Saturday, May 09, 2020


நூகர்வோரின் பார்வையிலிருந்து -
நாட்டுக் கோழி,  இயற்கை விவசாயம் இன்ன பிற

            ’இயற்கைக்குத் திரும்புதல்’ என்ற வாழ்க்கை முறையை நடைமுறையில் நடத்திக் காட்டிய ‘மசானபு புகோகா’ என்ற ஜப்பானியரின் கொள்கைதான் ஒற்றை வைக்கோல் புரட்சி, இயற்கை விவசாயம், ஒன்றுமே செய்யத் தேவையில்லாத விவசாயம் என்ற பெயர்களில் வழங்கிவருகிறது.  இவர் எழுதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூலை இயற்கை ஆர்வலர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். 

நுகர்வோரின் பார்வையிலிருந்து இன்றைய சந்தையில் இயற்கை விவசாயம், இயற்கை விவசாயப் பொருட்கள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன?  இந்த விஷயத்தை வரலாற்றுப் பெருமையுடன் அல்லது உணர்ச்சிபூர்வமாக அணுகாமல், இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக் காலத்தில் இந்த மாதிரிக் கருத்துக்களின் தேவையும் பயன்பாடும் என்ன என்று பார்க்க விழைகிறேன்.

பொதுவெளியில் உலவிவரும் கருத்துக்கள் சிலவற்றை கூற விரும்புகிறேன்.  ‘குக்கரில் சமைக்கும் உணவை விட மண்பானையில் சமைக்கும் உணவு சிறந்தது’.  ‘லெக்ஹார்ன் கோழிகளை விட நாட்டுக் கோழிகள் சிறந்தவை’, (அமெரிக்காவில் கூட) பிட்சாவைவிட இட்லி சிறந்தது, அல்லோபதியை விட சித்தா மருந்துகள், ஹொமியோபதி மருந்துகள் சிறந்தவை.  இந்தக் கருத்துகளின் உண்மைத்தன்மை குறித்த விவாதத்தில் நுழைய விரும்பவில்லை.  இவைகள் சுட்டும் திசை எது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.   

இயற்கை விவசாயம் என்பது ஏதோ இப்போது கண்டுபிடித்துவிட்ட செய்தியைப் போல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  அதன் மூலம் அதன் மேன்மையை உணர்த்தி (இதுவரை எனக்குப் பிரச்சனை இல்லை), இயற்கை விவசாயப் பொருட்களின் விலையைக் கூட்டி விற்கிற, வணிகமயமாதலைத்தான் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்.

மசானபு ஃபுகோகாவின் புத்தகத்தில் இதைக் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார்.   அவர் இயற்கை விவசாய முறையில் விளைவித்த பொருட்களை சந்தையில் கடைக்காரனிடம் சொல்லி விற்றிருக்கிறார்.   ‘இயற்கை விவசாயம்’ என்ற தலைப்பைப் வைத்துக் கொண்டு கடைக்காரன் அப்பொருட்களின் விலையை அதிகரித்து விற்பதைக் கண்டு மனம் வெதும்பி இருக்கிறார்.  இன்னொன்றையும் குறிப்பிடுகிறார். விவசாயியைப் பொறுத்தவரை ஆப்பிள் பழத்துக்கு அவன் தருகிற உழைப்பு ஒரே வகையானது.  மரத்தில் ஒரு பழம் சிறியதாகவும் இன்னொரு பழம் பெரியதாகவும் இருப்பது இயற்கையின் செயல்.  சிறியதாக இருக்கிறது என்ற காரணம் காட்டி, அதன் விலையைக் குறைப்பது அடாத செயல்.   விலையைக் குறைத்து மதிப்பிட வணிகர்கள் செய்யும் தந்திரம் இது.  

வணிகர்களின் தந்திரத்திற்கும் நாட்டுக் கோழிக்கும் உறவு இருக்கிறது.  இன்று லெக்ஹார்ன் கோழி விலை ஒரு கிலோ 240 ரூபாய் என்றால், நாட்டுக் கோழி என்றழைக்கப்படுகிற கோழி ஒரு கிலோ 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.   லெக்ஹார்ன் கோழிமுட்டை ஒருடஜன் 70 ரூபாய் என்றால், நாட்டுக் கோழி முட்டை ஒரு டஜன் 170 ரூபாய்க்கு விற்கிறார்கள். நாட்டுக் கோழி மருந்து, ஊசிகள் போடாமல் தானாகவே ’இயற்கையாக’ வளர்கிறதாம்.  இயற்கையாக வளர்ந்தால் விலை லெக்ஹார்ன் கோழிக்கு இணையாகவோ அல்லது குறைவாகவோ இருக்க வேண்டுமல்லவா?  அதற்கு நேர் மாறாக, அதிக லாபம் அடையும் நோக்கில்தான் இந்த ‘இயற்கை’ என்ற சொல்லைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.  இந்த வகையான வணிகமயமாகிவிட்ட இயற்கை விவசாயம் நமக்குத் தேவையா? அல்லது உரம்போட்ட விவசாயமே பரவாயில்லையா? என்பது தான் கேள்வி.

இயற்கை விவசாயம் என்பது என்ன?  சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், பசுமைப் புரட்சி என்ற பெயரில், உரங்கள், பூச்சி மருந்துகள், இன்னும் விளைவைப் பெருக்கும் ரசாயன உத்திகள் நமது விவசாய முறைகளில் புழக்கத்துக்கு வருவதற்கு முன்னால், விவசாயம் செய்த முறையைத் தான் இயற்கை விவசாயம் என்கிறோம்.  அதாவது காலகாலமாக நாம் கடைப்பிடித்து இடைப்பட்ட பசுமைப் புரட்சிக் காலத்தில் மறந்துவிட்ட விவசாய முறை.

நாட்டுக் கோழிகள் லெக்ஹார்ன் கோழிகளை விட எந்த விதத்தில் உயர்ந்தவை என்பதை இன்னும் யாரும் விஞ்ஞான முறையில் சான்றுகளுடன் நிறுவியதாகத் தெரியவில்லை.  சொல்லப்போனால், கோழிப்பண்னைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு, கொடுக்கிற தீவனம், மருந்துகள் இன்ன பிற அனைத்தும் ஏற்கனவே செய்து நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளில் தான் செய்கிறார்கள்.  குறைந்த கால அளவில், பெரிதாக வளர்ந்து, முட்டையிடும் தகுதியை அடைய ஊசி போடுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.   இதை நெற்பயிருடன் ஒப்பிடுவோம்.  முற்காலத்தில் நன்றாக விளையும் நெற்பயிர் வளர எவ்வளவு மாத காலம் ஆகும்? இப்போது எவ்வளவு மாத காலம் ஆகிறது? அது குறையவில்லையா?  அதன் விளைவாக அதிக விளைச்சலும், அதனடியாக அதிகம் பேருக்கு உணவும் கிடைக்கவில்லையா?  இதையே கோழிக்கும் குஞ்சுக்கும் செய்தால் என்ன வேறுபாடு?  இதுதான் நுகர்வோன் என்ற முறையில் எனக்குப் புரியாத புதிர்.  இதற்கு ஒரே விடை இருக்கிறது.  அரிசி விற்பதில் அரசு சந்தையில் குறுக்கிட்டு விலையை நிர்ணயிக்கிறது.  கோழியில் இந்த நிலை இல்லாததால், நாட்டுக் கோழி, நாட்டுக் கோழி முட்டை என்ற பெயர்களில் அதிக லாபம் பார்க்க வணிகர்கள் தயங்குவதில்லை.    
     
          வீடுகளில் வளரும் நாட்டுக் கோழிகளுக்கு எந்தவித ஊசியும் மருந்தும் போடுவதில்லை என்றே வைத்துக்கொள்வோம்.  அதன் உடல்நிலை, அது உண்ணும் உணவு (உதாரணமாக அது வெளியில் மேயந்து புழு பூச்சிகளை உண்ணும்) உணவு குறித்தும் எந்த தரமும் பார்க்கப்படுவதில்லை அல்லவா?  பண்ணைக் கோழிகளில் கட்டுப்பாடுகள் அதிகம்.  கோழிகளின் உடல்நிலையும் பராமரிக்கப்படுகிறது. அவை உண்ணும் உணவும் அதன் தரமும் அளவும் ஏற்கனவே திட்டமிட்டபடி தரப்படுகின்றன.  இந்தத் தரக் கட்டுப்பாடு வீடுகளில் வளரும் நாட்டுக் கோழிகளுக்கு உண்டா?
  
