ஆதிவாசி நடனமாட முடியாது
நான் படித்த மிகச்சிறந்த
கதைத்தொகுப்புகளில் ஒன்று இது. நாம் எழுதியும், சொல்லியும், கேட்டுமிருக்க
வேண்டிய கதைகள். இந்தக் கதைகள் ஆதிவாசிகள்
வாழ்வைச் சித்தரித்தாலும் மிகச் சமீப காலம் வரை நாமும் பார்த்தோ கேட்டோ அல்லது
அனுபவித்த நிகழ்வுகளையே சொல்லுகின்றன. நவீனத்துவத்தின் பெயரில் நாம் மறந்துபோன
எளிமையான மொழியில், நேரடியான நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் இக்கதைகளை எழுதியவர் ஹன்ஸ்தா
ஷொவேந்ர ஷேகர். (தமிழ் நடையில் ஹன்ஸ்தா சோவெந்திர சேகர்). இந்தியப் பண்பாட்டின் வேர்களான பல விஷயங்களை
ஆதிவாசிகளைச் சொல்வதன் மூலம் எழுதிக்காட்டுகிறார். அங்கே தெரிவன நமது முகங்களே. சாஸ்திரமும் சனாதனமும் நம்முன்
நிறுத்திக்காட்டும் பல பண்பாட்டு விழுமியங்களை இந்தக் கதைகளின் மூலம்
உடைத்தெறிகிறார். ஆனால் மிக உள்ளடங்கிய
மொழி இக்கதைத் தொகுப்பின் மிகப் பெரிய சிறப்பு. பாத்திரங்களின் பேசுமொழி, நடை உடை
பாவனைகள் மூலம் அவர்களின் உணர்வுகள் வெளிப்படுகின்றன. ஆசிரியரின் குரல் ஒலிப்பது போன்றே நான் உணரவில்லை. ஆதிவாசிகளாக அறியப்படும் அவர்கள் இந்திய
அரசியல் சமூகப் பண்பாட்டுக் கூறூகளின் மீது வைக்கிற மிகக் கடுமையான விமரிசனம்
அவர்கள் இயல்புடன் நடத்துகிற வாழ்க்கைதான்.
உரக்கக் கூவிச் செய்திகளை விற்கிற இக்காலத்தில் உணர்வுகள் மங்கிப்
போனவர்களுக்கு இந்தக் கதைகளின் பின்னே இருக்கும் குரல் கேட்காமல் போகலாம். கொஞ்சம் கவனமாக வாசிக்கிற எவரும் இத்தொகுப்பைப்
படித்தபின் அவர்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
வெளிநாட்டுக் கதைகளின் ‘மாய நடைகளில்’
மயங்கிப் போயிருக்கும் நமக்கு இதன் நடையும் முறையும் புதிய வெளிச்சத்தைப்
பாய்ச்சும். உண்மைகள் மிக
எளிமையானவை. புரிந்து கொள்ள
மறுப்பவர்களுக்கு அவை கடினமானவை, அவர்களால் செரிக்க முடியாதவை. உண்மைகளும் கதைகளும் தெரிந்த கலைஞன் மிக எளிதாக
கதைகளைச் சொல்லி மனங்களைத் தொட்டுவிடுகிறான்.
’அவர்கள் மாமிசம்
சாப்பிடுகிறவர்கள்’ என்ற முதல் கதை அகமதாபாதில் வேலையில் இடம்மாற்றலாகிச் சென்ற
ஒரு குடும்பத்தினர் அசைவ உணவு சாப்பிட எவ்வளவு ஏங்கினாலும் மனநிறைவுடனோ அல்லது
பயம் இல்லாமலோ முட்டையைக் கூட சாப்பிட முடியாத நிலையைச் சொல்லுகிறது. பொருளாதாரத்தில் மிக வளர்ச்சியடைந்த
மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில், உயர்ந்த பண்பாடு என்ற பெயரில் அடுத்தவர்களின்
உணர்வுகளை மதிக்கத் தெரியாத பெரும் மக்கள் கூட்டம் இருப்பதை எப்படிப் புரிந்து
கொள்வது? பண்பாட்டில் பத்தாம்
நூற்றாண்டிலும், பொருளாதாரத்தில் இருபதாம் நூற்றாண்டிலும் வாழ்கிறவர்கள் நிறைந்த மாநிலத்தை
சிறந்த மாநிலமாக எப்படி ஏற்றுக் கொள்வது?
