Wednesday, February 15, 2012

காலத்தை வெல்லும் தந்திரம்



மனிதன் ஒத்துக் கொள்ள முடியாத இயற்கை நிகழ்வு சாவு. அதை வெல்லுவதற்குப் பல முயற்சிகள் செய்கிறான். தோற்றுவிடுவோம் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறான். தந்திரங்கள், மந்திரங்கள், மருந்துகள், பூசைகள், வேண்டுதல்கள் என்று நீளும் அவன் முயற்சிகள். இவைகளைத் தவிர, சாவை வெல்ல முடியாததால், தன் பெயரை எப்படியாவது காலமெனும் வானத்தில் பொன்னெழுத்துக்களால் பொறித்துவிட முயற்சி செய்கிறான்.

வீடுகளுக்குத் தன் பெயர் வைப்பது முதல், சிலை வைத்தல், நினைவகங்கள் அமைத்தல் , நினைவாக பள்ளிகள் மருத்துவமனைகள் வைத்தல் என்று எப்படியாவது தன் பெயரை மற்றவர்கள் கண்ணில் படும்படி வைப்பதில் குறியாக இருக்கிறான். அரசியல் வாதிகளுக்குப் பொதுவாகவே தங்கள் மீதான அளவற்ற காதல் உண்டு. நார்ஸிஸியஸின் வழித்தோன்றல்கள். அவனைப் போலவே தண்டனை கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பெயரை நிலைநாட்டப்
பாடுபடுபவர்கள்.

”பெயர்விளங்கி ஒளிர நிறுத்தல்’ என்னும் இந்த நோய் மெல்ல மெல்லத் தொற்று நோயாகிப் பரவி வருவதைக் காணமுடியும். கோவில்களில் எரியும் நீளக் குழல் விளக்குகளில் தன் பெயரை எழுதி எழில் சேர்க்கும் வழக்கத்தைச் சொல்லலாம். கடவுளுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ஒளிவிளக்கைத் தானம் கொடுத்தவர் பெயர் தெரியும். இதனாலெல்லாம் பெயர் விளங்கி நிலை நிற்குமா? பெயர் நிலைத்து நின்றாலும் கொஞ்ச காலம் கழித்து அவர் முகத்தை யாருக்காவது நினைவிருக்குமா? உதாரணமாக பாரி வள்ளலில் சிலை வைத்தால் அது பாரிவள்ளலுக்கும் தெரியாது. அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கும் அவர் அப்படித்தான் இருந்தாரா என்பது தெரியாது. அதனால் யாருக்கும் எதுவும் ஆகப் போவதில்லை.

திருவள்ளுவர் உருவம் எப்படி உருவானது என்று யாரோ எழுதியிருந்தைப் படிக்க நேர்ந்தது. பாரதிதாசன் ஒப்புதலுடன் தாடி வைத்து தயார் செய்த உருவத்தை திருவள்ளுவராக்கி விட்டார்கள். தமிழ் மக்களுக்குப் புதிதாக ஒரு கடவுள் கிடைத்துவிட்டார். அவரைக் கும்பிடலாம் பூசை செய்யலாம். ஆனால் தப்பித் தவறியும் படித்துவிடக்கூடாது. படித்தாலும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். புரிந்து கொள்ளவோ ஆராய்ச்சி செய்யவோ கூடாது. இப்படித்தான் நாம் திருவள்ளுவரை நினைத்துக் கொள்ளும் விதம். அவருக்கே இந்தக் கதி என்றால் மற்றவர்களின் நிலை என்ன?

ஊருக்கு ஊர் காந்தி சிலையும், தமிழ்நாட்டில் அண்ணா சிலையும் வைத்ததால், அண்ணாவுக்கும் காந்திக்கும் எந்தப் பயனும் இல்லை. அவரைப்பற்றி சிந்திக்காத நமது மக்களுக்கும் எந்தப் பயனும் இல்லை. காக்காய் உட்காரவும், எச்சம் இடவும் தான் பயன். இந்தப் பாலத்தை இன்னார் கட்டினார் என்று எழுதியிருந்தாலும், இன்னார் திறந்துவைத்தார் என்று எழுதியிருந்தாலும், பெயர் தவிர எதுவும் 50
ஆண்டுகளுக்குப் பின்னால் தெரிவதில்லை.

அரசு அலுவலகங்களிலும் இந்த நோய் பரவிவிட்டது. இந்தப் பதவியில் யார் யார் இருந்தார்கள் என்பது எழுதி வைக்கப்படுகிறது. இப்படியெல்லாம் எழுதி வைப்பதன் மூலம் பெயரை நிலை நாட்டி விடலாம் என்ற எச்சிற்கலை புத்தி விடுவதில்லை. நன்றாக வேலை செய்து காட்டுவோம் அதனால் பெயர் நிலை நிற்கும் என்பதே தோன்றுவதில்லை. அரசு அதிகாரிகள் என்ன சாதனையாளர்களா? இருக்கும் வேலையை ஒழுங்காகச் செய்வதற்கே வக்கில்லாதவர்கள் பெயரை நிலை நாட்டுவதில் நேரத்தையும் பொருட்களையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அழிவும் மாறுதலும் மட்டுமே நிலையானது. நமது பெயர்களை, படங்களை எப்படிச் செதுக்கி வைத்தாலும் அவை அழிந்துவிடும். பூமியைப் பொறுத்தவரை நாம் ஒரு அணுத்துகளை விடச் சிறிய பொருட்கள். பிரபஞ்சத்தை நினைத்தாலோ பூமிகூட ஒரு அணுத்துகள். கண்ணுக்குத் தெரியாதது என்பதை சொல்ல வேண்டியதில்லை.

No comments:

Post a Comment