சுனில் கங்கோபாத்யாயாவின் ‘நிசங்கா
சாம்ராட்’ 2005 ( Lonely Emperor – தனிமையில் ஒரு பேரரசன்)
என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கத் தொடங்கியதுமே முடித்துவிட வேண்டும்
என்று தோன்றியது. ஒரு மகா நடிகனின் கதை.
தமிழகத்தில் இப்படிப் பலர் பேசப்படுவதைக் கேட்டிருப்பதால் வங்காளத்துக்கும்
தமிழ்நாட்டுக்கும் என்ன வேறுபாடு என்று தெரிந்துகொள்ளத் தோன்றியது. இரண்டு படம நடித்துவிட்டு வணிகத் தந்திரமாக
பலவித அடைமொழிகளோடு உலவ ஆரம்பித்து விடும் நடிகர்கள் இங்குண்டு. அதற்கு மேல்
நடித்தவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை.
சிசிர்
பாதுரி நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற வங்காள நடிகர் (02/10/1889 - .30/06/1959) அவருடைய வாழ்க்கையை சுனில் கங்கோபாத்தியாயா
வரலாற்றுப் புதினமாக எழுதியிருக்கிறார்.
உண்மையில் நடந்த நிகழ்வுகள் என்ன என்பது எனக்குத்
தெரியாது. புதினத்தில் வரும் நிகழ்வுகளை வைத்து அதையும், அதன் நாயகனான சிசிர்
பாதுரியையும் தெரிந்து கொள்ளலாம்.
சிசிர் பாதுரி, கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர்
அதைவிட்டு விட்டு நாடகத்துறையின் மீதுள்ள தீராக்காதலின் காரணமாக அதில் நுழைகிறார்.
ஒரு காலத்தில் நல்ல குடும்பத்தினர் பார்க்கவோ பங்குபெறவோ தக்கதல்ல என்று
கருதப்பட்ட நாடகத்துறை, பல சாத்தியங்களைக் கொண்டது. அதில் சாதனைகளை நிகழ்த்த
முடியும். அது நல்ல குடும்பத்தினர் வந்து
பார்க்கவும் பங்கேற்கவும் தகுதி உள்ளது என்ற புரிதல் உள்ளவர் சிசிர். அந்தக்காலத்து வங்காள நாடகங்களில் பாட்டும்,
சங்கீதமும் மிக அதிகம் புகழ்பெற்றவை. 21 பாடல் உள்ள நாடகங்கள் அங்கும் இருந்தன. ராமாயண, மகாபாரதக் கதைகள் நாடகங்களின் மையக் கருவாக இருந்தன. பெண்கள் வெளியில் அதிகம் வராத காலமாதலால்,
அதிலும் ஆண்களை மகிழ்விக்கவென்றே நாடகங்கள் நடந்ததால், பெண்கள் நாட்டியம் ஒவ்வொரு
நாடகத்திலும் இருந்தன இருக்க வேண்டிய கட்டாயம்.
ரசிகர்கள் அப்படி. ’நல்ல’ குடும்பத்துப்
பெண்கள் நடிக்க வரமாட்டார்கள். எனவே உடலை வைத்துத் தொழில் நடத்தும் பெண்களுக்கே
நடிக்கிற வாய்ப்புக் கிடைத்து வந்தது.
இதுமாதிரித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாடகங்கள் எவ்வாறு இருக்கும்?
நாம் கற்பனை செய்து கொள்ளலாம். இதனிடையே
தேசிய இயக்கம் வேறு நடந்துகொண்டிருக்கிறது. நாடகத்தில் அதன் பாதிப்புச் சிறிதும்
இல்லை. நாடக கம்பெனிகளை பெயர்கள்
அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கின்றன.
நாடக
உலகை மாற்ற வேண்டும் என்று சிசிர் நினைக்கிறார். நமக்கு நாடகப் பாரம்பரியம் உண்டு
என்று காட்டவும் விரும்புகிறார். முதல்
முறையாக நாடக்க் குழுவுக்கு வங்கமொழிப் பெயர் வைக்கிறார். அதுவரை எல்லாக் குழுக்களின் பெயர்களும்
ஆங்கிலத்தில் தான் இருந்தன. இப்படிப் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிற
மற்ற எழுத்தாளர்களில் ரவீந்திரநாத் தாகூரும் ஒருவர். அவரும் புதினத்தில் பாத்திரமாக வருகிறார்.
