Tuesday, September 18, 2018

ஔரங்கசேப், நீலகண்ட சாஸ்திரியின் கட்டுரைகள், ஆனந்த் டெல்டும்டெயின் ஜாதிக் குடியரசு


ஔரங்கசேப்

            ஔரங்கசேப் பற்றிய பல பயங்கரக் கதைகளும், கற்பனைகளும் முதலில் இருந்தே நமது நாட்டில் நிலவி வந்திருக்கின்றன.  அந்தக் கதைகளைப் பரப்பி விட்டதிலும், இப்போது பரப்பிவிட்டுக் கொண்டிருப்பதிலும் அரசியல் இருக்கிறது.  இந்துக்களும் முஸ்லிம்களும் பேதமும் பகைமையும் கொண்டிருந்தால் தான் தங்களது கதை ஓடும் என்ற நிலையில் இருக்கும் கட்சிகளும் அமைப்புகளும் இப்படிப்பட்ட கதைகளை ஆய்வுத் தரவுகள் இன்றி பொதுவெளியில் பரப்பிவருகிறார்கள். 

இந்த நூல் ஒரு வரலாற்று ஆய்வாளரின் (பெண்) பார்வையில், கிடைக்கின்ற வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது.  ஔரங்கசேப் என்ற பேரரசன் ஆட்சிக்கு வந்த நேரத்தில் எப்படிப்பட்ட சூழல் இருந்தது, சூழ்ச்சியும் போரும் செய்துதான் பேரரசராக முடியும் என்ற நிலையில், அவரது உடன்பிறந்த ஆண்களில் யாராயிருந்தாலும் அவர் செய்ததையேதான் செய்திருப்பார்கள் என்ற உண்மையை காண முடிகிறது.  ஷாஜகானின் விருப்பமான தேர்வாக ஔரங்கசேப் இருக்கவில்லை.  அவருடையை இன்னொரு சகோதரரைத்தான் தன் வாரிசாக்க விரும்புகிறார். 

அந்தச் சகோதரன் அப்பாவுடனேயே இருக்கிறான்.  பேரரசின் இயக்கத்துக்குத் தேவையான பெரும்பாலான போர்களில் ஔரங்கசேப்பை ஈடுபடச் செய்கிறார்பேரரசர். இன்னும் இரண்டு சகோதரர்களையும் ஔரங்கசேபையும் தூரத்துப் பிரதேசங்களுக்கு அனுப்பிவிட்டு, தனக்குப் பிரயமான மகனைத் தன்னுடனே ஷாஜகான் வைத்துக் கொள்கிறான்.  நால்வரும் போட்டியிடுகிறார்கள்.  யார் யாரைக் கொல்வார்கள், அடுத்து யார் பேரரசனாக வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.  நால்வரும் திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.  அந்தப் போட்டியில் ஔரங்கசேப் இரண்டு சகோதரர்களையும் கொலைசெய்கிறார்.  அவர் கொலைசெய்யாவிட்டால், கொலை செய்யப்பட்டிருப்பார்.  பேரரசராவதில் வெற்றியும் பெற்று, தன்னை விரும்பாத தந்தையையும் சிறைப்படுத்துகிறார்.  ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வழிகளே இவை.  இல்லையெனில் தந்தை ஆட்சியைத் தராமல் இருந்துவிடக்கூடும்.
 (இப்போது நம் நாட்டில் அரசியல் சதுரங்க விளையாட்டுக்களில் கொலை இல்லை என்றாலும், தான் ஆட்சியைப் பிடிப்பதற்காகப் போட்டியாளர்களைத் தந்திரமாக செயலிழக்கச் செய்வது நடந்து கொண்டுதானே இருக்கிறது.)  

            தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக என்னென்ன செய்யவேண்டுமோ அனைத்தையும் ஔரங்கசேப் செய்திருக்கிறார்.  தன்னை எதிர்ப்பவர்களின் கோயில்களை மசூதிகளை இடித்திருக்கிறான்.   தனக்குச் சார்பாக செயல்பட்ட கோயில்களுக்கும் மற்ற அமைப்புக்களுக்கும் தானம் செய்திருக்கிறான்.  மராட்டிய மன்னர் சிவாஜியைச் தோற்கடித்துச் சிறைபிடித்து வைத்திருக்கிறார்.  ஔரங்கசேப் சார்பில் சிவாஜியுடன் போர்நடத்தியவர் ஒரு இந்துச் சிற்றரசர். அது போலவே, சிவாஜியின் படையில் முக்கியப் பங்கு வகித்தவர்களில் மூத்த தளபதி ஒருவர் முஸ்லிம்.  சிவாஜி-ஔரங்கசேப் போர் இரு மன்னர்களுக்கு இடையே ஆன போராகத்தான் நடந்ததே தவிர, இந்து முஸ்லிம் போராக நடக்கவில்லை.  டில்லியில் ஆட்சி செய்த எல்லாப் பேரரசர்களுக்கும் மராட்டிய மன்னர்களுடன் போர்செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.  ஏனெனில் தெற்குப் பகுதி முழுவதிலும் தங்கள் செல்வாக்கைச் செலுத்தியவர்கள் மராட்டியமன்னர்கள்.  தமிழ்நாட்டில் தஞ்சாவூர்வரை அவர்கள் ஆட்சி நடந்ததை நாம் அறிவோம். 

            மதமாற்றம் செய்தார் என்பதெல்லாம் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் உண்மையல்ல என்றே தெரிகிறது.  வரி விதிப்பதும் மக்களிடமிருந்து அதை வசூலிப்பதும் எல்லா அரசுகளுக்கும் அடிப்படைத் தேவையாகவே இருந்திருக்கிறது.  யார் என்ன பெயரில் வசூலித்தாலும் வரிதவிர்க்க முடியாத அம்சம். 

            கடைசிவரை அவர் ஒரு நல்ல முஸ்லிமாக, குர் ஆனில் சொன்னபடி நடக்க முயற்சித்தார். தன் உழைப்பில் ஈட்டிய பொருளிலேயே வாழ்க்கை நடத்தினார்.  தனது பேரரசின் எல்லையைத் தெற்கில் நீட்டிக்க வேண்டும் என்ற ஆசையில், கடைசிவரை தெற்கில் ஆட்சிபுரிந்த இந்து, முஸ்லிம் மன்னர்களுடன் போர் புரிந்து கொண்டிருந்தார்.  தனது கல்லறை கூட மிக எளிமையானதாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.  தனது அன்பான மனைவிக்கு அவர்கட்டிய மிகச்சிறிய தாஜ்மகால் போன்ற ஆனால் சாதாரணமான ஒரு கல்லறையைக் கட்டினார். (அதை நான் பார்த்திருக்கிறேன்.  ஔரங்காபாத் அருகில் உள்ளது. 

            மொத்தத்தில் ஔரங்கசேப் அவரது காலத்தில் பிரதிநிதியாகத்தான் வன்முறையைப், போரைப் பயன்படுத்தினார்.  எந்தக் கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்.  தனது நற்குணங்களின் காரணமாகவே 88 வயதுவரை வாழ்ந்தார். அவரை மிகக் கொடுமைக்காரர் என்று கருதுகிறவர்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த இந்து மன்னர்கள் என்னென்ன செய்தார்கள் எப்படி ஆட்சியைப் பிடித்தார்கள் எப்படி ஆட்சி செய்தார்கள் என்று தெரிந்து கொண்டால், அவர் அப்படி அல்ல என்பதைப் புரிந்து கொள்வார்கள்.  ஏனெனில் மன்னர்கள் எல்லோரும் எப்போதுமே தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள எதுவும் செய்வார்கள். (இப்போதிருக்கும் அரசியல் வாதிகள் போலவே என்று நீங்கள் நினைத்தால் அதை நானும் ஆமோதிக்கிறேன்.)




இந்துவில் வெளிவந்த கே.. நீலகண்ட சாஸ்திரியின் கட்டுரைகளின் தொகுப்பு

            நீலகண்ட சாஸ்திரியின் பெயர் இந்திய வரலாற்று ஆசிரியர்களில் முக்கியமானது.  சோழர்களைப் பற்றி அவர் எழுதிய வரலாறு, முதல் நூலாகவும் பெரும் ஆய்வு நூலாகவும் இன்றும் கருதப்படுகிறது.  இந்த நூலில் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் பத்திரிக்கை படிப்பவர்களை மனதில் கொண்டு மிக எளிமையான நடையில் எழுதப்பட்ட, ஆனால் தரமான கட்டுரைகள்.  தமிழின் தொன்மை குறித்தும், அதன் பெருமைகள் குறித்தும் மிகைப்பட்ட கற்பனாவாதங்கள் உலவிய நாட்களில் எழுதப்பட்டிருந்தாலும், வரலாற்று ஆவணங்கள், இலக்கியச் சான்றுகள் இவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை.  எந்தப் பெருமிதமும், மிகையும் இல்லாத எழுத்துக்கள்.  அறிஞர்கள் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு இவை உதாரணங்கள். தற்காலத்தில் எல்லோரும் அறிந்த விஷயங்களாக இருக்கும் பல உண்மைகள் அவர் எழுதிய காலத்தில் முதல்முறையாக வெளிக்கொண்டுவரப்பட்டன என்பது இந்தக் கட்டுரைகளில் தெரியவருகிறது.   

