Monday, October 03, 2011

அறிவுக்கனி (விலக்கப்பட்டது)


அறிவு மத இலக்கியங்களில் வேண்டாத பொருளாகவே, விலக்கப்பட்ட, வெறுக்கத் தகுந்த மதிப்பீடாகவே காட்டப்பட்டு வந்திருக்கிறது. ஆதாம் விலக்கப்பட்ட கனியான அறிவை உண்டதனால் வெட்கம் உண்டாகி இறைவனின் சாபத்துக்கு ஆளானான்.
இதை இன்னொரு பொருளிலும் காணலாம். மனிதன் காட்டுமிராண்டியாக அலைந்த வரை மிருகமாக வாழ்ந்தான். தான் அறிவு பெறும் நிமிடத்தில் வெட்கப்படவேண்டிய வாழ்க்கை வாழ்வதை உணர்ந்து, ஆடை அணிந்து கொண்டான். ஆடை அணிதல் என்பது குளிரிலிருந்தும், வெம்மை- யிலிருந்தும் காத்துக் கொள்ள முடியும் காத்துக் கொள்ள வேண்டும் என்னும் அறிவு பெற்றதும் அவனுக்கு இறைவனிடம் இருந்து சாபம் வருகிறது. அதாவது இறைவனின் அன்புக்குத் தகுதி அற்றவனாகிறான். இறைவனிடமிருந்து தள்ளிச் செல்கிறான்.
இந்தக் கதை இன்னொன்றையும் நமக்குச் சொல்கிறது. மத குருக்களும் சாமியார்களும் மனிதன் தனது அறிவை உபயோகிக்கும் தருணத்திலிருந்து அவன் தங்களின் பிடியிலிருந்து தப்பிவிடுவான் என்பதை அறிந்து கட்டிய புனைகதை இது. மனிதன் இன்று அறிவினால் ஆளப்படும் உலகத்தில் வாழ்கிறான். மத்த்திற்கும் அறிவுக்கும் எந்த உறவும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
திருவிளையாடல் புராணத்தில் (திரைப்பட்த்திலும் தான்), சிவன் அறிவுக்கனிக்காக உலகத்தைச் சுற்றிவரச் சொல்லும் போது, உலகத்தை உண்மையிலேயே சுற்றிவரும் முருகனுக்குக் கிடைக்காத அறிவுக்கனி, தன் தாய் தந்தையரைச் சுற்றிவரும், பிள்ளையாருக்குக் கிடைப்பது பைபிள் கதையின் இன்னொரு உருவம். இங்கே, உலகத்தைச் சுற்றி அனுபவத்தின் மூலம் சேகரித்து வருவது அறிவு அல்ல, தாய் தந்தை சொல்வதே அறிவு என்னும் ‘அறம்’ உணர்த்தப்படுகிறது. இது அறிவைப் பெறுவதற்கான வழி அல்ல. அன்னை தந்தையரின் அன்புக்கான, அடக்கு முறையை அறிவு என்ற போர்வைக்குள் வைத்து மூடும் கண்கட்டி வித்தை.
செய்து பார்த்தல்,, தவறு செய்தல், மீண்டும் செய்துபார்த்தல், தேவையான அறிவைப் பெறுதல் என்ற நடைமுறை ரீதியான அறிவு பெறும் முறைக்கு எதிரான, கற்பனையான வழியை முன்வைக்கும் மத வாதிகளின் அறங்கூறும் கதை
அறிந்து கொள்ளும் ஆர்வம்,, செய்முறை, தன் அனுபவம் என்ற அறியும் முறையை எப்போதும் நமது பழைய கலாச்சாரம் அடக்கியே வந்திருக்கிறது.
மதுரகவி ஆழ்வார் என்ற ஆழ்வார் முதலில் ஊமையாக இருந்தார். இறைவன் மீது பக்தியுடன் இருந்தார். பின்னர் வடக்கிலிருந்து வந்த ஒரு முனிவரிடம் ஆசி பெற்றார். அதன் பின் மாபெரும் ஆழ்வாரானார். திருமூலரும், வடக்கிருந்து வந்த குருவிடம் ஆசி பெற்றதும் பாடலியற்றும் வன்மை பெற்றார். தத்துவம் பேசினார்.
இந்தக் கதைகள் அனைத்தும் மறைப்பது ஒன்றுண்டு. அறிவு என்பது படித்து, அறிந்து, உழைத்துப் பெறுவதல்ல. அது வானத்திலிருந்தோ, குருவிடமிருந்தோ திடீரென்று விழுவது.
இந்த முறையில் தான் நியுட்டன் மீது ஆப்பிள் விழுந்ததும் அவருக்கு புவி ஈர்ப்புப் பற்றிய அறிவு ஏற்பட்டது என்பதும். அவர் இயற்பியலில் அதுவரை ஈடுபாடு கொண்டிருந்ததும் அதைப்பற்றி அறிந்து கொள்ள பலவருடங்கள் உழைத்ததும் ஆப்பிள் விழுந்த கதையில் மறக்கப்பட்டு விடும்.