(இன்னும் பலருடன் கடைசியில் சத்யஜித் ரேயும் வருகிறார்). சிசிர் பாதுரியின் நாடக வாழ்க்கைப் போராட்டமே
புதினமாய் விரிகிறது. நாடகம் வாழ்வைக் காட்ட வேண்டும்,
நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர். மேலே விவரித்த சமூக, அரசியல் சூழலில் அது எதிர்
நீச்சலாகவே இருக்கிறது. ஜாத்ராவை மேடை
நாடகத்துக்குள் கொண்டுவரும் கனவும் அவருக்கு இருந்தது.
ரவீந்திரநாத் தாகூரை அனைவரும்
மதித்தாலும், அவருடைய சில நல்ல நாடகங்கள் தோல்வி அடைகின்றன. ஜனரஞ்சகமாக நாடகம் எழுதினால், அதில் பெண்களின்
பாட்டும் நடனமும் இருந்தால் நன்றாக நாடகம் நடக்கிறது. அது போலவே சிசிர் பாதுரி ஒரு
மகா நடிகன் என்று ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், அவர் எல்லோரையும் போல நடித்தால்தான்
நாடகம் பார்க்க வருகிறார்கள். அதில் அவருக்குத் திருப்தி இல்லை. (இதுவும் யாரையோ
நினைவுபடுத்துகிறதே)
இதைப் படிக்கும் போது விட்டல்
ராவ் எழுதிய ‘__________’ என்ற நாவல் ஞாபகம் வருகிறது. அதுவும் இயற்கையாக நாடகச் சூழலை வர்ணித்தாலும்
நாவலின் உச்சகட்டப் பிரச்சனை ‘பணம் சம்பாதிப்பதும், வாழ்வதும் என்றே
முடிந்துவிடும்.
நாடக வாழ்க்கை எப்படிச் சீரழிந்து
போனது என்று காட்டினாலும், தனிமையில் ஒரு பேரரசன்’ நாடக மேடையின் சாத்தியங்களை சோதனை செய்து
பார்க்க வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காகக் கடைசிவரை போராடுகிறான். அதுவும் புகழ்பெற்ற நடிகனின் கதை. (தமிழ்நாட்டிலும்..?).
மூன்று விஷயங்கள் இந்த நாவலின்
மையக்கருத்தாக வருகின்றன என்று நினைக்கிறேன்.
மூன்றும் சிசிர் பாதுரியின் கனவுகள். 1. சுதேசிய (விடுதலைக்குப் பிறகு
தேசிய) நாடக இயக்கம் வரவேண்டும் வளர வேண்டும். 2. நாடகத்தின் உள்ளடக்கம்
மாறவேண்டும். அதன் வெளிப்பாடும், மிகைப்படுத்தலில் இருந்து இயற்கையாக வெளிப்பாடாக
மாற வேண்டும். 3. நடிகர்களும் (குறிப்பாகப் பெண்களும்) நல்ல குடும்பங்களில்
இருந்து வர வேண்டும் அதன் மூலம் உள்ளடக்கம் மாறும், நாடகக் கலை தனக்குரிய இடத்தை
அடையும்.
சித்தர்ரஞ்சன் தாஸ் (சுதந்திரப்
போராட்ட வீரர்) நாடகத்தில் ஆர்வம் உள்ளவர்.
நாடகம் பார்க்க வருகிறார். ‘சுதேசி
நாடக இயக்கம் வரவேண்டும் என்று அவரிடம் பணஉதவி கேட்கிறான். ஏராளமாகப் பணம் ஈட்டிய அவர், சுதேசி
இயக்கத்தில் சேர்ந்த பிறகு, உதவி செய்யப் பணமில்லை. ஆனாலும் சிசிர் பாதுரியின் கனவுகளை மதிக்கிறார்
ஆதரிக்கிறார். (இதிலும் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் சில நினைவுக்கு வரலாம்). வக்கீல்
தொழிலை விட்டுவிட்ட காரணத்தால், பெருபாலும் வருமானத்தை இழந்துவிட்ட அவரால், சிசிர்
பாதுரிக்கு உதவி செய்ய இயலாமல் போகிறது. அதுவும் அன்றி விரைவில் இறந்தும்
போகிறார். ஆனால் கடைசிவரை சிசிர் பாதுரி,
தேசிய நாடக இயக்கம் வளர வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறான்.