          இரண்டாவது,  நாட்டுக் கோழிப் பண்ணைகளில் ‘நாட்டுக் கோழிகளுக்காக’ என்று ஏதாவது தனிப்பட்ட கவனிப்புகள் இருக்கின்றனவா? இல்லை. அவையும் லெக்ஹார்ன் கோழிகளைப் போலவே பராமரிக்கப்படுகின்றன.  அவற்றின் ஜீனில் ஒரிஜினாலிடி இருப்பதனாலேயே அவை சிறந்தவை என்று கருதலாமா? 

            இது போலவே, மரபணு மாற்றம் மூலம் விளைவிக்கப்படும் தானியங்கள், காய்கறிகள் இவற்றிற்கும், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் தானியங்கள், காய்கறிகள் இவற்றிற்கும், நுகர்வோரைப் பொறுத்தவரை எந்த வேறுபாடும் இல்லை.  விஷயம் மரபணு இருக்கிறதா இல்லையா என்பது அல்ல.  அந்த உணவின் தரம் என்ன, அது உணவு என்ற வகையில் அதன் மதிப்பீடு என்ன? இவைதானே முக்கியம்.  இது குறித்த கேள்விகளுக்குப் பதில் இல்லை.  வெறுமனே ‘நாட்டுக் கோழி’ என்ற முத்திரையை குத்திவிட்டு மக்களின் வரலாறு நினைவை வணிகத்தில் அதிகஆதாயம் பெறப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்ள முடியாது.

            இன்னும் சிலர் இருக்கிறார்கள். நமது இட்லியின் மேன்மை, தோசையின் பெருமை, உப்புமாவின் சிறப்பு என அடுக்கிக் கொண்டே போவார்கள். அமெரிக்காவில் சென்று பேசும் போதும் இட்லிதான் சிறந்த உணவு என்று பேசுகிறவர்களைப் பார்த்திருக்கிறேன்.  இட்லி தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்தது, சாம்பார் மராட்டியர் கண்டுபிடித்தது..மிளகாயும், தக்காளியும் தென்னமரிக்காவிலிருந்து வந்தவை.. தேங்காய தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்தது.   ஏதொ ஒரு காலத்தில் நமக்குப் புதிதாக வந்து சேர்ந்த உணவுகளை நாம் உண்ணவில்லையா? அவை கொஞ்ச காலங்களுக்குப் பிறகு நமது உணவாக மாறிப்போகவில்லையா?  வணிகமயமாதலை எதிர்ப்பதென்பது வேறு.  வேறு நாடுகளில் இருந்து வருகிற உணவு என்பதனாலேயே அவற்றை வெறுப்பது வேறு.   உணவிலும் தேசியவாதம் என்பது உணவிலும் சர்வதேசியவாதமாகிக் கொண்டிருக்கிற காலம் இது.  அவை நமது உணவுகள் அல்ல என்று சொல்வது சரியாகப்படவில்லை.

உணவும், உடையும் அந்தந்த சூழலுக்கேற்ப உருவாகின்றன என்பது உண்மைதான்.  ஆனால் அதையே என்றும் நிலைத்திருக்கும் உண்மை என்று சொல்ல முடியாது.  நூறு வருடங்களுக்கு முன்னால் நாம் அனைவரும் என்ன உடை உடுத்தோம், என்ன கஞ்சி குடித்தோம் என்பதைப் பார்த்து அதையே செய்ய வேண்டும் என்றால் இயலாத காரியம்.   புதிய உணவுகள் நமக்கு ஒத்துவராது என்பது மனித உடலின் செரிப்புச் சக்தியை கேலிக்கு உள்ளாக்குகிற செயல். 

ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிய மனிதன் உலகின் எல்லாப் பாகங்களிலும் இருக்கிறான்.  அவன் எப்படி பரிணாக வளர்ச்சி அடைந்தானோ அதே மாதிரி உணவு வகைகளை உண்பதிலும் பரிணாம வளர்ச்சி அடைவான்.  அதிர்ச்சி தரும் கருத்துக்களைப் பரப்புவதால், இட்லியின் புகழைப் பாடலாமே தவிர,  மனிதர்களின் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிவிட இயலாது.  அதை முயற்சி செய்வது வீண்வேலை.  உணவு மாறினால், நமது உடல் அதைச் செரிக்கும் சக்தியப் பெற்றுவிடும். இது பரிணாமத்தின் தவிர்க்க இயலாத நடைமுறை.  அதைப் பெறவில்லையெனில் மனிதன் அவ்வுணவை தன் போக்கிலேயே கைவிட்டு விடுவான்.  (நாம் விஞ்ஞானத்தில் எவ்வளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும் பத்தாயிரம் பதினையாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் கண்டுபிடித்த தானியங்களைத் தவிர புதியதாக எந்தத் தானியத்தையும் நாம் கண்டுபிடித்துவிட வில்லை என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்)

நாட்டுக் கோழியோ மண்பானைச் சோறோ எது விஞ்ஞான பூர்வமான உண்மை, எது காலத்திற்கு ஏற்ற மாற்றம், எது நமக்கு நன்மை தருவது, எது விலை குறைவாக இருப்பது என்பதெல்லாம் பொருட்டாக இருக்க வேண்டுமே தவிர, அந்தக் காலத்தில் அப்படி என்பதாலோ அல்லது நமது நாட்டுப் பண்பாடு என்பதாலோ ஒரு விஷயத்தைப் பொருட்படுத்த முடியாது.    

Friday, May 01, 2020


பசுவும் அம்மாவும்

            தலைப்புக் கொடுக்கும் போது தவறு நடந்துவிட்டது.  ‘அம்மாவும் பசுவும்’ என்றிருந்திருக்க வேண்டும்.  இந்தக் காலத்தில் அம்மாவைவிட பசுவைப் பற்றி அதிகம் குரல்கள் கேட்பதால், இந்தத் தவறைச் சகித்துக் கொள்ளலாம்.  பசுக்களை நாம் அம்மாக்களைப் போல் நடத்துவதால், அம்மாக்களையும் பின்னால் அம்மாக்கள் ஆகப் போகும் பெண்குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பதைப் பார்க்கலாம். 

            மற்ற எல்லா பண்பாடுகளைப் போலவே நமது பண்பாட்டிலும் அம்மாக்களை வணங்குவது குறித்து மிகவும் புனிதமான வாக்கியங்கள், இலக்கியங்கள், இலக்கணங்கள் நிறைய இருக்கின்றன.  பெரும்பாலான நாட்டார் கதைகள், தொன்மங்கள், கதைப்பாடல்கள் பெண்களைப் பற்றியும் பெண்குழந்தைகளைப் பற்றியும் புனையப்பட்டிருக்கின்றன.  அவர்கள் பல தாங்கொணாத துயரங்களை அனுபவித்து அவற்றை மீறி எழுந்து கணவன் மீது கொண்ட பாசத்தை, விசுவாசத்தை நிறுவியிருக்கிறார்கள்.  அதுதவிர, அவர்கள் மாமியார்கள், மாமனார்கள், தாய் தந்தை சகோதரன் என்று அனைவருடைய கௌரவத்தையும் காப்பாற்றப் பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்.   ’குடும்ப மானம்’ ’கற்பு’ என்பனவற்றை பெண்களின் மீதும் அம்மாக்கள் மீதும் சுற்றிச் சுற்றி எப்படிப் பின்னியிருக்கிறோம் என்பதை அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தன் உடலின் மீது எந்த மீறலும் நிகழ்ந்துவிடாது காக்க அவர்கள் எந்த எல்லை வரைக்கும் செல்வார்கள்.  இலைமீது முள் பட்டாலும், முள் மீது இலைபட்டாலும் இலைக்குத்தான் நட்டம் என்று பழமொழி சொல்கிறது.  இப்படிப்பட்ட பாதுகாப்பான குடை ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிறது.

