Tuesday, March 12, 2019

சலூன் (குறுநாவல்), க வீரபாண்டியன்

          தமிழ்க் கதைக்களத்தின் ஒரு புதிய சன்னலை சலூன் நாவல் கொஞ்சமாகத் திறந்துவிடுகிறது. சலூன் என்று பெயரிட்டாலும், முற்றிலும் அதைச் சுற்றிமட்டுமே வருகிறது என்று சொல்ல முடியாது.  அது வாஷிங்டனில் தொடங்கி பல ஊர்களை நினைவுகளைக் கனவாக மாற்றி வாண வேடிக்கை போல அல்லது கலைடாஸ்கோப் உள்ளே பார்த்தது போல் தோன்றுகிறது.

          கனவு மயக்கத்திலும், இடையிடைய விழிப்பு நிலையிலும் கதை சொல்லப்படுகிறது.  கனவின் மாயாலோகத்தில் கால வெளியும் ஊர்களும் மனிதர்களு அவர்களின் வாழ்வின் சில்லுத் துண்டுகளும் உடைந்த கண்ணாடித் துண்டுகள் மாதிரி கதையெங்கும் சிதறிக் கிடக்கின்றன.  ஆனால் அதே நேரத்தில் கடலில் பயணம் போகும்  கப்பலில் அமர்ந்திருக்கும் பறவை கடலில் சுற்றி விட்டு மீண்டும் கப்பலில் வந்தமர்வதைப் போல மீண்டும் கதைசொல்லியின் யதார்த்த உலகிற்கு வந்து விடுகிறது.

          நினைவோடைப் பாணியில் கதை சொல்வது போல் இருந்தாலும், இதைக் ’கனவோடை’ என்றுதான் சொல்ல வேண்டும். 

          பாத்திரங்கள் கால இட வெளிகளைத் தாண்டி, அவர்களுக்குச் சம்பந்தம் இல்லாத இடங்களில் அவதரிக்கும் வித்தையை இந்த ’கனவோடை’ சாத்தியமாக்குகிறது.  இப்படி நாம் கூடப் பல முறை ‘பகற்கனவு’ கண்டிருக்கிறோம். உதாரணமாக, எப்போதோ மறைந்து போன நமது தாய் தந்தையரை, நம் வெற்றித் தருணங்களில் அருகில் வைத்துக் கற்பனை செய்து பார்த்திருக்கிறோம் அல்லவா? அதைத்தான் கதைப் பாணியாக க. வீரபாண்டியன் நிகழ்த்தியிருக்கிறார். 

          சலூனுக்கு இலக்கியத்தில் ஒரு சின்ன இடத்தைப் பிடித்து அதிலிருக்கும் மனிதர்களை, அவர்களில் வாழ்வின் சில கூறுகளைப் பதிவு செய்கிறார்.  ‘முடிதிருத்துகிறவர்களின் தொழிற்சங்கம்’ என்று முல்க்ராஜ் ஆனந்து இந்தியாவிற்குச் சுதந்திரம் வருவதற்கு முன்னால் எழுதிய ஆங்கிலக் கதையை சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஞாபகம்.  அதற்குப் பின்னர் இந்தக் கதையில் தான் முடிதிருத்துகிறவரும், சலூனும் தோன்றுவதை நான் பார்த்திருக்கிறேன் (என் பார்வையில் படாத பல லட்சம் நூல்கள் இருக்கின்றன).

          முடிதிருத்துகிறவர்களின்  கதையை மட்டும் சொல்லவில்லை.  கேதரின் என்ற பாத்திரம் மனித விடுதலையின் முழுமுதற் குறியீடாக வருகிறது.  பெண்ணாக இருந்து தன்விருப்பத்தின் காரணமாக பாலின் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநம்பியாக மாறிக் கொள்கிறாள்.  அதற்குப் பின்னர், ஒரு பெண்ணின் மீது காதல் கொள்கிறாள்.  அந்தப் பெண்ணும் ‘கென்னத்’ என்ற பெயரோடு இருக்கும் பழைய ‘கேதரின்’ஐக் காதலிக்கிறாள்.  இது எந்த அதிர்ச்சியும் இல்லாமல் பதிவாகிறது.   இவர்களின் விடுதலையின் வெளி எவ்வளவு பரந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கென்னத் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படும் தலைமைச் செயல் அதிகாரி என்பது கூடுதல் தகவல். 