அடுத்தவர்கள் மீதும் தங்கள் பழக்கவழக்கங்களைத் திணிப்பவர்கள், அசைவ உணவை
மட்டும் வெறுக்கவில்லை. அதை உண்பவர்களையும் வெறுக்கிறார்கள். அசைவ உணவை, முட்டையைக் கூட யாருக்கும்
தெரியாமல், வாசனை வந்துவிடாமல் தயாரிக்கவும் உண்ணவும் வேண்டியிருக்கிறது.
கதையில் நடுவே 2002 குஜராத்
கலவரம் வருகிறது. அசைவ உணவையே பொறுத்துக்
கொள்ள முடியாதவர்கள் எதைத்தான் பொறுத்துக் கொள்வார்கள்? அசைவை உணவு அஹிம்சைக்
கொள்கைக்கு எதிரானது என்று நினைப்பவர்கள், மனிதர்களைக் கொல்வதை வதையாகக்
கருதுவதில்லை. ஏனெனில் நமது சனாதன சாஸ்திரங்கள் எதை ஹிம்சை என்று சொல்கின்றனவோ அது
ஹிம்சை. நமது சாத்திரங்கள், கீழ்ச்சாதி
மனிதனை அவனுடைய பழக்கங்களைக் காட்டியும் இழிவுபடுத்திக் காட்டுகின்றன. இப்படி பண்பாட்டின் பெயரால் நிகழும் வன்முறைகள்
அநாகரீகமானவைகள் அல்லவா? இப்படி மனதைக் குடையும் கேள்விகளை எழுப்பிவிட்டு, ஒன்றும்
அறியாதவர்கள் போல் பயந்து பயந்து வாழ்ந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கே
சென்றுவிடுகின்றனர் கதைமாந்தர்கள். ஒரு
இடத்திலாவது அவர்கள் கேள்வி கேட்பதில்லை, உரக்கப் பேசுவதில்லை. நகரத்தின்,
மத்தியவர்க்கத்தின் அநாகரீக நடவடிக்கைகள் நம்மனதை யோசிக்க வைக்கின்றன. வழக்கம் போல ஜாதி மத வெறியர்களுக்கு இந்தக் கதை
எதுவும் சொல்லாது.
இன்னொரு சிறந்த கதை
‘நவம்பர் இடப்பெயர்வுகளுக்கானது’. நவம்பர்
மாதத்தில் சந்தால் இனத்து ஆதிவாசிகள் கூட்டங்கூட்டமாக இடம்பெயர்ந்து வேலை
நிமித்தமாக வேறிடங்களுக்க்ச் செல்வது வழக்கம்.
அவர்களில் ஒருத்தி தலாமாயி – நடுவில் பிறந்த பெண் – வேறு பெயர் கிடைக்காமல்
அவள் பெயரே அதுவாகிவிட்டது. இரவு பத்தரை மணியாகிவிட்டது. அவள் பருவமடைந்த பெண். எல்லோருக்கும் ஒரே பசி. கையில் எதுவும் இல்லை. இளமையாகவும் கட்டழகாகவும் இருக்கும் அவளை ஒரு
ரயில்வே போலிஸ்காரன் பார்க்கிறான்.
அவளுடைய நிலைமை அவனுக்குத் தெரியும்.
வருடாவருடம் நடப்பதுதானே. அவளும் அவனைப்
பார்க்கிறாள். பார்ப்பதற்கு நன்றாகவே
இருக்கிறான். அவன் கையில் ஒரு பிரட் பகோடா
வைத்திருக்கிறான். ‘பசியா?’ என்று கேட்கிறான். ‘ஒரு வேலை இருக்கிறது செய்கிறாயா
என்று கேட்கிறான். அவளுக்கும் தெரியும்
என்ன வேலையென்று. சந்தால் பெண்கள்
டிரைவர்கள், சிறுவியாபாரிகள் மற்றவர்களுடன் ‘அந்த’ வேலை செய்வதைப்
பார்த்திருக்கிறாள். அவளும் ஒப்புக் கொள்கிறாள்.