            ஒரு பெண்ணின் உடல் அவளுடைய குடும்பத்தினருக்கும் மட்டுமே சொந்தமானது.  குடும்பம் என்ற வரையறைக்குள் குறிப்பிட்ட பெண்ணின் உடல் வருவதில்லை.  அதாவது அவளது உடல் அவளுக்குச் சொந்தமல்ல.  அவளுடைய உடல் அவளது கணவனுக்கும், குழந்தைகளுக்கும் ரத்த சொந்தமானது. உழைப்பு மாமியார், மாமனார், மைத்துனர், நாத்தனார் இன்னும் பலருக்கும் சொந்தமானது.  கணவன் உயிரோடு இருக்கும்வரை அவனைக் கவனித்துக் காப்பாற்றி, அவன் இறந்தபின் அவனைச் சொர்க்கத்துக்கு அனுப்பும் புனிதக் கடமையும் சடங்கும் அவளுக்கு உண்டு.  கணவனுக்கும் மனைவியை சொர்க்கத்துக்கு அனுப்பும் அதிகாரம் கிடையாது.  அவன் ஏற்கனவே திருமணம் முடித்த அன்று அவளை நரகத்துக்கு அனுப்பிப் பிரச்சனையை முடித்துவிடுகிறான்.

            அம்மாக்களைவிடப் பசுக்களுக்கு மரியாதை அதிகம் உண்டு.  பசுக்களிடமிருந்து எதைஎதையெல்லாம் எடுக்கமுடியுமோ அத்தனையும் எடுத்துக் கொள்வதற்காகத்தான் அவற்றை அவ்வளவு கரிசனத்தோடு பார்த்துக் கொள்கிறோம், வளர்க்கவும் செய்கிறோம். 

            முதலில் அவர்களைப் வீட்டு விலங்குகளாகப் பழக்கிக் கொள்வது அவைகளைக் கும்பிடுவதற்காக அல்ல.   அவற்றில் பாலை நாம் எடுத்துக் கொள்வதற்க்காகத்தான்.   பசுக்கள் தங்கள் குட்டிகளுக்கு ஊட்டவே பால் சுரக்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறோம்.   நாமும் பசுவின் குழந்தைகள்.  எனவே பசுவின் கன்றுகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரட்டிவிட்டு  நமது தேவைகளுக்குப் பாலைக் கறந்து கொள்கிறோம்.   வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னும், சிலர் சாகும் வரைக்கும் பல்வேறு பசுக்களின் கன்றுகளுக்குக் கிடைக்கவேண்டிய பாலை நாம் உபயோகிக்கிறோம்.  

            பசுக்களைத் தெய்வமாக மதிப்பதாகக் கூறிக்கொள்வோர் வட இந்தியாவில் மிக அதிகம்.  அவர்கள் உணவைப் பொறுத்தவரை ‘சைவர்களாக’ அல்லது ‘சமணர்களாக’ ’பிராமணர்களாக’ இருப்பதைப் பார்க்கிறோம்.  அங்கேதான் பாலில் செய்யப்பட்ட பலவித உணவுப் பொருட்களை அதே ‘சைவர்கள்’ ‘சமணர்கள்’ கணக்கு வழக்கு இல்லாமல் உண்கிறார்கள்.  பசுங்கன்றுக்குக் கிடைக்கவேண்டிய பாலை அதிகமாக உபயோகிக்கும் அவர்களே பசுவுக்குக் கருணை காட்டுகிறார்கள்.  அது ‘இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடு’ போன்ற கதைதான்.  அதன் ஊனை  மட்டும்  உண்பதில்லை என்றால் அதைச் சுரண்டவில்லை என்று பொருளாகிவிடுமா? ரத்தத்தைப் பாலாக உண்கிறார்களே அது வன்முறையில் அடங்கவில்லையா?  வேண்டுமென்றால் மனிதர்களின் ரத்தத்தை எந்த மிருகத்துக்காவது கொடுத்துப் பாருங்களேன்.  அது நம்மை தெய்வத்தைப் போல மதிக்கும்.  

            பசுவுக்குப் பதிலாக கன்றுக்குட்டி ‘காளைக்குட்டியாகப் பிறந்துவிட்டால்,  அது லாபமில்லை என்று பசு வளர்க்கிற புண்ணியவான்கள் விற்றுவிடுகிறார்கள்.  அது எங்கே போகும்?  அதுவே பெண்குட்டியாக இருந்தால், வேண்டிய அளவு விரைவில் அதைக் கருணையோடு சுரண்டும் வேலையைத் தொடங்கிவிடுகிறார்கள். 

            காளை மாடு எனில் அது உழைத்தே ஓய்ந்துவிடும். 

            பசுவுக்கோ காளை மாடுகளுக்கோ பேசும் திறன் இருந்தால் மனிதர்களைப் பற்றி என்ன பேசும்? எங்களைத் தாயாக, தந்தையாக, சகோதரனாக மனிதர்கள் மதித்தார்கள் என்றா பேசும்?  எங்கள் குட்டிகளுக்கு நாங்கள் சுரக்கும் பாலை நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள் என்று கருணைமிக்க பசுக்காவலர்களைக் கேட்காதா?

            மாட்டுச் சாணி மெழுகப் பயன்படுகிறது, காயவைத்தால் எரிக்க எருவாகிறது. பசுவும் காளையும் இறந்தபின் அதன் தோல் செருப்பாக, பெண்களின் அழகுப் பைகளாக, இன்னும் என்னென்னவோ ஆகிவிடுகிறது. 

            மாட்டுக்கறி (இதில் பசுமாட்டுக்கறியும் அடங்கும்) ஏற்றுமதியில் முன்னணியில் இந்தியா இருக்கிறது.  குஜராத்தில் ‘சைவ’ உணவு சாப்பிடும் வணிகர்கள், அரேபிய நாடுகளில் இருந்து, பசுவின் கொழுப்பை வரவழைத்து, உணவு எண்ணைகளில் கலப்படம் செய்து விற்று லாபம் அடைந்த கதைகள் செய்தித் தாள்களில் வந்தன.  அவர்கள் சுத்த சைவர்கள்.   அவர்கள் பசுவின் மீது வைத்திருக்கும் பக்தி அளப்பரியது.  லாபத்துக்காக விலை மலிவாகக் கிடைக்கும் பசுவின் கொழுப்பை மற்ற எண்ணெய்களில் கலந்து பசுவின் கொழுப்பைப் புனிதமாக்கிவிடுகிறார்கள்.  பசுவின் உடலில் எதையும் நாம் வீணாக்குவதில்லை.  ஏனெனில் அது புனிதமானது.  அதன் சதையை, எலும்பை உண்பதற்காகக் கொல்கிறவர்களைக் கொல்ல வேண்டும். ஏனெனில் அதை அவர்கள் ‘சைவர்’களைப் போல கருணையோடு கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுவதில்லை.  ஒரே போடாகப் போட்டுவிடுகிறார்கள்.  அம்மாக்களைக் கூட அப்படித்தான், வாழ்நாளெல்லாம் உழைத்து உழைத்து அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுவிடுவது நமது மரபு.  ஒரேடியாகக் கொன்றுவிட்டால் பாவமாகிவிடும்.  அதனினும் முக்கியமானது நமக்கு இப்படி மாடாக வேலைசெய்ய யாரும் பிறகு கிடைக்கமாட்டார்கள்.

            ஆனால் நமது மாபெரும் மரபின்படி பசு ஒரு தெய்வம்.  நாம் நமது தாய்மார்களையும் தெய்வமாக மதிக்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறோம்.  கடவுள்களையும் நாம் நமது வேலைக்காரர்கள் போலவே நடத்துகிறோம்.  அவர்களுடைய பெருமைகளை ஒவ்வொரு நாளும் தவறாமல் பாடிப் பணிந்தேத்தி, நமது தேவைகளை எல்லாம் கேட்டுப் பெறுகிறோம்.  யாரைச் சுரண்டி நாம் வாழ்கிறோமோ அவர்களே கடவுள், தாய் தந்தை.  அதுவும் வாயில்லாப் பிராணி எனில் ரொம்பச் சௌகரியம். 

