Tuesday, March 12, 2019

சலூன் (குறுநாவல்), க வீரபாண்டியன்

          தமிழ்க் கதைக்களத்தின் ஒரு புதிய சன்னலை சலூன் நாவல் கொஞ்சமாகத் திறந்துவிடுகிறது. சலூன் என்று பெயரிட்டாலும், முற்றிலும் அதைச் சுற்றிமட்டுமே வருகிறது என்று சொல்ல முடியாது.  அது வாஷிங்டனில் தொடங்கி பல ஊர்களை நினைவுகளைக் கனவாக மாற்றி வாண வேடிக்கை போல அல்லது கலைடாஸ்கோப் உள்ளே பார்த்தது போல் தோன்றுகிறது.

          கனவு மயக்கத்திலும், இடையிடைய விழிப்பு நிலையிலும் கதை சொல்லப்படுகிறது.  கனவின் மாயாலோகத்தில் கால வெளியும் ஊர்களும் மனிதர்களு அவர்களின் வாழ்வின் சில்லுத் துண்டுகளும் உடைந்த கண்ணாடித் துண்டுகள் மாதிரி கதையெங்கும் சிதறிக் கிடக்கின்றன.  ஆனால் அதே நேரத்தில் கடலில் பயணம் போகும்  கப்பலில் அமர்ந்திருக்கும் பறவை கடலில் சுற்றி விட்டு மீண்டும் கப்பலில் வந்தமர்வதைப் போல மீண்டும் கதைசொல்லியின் யதார்த்த உலகிற்கு வந்து விடுகிறது.

          நினைவோடைப் பாணியில் கதை சொல்வது போல் இருந்தாலும், இதைக் ’கனவோடை’ என்றுதான் சொல்ல வேண்டும். 

          பாத்திரங்கள் கால இட வெளிகளைத் தாண்டி, அவர்களுக்குச் சம்பந்தம் இல்லாத இடங்களில் அவதரிக்கும் வித்தையை இந்த ’கனவோடை’ சாத்தியமாக்குகிறது.  இப்படி நாம் கூடப் பல முறை ‘பகற்கனவு’ கண்டிருக்கிறோம். உதாரணமாக, எப்போதோ மறைந்து போன நமது தாய் தந்தையரை, நம் வெற்றித் தருணங்களில் அருகில் வைத்துக் கற்பனை செய்து பார்த்திருக்கிறோம் அல்லவா? அதைத்தான் கதைப் பாணியாக க. வீரபாண்டியன் நிகழ்த்தியிருக்கிறார். 

          சலூனுக்கு இலக்கியத்தில் ஒரு சின்ன இடத்தைப் பிடித்து அதிலிருக்கும் மனிதர்களை, அவர்களில் வாழ்வின் சில கூறுகளைப் பதிவு செய்கிறார்.  ‘முடிதிருத்துகிறவர்களின் தொழிற்சங்கம்’ என்று முல்க்ராஜ் ஆனந்து இந்தியாவிற்குச் சுதந்திரம் வருவதற்கு முன்னால் எழுதிய ஆங்கிலக் கதையை சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஞாபகம்.  அதற்குப் பின்னர் இந்தக் கதையில் தான் முடிதிருத்துகிறவரும், சலூனும் தோன்றுவதை நான் பார்த்திருக்கிறேன் (என் பார்வையில் படாத பல லட்சம் நூல்கள் இருக்கின்றன).

          முடிதிருத்துகிறவர்களின்  கதையை மட்டும் சொல்லவில்லை.  கேதரின் என்ற பாத்திரம் மனித விடுதலையின் முழுமுதற் குறியீடாக வருகிறது.  பெண்ணாக இருந்து தன்விருப்பத்தின் காரணமாக பாலின் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநம்பியாக மாறிக் கொள்கிறாள்.  அதற்குப் பின்னர், ஒரு பெண்ணின் மீது காதல் கொள்கிறாள்.  அந்தப் பெண்ணும் ‘கென்னத்’ என்ற பெயரோடு இருக்கும் பழைய ‘கேதரின்’ஐக் காதலிக்கிறாள்.  இது எந்த அதிர்ச்சியும் இல்லாமல் பதிவாகிறது.   இவர்களின் விடுதலையின் வெளி எவ்வளவு பரந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கென்னத் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படும் தலைமைச் செயல் அதிகாரி என்பது கூடுதல் தகவல். 

          இன்னும் சாதிய, பண்பாட்டு, மத, பொருளாதார இன்னும் பல அடிமைத்தனமான சிந்தனைகளை சுமந்து களைத்துப் போயிருக்கும் நமக்கு, கேதரினும், முடிதிருத்துகிற தொழிலாளிகளும் நேர் எதிர் நிலைகளில் நிற்பவர்களாகவே காட்சி தருவார்கள்.