புதினத்தில் வரும் சிலகாட்சிகளும்
முரண்பாடுகளும் நமக்குப் பலவிஷயங்களைச் நினைவுபடுத்துகின்றன. சிசிர் நினைத்தபோது குடிக்கிறான். அதிகமாகவே குடிக்கிறான். மற்ற நேரங்களில்
குடிக்காமல் பலநாட்கள் இருக்கிறான்.
அவனுக்குப் பெண் துணை தேவைப் படுகிறது. ஆனாலும், புத்திசாலிப் பெண்களையே
அவன் தேடுகிறான். திருமணத்தில் அவனுக்கு
நம்பிக்கை இல்லை. ஆனால், ஒரு படித்த
பெண்ணை நேசிக்கிறான், அவளும் அவனை விரும்புகிறாள். ஆனால், அம்மா ஒத்துக் கொள்ள மாட்டாள் திருமணம்
செய்து கொள்ளத் தயங்குகிறான். அந்தப் பெண் கேட்கிறாள் “ அம்மாவிடம் கேட்டுத்தான்
குடிக்கிறாயா அல்லது நடிக்கிறாயா?” அவன் அம்மாவுக்கு அடங்கிய மகனாகவே கடைசிவரை
இருக்கிறான். அவளும் அவமானத்தில் துவண்டு போய் இறந்து போய்விடுகிறாள்.
இன்னொரு காட்சியில், சாந்தி நிகேதனில், ரவீந்திரநாத் தாகூர்
நாடகம் வாசித்துக் காட்டுகிறார். அவர் அறுபதுகளில்
இருக்கிறார். அவரை வங்காளிகள்
கொண்டாடுகிறார்கள். அதனால் அவரை விமரிசிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்று
இருக்கிறது. சிசிர் உட்கார்ந்து அதைக்
கேட்டுவிட்டு நாடகம் சரியில்லை என்று
தனக்குப் பட்டதைச் சொல்லிவிடுகிறான்.
அந்தச் சபையில் அப்படிச் சொல்லும் தைரியம் வேறு எவருக்கும் இல்லை. பின்னர் அது பற்றி வருந்துகிறான். அடுத்த நாள் காலை தாகூர் சரியாகத் தூங்கவில்லை
என்றும் அதற்குக் காரணம் அவனது விமரிசனம் என்றும் பலர் அவனை இடித்துக் கூறுகின்றனர். ஏனெனில் தாகூருக்கும் தன்னைப் பற்றி யாரும்
விமரிசனம் செய்தால் பிடிக்காது. ஆனால்
தாகூர் அடுத்தநாள் அவனிடம் சொல்கிறார். ”இரவில் அதே நாடகத்தை முழுவதும்
மாற்றி இன்னொரு நாடகம் எழுதினேன். அதனால் சரியாகத் தூங்கவில்லை. இன்று அதை நான்
வாசிக்கிறேன்.” பெரிய கலைஞனுக்கும் விமரிசனத்தின் மீது வெறுப்பு
இருந்தாலும், அது அவனை உந்துகிறது. இன்னும் எழுத வைக்கிறது. தமிழ் நாட்டில்
விமரிசித்தால் விளக்குமாறை எடுத்துக் கொண்டு போர்தொடங்கும், கலைஞர்களும்
அவர்களுடைய ஆதரவாளர்களும் நினைவுக்கு வரவில்லையா?
அமெரிக்காவில் நாடகம் நடத்தச் செல்கிறான். அங்கும் பெண்கள்
நடனம், ஆனால் உடல் தெரியும்படியான நடனம் தேவைப்படுகிறது. இவர்களுடன் சென்ற நடிகைகள் ‘சொனாகாசியில்” இருந்து
சென்றவர்கள். உடலை மெல்லிதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தே இல்லாதவர்கள்.
ஆனால் பெண்கள் நடனம் நாடகத்தில் இல்லை என்றால் நாடகம் நடத்த முடியாது என்ற
நிலை. ஏற்கனவே விளம்பரத் தட்டிகளில்
எழுதிவிட்டார்கள். நாடகம்
சரியாக நடத்த முடியாமல், அவமானத்தில் முழ்குகிறார் சிசிர். எப்படியோ அடுத்த இடத்தில் நடத்தும் போது உடல்
கொஞ்சம் நிறம் மங்கிய மெக்ஸிக பெண்களை வைத்துக் கதையை ஒப்பேற்றுகிறார்கள்.