            உண்மையில் பசுவைத் தாய்போல் கருதுகிறவர்கள். பசுவைத் தெய்வமாகக் கருதுகிறவர்கள் பசுவின் உடலிலிருந்து எந்தப் பகுதியையும், உணவாக உண்ணக் கூடாது.  நெய்யைத்தின்று தடித்துக் கொழுத்தவர்கள் நாங்கள் சைவ உணவு உண்கிறோம் என்று சொல்லக் கூடாது.  பசு எங்களுக்குத் தாய் என்று சொல்லிக் கொண்டு பசும்பால், பசுநெய், தோல் என்று எல்லாவற்றையும் உபயோகிக்கக் கூடாது.  பசுவைக் கோயில் கட்டிக் கும்பிட வேண்டும்.  அதுதான் புலால் உண்ணாதவர்களுடைய அறம்.  அதைப் பல ஐரோப்பியர்கள் மிகத்தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களில் பலர் நம்மைவிட (பசுக்காவலர்கள் பார்வையில்) பண்பாட்டில் தாழ்ந்தவர்கள்.  ஆனால் மிருகங்களை வதை செய்யக் கூடாது என்பதைக் கடைப்பிடிப்பவர்கள்.

            அவர்கள் எந்த மிருகத்தின் உடலையோ அல்லது உடலிலிருந்து கிடைக்கும் பொருட்களையோ உண்ணுவதில்லை.  ‘வேகன்’ (Vegan) உணவு என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.  பிரச்சனை என்னவென்றால் அவர்கள் நம்மைவிட, அதாவது ஐயாயிரம் பத்தாயிரம், ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான நம்மைவிட, கொல்லாமை என்ற பண்பாட்டில் மட்டுமல்லை புலால் உண்ணாமையிலும் (பால் கூட உண்ணாமையிலும்) சிறந்து விளங்குகிறார்கள்.   எந்த மிருகத்தையும் வதைசெய்ய விரும்புவதில்லை. நாம் ஒப்புக்கொள்வோமா? நமக்குத்தான் உலகத்திலேயே பெரிய மூக்கும் மூளையும் இருக்கிறதே.  எதையாவது காரணம் காட்டி அவர்களைவிடப் பெரியவர்கள் நாம் என்று நிரூபிக்க முயற்சி செய்வோம்.  நானும் உதவிக்கு வருகிறேன். எனக்கும் வேறு உருப்படியான வேலை இல்லை பாருங்கள்.


                 வாசகன் விருப்பம்

1.         வாசகன் என்ற வகையில் தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் படைப்பாளிகள் பொருளாதார ரீதியில் பெரும்பாலும் நலிவடைந்தே வாழ்வதைக் காண்கிறேன்.  ‘கல்லாத மூடரைநான் கற்றாயென்றேன்’ என்று தொடங்கும் தனிப்பாடல் போல, கொலைகாரர்களை வீரர்கள் என்றும், ஈயாத ஈனர்களை வள்ளல்கள் என்று பாடவேண்டிய நிலையில் இருந்த புலவர்களின் வரிசையில் இன்றும் தமிழ் இலக்கியத்தை வளர்க்கிற படைப்பாளிகள் எழுத்தை மட்டும் நம்பி வாழமுடியாமல் வேறு ஏதேதோ செய்துகொண்டு இருக்கின்றனர்.  இதையொட்டி என் எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

2.         தமிழ்நாட்டின் மாகவியாகிய பாரதியார் தன்நூல்களை பல தொகுதிகளாக அச்சிட்டு விற்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாமலேயே மறைந்து போனார்.  அவருடைய எந்த நூலின் பதிப்பும் 1000 பிரதிகளைத் தாண்டியதில்லை (A.R. Venkatachalpathy, Province of the Book). அவருடைய எழுத்துக்களை தமிழ்மக்கள் ஆதரித்திருந்தால், அவர் அவ்வளவு நெருக்கடியில் வாழ நேர்ந்திருக்காது, ஒருவேளை இறக்கவும் நேர்ந்திருக்காது. அவர் இறக்கும் போது வயது 39.

3          புதுமைப்பித்தன் உலக இலக்கிய கர்த்தாக்களின் வரிசையில் வைக்க வேண்டியவர்.  அவரும் பொருளாதார ரீதியில் நலிந்து, காசநோயினால் பாதிக்கப்பட்டு, பொருள் குறைவு காரணமாக சரியான சிகிச்சை பெறமுடியாமல் இறந்து போனார். அப்போது அவரது வயது 39.

4.          பாரதியோ, புதுமைப்பித்தனோ எழுத்தை மட்டும் நம்பியதாலேயே பொருளாதார ரீதியில் நலிவடைந்தனர்.  சமூகத்தை, அதில் காணும் மனிதர்களை எவ்வளவு நேசித்திருந்தால் இப்படி எழுதுவது சாத்தியமாகியிருக்கும்.   பாரதியாருக்காவது அரசு குறித்த எதிர்ப்பு மனநிலை இருந்தது.  புதுமைப்பித்தன் அந்த வகையில் ’தொந்தரவுகள்’ இல்லாதவர்.  மேலும் 1948இல் அவர் மறைந்த காலத்தில்  தமிழ்பத்திரிக்கைகள், பதிப்பகங்கள் பல இருந்தன. இன்னும் பல தமிழ்ப்பணி செய்கிற நிறுவனங்கள் இருந்தன. அவரை யாரும் பொருளாதார ரீதியாக ஆதரிக்கவில்லை என்பது வியப்பாகவும் வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது.  (அவர் அரசியலில் நேரடியாக ஈடுபடவோ கருத்துச் சொல்லவோ இல்லையாதலால், அரசியலிலும், பதவிகளிலும், கட்சிகளிலும் இருந்தவர்கள் அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம்)

5.         மிகச்சிறந்த மேற்கண்ட இரண்டு உதாரணங்கள் போதும் என்று நினைக்கிறேன்.   இவர்கள் இருவரும் தமது படைப்புக்கள் காலம் கடந்து வாழும் என்று நம்பியவர்கள். அந்த நம்பிக்கை தோற்கவில்லை.  இன்று அவர்களது படைப்புக்கள் எத்தனையோ பதிப்புகள் வந்துவிட்டன.  ஆனால் அவர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்களது நூல்கள் விற்றிருந்தால் அவர்கள் செய்த பணிக்கு ஏற்ப ஊதியம் கிடைத்திருந்தால் …அவர்கள் இன்னும் நல்ல நிலையில் வாழ்ந்திருக்கலாம். இந்த ஏக்கம் அவர்களின் வாசகர்கள் மனத்தை என்றென்றும் உறுத்திக்கொண்டே இருக்கும். இந்த நிலை இன்றும் தொடர்கிறது. 

6          அந்தக் காலத்திலாவது வாசிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.  இன்று வாசிக்கத் தெரிந்தவர்கள் 80% க்கு மேலாக இருக்கக்கூடும்.  ஆனால் வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு வாசிக்க விருப்பம் இல்லை. (’வாசிக்கத் தெரிந்து வாசிக்காமல் இருப்பவனுக்கும், வாசிக்கவே தெரியாதவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை’ என்று ’மார்க் டுவைன் சொன்னார்).

7          மிகச் சில நூல்கள் தவிர பெரும்பாலும்  ஒரு பதிப்பில் ஒரு நூல் ஆயிரம் பிரதிகள் விற்றுவிட்டால் அதிசயமாகவே இருக்கிறது.  எனவே தமிழ்நாட்டில் எழுத்தை மட்டுமே நம்பி உயிர்வாழ்வது என்பது இயலாததாகவே இருக்கிறது.  இரண்டாயிரம் வருடங்களாக இலக்கிய வரலாறும், பண்பாடும் உரிய மொழிக்கு இந்த நிலை.

8          விஞ்ஞானமும் அறிவும் அதுபற்றிய தகவல்களும் நாளைய உலகின் வளர்ச்சிக்குக்கு உதவும் என்று அனைவரும் அறிந்தபின்னும் மாணவர்கள் பாடபுத்தகம் தவிர வேறெதையும் படிப்பதில்லை. மற்றவர்களும் படிப்பதில்லை.  ஏழு கோடிப்பேர் வாழும் தமிழகத்தில் மிகச்சிறந்த நூல்கள் கூட 1000 பிரதிகள் விற்பதில்லை என்பது எதைக் காட்டுகிறது?  நாம் விஞ்ஞானத்தையும், அறிவையும் பற்றிப் பேசுவோமே தவிர, மாத வருமானத்தை இன்னும் இன்னும் பெருக்குவது ஒன்றே நமது ஒரே கவலையாகிவிட்டது.