          இன்னும் சாதிய, பண்பாட்டு, மத, பொருளாதார இன்னும் பல அடிமைத்தனமான சிந்தனைகளை சுமந்து களைத்துப் போயிருக்கும் நமக்கு, கேதரினும், முடிதிருத்துகிற தொழிலாளிகளும் நேர் எதிர் நிலைகளில் நிற்பவர்களாகவே காட்சி தருவார்கள்.

          இந்தியச் சமூகத்தை இப்படிக் குறுக்குவெட்டாகக் குறுநாவலுக்குள் கொண்டுவந்திருக்கும் ஆசிரியர், மிகையுணர்ச்சியாக எதையும் சொல்வதில்லை.  அடக்கமான தொனியில் சம்பவங்களின் தீவிரம் குறையாமல் முன்னகர்த்துகிறார்.  படிக்கத் தொடங்கும் போது, நம் இப்படிப்பட்ட ‘கனவோடை’ யில் போவது தெரியாமல் சிறிது தடுமாறுவது உண்மை.  ஏனெனில் புதிய பாணிக் கதை.   மற்றப்படி ஒரு சிறந்த கதை.  யதார்த்தத்தைக் கனவின் மூலம் சித்தரிக்கும் கதை.

          எளிமையான பின்புலத்தில் தொடங்கி, அதிகார வர்க்கத்தின் பேராற்றில் இணைந்துவிட்டவர்கள் தங்கள் கடந்த காலத்தைப் பார்க்கவோ நினைவுபடுத்திக் கொள்ளவோ தயங்கும் இக்காலத்தில் நூலாசிரியர் ஐ.ஏ.எஸ் ஸில் இருந்தாலும் கடந்த காலத்தில் நுழைவது மட்டுமின்றி, கதையின் முடிவில் முடிதிருத்திக் கொள்ள மதுரையில் இருக்கும் தன் நண்பனின் கடையில் முடிதிருத்திக் கொள்ளச் செல்லும் ஒரு கதை சொல்லியைப் படைத்திருக்கிறார். கதைசொல்லி, வாஷிங்டனில் இருந்து மதுரைவரை வரும் பயணம், கடந்த காலத்தை சுவீகரிக்கும் பயணம்.  பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.  இப்படி, எளிய மனிதர்கள் வேர்களைத் தேடிப் பயணம் செய்வது முன்னேப்போதையும் விட இப்போது சாத்தியமாகியிருக்கிறது. தமிழகத்தின் ‘சமூக நீதி’ யைக் குறித்துச் சிந்திக்கவும் வைக்கிறது. 

          கார்ப்பரேட் கம்பெனி நடத்தும் சலூனில் பதிவு செய்து கொண்டதன் காரணமாக அங்கிருந்து அழைப்பு வருகிறது. ஆனால் கதை சொல்லி மதுரையின் தன் நண்பனின் கடைக்கே செல்கிறார்.  இது அவருடைய தேர்வு.

          கார்ப்பரேட்டுகளின் கையில் முடிவெட்டும் தொழிலும் போய்க்கொண்டிருக்கிறது.  இனி மெல்ல மெல்ல தனிமனிதர்களின் சிறுதொழில் பெரும்பாலும் எதிர்காலத்தில், நகரங்களில் மறைந்துவிடும் என்பது சாத்தியம்.  அங்கே முடிதிருத்துகிறவர்கள், கூலியாட்களாக இருப்பார்கள்.  அன்னியமாதல் அங்கும் நிகழக்கூடும்.

          செருப்பு ஷூ கம்பெனிகள் வந்துவிட்ட பின்னரும் பலகாலமாக ஊர்களின் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து செருப்புத் தைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகள் இருப்பது போல சிறு சலூன் கடைகள் இருக்கும் வாய்ப்புக்கள் உண்டு.  பெருமீன்கள் வாழும் கடலில் சிறுமீன்கள் இல்லையா?

          ஒருமுறை டிஸ்கவரி சானலில் கேட்ட வாசகம்:-
“உலகில் தோன்றிய எந்த ஒரு தொழில் நுட்பமும் முற்றிலும் அழிந்து போவதில்லை.  எங்காவது ஒரு மூலையில் யாராவது அதைப் பாதுகாத்து வைத்துக் கொண்டே இருப்பார்கள்”.

