Friday, May 01, 2020


பசுவும் அம்மாவும்

            தலைப்புக் கொடுக்கும் போது தவறு நடந்துவிட்டது.  ‘அம்மாவும் பசுவும்’ என்றிருந்திருக்க வேண்டும்.  இந்தக் காலத்தில் அம்மாவைவிட பசுவைப் பற்றி அதிகம் குரல்கள் கேட்பதால், இந்தத் தவறைச் சகித்துக் கொள்ளலாம்.  பசுக்களை நாம் அம்மாக்களைப் போல் நடத்துவதால், அம்மாக்களையும் பின்னால் அம்மாக்கள் ஆகப் போகும் பெண்குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பதைப் பார்க்கலாம். 

            மற்ற எல்லா பண்பாடுகளைப் போலவே நமது பண்பாட்டிலும் அம்மாக்களை வணங்குவது குறித்து மிகவும் புனிதமான வாக்கியங்கள், இலக்கியங்கள், இலக்கணங்கள் நிறைய இருக்கின்றன.  பெரும்பாலான நாட்டார் கதைகள், தொன்மங்கள், கதைப்பாடல்கள் பெண்களைப் பற்றியும் பெண்குழந்தைகளைப் பற்றியும் புனையப்பட்டிருக்கின்றன.  அவர்கள் பல தாங்கொணாத துயரங்களை அனுபவித்து அவற்றை மீறி எழுந்து கணவன் மீது கொண்ட பாசத்தை, விசுவாசத்தை நிறுவியிருக்கிறார்கள்.  அதுதவிர, அவர்கள் மாமியார்கள், மாமனார்கள், தாய் தந்தை சகோதரன் என்று அனைவருடைய கௌரவத்தையும் காப்பாற்றப் பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்.   ’குடும்ப மானம்’ ’கற்பு’ என்பனவற்றை பெண்களின் மீதும் அம்மாக்கள் மீதும் சுற்றிச் சுற்றி எப்படிப் பின்னியிருக்கிறோம் என்பதை அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தன் உடலின் மீது எந்த மீறலும் நிகழ்ந்துவிடாது காக்க அவர்கள் எந்த எல்லை வரைக்கும் செல்வார்கள்.  இலைமீது முள் பட்டாலும், முள் மீது இலைபட்டாலும் இலைக்குத்தான் நட்டம் என்று பழமொழி சொல்கிறது.  இப்படிப்பட்ட பாதுகாப்பான குடை ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிறது.

            ஒரு பெண்ணின் உடல் அவளுடைய குடும்பத்தினருக்கும் மட்டுமே சொந்தமானது.  குடும்பம் என்ற வரையறைக்குள் குறிப்பிட்ட பெண்ணின் உடல் வருவதில்லை.  அதாவது அவளது உடல் அவளுக்குச் சொந்தமல்ல.  அவளுடைய உடல் அவளது கணவனுக்கும், குழந்தைகளுக்கும் ரத்த சொந்தமானது. உழைப்பு மாமியார், மாமனார், மைத்துனர், நாத்தனார் இன்னும் பலருக்கும் சொந்தமானது.  கணவன் உயிரோடு இருக்கும்வரை அவனைக் கவனித்துக் காப்பாற்றி, அவன் இறந்தபின் அவனைச் சொர்க்கத்துக்கு அனுப்பும் புனிதக் கடமையும் சடங்கும் அவளுக்கு உண்டு.  கணவனுக்கும் மனைவியை சொர்க்கத்துக்கு அனுப்பும் அதிகாரம் கிடையாது.  அவன் ஏற்கனவே திருமணம் முடித்த அன்று அவளை நரகத்துக்கு அனுப்பிப் பிரச்சனையை முடித்துவிடுகிறான்.

            அம்மாக்களைவிடப் பசுக்களுக்கு மரியாதை அதிகம் உண்டு.  பசுக்களிடமிருந்து எதைஎதையெல்லாம் எடுக்கமுடியுமோ அத்தனையும் எடுத்துக் கொள்வதற்காகத்தான் அவற்றை அவ்வளவு கரிசனத்தோடு பார்த்துக் கொள்கிறோம், வளர்க்கவும் செய்கிறோம். 