9          இத்தகைய சூழலில் தமிழில் மட்டுமே எழுதுகிற எழுத்தாளன், அதுவும் எழுத்தை மட்டுமே நம்பி வாழுகிற  எழுத்தாளன் (ஓரிரு விதிவிலக்குகள் தவிர)  இல்லை என்றே சொல்லிவிடலாம். அது நடக்கக்கூடிய காரியமாகத் தெரியவில்லை.

10.        ஆனால் இதே தமிழ்நாட்டில் துப்பறியும் கதைகளை எழுதிப் பிழைக்கிற/ஓரளவு வசதியுடன் வாழுகிற எழுத்தாளர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.  அவர்கள் மட்டும் எப்படி வாழ முடிகிறது?  வாசகர்கள் இருக்கிறார்கள்.  வாசிக்கும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் எப்படிப்பட்ட நூல்களை வாசிக்க வேண்டும் என்ற புரிதல் அதிகமில்லை. இன்னொன்றை இங்கே குறிப்பிட வேண்டும் இளவயதில், அதிலும் பதின் பருவத்தில் வாசிக்கிற விருப்பம் உள்ளவர்களிடமிருந்தே, அதுவும் துப்பறியும் கதைகளை வாசிப்பவரிகளிடமிருந்தே பெரும்பாலும் தீவிர இலக்கியங்களுக்கு வாசகர்கள் முன்னகர்கிறார்கள்.  உலகமெங்கும் இதற்கு உதாரணங்கள் உண்டு.

11.        சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால் துப்பறியும் கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் பலர் உண்டு.  வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்ற வெகுசனங்கள் படிக்கும் வகையில் எழுதிய எழுத்தாளர்கள் அன்று பெருமளவில் வணிக ரீதியில் வெற்றி பெற்றார்கள் என்றே அறிகிறோம்.  இதே பாணியில் எழுதிய இன்னும் பலர் இருந்தனர்.  இவர்கள் மேலைநாட்டுக் கதைகளை நேரடியாகப் பிரதியெடுத்து அல்லது கொஞ்சம் மறைத்தும் மாற்றியும் எழுதி வந்தனர். இவர்கள் பொருளாதார ரீதியில் நன்றாக வாழ்ந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் எழுத்தால் அதிகரித்திருக்கக் கூடும்.  அதனால் வாசகர்களுடைய ஆதரவைக் குறிவைத்து அவர்கள் எழுதியிருக்கலாம்.

12.        தீவிர எழுதாளர்களாக தங்களை கட்டமைத்துக் கொண்டவர்கள், மாதவையா, வேதநாயகம் பிள்ளை போன்றோர் அரசுப் பணிகளில் இருந்தனர் அல்லது நிலையான வருமானம் கொண்டிருந்தனர்.  அதாவது எழுதிப் பொருளீட்டிப் பிழைக்கும் நிலையில் அவர்கள் இல்லை.  எனவே தீவிர இலக்கியமோ அல்லது ’நல்ல’ கருத்துக்களைத் தரும் இலக்கியமோ அவர்களால் எழுத முடிந்தது அதனால் எழுதினார்கள்.  அவர்களுடைய பொருளாதார நிலையும், ஓய்வு நேரமும் அவர்களுக்கு தங்கள் கனவை நிறைவேற்ற இடம் கொடுத்தது. 

13        இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் துப்பறியும் நாவல்கள், தீவிர இலக்கியமாக இன்று கருதப்படுகிற நாவல்கள் அனைத்தும் தோன்றிய போது மேற்குலகக் கதைகளைப் பிரதி எடுக்கிற/அல்லது போலச் செய்கிற நாவல்களாகவே இருந்தன.  ஏனெனில் அதன் வடிவம் தமிழில் அது வரை இல்லை. அதன் முதுகில் காலனியாதிக்கத்தின் சுமை இருந்தது.   நாவல்களை எழுதியவர்கள் அதைப் பெருமிதமாகவே கருதினர்.  (நாட்டார் கதைகள் பாடல்கள், மக்கள் வழக்காறுகள் பற்றிய மரியாதை, கவனம், நாட்டார் கலைகளின் (கூத்து, வில்லுப் பாட்டு முதலியனவற்றின்) வளர்ச்சி அதனைப் பயன்படுத்துப் வாய்ப்புக்கள், எது குறித்தும் பதிவுகள் இல்லை).  ஏனெனில் நவீன ஆங்கிலேயே வாழ்க்கைமுறையில் புகுந்துவிட்ட அவர்களுக்குச் , சொந்தப் பண்பாட்டை அணுகும் தெளிவில்லை.  அப்படி இருந்திருந்தால் கலைகளின் வளர்ச்சி வேறுவிதமாக இருந்திருக்கும் – உதாரணம் பரதநாட்டியம் – அதுவும் மேல்தட்டுக்குப் போய், கீழ்த்தட்டு மக்களுக்குத் தொடர்பற்றுப் போனது சோகமே)). 

13.1      இன்னொரு (மூட) நம்பிக்கையும் இருந்தது.  ஆங்கிலேயர்கள், மேற்கத்தியர்கள் எழுதுவது போன்ற கட்டமைப்பில்தான் நாவலோ சிறுகதையோ எழுதவேண்டும் என்பது தான் அது.  நமது பண்பாட்டுக்கு ஏற்ப நமக்குக் கதை சொல்லத் தெரிந்த வகையில் எழுதலாம் என்பதே நம் மண்டையில் உரைக்கவில்லை.  மேற்கத்தியரிடம் ‘உங்களைப்போல எங்களாலும் எழுதமுடியும்’ என்று காட்டுவதற்காகவோ அல்லது அப்படி ஒரு அங்கீகாரம் பெறுவதற்காகவோ இருக்கலாம்.  இதையெல்லாம் யோசித்துத்தான் எழுதினார்கள் என்று நான் சொல்லவில்லை.  அடிமைத்தனத்தின் ஆழமான வேர்கள் இருக்கும் போது மலர்கள் அப்படித்தானே மலரும். (நிறைய எழுத்தாளர்கள், அவர்கள் வெகுஜன எழுத்தாளர்களாக இருக்கலாம் அல்லது மணிக்கொடி அல்லது மற்ற கருத்துக்கள் கொண்டவர்களாக இருக்கலாம் அவர்கள் அரசியல் பிரச்சனையான விடுதலை வேட்கை குறித்து எழுதவில்லை) அப்படியெல்லாம் இருக்க வேண்டியதில்லை என்று தெரியவரும் போது நேரம் கடந்து விட்டது. 

14        வெகுசன நாவல்களில் கொலை கொள்ளை, பாலுறவு குறித்த கதையாடல்கள் இருந்தன.  நல்லவர்களும் நல்ல நாவல்களை எழுதியவர்களாக கருதிக் கொண்டவர்களும், பெண்கள் இத்தகைய நாவல்களைப் படித்தால் கெட்டுப் போய்விடுவார்கள் என்ற ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருந்தனர்.  கதைகுறித்த கவலைகளை விட ஒழுக்கம் குறித்த கவலைகளே அவர்களை ஆக்கிரமித்திருந்தன. கதைப் புத்தகங்களை ஆண்கள் படித்துவிட்டு அட்டாழியில் போட்டு விடுவது வழக்கமாக இருந்திருக்கின்றது.  பெண்கள் படிக்கும் தரத்தில் அவை இல்லை என்பது நாவல்கள் குறித்த விமரிசனமாக இல்லாமல், பெண்களின் ஒழுக்கம் சார்ந்த விமரிசனமாக இருந்திருக்கின்றன. அவற்றைப் படிக்கும் முதிர்ச்சி பெண்களுக்கு இல்லை என்று நம்பினார்கள்.   ஆண்கள் படிக்கமுடிகிற பாலுறவு, கொலை கொள்ளைக் கதைகளை பெண்கள் படித்தால் என்ன கெட்டுப் போயிருக்கும்? ஆணாதிக்க மனப்பான்மைக்கு அடி விழுந்திருக்கும். அங்கே விடுதலைக்கு ஒரு மூச்சுக் கிடைத்திருக்கும். 