          சின்னச் சின்னச் சலூன்களும் அழியாதென்றே
 தோன்றுகிறது.  சலூன் கடைகளில் தினத்தந்தி படித்துத் தமிழையும், அரசியலையும் அறிந்து கொண்டு விவாதித்த தமிழுலக மனிதர்கள் இன்னும் பல கதைகளில் வரவேண்டும். சலூன் என்பது மனிதர்கள் கூடும் இடம்.  எனவே கதைகளுக்கான நல்ல களம்.  சலூன் நாவல் சின்ன ஆனால் தீவிரமான முயற்சி.

Sunday, March 10, 2019

                                                  சஞ்சாரம்
                   
                    சஞ்சாரம் நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்த பிறகுதான் அது என் பார்வையில்பட்டது.  அது பரிசுக்குத் தகுந்த நூல் என்று பலர் சொன்னது என் ஆவலைத் தூண்டிவிட்டது.

          பெயருக்கு ஏற்றாற்போலவே ‘சஞ்சாரம்’ பல ஊர்களைச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு நாதஸ்வரக் கலைஞரைப் பற்றியது.  நாவலின் காலவெளியும் முன்னும் பின்னுமாய்ச் சஞ்சரித்துக் கொண்டே இருக்கிறது.  அந்தக் கலைஞர் முதலில் அலைந்து திரிவது கச்சேரிகளுக்காக.  கதைக்களம் தொடங்கும் போது அவரையும் அவரது கலையையும் மதிக்காமல் அவமானம் செய்து, அடித்துக் கட்டிவைத்துக் கொலைகூட செய்து விடுவார்களோ என்ற அளவில் மிரட்டிய ஒரு கும்பலை (அவர்களை ஒரு சமூகம் என்றோ ஜாதி என்றோ சொல்வது சரியில்லை) எதிர்த்து அவரால் என்ன செய்ய முடிந்தது? தனது கோபத்தில் அவர் ஏதோ ஒன்றை செய்யப் போக அது எங்கே போய் முடிகிறது? இது தான் நாவலின் கதைப் போக்கு.  அவர் நாதஸ்வரக் கலைஞராக இருப்பது கதையின் மைய நாதமாக இருக்கிறது.

          முதல் காட்சியில் அடித்து அவமானப்படுத்தப்படும் பக்கிரி கடைசிக் காட்சியில் கைதாகிறார். இந்த இரு நிகழ்வுகளுக்கிடையே பக்கிரி, ரத்தினம், பழநி போன்ற கலைஞர்களின் நினைவோடையாகக் கதை நகர்கிறது.  அதனுள்ளே அவர்களின் வாழ்வும் கலையும் இன்னல்களும், இன்பங்களும் பதிவாகின்றன.  இன்னொரு இழையாக நாட்டார் கதைக்கூறுகளின் மூலம் நாதஸ்வரம் அதன் இசையின் தோற்றம் வளர்ச்சி பற்றிய தொல்கதைகள் நாட்டார் வழக்காறுகளின் பாணியில் மிக நேர்த்தியாகப் பதிவாகியிருக்கின்றன. 

          ஒரு காலம்வரை தமிழினத்தின் முதன்மையான அடையாளமாக இருந்து, இன்றைய நிலையில் நிலையழிந்து போன நாதஸ்வரக் கலையும் கலைஞர்களும், சாதியத்தின் கைகளில் சிக்கிச் சிதிலமடைந்த வரலாற்றை விவரிக்கிறது.
 ஊர்வாரியாக கதையின் நிகழ்வுகள் பின்னப்படுவது புதியது.  நாட்டார்கதை மரபுகளின் அதிதப் புனைவுத் தன்மையும் இயல்புத்தன்மையும் ஒருபக்கப் விரவிவர இன்னொருபுரம் நவீனத்தின் யதார்த்தப் பாணியும் கதையை நடத்துகின்றன. 