            முதலில் அவர்களைப் வீட்டு விலங்குகளாகப் பழக்கிக் கொள்வது அவைகளைக் கும்பிடுவதற்காக அல்ல.   அவற்றில் பாலை நாம் எடுத்துக் கொள்வதற்க்காகத்தான்.   பசுக்கள் தங்கள் குட்டிகளுக்கு ஊட்டவே பால் சுரக்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறோம்.   நாமும் பசுவின் குழந்தைகள்.  எனவே பசுவின் கன்றுகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரட்டிவிட்டு  நமது தேவைகளுக்குப் பாலைக் கறந்து கொள்கிறோம்.   வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னும், சிலர் சாகும் வரைக்கும் பல்வேறு பசுக்களின் கன்றுகளுக்குக் கிடைக்கவேண்டிய பாலை நாம் உபயோகிக்கிறோம்.  

            பசுக்களைத் தெய்வமாக மதிப்பதாகக் கூறிக்கொள்வோர் வட இந்தியாவில் மிக அதிகம்.  அவர்கள் உணவைப் பொறுத்தவரை ‘சைவர்களாக’ அல்லது ‘சமணர்களாக’ ’பிராமணர்களாக’ இருப்பதைப் பார்க்கிறோம்.  அங்கேதான் பாலில் செய்யப்பட்ட பலவித உணவுப் பொருட்களை அதே ‘சைவர்கள்’ ‘சமணர்கள்’ கணக்கு வழக்கு இல்லாமல் உண்கிறார்கள்.  பசுங்கன்றுக்குக் கிடைக்கவேண்டிய பாலை அதிகமாக உபயோகிக்கும் அவர்களே பசுவுக்குக் கருணை காட்டுகிறார்கள்.  அது ‘இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடு’ போன்ற கதைதான்.  அதன் ஊனை  மட்டும்  உண்பதில்லை என்றால் அதைச் சுரண்டவில்லை என்று பொருளாகிவிடுமா? ரத்தத்தைப் பாலாக உண்கிறார்களே அது வன்முறையில் அடங்கவில்லையா?  வேண்டுமென்றால் மனிதர்களின் ரத்தத்தை எந்த மிருகத்துக்காவது கொடுத்துப் பாருங்களேன்.  அது நம்மை தெய்வத்தைப் போல மதிக்கும்.  

            பசுவுக்குப் பதிலாக கன்றுக்குட்டி ‘காளைக்குட்டியாகப் பிறந்துவிட்டால்,  அது லாபமில்லை என்று பசு வளர்க்கிற புண்ணியவான்கள் விற்றுவிடுகிறார்கள்.  அது எங்கே போகும்?  அதுவே பெண்குட்டியாக இருந்தால், வேண்டிய அளவு விரைவில் அதைக் கருணையோடு சுரண்டும் வேலையைத் தொடங்கிவிடுகிறார்கள். 

            காளை மாடு எனில் அது உழைத்தே ஓய்ந்துவிடும். 

            பசுவுக்கோ காளை மாடுகளுக்கோ பேசும் திறன் இருந்தால் மனிதர்களைப் பற்றி என்ன பேசும்? எங்களைத் தாயாக, தந்தையாக, சகோதரனாக மனிதர்கள் மதித்தார்கள் என்றா பேசும்?  எங்கள் குட்டிகளுக்கு நாங்கள் சுரக்கும் பாலை நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள் என்று கருணைமிக்க பசுக்காவலர்களைக் கேட்காதா?

            மாட்டுச் சாணி மெழுகப் பயன்படுகிறது, காயவைத்தால் எரிக்க எருவாகிறது. பசுவும் காளையும் இறந்தபின் அதன் தோல் செருப்பாக, பெண்களின் அழகுப் பைகளாக, இன்னும் என்னென்னவோ ஆகிவிடுகிறது. 