15.          ஆங்கில நாவல்களைப் பின்பற்றுவது வெகுஜன, தீவிர என்ற இரண்டு வகையான எழுத்தாளர்களுக்கும் பொதுவானதாகவே இருந்திருக்கிறது.   ஆங்கில எழுத்துக்களில் பெண்நிலைமை குறித்த நாவல்களைப் பின்பற்றி (பிரதி எடுத்தல்ல) எழுதியவர்கள் எந்த அரசியல் ரிஸ்க்கும் இல்லாத கதைப்பொருட்களையே தேர்ந்தெடுத்தனர்.  ஏனெனில் பெரும்பாலானோர் ஆங்கில அரசில் வேலை பார்த்தவர்கள்.  பெண்கள் நிலைமை குறித்து எழுதினார்கள்.   வறுமை, சனாதன வழக்கங்கள் இவை போன்ற மற்ற (அரசியல் தொந்தரவு தரும்) கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.  அப்படி எடுத்தாலும்  கொஞ்சம் அடக்கியே வாசித்தனர்.  கொஞ்சம் விமரிசனப் பார்வை உள்ள கதைகளை வவேசு ஐயரும், பாரதியாரும் எழுத வேண்டியதிருந்தது.  அவர்களுடைய கதைகளும் ஆரம்பகாலக் கதைகள். 

16.        இதற்கு அடுத்த காலகட்டத்தில் பெரும்பத்திரிக்கை நிறுவனங்கள் தோன்றுகின்றன.  அவைகளின் உள்ளடக்கம் குறித்து அதிருப்தி கொண்ட சிறுபத்திரிக்கைகளும் தோன்றின.  அவற்றில் ‘மணிக்கொடி’ தமிழ் இலக்கியத்துக்குச் சிறந்த படைப்புகளை வழங்கியது. இன்னும் பல பத்திரிக்கைகள் இருந்திருக்கக்கூடும். இவர்களின் கவனப் புள்ளி நல்ல இலக்கியமாக இருந்தது.  இதற்கு மாறாக பெரும்பத்திரிக்கைகளான ஆனந்த விகடன் போன்றவற்றின் மையப்புள்ளி வெகுசன ரசனையாக இருந்தது. 

17        அப்போதுதான் தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமே உண்டான புதிய பிரச்சனை வருகின்றது.  சிறுபத்திரிக்கைகளில் எழுதிய தீவிர எழுததாளர்களுக்கும், பெரும்பத்திரிக்கைகளில் வெகுசனங்கள் விரும்புகிற கதைகளை எழுதியவர்களுக்கும் மோதல் வருகிறது.  இந்த மோதல்களுக்குக் காரணம் யார்? எப்படி நிகழ்ந்தது என்ற கேள்விகளுக்குள் இங்கே நுழையவேண்டாம்.  இந்த மோதலின் விளைவு என்ன? பத்திரிக்கைகளில் எழுதியவர்கள் இரண்டு பெரும் குழுக்களாகப் பிரிந்து கட்சி கட்டிக் கொண்டிருந்தனர்.  ஒரு குழுவில் இருக்கும் எழுத்தாளர் எவ்வளவுதான் நன்றாக எழுதினாலும் அது நன்றாக இல்லை என்பதே இன்னொரு குழுவினரின் நிலைப்பாடாக இருந்தது.  குறிப்பிட்ட அளவில் வாசகர்களும் இந்த இரண்டு அட்டைப் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டார்கள்.  பெரும்பாலான வாசகர்களுக்குக் கதைதான் முக்கியமே தவிர ஒருவர் இந்தக் குழுவில் இருக்கிறாரா அல்லது அந்தக் குழுவில் இருக்கிறாரா என்பது அல்ல.  அப்படிப்பட்ட ஒரு பொது வாசகர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதில் இருகுழுவினரும் அடைந்த தோல்வியே இன்றைய நிலைமையிலும் ஒரு புத்தகம் 500 பிரதிகள் கூட விற்பதில்லை என்ற நிலைமை.

18.        சிறந்த சிறுகதைகளை எழுதிய மணிக்கொடிக்காரர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பெரும்பாலும் நேரடி அரசியலில் ஈடுபட்டவர்கள் அல்ல.  அவர்களின் கதைகளும் பெரும்பாலோருக்குத் தெரியாமலே இருந்தது.   ஆனால் வெகுஜன இதழ்களில் எழுதியவர்கள் பத்திரிக்கையாளர்கள்.  அரசியலிலும் ஆர்வம் உள்ளவர்கள்.  அவர்கள் வெகுசனங்களிடையே பெயர்பெற இது ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.  அவர்கள் மிகச்சிறந்த கதைகளை எழுதாவிட்டாலும் அவர்களின் கதைகள் பெரும்புகழ் பெற்றன.  இவர்களுடைய மையப்புள்ளி பொழுது போக்காகவும், அரசியல் பெரும்பாலும் காங்கிரஸ் சார்பாகவும் இருந்தது. இலக்கியம் தரம் என்பதெல்லாம் இரண்டாம் இடத்தில் இருந்தது.

19        தமிழ் இலக்கியப் பரப்பில் நிகழ்ந்த இந்தப் பிரிவினை, அதாவது தீவிர இலக்கிய எழுதுகிறவர்கள், வெகுசன ரசனையுடன் கதை எழுதுகிறவர்கள் என்ற குழுக்கள் இன்று வரை தொடர்கின்றன. இதற்கு அடுத்ததாக முற்போக்கு இலக்கியவாதிகள் என்ற பிரிவும் சேர்ந்து கொண்டது.  அவர்களிலும் இன்னும் பல குழுக்கள் தோன்றி தங்கள் தங்கள் கொள்கைகளை ஆதரிப்பவர்களையே தூக்கிப் பிடிப்பது, வேறு கருத்துக்கள் உள்ளவர்களின் கருத்துக்களை விமரிசிக்காமல் அவர்களை தனிப்பட்ட முறையில் தூற்றூவது என்ற பண்பாடு தொடர்ந்து வருகிறது.  இந்த நடைமுறை இப்போது குறைந்திருக்கிறது.  அதற்குப் பதிலாக சிறுசிறு கூட்டங்கள் நடத்தி  எழுதிய புத்தகங்கள் எல்லாம் ’நன்றாக இருப்பதாக’ புகழவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.  ஒவ்வொரு பஜனை கும்பலுக்கும் ஒவ்வொரு சாமியும் உண்டு.  இது ஒருபுறம் இருக்கட்டும். 

20        சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள், இடதுசாரிச் சிற்றிதழ்கள் என்ற நிலை இருந்தபோது, ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் எழுதத் தொடங்கினார்.  அவர் தீவிர இலக்கியங்களைப் படைப்பவராக அறியப்பட்டிருந்தார்.  அவர் ஆனந்த விகடனில் எழுதப் போய் சமரசம் செய்து கொண்டார் என்ற விமரிசனங்கள் எழுந்தன.  ஆனால் அவர் ஒருவர்தான் சிற்றிலக்கிய மரபில் உதித்து, வெகுஜன இதழ்களில் பெரும்புகழ் பெற்ற எழுத்தாளராக, அதுவும் சமூகத்துக்குத் தேவையான, ஆனால் யாரும் சொல்ல விரும்பாத, சொல்ல முயற்சிசெய்யாத கதைகளை எழுதினார்.  இந்த மீறலை அவர் நிகழ்த்தியதாலேயே சிற்றிதழ்க்காரர்கள் அவரைக் காய்ந்ததும் நடந்திருக்கலாம்.  அப்படி ஒரு மீறல் நிகழந்திருக்கவில்லை என்றால், தீவிரமாக எழுதும் ஓரிரு தமிழ் எழுத்தாளர்களுக்குக் கூட மரியாதையும், வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதார வசதியும் கிடைத்திருக்காது.    இது ஒருபுறம் இருக்க, சிற்றிதழ்களில் எழுதியவர்கள், வெகுஜனப் பத்திரிக்கையில் எழுதியவர்கள் இவர்களின் பனிப்போர் இன்றுவரை முடிந்ததாகத் தெரியவில்லை. சில வெற்றிகரமாக இரண்டு உலகங்களிலும் பயணம் செய்தாலும், இது பெரும்பான்மையான எழுத்தாளர்கள் செய்ய வேண்டிய காரியம் என்பதாக இல்லை. 