          பக்கிரி ஊர்த்திருவிழாவில் மேல் சாதியைச் சேர்ந்த சிறுவர்கள் கூட அவர் மீது வன்மம் காட்டத் தயங்காதிருப்பதும் பக்கிரியை நிலைகுலையச் செய்வதிலிருந்து பக்கிரியின் சஞ்சாரம் தொடங்குகிறது.  ஒரே ஒருவர் மட்டும் அவர்கள் மீது பரிதாபப்பட்டு அவர்களை விடுதலை செய்கிறார்.   பக்கிரி பழிவாங்கும் உணர்வுடன் யாரும் அறியாமல் திருவிழாப் பந்தலுக்குத் தீயிட்டு விடுகிறார்.  அங்கிருந்து, அவரும் அவருடைய சக கலைஞரான ரத்தினமும் பயத்தில் ஊர் ஊராகத் திரிகிறார்கள். தான் அவமானப்பட்டதற்காக பக்கிரி வைத்த தீ இரண்டு ஊர்க்காரர்களிடையே கலவரம் ஏற்படக் காரணமாகிறது. அதில் ஐம்பது பேர்வரை சாகிறார்கள்.  வெளியூர்களில் பக்கிரி, ரத்தினம் இருவருக்கும் இது பலநாட்கள் கழித்தே தெரியவருகிறது.
கடைசியில், ஊர், மனைவி ஞாபகத்தில், ரத்தினம் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.   தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பக்கிரியைக் காட்டிக் கொடுத்துவிடுகிறார்.  பக்கிரி ஊர்திரும்பியதும் கைதாவதில் கதை முடிந்து விடுகிறது.

பக்கிரி சிறுவயது நினைவுகளில் அவருடைய விளையாட்டுக்கள் வன்மமும், சிறுபிள்ளைத்தனமும், வறுமையும் ஏளனமும் மிக இயல்பாகப் பதிவாகியிருக்கின்றன.  சிறுவர்கள் சிகரெட் பெட்டிகளின் அட்டைகளை பணநோட்டுக்களாக எடுத்துக் கொண்டு, அதிகம் வைத்திருப்பவன், அரிதான வெளிநாட்டு சிகரெட் பெட்டி அட்டைகளை வைத்திருப்பவன் பணக்காரனென்று கருதிக் கொள்ளும் புதிய விளையாட்டு ரசிக்கத்தக்கது.

நாம் எல்லோரும் ஒத்துக் கொள்ளும் எளிய விதிகளின் மூலம், சமூகம் என்னும் விளையாட்டில், செல்வம் எது என்று தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.  தங்கம் வைரம் போன்றவை அதிக மதிப்புள்ளவை என்று நாம் எல்லோரும் ஒத்துக் கொள்வதனாலேயே அவை மதிப்புப் பெறுகின்றன.  நாம் அனைவரும் அதை ஒத்துக் கொள்ளவில்லையெனில் அவற்றிற்கு எந்த மதிப்பும் கிடையாது.  நாளை யாரிடம் அறிவு அதிகம் இருக்கிறதோ அல்லது யாரிடம் புத்தகம் இருக்கிறதோ அவர்களே செல்வந்தர்கள் என்றோ அல்லது யாருக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்களோ அவர்களே செல்வந்தர்கள் என்றோ மனிதர்கள் அனைவரும் முடிவெடுத்தால், அதுவே நடைமுறையாகிவிடும்.  நாம் விலையுயர்ந்தது என்று கருதும் தங்கம் தன்னளவிலேயே எந்த மதிப்பும் இல்லாதது.  நாம் அதன் மீது ஏற்றுவிட்ட மதிப்பே அதன் மதிப்பு. பண்பாட்டுக் கூறுகளுக்கும் ஆன மதிப்பும் இப்படியானதே.  சிறுவர்களின் சிகரெட் பெட்டி அட்டைகளின் விளையாட்டு இப்படி ஒரு பொருளை அளிக்க முடியும். 