வேலையை முடித்துவிட்டு, ஐம்பது ரூபாய் நோட்டை அவள் ஜாக்கெட்டில்
திணிக்கிறான். அவள் போய்க்கொண்டிருக்கும்
மற்றவர்களுடன் சேர்ந்து கொள்கிறாள். மிகச்
சாதாரணமாக எல்லாம் முடிந்துவிடுகிறது.
இந்தக் கதை புதுமைப்பித்தனின் ’பொன்னகரம்’ கதையை ஞாபகப்படுத்தியது. பல
ஆண்டுகளுக்கு எழுதப்பட்ட கதையின் கடைசிவரியை எடுத்துவிட்டால் இரண்டும்
ஒன்றுதான். எல்லாம் முன்னரே
தீர்மானிக்கப்பட்ட நாடகம் போலத் தவிர்க்கயியலாமையில் நிகழ்கின்றன. பொன்னகரத்தில் நமக்கு அதிர்ச்சி ஏற்படும். இக்கதையில் அது கதையில் அல்ல நமது மனதில்
ஏற்படுகிறது. இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும்
வாழ்வும் விழுமியங்களும், பொருளாதார நிலையும் சிலருக்கும் அப்படியே இருக்கின்றன.
’விரும்பம், தெய்வதம்,
மரணம்’ என்ற இன்னொரு கதை தினக்கூலி வேலை பார்க்கும் ஒருத்தி, தன்னுடைய மகன்
மிகவும் உடல்நலம் குறைந்திருப்பதை அறிந்திருந்தாலும், அவனுக்குக் கஞ்சி கொடுக்கக்
கூடக் காசு இல்லாமல், அதற்காகவே வேலை செய்யச் செல்கிறாள். அவள் மகனை விட்டுவிட்டு எப்படி வந்தாள்? என்று
கூட வேலை பார்க்கிறவர்கள் கேட்கிறார்கள்.
ஆனால் வாழ்வின் முரண்களுக்கு அவளிடம் விடை இருக்கிறதா என்ன? சரியாகிவிடும்
என்று அவர்களுக்கும் தனக்கும் நம்பிக்கை இல்லாமலேயே சொல்லிக் கொள்கிறாள். அவள்
மகனுடைய நினைவிலேயே முழு நாளையும் கழிக்கிறாள்.
வேலை நேரம் முடிந்து விரைவாக நடந்து செல்கிறாள். அவளிருக்கும் ஊருக்குச் செல்ல சிறு வேன்கள்
இருக்கின்றன. ஆனால், கூட்டம் நிரம்பி
வழிகிறது. ‘நீயும் ஏறிக்கொள், வருகிறாயா?
என்று உள்ளர்த்தக் கிண்டலுடன் வண்டிக்காரன் கேட்கிறான். சீக்கிரம் போக வேண்டிய தேவையிருந்தாலும், அவள்
அதில் ஏறுவதில்லை. வேகமாக நடந்து செல்கிறாள்.