20.1      தீவிரமாக சிந்திக்கிறவர்களை வெகுஜனப்பத்திரிக்கைகள் எழுத அழைக்கவேண்டும்.  அதே சமயம், தீவிரமாக எழுதுபவர்களும், வெகுஜன வாசகர்களின் தரத்தை உயர்த்தும் வகையில், வெகுஜன வாசிப்பை பரவலாக்கும் வகையில் இத்தகைய இதழ்களில் எழுத முன்வரவேண்டும்.  கட்சிப் பத்திரிக்கையோ, வேறுவிதமான கொள்கைப் பத்திரிக்கையோ, வெகுஜனப் பத்திரிக்கைகளோ எல்லாவிதமான எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் பிரசுரம் செய்யவேண்டும்.  கோடிக்கணக்கான வாசகர்கள் வாசிக்க ஆரம்பித்தால்தான், சில லட்சம் வாசகர்களாவது தீவிர இலக்கியப் படைப்புகளை வாசிக்க முன்வருவார்கள்.  வாசிக்கிறவர்களிடமிருந்து எண்ணெற்ற படைப்பாளிகளும் அவர்களிடையே உலகம் போற்றும் வகையில் தீவிர இலக்கியம் படைக்கிறவர்களும் தோன்றுவார்கள்.

20.2      இப்போதும் கூட சிலபேர் தமிழ்ச்சிறுகதை உலகத்தரத்துக்கு வந்துவிட்டது என்று மார்தட்டுகிறார்கள்.  சில எழுத்தாளர்கள் உலக நாவல் இலக்கியவாதிகளுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்றும் சொல்லுகிறார்கள்.  நாம் சொல்லி என்ன செய்வது?  ‘திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதைவணக்கம் செய்தல் வேண்டும்’.  இங்கே ஒரு பொக்கிஷம் இருக்கிறது என்றால் அவர்கள் தேடி வந்தே தீருவார்கள்.  அதற்குத் தமிழ்ப்புலமையும், ஆங்கில அல்லது வேற்றுமொழிப்புலமையும் வேண்டும்.  இங்கே தமிழில் வாசிப்பவர்கள் 500-1000 இருக்கும் வரை அது நிகழாது.  எல்லாவற்றுக்கும் அடிப்படை தமிழில் வாசகர் எண்ணிக்கைய அதிகரிப்பது தான் அதுதான் எல்லோருடைய முதல்பணியாக இருக்க வேண்டும்.   கதைகள் படிக்கிற இன்பத்துக்காகவே அவர்கள் கதை எழுத வேண்டும். துப்பறியும் கதை, மர்மக்கதை, பேய்க்கதை எதுவாக இருந்தாலும் சுவராஸ்யமாக எழுதவேண்டும்.  அவ்ற்றைப் பெரியவர்கள் படித்தாலும் ரசிக்கிற மாதிரி தரம் இருக்க வேண்டும். 

21        இந்த நேரத்தில், சில வங்காள எழுத்தாளர்களைப் பற்றித் தெரிந்து கொள்வது சில தெளிவுகளை அளிக்கும்.

21.1    சத்யஜித் ரே ஆழமான திரைப்படங்களை எடுத்து உலகமெங்கும் இந்தியப் பண்பாட்டின் உண்மையான கூறுகளை அறியச் செய்தவர்.  இன்னொரு பக்கம் அவருடைய தாத்தாவால் தொடங்கப்பட்டு நின்றுபோன ‘சந்தேஷ்’ (பாலாடைக்கட்டியில் செய்த  ஓர் இனிப்பு) என்ற குழந்தைகளை பத்திரிக்கையை மீண்டும் தொடங்கினார்.  அந்தப் பத்திரிக்கைக்காக ‘ஃபெலுதா’ என்ற துப்பறிவாளனை வைத்துக் கதைகள் எழுதினார்.  அவை பெரியவர்களாலும் பெரிதும் விருப்பத்துடன் வாசிக்கப்பட்டன.  ’புரொபஸர் ஷாங்கு’ என்ற பெயரில் ஒரு விஞ்ஞானிப் பாத்திரத்தை உருவாக்கி மிகவும் நம்பகமான விஞ்ஞானக் கதைகளை எழுதினார்.  அவைகளும் பிரபலமாயின. (ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க் என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர், ரே எழுதிய ஒரு கதையை ’ஏலியன்’ என்ற படமாக எடுத்தார்) வாசகர்களின் விருப்பத்திற்கு இணங்கி ’ஃபெலுதா’ கதைகளை மிக அதிகமாக எழுதினார். (நான் அந்தக்கதைகளை – சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலத்தில் வாசித்தேன்.  பெரியவர்களும் விரும்பும் வகையில், ஆர்தன் கொனன் டாயலின் துப்பறியும் கதைகளுக்குச் சற்றும் குறையாத வகையில், அவர் எழுதியிருக்கிறார்.    பேய்களைப் பற்றிய சுவராஸ்யமான (பயமுறுத்துவதற்காக அல்ல – என்ன ஆகியிருக்கும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதற்காக) கதைகளையும் பதின்பருவத்தினருக்காக எழுதினார். அவையும் பிரபலமாயின.  மற்ற எழுத்தாளர்களும் பலவிதமான வெகுசனங்கள் விரும்பும் கதைகளை, துப்பறியும் கதைகளை எழுத உந்துதலாக இருந்தார். 

21.2      அதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சுனில் கங்கோபாத்யாய், தொடககத்தில் ஒரு கவிஞராக மலர்ந்தார்.  அவர் கவிஞராகவே இருக்க விரும்பினார்.  கவிதைக்காக ‘கிருதிபாஸ்’ என்ற பத்திரிக்கையையும் நடத்தினார்.  ‘தேஷ்’ என்ற பத்திரிக்கை ஆசிரியர், சுனில் உரைநடையிலும் சிறப்பாக எழுத முடியும் என்று கண்டு கொண்டார்.  அவர் சுனிலிடம் கதைகள் எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.  முதலில் சுனில் மறுத்தார்.  உன்னால் எழுதமுடியும் என்று வற்புறுத்தி அவரை எழுதவைத்தார். விருப்பமில்லாமலும் தன்னால் எழுதமுடியும் என்ற நம்பிக்கை இல்லாமலும் சுனில் கதைகள் எழுதினார்.  தேஷ் பத்திரிக்கையில் வெளிவந்த அவரது கதைகள் பிரபலமாயின.  ஒரு பத்திரிக்கை ஆசிரியரால் அவர் கதைகள் எழுத வந்தார்.  பின்னர் தீவிரமான மாபெரும் படைப்புகளை எழுதினார். ’அந்த நாட்கள்’ கிழக்கும் மேற்கும்’ என்ற வரலாற்று நாவல்கள் மிகவும் தீவிரமான படைப்புகள், மிகவும் பிரபலமானவையும் கூட.  இன்னொருபுறம்,  அதிகம் சிரமம் தராத வாசிப்புகளுக்காக ‘நீல்’ என்ற பாத்திரத்தை உருவாக்கினார். வெட்டியாக வேலையின்றி அலைகிற இளைஞர்கள் செய்கிற திருவிளையாடல்களை எழுதிக் காட்டினார்.  இன்னும் சில ஆண்டுகள் கழித்து குழந்தைகள் கதைகளை எழுதினார். நான் சொல்ல விழைவது என்னவெனில், எழுத்து என்றால் தவம் மாதிரி என்று அவர் செயல்படவில்லை.  தனக்கே உரிய தீவிரத்துடன் எல்லா வகைக் கதைகளையும் எழுதினார்.  பத்திரிக்கை ஆசிரியர் கேட்டுக்கொண்டபடி எழுதினால் தனது பெருமை குறைந்துவிடும் என்ற பயம் இல்லாமல் எழுதினார்.  நல்ல புகழ் பெற்றார்.  முக்கியமாக அதற்கேற்ப பொருளீட்டினார். 

