்ச அடையாளமாக கருதப்படுகிறது. இதைபெண்களுக்கான பிரச்சனையாகமட்டும் பார்க்க வேண்டியதில்லை.  ஆண்களும் திருமணம் ஆகாமல் இருந்தாலோ அல்லது திருமணம் முடிந்தும் தந்தையாகாமல் இருந்தாலோ அதே நிலைதான்.  சமூகம், பெண்களை நோக்கி வீசும் அதே கேள்விகளை, ஆண்களுக்குத் தகுந்தமாதிரி மாற்றிக் கேட்கிறது.
        இனப்பெருக்கம் என்பது ஒவ்வொரு உயிரினத்துக்கும் உள்ள அடிப்படைப்பரிணாம வேட்கை”. எனவே மனிதர்களிலும் இவ்வேட்கை இருப்பதும், அது முக்கியமான சமூகத் தேவையாக இருப்பதும், அதற்கு உரிய மரியாதை சமூகத்தில் கிடைப்பதும், புரிந்து கொள்ளக் கூடியதாக இருகிறது. பூமியில் மனிதத் தொகை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இப்போது ஏறக் குறைய 7.5 பில்லியன் மனிதர்கள் வசிக்கிறார்கள்.  தன் இனம் பெருகி குறையின்றிப் பூமியில் வாழ வேண்டும் என்ற விலங்கின் பரிணாம வேட்கை, மனிதர்களிடம் இன்னும் இருக்கிறதா? அது இன்னும் தேவையானதா? அல்லது கட்டுப்படுத்த வேண்டியதா? என்ற கேள்விகளைக் கேட்க வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பின்னணியில், ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குழந்தை பெற்றுக் கொள்வது உயிரியல் ரீதியாக அவசியமா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நேரம் இது. 
        உயிரியல் அடிப்படையில் எழுப்பப்பட்ட கேள்வியைச் சூழலியல் அடிப்படையிலும் எழுப்பலாம். எவ்வளவு மனிதர்களைப் பூமி தாங்கும்? பூமியின் இயற்கை வளங்களை நாம் அழித்துக் கொண்டிருகிறோமா? மனிதகுலத்தின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம் வந்து கொண்டிருக்கிறது.
        இந்தச் சூழலில் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை உயர்ந்தபட்சப் பெருமையாகக் கருத முடியாது என்றே தோன்றுகிறது.  இதற்குக் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லதல்ல என்று பொருள் அல்ல. அது ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவாக இருக்க வேண்டும் என்று பொருள்.   இந்த முடிவைப் பெண்ணியம் குறித்த புரிதலில் இருந்தும் அடையலாம். இரண்டு வழிகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. ஒரே முடிவை அடைவதனாலேயே அது குறித்துப் பெருமிதம் கொள்ளலாம்
        இந்தப் பார்வையின் அடிப்படையில் தற்போது பெருகிக் கொண்டிருக்கும்கருத்தரிப்பு மையங்கள்”,தன் கருவையோ, விந்துத் துளிகளையோ ஆய்வுக் கூடத்தில் கருத்தரிக்க வைத்து, வாடகைக்கு மாற்றாந்தாயை அமர்த்திக் குழந்தை பெற்றுத் கொள்வதையோ அல்லது இது போன்ற கருதரிக்க அல்லது குழந்தைபெற உதவும் மருத்துவ முறைகளை அணுகிப் பார்க்கலாம்.  பண்பாட்டுச் சிக்கல்களின் காரணமாக குழந்தைக்குத் தாயாக வேண்டிய மனநிலைக்குத் தள்ளப்படும் நமது பெண்கள், புதிய புதிய ஹார்மோன்களை செயல்படுத்திப் பார்க்கும் ஆய்வுக்குத் தங்கள் உடலைப் பலியாக்குவதும் நடந்து கொண்டிருக்கிறது.  நோயைக் குணப்படுத்துவதற்காக ஹார்மோன்களை உடலில் செலுத்துவதற்கும், இதற்கும் வேறுபாடு இருக்கிறது.  தாயாகிவிட்டேன் என்ற பெருமையைத் தவிர வேறு எதுவும் இல்லாத வெற்றுச் செயல்பாடு என்றே தோன்றுகிறது. நமது பண்பாட்டுச் சூழலில் மலடி என்று பெயர்பெற விரும்பாதவர்களின் கடைசிச் செயலாகவே செயற்கைக் கருத்தரிப்பு இருக்கிறது.   நம்மைப் போன்ற பண்பாடு, குடும்ப ஆதிக்கம் இல்லாத சமூகங்களில் செயற்கைக் கருத்தரிப்பு ஒரு ஆப்ஷன்/ வாய்ப்பு அல்லது தேர்ந்தெடுத்தல்அதுவும் பெண் மட்டுமே முடிவு செய்யும் அல்லது கணவனும் மனைவியும் மட்டுமே முடிவு செய்யும் விஷயமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
        குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தங்களின் உடலை, அறிந்தோ அறியாமலோ வேதிப் பொருட்களால்

சிதைத்துக் கொள்ளும் பெண்களைப் பற்றிய கவலையிலேயே இதை எழுதுகிறேன். பேசாப் பொருளாக இன்னும் இது

இருப்பதை ஒப்புக் கொள்ளமுடியாது.  

No comments:

Post a Comment