இந்தியச் சமூகம் சாத்வீகச் சமூகம் எனப் பலராலும் விவரிக்கப்படுகிறது. ஒரு புறம் ’அஹிம்சை’யை முன்வைத்துத் தத்துவத்தளத்திலும் மறுபுறம் நாம் வலிமையற்றவர்கள் (உதாரணமாகக் கள் உண்பதில்லை, கறி உண்பதில்லை) என்று நமக்கு நாமே வரையறை செய்து கொண்ட போலியான பொய்யான ஒரு தளத்திலும் நம்மைக் காட்டிக் கொள்கிறோம். மென்மையானவர்கள் அதனால் வன்முறையை விரும்புவதில்லை அதில் ஈடுபடுவதும் இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறோம்.
நாம் இளிச்சவாயர்கள், நமக்கு வீரம் (வன்முறையின் இன்னொரு பெயர்) கிடையாது. மற்றவர்கள் தான் நம் மீது வன்முறை செய்கிறார்கள் நாம் அப்பாவிகள். ஆனால் நம்மீது வன்முறை செலுத்துவோராக நாம் யாரைக் குற்றம் சாட்டுகிறோமே அவர்கள் மீது வன்முறையை ஏவிவிட நியாயம் இருக்கிறது என்று வாதிடுகிறோம். நாம்தான் ஒவ்வொரு முறையும் வ்ன்முறையால் பாதிக்கப்படுகிறோம் என்று காட்டிக் கொள்வதால் மற்றவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவதற்கு சாக்குக் கிடைத்து விடுகிறது.
இந்தியச் சமூகத்தின் அடிப்படை வன்முறைதான். அதன் வரைமுறையைச் சிறிது உற்று நோக்க வேண்டியிருக்கிறது. வன்முறை என்பது ‘உடல் மீதானது’ அல்லது காயப்படுத்துவது என்ற பொருளில் மட்டும் கையாண்டு விடமுடியாது. உடல்மீதான வன்முறைக்கு நம்நாட்டில் குறைவில்லை. நமது இதிகாசங்களின் அடிப்படையும் வன்முறைதான். மகாபாரதம் போரும் போரைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளும்தான். இராமாயணமும் சீதையின் அபகரிப்பு என்ற வன்முறையின் அடிப்படையில் ராவணம் வதை என்ற வன்முறையை நோக்கி நகரும் கதையே.
நமது புராணங்களும் ‘எதிரியை வதைக்கிற காவியங்களே’. வெற்றி பெற்றாவர்களின் பார்வையில் எழுதப்பட்டவை. நாடு என்ற சொத்தின் மீதான ‘ஆட்சி’ என்ற பயன்பெற ‘வீரம்’ என்ற மிகையான வன்முறை பயன்படுகிறது. முழுச்சமூகம் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கிறது. என்னதான் நம் வார்த்தைகளில் வன்முறையைத் தவிர்ப்பது பற்றிப் பேசினாலும், வன்முறை மூலமே ‘சொத்துக்களை’ ‘ஆட்சி செய்ய முடியும்’ என்பயே நம் சமூகத்தின் ஆழ்மனத்தில் நிறுவப்பட்ட அறமாகப் பதிந்திருக்கிறது. நாம் அஹிம்சைச் சமூகம் என்று சொல்ல முடியுமா?
நமது மக்களாட்சியில் தேர்தல் சமயங்களில் ‘ஊழல், எதேச்சாதிகாரம்’ என்றெல்லாம் கூச்சலிட்டுத் தேர்தல் நடத்தி முந்தைய அரசைக் குறைகூறித் தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்கும் மாற்றுக் கட்சிகளின் கதை போலவே புராணக் கதைகளும் உள்ளன.