பக்கிரி தீயிட்டதன் காரணமாக ஏற்படும் இழப்புகளும், அதனடியாக ஏற்பட்ட சண்டை சச்சரவுகள், மரணங்கள் நேரடியான விவரிப்புகளாக இல்லாமல் பக்கிரியும் ரத்தினமும் கேள்விப்படும் வகையில் அமைத்திருப்பதன் காரணமாக, ரத்தம் சொட்டும் (தமிழ் சினிமா நினைவுக்கு வருகிறது) வன்முறையின் நேரடியான விவரிப்புத் தவிர்க்கப்பட்டிருக்கிறது.  மிகச் சொற்ப சொற்களில் வருகிறது.  வாசகனுக்குப் பக்கிரியின் நியாயத்தைப் புரியவைக்க இது பயன்படுகிறது.  சாதிய வன்முறை பக்கிரியால் தொடங்கவில்லை. ஏற்கனவே இரண்டு ஊர்க்காரர்களின் மனதில் ஒளிந்திருக்கும் வன்மம் தீவைப்புச் சம்பவத்தை சாக்காக வைத்து பேயாட்டம் போடுகிறது.  அவர்கள் நினைத்திருந்தால், புலன் விசாரணை செய்து பின்னர் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலாம்.  ஏற்கனவே படிந்திருக்கும் வன்மம் அது போன்ற ஒரு நியாயமான நடவடிக்கை நிகழாமல் தடுக்கிறது.  பக்கிரி அவமானப் படுவதற்கும் அடிபடுவதற்கும் அவன் கோபம் கொள்வதற்கும், ஊராரிடையே வன்முறை வெடிப்பதற்கும் காரணம் சாதியம் என்பதை இது நிறுவுகிறது.

பக்கிரியின் கோபம் நியாயமானது.  ஆனால் அவன் தீவைக்கும் நிகழ்வு அவனது வக்கிரம் என்றால், அது அவன் மீது செலுத்தப்பட்ட வன்முறையின், வக்கிரத்தின் விளைவுதான். இதை ஓரிரவில் தீர்த்துவிட முடியாது. இது நமது சமூக அவலங்களின் சாட்சியாக இருக்கிறது. 

கதையெங்கும் நாதஸ்வரக் கலையின் பெருமையும், தொன்மையும் அவற்றைப் பொருட்படுத்தாத சக மனிதர்களின் அறியாமையும், அலட்சியமும் தொடர்ந்து இயல்பாகப் பதிவாகியிருக்கின்றன.

இதில் இன்னொரு அரசியலும் இருக்கிறது.  கர்னாடக இசையின் ஒரே பாடல் அல்லது இசைக்கோர்வை, மேல்வர்க்கத்தினரின் ஆதரவில் இசை மண்டபங்களில் வயலின் அல்லது புல்லாங்குழலில் இசைக்கப் பெற்றால் ரசிக்கப்படுகிறது.  அதே பாடல் அல்லது இசை நாதஸ்வரத்தின் இசையில் கோவிலில் அல்லது திருமணத்தில் அல்லது தெருவில் இசைக்கப்படும் போது அதன் மதிப்பு குறைந்து விடுவது போல் தோன்றுகிறது.  இந்த ரசனை வேறுபாட்டுக்குப் பின்னர் இருப்பது என்ன என்பது கவனத்திற்கு உரியது.

தான் பட்ட அவமானத்துக்குப் பழிதீர்த்துவிட்டு, ஊர் ஊராய் அலைந்து திரிந்து சஞ்சாரம் செய்யும் பக்கிரி கைதாவதில் கதை முடிந்தாலும், பக்கிரி சிறைப்பட்டு பின்னர் வெளிவந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதைப் பதிவு செய்கிறது.  ரத்தினம் பக்கிரியைக் காட்டிக் கொடுத்தாலும் அவருக்கு வேறுவழியில்லை. 

இந்த நாவலில் வரும் மனிதர்கள் யாரும் அதித குணம் கொண்டிருக்கவில்லை.  புனிதர்களோ பாவிகளோ இல்லை. சாதாரண மனிதர்கள்.  அவர்கள் தங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப, அதை அவர்கள் புரிந்து கொண்ட்தற்கேற்ப இயங்குகிறார்கள்.  அவர்கள் அப்படி இயங்கும் போது, மனிதர்களை, அவர்களின் கலையை, வாழ்வை அன்புடனும் பரிவுடனும் நோக்குவது எவ்வளவு முக்கியமானது, அவசியமானது என்று புதிய நடையில், இயல்பான சொற்கள், நிகழ்வுகளில் நாவல் பதிவு செய்கிறது. 

நான் வாங்கிய நூலின் பிரதியில் நிறைய முற்றுப்புள்ளிகள் அச்சுப் பிழையாக பல இடங்களில் உறுத்தின.  ஒற்றுப்பிழைகள் பல உள்ளன.  அடுத்த பதிப்பில் திருத்தப்பட வேண்டும்.