          இந்தியச் சமூகத்தை இப்படிக் குறுக்குவெட்டாகக் குறுநாவலுக்குள் கொண்டுவந்திருக்கும் ஆசிரியர், மிகையுணர்ச்சியாக எதையும் சொல்வதில்லை.  அடக்கமான தொனியில் சம்பவங்களின் தீவிரம் குறையாமல் முன்னகர்த்துகிறார்.  படிக்கத் தொடங்கும் போது, நம் இப்படிப்பட்ட ‘கனவோடை’ யில் போவது தெரியாமல் சிறிது தடுமாறுவது உண்மை.  ஏனெனில் புதிய பாணிக் கதை.   மற்றப்படி ஒரு சிறந்த கதை.  யதார்த்தத்தைக் கனவின் மூலம் சித்தரிக்கும் கதை.

          எளிமையான பின்புலத்தில் தொடங்கி, அதிகார வர்க்கத்தின் பேராற்றில் இணைந்துவிட்டவர்கள் தங்கள் கடந்த காலத்தைப் பார்க்கவோ நினைவுபடுத்திக் கொள்ளவோ தயங்கும் இக்காலத்தில் நூலாசிரியர் ஐ.ஏ.எஸ் ஸில் இருந்தாலும் கடந்த காலத்தில் நுழைவது மட்டுமின்றி, கதையின் முடிவில் முடிதிருத்திக் கொள்ள மதுரையில் இருக்கும் தன் நண்பனின் கடையில் முடிதிருத்திக் கொள்ளச் செல்லும் ஒரு கதை சொல்லியைப் படைத்திருக்கிறார். கதைசொல்லி, வாஷிங்டனில் இருந்து மதுரைவரை வரும் பயணம், கடந்த காலத்தை சுவீகரிக்கும் பயணம்.  பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.  இப்படி, எளிய மனிதர்கள் வேர்களைத் தேடிப் பயணம் செய்வது முன்னேப்போதையும் விட இப்போது சாத்தியமாகியிருக்கிறது. தமிழகத்தின் ‘சமூக நீதி’ யைக் குறித்துச் சிந்திக்கவும் வைக்கிறது. 

          கார்ப்பரேட் கம்பெனி நடத்தும் சலூனில் பதிவு செய்து கொண்டதன் காரணமாக அங்கிருந்து அழைப்பு வருகிறது. ஆனால் கதை சொல்லி மதுரையின் தன் நண்பனின் கடைக்கே செல்கிறார்.  இது அவருடைய தேர்வு.

          கார்ப்பரேட்டுகளின் கையில் முடிவெட்டும் தொழிலும் போய்க்கொண்டிருக்கிறது.  இனி மெல்ல மெல்ல தனிமனிதர்களின் சிறுதொழில் பெரும்பாலும் எதிர்காலத்தில், நகரங்களில் மறைந்துவிடும் என்பது சாத்தியம்.  அங்கே முடிதிருத்துகிறவர்கள், கூலியாட்களாக இருப்பார்கள்.  அன்னியமாதல் அங்கும் நிகழக்கூடும்.

          செருப்பு ஷூ கம்பெனிகள் வந்துவிட்ட பின்னரும் பலகாலமாக ஊர்களின் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து செருப்புத் தைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகள் இருப்பது போல சிறு சலூன் கடைகள் இருக்கும் வாய்ப்புக்கள் உண்டு.  பெருமீன்கள் வாழும் கடலில் சிறுமீன்கள் இல்லையா?

          ஒருமுறை டிஸ்கவரி சானலில் கேட்ட வாசகம்:-
“உலகில் தோன்றிய எந்த ஒரு தொழில் நுட்பமும் முற்றிலும் அழிந்து போவதில்லை.  எங்காவது ஒரு மூலையில் யாராவது அதைப் பாதுகாத்து வைத்துக் கொண்டே இருப்பார்கள்”.

          சின்னச் சின்னச் சலூன்களும் அழியாதென்றே
 தோன்றுகிறது.  சலூன் கடைகளில் தினத்தந்தி படித்துத் தமிழையும், அரசியலையும் அறிந்து கொண்டு விவாதித்த தமிழுலக மனிதர்கள் இன்னும் பல கதைகளில் வரவேண்டும். சலூன் என்பது மனிதர்கள் கூடும் இடம்.  எனவே கதைகளுக்கான நல்ல களம்.  சலூன் நாவல் சின்ன ஆனால் தீவிரமான முயற்சி.

No comments:

Post a Comment