புராணங்களில் ‘வீரனாகச்’ காட்டப்படும் அரசன் கட்டவிழ்க்கும் வன்முறை அறத்தின் பெயரால் நிறைவேறுகிறது. தற்போதைய அரசியலில் கூட புராணத்து நாயகர்களின் பெயர்கள் புழங்குகின்றன. தலைவர்களுக்கு ‘வீரவாள் பரிசளிக்கப்படுகிறது. நேரடி வன்முறை வழங்கிவராத இடங்களில் சுதந்திரம் பறிக்கப் படுகிற ‘வன்முறை’ அரங்கேறுகிறது.
புலால் உண்ணாமை குறித்துப் பெருமை பேசும் ஒழுக்கவாதிகள், சமூகத்தில் வன்முறைகளைத் தூண்டுகிறார்கள். அவற்றை நியாயப்படுத்துகிறார்கள். மிருகங்களைக் கொல்லாமல் இருப்பதே கொல்லாமை என்றால் மனிதர்களை கொல்வதற்குப் பெயர் என்ன?
புலால் உண்ணாமை குறித்துப் பேசுகிறவர்கள் ‘பொய்யாமை’ குறித்தும் அதே தீவிரத்துடன் பேசுகிறார்களா? வணிகத்தில் நேர்மையைக் கடைப்பிடிப்பது குறித்துக் கூக்குரல் இடுகிறார்களா? அவர்களுடைய ‘அறச்சார்பு’ எப்படிப்பட்டது என்பதை இது காட்டுகிறது.
பெரிய புராணத்தில் விரித்து எழுதப்படும் அடியார்களின் கதைகளில் எல்லாம் ’சிவனுக்காக’ வன்முறை இயல்பாக நடந்தேறுகிறது. கண்களைத் தோண்டிச் சிவனுக்கு வைப்பதும், மகனைக் கறிவைத்து சிவனடியார்க்குக் கொடுப்பதும் சிவன் மீதிருக்கும் அன்புக்காகவே செய்யப்படுகின்றன. இதன் மூலம் அடியார் பெறுவதென்ன? சாதாரணமாக மனிதர்கள் பெற முடியாத சிவலோக ‘பதவி’ கிடைக்கும். சிவலோக பதவிக்காக நாம் எதையும் இழக்கலாம், எந்த வன்முறையிலும் ஈடுபடலாம்.
புத்த சமண மதங்கள் வழியே காந்தி வரை தத்துவார்த்த, அரசியல் தளங்களில் அவ்வப்போது வன்முறைக்கு எதிரான குரல்கள் வெளிப்பட்டாலும், அடிப்படையில் வன்முறைதான் நமது அரசியலைத் தீர்மானித்தது. நாம் அந்த அளவில் காட்டுமிராண்டிகளே. மற்றவர்கள் வன்முறை செலுத்துகிறார்களே என்று நாமும் செய்தால் மற்றவர்கள் புலால் உண்கிறார்களே என்று நாமும் உண்ணலாமா?
புலால உண்ணாத ‘புண்ணியம்’ செய்து கொண்டிருந்த, செய்கிற, மேல்தட்டுச் சாதிகளும் வர்க்கமும் தான் சாதி என்ற சமூக வன்முறையின், மதம் என்ற ‘பேயின்’ வன்முறையை, நாடு, ஆட்சி என்ற வன்முறைகளைக் கட்டமைக்கின்றார்கள். அதைச் சாத்திரம் என்ற பெயரால் நியாயப் படுத்துகிறார்கள். ‘பொய்யாமை, வணிகத்தில் நேர்மை, பெண்ணுக்குச் சம உரிமைகளைப் பற்றியோ மற்ற அறங்களைப் பற்றியோ பேசுவதே இல்லை.
ஆக, ’வன்முறை’ பற்றிப் பேசுகிறவர்களும் ‘அறம்’குறித்துப் பேசுகிறவர்களும் தங்கள் சார்பு குறித்தே பேசுகிறார்கள். மற்ற மனிதர்களை, மற்ற அறச் செயல்களை ஒதுக்கியே வைக்கிறார்கள்.
No comments:
Post a Comment