            மாட்டுக்கறி (இதில் பசுமாட்டுக்கறியும் அடங்கும்) ஏற்றுமதியில் முன்னணியில் இந்தியா இருக்கிறது.  குஜராத்தில் ‘சைவ’ உணவு சாப்பிடும் வணிகர்கள், அரேபிய நாடுகளில் இருந்து, பசுவின் கொழுப்பை வரவழைத்து, உணவு எண்ணைகளில் கலப்படம் செய்து விற்று லாபம் அடைந்த கதைகள் செய்தித் தாள்களில் வந்தன.  அவர்கள் சுத்த சைவர்கள்.   அவர்கள் பசுவின் மீது வைத்திருக்கும் பக்தி அளப்பரியது.  லாபத்துக்காக விலை மலிவாகக் கிடைக்கும் பசுவின் கொழுப்பை மற்ற எண்ணெய்களில் கலந்து பசுவின் கொழுப்பைப் புனிதமாக்கிவிடுகிறார்கள்.  பசுவின் உடலில் எதையும் நாம் வீணாக்குவதில்லை.  ஏனெனில் அது புனிதமானது.  அதன் சதையை, எலும்பை உண்பதற்காகக் கொல்கிறவர்களைக் கொல்ல வேண்டும். ஏனெனில் அதை அவர்கள் ‘சைவர்’களைப் போல கருணையோடு கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுவதில்லை.  ஒரே போடாகப் போட்டுவிடுகிறார்கள்.  அம்மாக்களைக் கூட அப்படித்தான், வாழ்நாளெல்லாம் உழைத்து உழைத்து அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுவிடுவது நமது மரபு.  ஒரேடியாகக் கொன்றுவிட்டால் பாவமாகிவிடும்.  அதனினும் முக்கியமானது நமக்கு இப்படி மாடாக வேலைசெய்ய யாரும் பிறகு கிடைக்கமாட்டார்கள்.

            ஆனால் நமது மாபெரும் மரபின்படி பசு ஒரு தெய்வம்.  நாம் நமது தாய்மார்களையும் தெய்வமாக மதிக்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறோம்.  கடவுள்களையும் நாம் நமது வேலைக்காரர்கள் போலவே நடத்துகிறோம்.  அவர்களுடைய பெருமைகளை ஒவ்வொரு நாளும் தவறாமல் பாடிப் பணிந்தேத்தி, நமது தேவைகளை எல்லாம் கேட்டுப் பெறுகிறோம்.  யாரைச் சுரண்டி நாம் வாழ்கிறோமோ அவர்களே கடவுள், தாய் தந்தை.  அதுவும் வாயில்லாப் பிராணி எனில் ரொம்பச் சௌகரியம். 

            உண்மையில் பசுவைத் தாய்போல் கருதுகிறவர்கள். பசுவைத் தெய்வமாகக் கருதுகிறவர்கள் பசுவின் உடலிலிருந்து எந்தப் பகுதியையும், உணவாக உண்ணக் கூடாது.  நெய்யைத்தின்று தடித்துக் கொழுத்தவர்கள் நாங்கள் சைவ உணவு உண்கிறோம் என்று சொல்லக் கூடாது.  பசு எங்களுக்குத் தாய் என்று சொல்லிக் கொண்டு பசும்பால், பசுநெய், தோல் என்று எல்லாவற்றையும் உபயோகிக்கக் கூடாது.  பசுவைக் கோயில் கட்டிக் கும்பிட வேண்டும்.  அதுதான் புலால் உண்ணாதவர்களுடைய அறம்.  அதைப் பல ஐரோப்பியர்கள் மிகத்தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களில் பலர் நம்மைவிட (பசுக்காவலர்கள் பார்வையில்) பண்பாட்டில் தாழ்ந்தவர்கள்.  ஆனால் மிருகங்களை வதை செய்யக் கூடாது என்பதைக் கடைப்பிடிப்பவர்கள்.

            அவர்கள் எந்த மிருகத்தின் உடலையோ அல்லது உடலிலிருந்து கிடைக்கும் பொருட்களையோ உண்ணுவதில்லை.  ‘வேகன்’ (Vegan) உணவு என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.  பிரச்சனை என்னவென்றால் அவர்கள் நம்மைவிட, அதாவது ஐயாயிரம் பத்தாயிரம், ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான நம்மைவிட, கொல்லாமை என்ற பண்பாட்டில் மட்டுமல்லை புலால் உண்ணாமையிலும் (பால் கூட உண்ணாமையிலும்) சிறந்து விளங்குகிறார்கள்.   எந்த மிருகத்தையும் வதைசெய்ய விரும்புவதில்லை. நாம் ஒப்புக்கொள்வோமா? நமக்குத்தான் உலகத்திலேயே பெரிய மூக்கும் மூளையும் இருக்கிறதே.  எதையாவது காரணம் காட்டி அவர்களைவிடப் பெரியவர்கள் நாம் என்று நிரூபிக்க முயற்சி செய்வோம்.  நானும் உதவிக்கு வருகிறேன். எனக்கும் வேறு உருப்படியான வேலை இல்லை பாருங்கள்.

No comments:

Post a Comment