மகன் தனியாக இருப்பான் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கிறாள். வீட்டை அடையும் போது அங்கிருந்த ஒரு தெரிந்த
பெண் சொல்கிறாள். ‘அம்மா எப்ப வருவா? என்று கடைசிவரை கேட்டுக் கொண்டே இருந்தான். அவள்
அருகின் சென்று பார்க்கிறாள். அவன் அசைவின்றிக் கிடந்தான். இந்தச் சிறுகதை இந்தியாவில் வறுமையில் வாழும்
பலகோடி மக்களின் ஆதரவற்ற நிலையைச் சொல்கிறது. கல்வியில்லை, வேலை சரியில்லை,
சம்பளம் போதவில்லை, குடும்ப நிலை சரியில்லை, யாருக்கும் உடல்நலம் பேண எந்த
வசதியும் இல்லை. இத்துடன் மரபுவழியாக பெண்களை இழிவு செய்யும் மடமைக்கும்
குறைவில்லை. இதில் குழந்தைகள் நலம்
கேள்விக்குறிதான். உணர்ச்சி வேகமின்றி
எழுதப்பட்டு, நம்மை உணர்ச்சிவசப்படுத்தாமல் சிந்திக்க வைக்கும் கதை. சொல்லப் போனால் எல்லாக் கதைகளுமே சூழலை விவரிப்பதன்
மூலமே அனைத்தையும் உணர்த்துகின்றன. எந்தவிதக்
கூக்குரலோ, ஆசிரியரின் உரத்தகுரலோ இல்லை.
இந்தக்கதை நான் படித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று.
ஆதிவாசி நடனமாடமாட்டான்
என்ற கதையும் மிகச் சிறந்த கதை. ஆதிவாசிப்
பகுதியைச் சேர்ந்த ஒரு பெரிய மனிதர் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக
இருக்கிறார். ஆதிவாசிகள் அவருக்காக நடனமாட
வேண்டும் என்று ஒரு குழுவுக்குப் பயிற்சியளித்து அனுப்புகிறார்கள். ஆதிவாசிகளில் ஒருவரான கதைசொல்லி, குடியரசுத்
தலைவரின் முன்னிலையில் பேச அனுமதி கேட்கிறார்.
அனுமதி தரப்படுகிறது. அவர்
கேட்கிறார். “ஆதிவாசிகள் இனிமேல் நடனம் ஆடமாட்டோம்’ அவ்வளவுதான்.
அடுத்த காட்சியில் போலிஸ்
அவர்களைப் குப்புறப் படுக்கவைத்து அடி வெளுத்துக் கொண்டிருக்கிறது. கதைசொல்லி நம்மைக்
கேட்கிறார் ‘நான் கேட்டது என்ன தவறா? நாங்கள் என்ன பொம்மையா? நாங்கள் ஆடுகின்ற எங்கள் நிலங்களையெல்லாம்
எங்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டிருப்பார்கள் அப்போது யாராவது எங்கள் பின்புறம்
உள்ள பட்டனை அழுத்தி ஆன் செய்தால் டமக், டும்டக் என்று தாளம் போட்டு, குழல்களை ஊதி
ஆட வேண்டும். சொல்லுங்கள், நான் கேட்டது
தவறா?”
பிறகு அவன் வரலாற்றை
விவரிக்கிறான். தங்கள் நிலங்களில்
தன்னிச்சையாக வாழ்ந்த அவர்களின் வாழ்வில் மதபோதகர்கள், அரசுகள் அரசு அதிகாரிகள்,
பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி அவர்களுடைய நிலங்களிலிருந்து அவர்களை
விரட்டிவிட்டு, இயற்கை வளங்களை அபகரித்துக் கொண்டு ஒன்றும் இல்லாதவர்கள்
ஆக்கிவிட்டனர் என்று.
இந்தக் கதையின் எதிரொலி
தஞ்சையிலும், நெடுவாசலிலும் ஒலிக்க வேண்டும்.
ஆதிவாசிகளின் வளங்களைப் பறித்துப் அவர்களை வறுமையில் இயலாமையில் தள்ளிய அதே
அமைப்புகள் தமிழ்நாட்டின் வளங்களைச் சுரண்ட வருகிறார்கள். ஆதிவாசிகளுக்குப் பிரச்சனை வந்த போது நாம்
கண்டுகொள்ளவில்லை. இப்போதாவது, அவர்களின்
போராட்டங்களைப் புரிந்து கொண்டால், நாம் நமது வளங்களை, வாழ்க்கை முறைகளைக்
காப்பாற்றிக் கொள்ள முடியும்.
மிகத் தீவிரமாகச் சிந்திக்க
வேண்டிய பல கேள்விகளை எழுப்பும் கதையிது.
No comments:
Post a Comment