ஜாதிக் குடியரசு (ரிபப்ளிக் ஆஃப் காஸ்ட்)

            இந்துப் பத்திரிக்கையின் மதிப்புரைப் பகுதியில் அறிமுகமான இந்த நூலை மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் வாங்கினேன்.  அவை வீண்போகவில்லை என்பதைச் சொல்ல விரும்புகிறேன். 

            கட்டுரையாசிரியர், சமீபத்தில் பத்திரிக்கைகளில்நகரத்து நக்சல்வாதிஎன்று மஹாராஷ்டிரா போலிஸால் தேடப்பட்டவர்.  நூலைப் படித்துப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை.  மேலாண்மைப் பாடத்தில் பேராசிரியராக வேலைபார்க்கிற இவர் தலித் இயக்கங்கள் குறித்த தன்னுடைய தனித்துவமான பார்வையை இந்த நூலில் வைக்கிறார்.  இவரது புகழுக்குஇதுவே காரணமாக இருக்கக் கூடும்.  ஏனெனில்,  தனது விமரிசனத்தில், தற்போது அரசியலில் இருக்கும் யாரையும் விட்டுவைக்கவில்லை.   காந்திமுதல், ஷரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிவரை,  குடியரசுக் கட்சியிலிருந்து, காங்கிரஸ், பிஜேபி, பகுஜன் சமாஜ் கட்சி, மற்ற தலித் கட்சிகள் வரை அனைவர் மீதும் தன்னுடைய விமரிசனத்தை மிகத் தெளிவாக வைக்கிறார். 

            இந்த நூலில் உள்ள முக்கியக் கேள்வி யாரையும் நிலைகுலையச் செய்யும்.  ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதே அம்பேத்கரின் நோக்கம்.  அதற்காகவே வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.  ஆனால் இன்றோ ஒடுக்கப்பட்ட ஜாதிகளின் பெயரால் தொடங்கப்பட்ட இயக்கங்கள் அனைத்தும்,  அம்பேத்கரைத் தத்தெடுத்துக் கொள்ள விழையும் அனைத்துக் கட்சிகளும், ஜாதி அமைப்பை, ஜாதி அடையாள மற்றும் இட ஒதுக்கீட்டின் பெயரால் தொடர்ந்து நிலையாக நீடிக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அது.  தான் ஒரு தலித் சிந்தனையாளராக இருந்தும் அவரால் இதைச் சொல்ல முடிகிறது என்பது அவரது நேர்மையின் வெளிப்பாடு. 

            அனைத்துக் கட்டுரைகளுமே மிக அழுத்தமான புதிய பார்வையைத் தருகின்றன.  இட ஒதுக்கீடு, ஜாதி அமைப்பு, அம்பேத்கரின் செய்தி, மாவோயிஸ்ட்டுகள் தலித் பிரச்சனை, ஸ்வெட்ச்ச பாரத், என எல்லாக் கட்டுரைகளும் படிக்க வேண்டியவை.  மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் ஊழல்கள், அவை எப்படி ஏற்கனவே நிலைபெற்றுவிட்ட அதிகார மையங்களின் நடைமுறைகளையே பின்பற்றுகின்றன என்ற கட்டுரைகள் மிக முக்கியமானவை.   கல்வி வணிகமயமாவதை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கைகளுடன இணைத்துக் காட்டுகிறார்.  தீண்டாமையை ஒழிக்காமல் ஸ்வெச்ச பாரத் சாத்தியமில்லை என்கிறார்.  காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின்,  போதாமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

            இப்படி யாருடனும் சேராமல் தனித்தன்மையுடன் இருப்பதே இவரை அரசாங்கம் குறிவைப்பதற்கான காரணம் என்று யூகிக்கலாம்.  கலகத்தன்மையுள்ள எழுத்து இது.  சங்கடப்பட வைக்கும் பல கேள்விகளை எழுப்பி, ஜீரணிக்கக் கடினமாக இருக்கும் பல விஷயங்களை முன்னிருத்தும் நூல் இது.

No comments:

Post a Comment