புத்தருக்கும் இது நேர்ந்திருக்கிறது. பல ஆண்டுகள் (ஏழாண்டுகள்?) அவர் காட்டில் இருந்து பட்டினிகிடந்து உடல் வற்றி வதங்கி இறக்கப்போகும் தருவாயிலிருந்து மீண்டதும், அதற்கு முன்னர் ஒரு மன்னரின் மகனாக எல்லாச் சுகங்களையும் அனுபவித்ததும், தவமிருந்ததும் ஒதுக்கப்பட்டு, போதி மரத்தடியில் அவருக்கு அறிவு கிடைத்த்தால், போதி (அரச மரம்) இன்று வரை புனிதமாகக், கருதப்படுவதும் உண்மை. பெருவாரியான மக்களிடம் அறிவு பெறும் முறை பக்தியாக அல்லது பெரியோருக்குச் செய்யும் மரியாதை மூலம் எழுவதாக கட்டமைக்கப் படுகிறது.
இரண்டாவதாக, கேள்வி கேட்பது என்பது ஆசிரியரைத் துன்புறுத்தும் செயலாகப் நோக்கப்படுகிறது. யோசிக்கவைக்கும் கேள்விகளை எதிர்நோக்க முடியாத ஆசிரியருக்கு அது துன்புறுத்துவது தான். அதற்காக மாணவனைக் குறைசொல்லிப் பயனில்லை. ஆசிரியர் தன்னை கேள்விகளை எதிர்நோக்கும் வகையில் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இதே அடக்கு முறைதான் அலுவலகங்களிலும் செயல்படுகிறது. எந்த ஒரு விஷயத்தைக் கேள்விக்குட்படுத்தினாலும், அது எதிர்ப்பாகவே பார்க்கப்படுகிறது. எல்லாம் அதிகாரம் அல்லது அதிகார எதிர்ப்பு என்ற இரட்டை நிலையில் வைப்பதால் அறிவும், சரியான பார்வையும் இந்த இரட்டை கரைகளுக்கு இடையே மூழ்கி மடிந்து விடுகின்றன.
இதற்கு மேல் இன்னொரு பண்பு இந்திய நாட்டில் காணக்கிடைக்கிறது. உதாரணமாக, ஒரு மாபெரும் விஞ்ஞானி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், பலகாலம் உழைத்து, விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்று, வித்தகரான பின், பொது ஊடகங்களில் பேட்டி அளிக்கும் போது தன்னை இறைவன் அருள், அல்லது குருவின் அருள் பெற்றவராகக் காட்டிக் கொள்ள முனைந்து, அவர் விஞ்ஞானியானதற்குக் காரணம் அவரது உழைப்பு என்பதை அழுத்திச் சொல்லாமல் விட்டு விடுவார். எல்லாம் இறைவன் வரம் என்று கதை முடிந்து விடும்.

No comments:

Post a Comment