21.3.     தற்போது வங்கத்தில் சிறந்த நாவலாசிரியராகக் கருதப்படுகிறவர்களில் ஒருவர் ஷீர்ஷேந்து முகோபாத்யாய்  கதைகளில் எளிய, சிறிய ஊர்களைக் களமாகக் கொண்டு கதைகள் எழுதுகிறவர்.  அவருடைய பல கதைகள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன.  அவருடைய ‘கொய்னார் பாக்ஸொ’ (நகைப்பெட்டி கதையை அபர்னா சென் படமாக்கியிருக்கிறார்.  மர்மக்கதைகள், பேய்க்கதைகள், எதிர்காலம் பற்றிய கதைகளை எழுதியிருக்கிறார்.  துப்பறியும் கதைகளில் துப்பறிவாளர்களான, பரோடாசரண், ஃபாடிக், சபோர் தாஸ்குப்தா என்ற மூன்று பேரை வைத்து தனித்தனிக் கதைகள் எழுதியிருக்கிறார்.  மூவரும் மூன்று வெவ்வேறு விதங்களில் துப்பறியும் வேலைகளைச் செய்வர்.   இதற்குப் பின்னர் தெய்வீக விஷயங்களில் ஈடுபாடுகொண்டு, தத்துவார்த்தக் கதைகளை எழுதிவருகிறார். வெவ்வேறு வகையான இலக்கிய வகைகளில் அல்லது கதைவகைகளை எழுதுவதனாலேயே யாருக்கும் இழிவு ஏற்பட்டுவிடுவதிலை.    சொல்ல வந்த விஷயம் என்னவெனில், எல்லாவிதமான கதைகள் படிக்கும் வழக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு மொழிப்பண்பாட்டில்தான் தீவிரமான இலக்கிய வாசகர்களை  வளர்த்தெடுக்க முடியும்.

22..       பேய்க்கதைகளோ, துப்பறியும் கதைகளோ, தீவிரமான அல்லது ஆழமான கதைகளோ ஒவ்வொரு மொழியிலும் யாராவது எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.  ஒரே எழுத்தாளன் பல ரக எழுத்துக்களை எழுதினால், அதை வாசிக்கும் வாசகனும் தனது இடம் பொருள் தேவைக்கு ஏற்ப அந்தந்த வகைக் கதைகளை வாசித்து இன்புறுவான். இதனால் வாசகப்பரப்பு அதிகமாவதோடு, புத்தக விற்பனை என்ற தொழில் லாபகரமானதாக நடக்கும். அப்படி நடந்தால் தான் எழுத்தாளனுக்கு உரிய மரியாதையும், தகுந்த சன்மானமும் கிடைக்கும்.  எழுத்தை நம்பியே வாழ்கிறவன் எதை எழுதினாலும் அது அவனுக்கு ஏதும் கௌரவக் குறைவை ஏற்படுத்திவிடாது என்றே நம்புகிறேன். பத்திரிக்கை ஆசிரியர் கேட்டு அவருக்காக மக்கள் விரும்பும் வகையில் எழுதினாலும் தவறில்லை.  ஏனெனில் எல்லோரும் புதுமைப்பித்தன் போலவோ பாரதி போலவோ வறுமையில் வாட வேண்டிய நிலையில் இருந்தால், எழுத்துக் கலையும், தேயும்.  எழுத்துக்களும் தேய்ந்துவிடும். போலியான தத்துவப் பிரச்சனைகளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு கதைகளை எழுதிவிடுவதால் மட்டுமே தத்துவங்கள் வெற்றிபெற்றுவிடுவதில்லை.  அவை வெற்றிபெற எழுதுகிறவன் மட்டுமே பொறுப்பேற்கவும் முடியாது.   

22.1      எழுத்து வாழ்வதன் மூலம் எழுத்தாளன் வாழ்கிற நிலை ஒருபோதும் வருவதில்லை. ஏனெனில் ஒரு படைப்பு எழுதியபின் அது புகழ்பெற்று எழுத்தாளனிடம் சன்மானமாக வந்தடையும் காலம் வரை எழுத்தாளன் காத்திருக்க வேண்டும்.  எனவே எழுத்தாளன் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு எதையாவது எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.  அவன் எதை எழுதினாலும் வாசிக்கிறவர்கள் இருப்பார்கள். அவன் உயிரோடு, வளத்தோடும் இருந்தால் தானே எழுத்து உயிர்பெறும், மொழியும் வளம் பெறும்.

23.        குழுமனப்பான்மைகளை விட்டு, எழுத்தாளன் தன் தேர்வுகளின்படி விடுதலை உணர்வோடு எழுதுகிறவர்களைஅ மதிக்காவிட்டால் வாசகப்பரப்பு குறைந்து கொண்டே தான் இருக்கும்.  அவன் எழுதியது தத்தமது கொள்கைகளுக்குள், வரையறைகளுக்குள் வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தால், எழுதவருகிறவன் சுதந்திரமாக, சுயமரியாதையோடு வாழ்வது கடினம்.  தனது உன்னதங்களையும், கீழ்மைகளையும் விரித்துக் காட்டுகிறவன் எந்த வகை எழுத்தை எழுதினாலும் அவற்றில் உண்மையிருந்தால் அவை வெகுவாக வாசிக்கப்படும்.  அதுதவிர, வாசகப் பரப்பை அதிகரிக்கும் எல்லா எழுத்துக்களையும் வரவேற்கும் மனம் நமக்கு வேண்டும்.  அஸ்திவாரம் ஆழமாகப் பலமாக இருந்தால்தான் அதற்கு மேல் எழும் தீவிர, நல்ல இலக்கியங்கள் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் கிடைப்பார்கள். 

24.        எழுத்தாளர்களும் தயக்கமின்றி, வாசகர்களின் விருப்பத்துக்கு ஏற்பவும் எழுதலாம்.  ஆசிரியர்களின் விருப்பத்துக்கும் எழுதலாம்.  தன் சுயதேர்வின்படி எழுத்தை ஒரு தவமாகக்கூட நிகழ்த்தலாம்.  வாசகன் எல்லாக் குப்பைகளையும் எல்லாச் சிறப்புமிக்க படைப்புகளையும் படிக்கட்டுமே.. யார் எப்படி என்று தெரிந்து கொள்ளட்டுமே.. எழுத்தாளர்களும் வாசகர்களும் பெருகட்டுமே. வாசகர்களின் விருப்பத்துக்கிணங்க எழுதுவதனாலேயே ஒரு எழுத்தாளனின் படைப்பின் மதிப்பு குறைந்துவிடுவதில்லை. எழுத்தாளன் பலவிதமான எழுத்து வகைகளை எழுதியதாலேயே அவனுடைய தீவிரமான படைப்புகளின் மதிப்பு குறைந்துவிடுவதும் இல்லை. ஒவ்வொன்றுக்கும் அதனதன் இடம் உண்டு. வங்காளத்தில் மிகச்சிறந்த கதையாசிரியர்கள் மிகச்சிறந்த துப்பறியும் கதைகளின் ஆசிரியர்களாகவும் இருக்கின்றன.  தமிழகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எல்லோரும் விரும்புகிற அல்லது மதிக்கிற ஒரு துப்பறியும் கதை எழுதிய சிறந்த எழுத்தாளனைக் காண்பது இயலாது.

25        முழுநேர எழுத்தாளன் உயிர்வாழ்வது மிக அவசியமானது, பொருளாதார ரீதியாக அவன் சுதந்திரமாக இருப்பதும் தவிர்க்க முடியாதது.  அவன் எழுதிகிற கதை எதுவாக இருந்தாலும், அதன் தரமும், அது வாசகர்களின் மனங்களை கவர்வதும் இன்றியமையாதது.  நூறு பூக்கள், அல்ல ஆயிரம் பூக்கள், பத்தாயிரம் பூக்கள் மலரட்டும்.  வாசனை உள்ள மலர்களை வாசகர்கள் கண்டு கொள்வார்கள்.  வண்டுகளுக்குத் தெரியவேண்டியது எந்த மலர்களில் தேன் உண்டு என்பதே.  மலர்கள் எந்த வண்ணங்களில் உள்ளன என்பதை அவை கண்டு கொள்வதில்லை.

(இந்தக் கட்டுரைக்காக வங்காள மொழியுலகின் சில எழுத்தாளர்கள் குறித்த தகவல்களை அளித்த  எனது நண்பர் திரு.  அமித் குமார் சென், அவர்களுக்கு எனது நன்றி)