சிசிர் பாதுரிக்கு பத்மபூஷன் பரிசு அறிவிக்கிறார்கள். அது வேண்டாம் என்று அவர் கடிதம் எழுதத்
தொடங்குகிறார். “நாடகத்தைப் பற்றிக்
கவலைப்படாத அரசுகள், அதற்காக எந்த வசதியும் செய்யாத (மத்திய மாநில) அரசுகள்,
தேசிய/சுதேசி நாடகம் வேண்டும் என்ற எண்ணமே இல்லாத அரசுகள் கொடுக்கிற பரிசு எனக்கு
வேண்டாம்’ என்று எழுதுகிறார். (ஆனால்
1959க்கான பட்டியலில் அவர் பெயர் இருக்கிறது. அவர் உண்மையில் வாங்கினாரா என்பது
இன்னும் அறிய வேண்டிய ஒன்று. எனக்குத் தெரியவில்லை).
அந்தக் காட்சியின் கடைசியாக, சத்யஜித் ரே தனது ’ஜலசாகர்’ படத்தில் நடிப்பதற்காக
சிசிர் பாதுரியைக் அழைக்க விரும்புகிறார். தான் சிசிர் பாதுரியின் நெருங்கிய நண்பருடைய
மகன் என்றும் ஆனால் அவர் பெயரைச் சொன்னால், அதன் காரணமாகவே சிசிர் ஒத்துக் கொள்ளக்
கூடும். அந்த வாய்ப்புத் தனக்குத் தேவையில்லை.
தன்னைச் சந்தித்துப் பேசிய பின் சிசிர் முடிவு செய்யலாம் என்று சொல்லி சந்திக்க நேரம் கேட்கிறார். மிகவும் தயங்கித் தயங்கி அவருக்கு நேரம்
ஒதுக்குகிறார் சிசிர். அன்றைய நிலையில்
அவருக்கு வருமானமில்லை. யாருடைய தயவிலும்
அவர் வாழவும் விரும்பவில்லை. கடைசியில்
வாய்ப்பை சிசிர் மறுத்தபின்னர் தான் யாருடைய மகன் என்று அதை வெளியிடுகிறார். சிசிர் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை காரணம். இப்படிப்பட்ட புகழ்பெற்ற நாடக நடிகன் பிழைக்க
வேண்டும் என்று சினிமாவில் நடிக்கிறான். நாடகத்திற்கு அவன் மதிப்புத்தரவில்லை
என்று தவறான புரிதல் சமூகத்தில் பரவிவிடும். நான் நாடக நடிகனாகவே நினைவு கொள்ளப்பட
வேண்டும் என்று சொல்கிறார். இத்தனைக்கும் வருமானம் இன்றி துயரில் ஆழ்கிறார்.
ஆனாலும் தன்மானத்தை இழக்க, நாடக்க் கலைஞன் நாடகத்தை விட்டுவிட்டான் என்ற செய்தி
பரவக் கூடாது என்று நினைக்கிறார். நாடகத்தை விட்டுக் கொடுக்க அவர் தயாரில்லை.
இது ஒரு வரலாற்றுப்
புதினம். தமிழில் வரலாற்றுப் புதினம்
என்பது சோழ, பாண்டிய, சேரனை விட்டு இன்னும் வந்த பாடில்லை. ஒன்றிரண்டு
விதிவிலக்குகள் இருக்கலாம். கதையில்,
தாகூர், பாதுரி, அவருடைய காதலி, நமக்குத் தெரிந்த சத்யஜித் ரே, கடைசியில் நாவல்
எழுதிய சுனில் கங்கோபாத்தியாயாவும் நுழைகிறார்கள். ஒரு மகா நடிகனை, அவனுடைய மேன்மைகளோடும்,
கீழ்மைகளோடும் (அப்படிக் கொண்டுவிட்டால்), சமூகதோடும், லட்சியங்களோடும் பொருத்திக்
காட்டும் நல்ல புதினம் இது. ஆங்கில மொழியாக்கத்தில் பென்குயின் பதிப்பில்
கிடைக்கிறது. தமிழில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.
புதினத்தைப் படித்ததும்
இப்படியெல்லாம் உண்மையில் நடந்ததா? என்று தேடத் தூண்டுகிறது. உதாரணமாக, சிசிர்
பத்மபூஷன் விருதை வாங்க மறுத்துக் கடிதம் எழுதுகிறார். உண்மையில் மறுத்தாரா?
No comments:
Post a Comment