கடிதம்
அன்புள்ள அப்பாவுக்கு, இதை எழுதும் போதே சந்தேகமாகத்தான் இருக்கிறது எனக்கு. அன்புள்ள அப்பாவா நீங்கள்? அதை பல நேரங்களில் மனம் உணர்ந்ததே இல்லை. ஆனால் அவர் தான் எனக்கு அப்பா என்றான பிறகு. அது ஏதோ பதவியைப் போலவே உங்களைத் தொற்றிக் கொண்டிருக்க வேண்டும். தகுதி இருக்கிறதோ இல்லையோ தலைவனாகி விடுகிறவர்கள் போல. நானும் உங்கள் மகளென்றே சொல்லிக் கொள்ள வேண்டியதிருக்கிறது. வேறு அடையாளங்கள் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதற்கான போராட்டம் இந்தக் கடித்த்தின் மூலம் தொடங்குகிறது.
பதினேழாவது வயதில் நான் என் பள்ளியில் படித்த ஒருவனுடன் ஓடிப் போன போது, நீங்கள் தேடி வரக்கூடும் என்றே எதிர்பார்த்தேன். அந்த நேரத்தில் உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களை போட்டு உடைக்க வேண்டும் என்ற வெறியில் தான் இருந்தேன். நீங்கள் அப்படி ஒன்றும் அப்பாவி அல்ல என்று அன்றுதான் தெரிந்தது. உங்கள் கபடங்கள் வெளிவந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து கொண்டீர்கள். ஓடிப்போன பெண் என்ற எனது பிம்பம் உங்களது கள்ளத்தனங்களை மறைத்து வைக்கும் இரும்புப் பெட்டியாகி விட்டது. நீங்கள் நல்லவர் அநீதி இழைக்கப் பட்டவர் என்ற பிம்பத்தை இன்னும் சமூகத்தின் முன் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். கெட்டிக்காரர்தான். இதை முழுமனதோடு சொல்லுகிறேன். உங்களது ஐம்பத்தி ஆறு வயது வரை ஒரு ஏமாற்றுக்காரரான நீங்கள் உத்தமனைப் போல வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதுவே பெரிய சாதனைதான். உங்களை நெருங்கி வந்த பெண்கள் தங்கள் நலனுக்காக வந்தாலும், உங்களின் வேஷத்தில் ஏமாந்தவர்கள் தான். அவர்கள் அவ்வாறு ஏமாற விரும்பியே கூட வந்திருக்கலாம். ஆனால் அம்மா அப்படிப் பட்டவள் அல்ல. முழுமையாக உங்களிடம் ஏமாந்தவர்.
உங்கள் முதல் மனைவியும் அப்படித்தான். இரண்டாவதாக அம்மாவை மணம் முடித்தபின் அவருக்குத் தெரியவந்தது உங்கள் கபட நாடகம். மணம் முடிக்கும் போது அம்மாவுக்கு நீங்கள் ஏற்கனவே மணம் முடித்தவர் என்று தெரியாது என்றே எங்களிடம் சொல்லி வந்தார். அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே இப்போது தோன்றுகிறது. எந்தப் பெண்ணுக்கும் தெரிந்திருக்கக் கூடும். தனக்கு மணம் முடியவில்லை என்ற ஏக்கத்தினாலோ அல்லது தனக்கும் தன் தங்கைகளைப் போலவே திருமணம் முடியாமலே போய்விடக்கூடும் என்ற பயத்தினாலோ அவள் உங்களுடனான திருமணத்துக்கு ஒத்துக் கொண்டிருக்கக் கூடும். ஜாதி விட்டுத் இன்னொரு ஜாதியில் திருமணம் செய்து கொள்வதைக் காட்டி நீங்கள் அத்திருமணத்தை எளிய முறையில் நிறையப் பேருக்குத் தெரியாமல், கோவிலில் வைத்து முடித்ததால், இருவருக்கும் வசதியாகி விட்டது. யாரிடம் யார் ஏமாறுவது? எப்படித்திறமையாக ஏமாற்றுவது என்ற போட்டிதான் உங்கள் திருமண வாழ்க்கை. சமூகத்தைப் பார்த்து இப்போது தெரிந்து கொண்டிருக்கிறேன். பலரது வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. நேசமற்ற பிணைப்பு. இதுதான் திருமண உறவு. கடனுக்காக அழுவது. இருவரும் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருக்க முடிந்தால் ஒரே கொட்டடியில் இருக்கும் ஆடுமாடு போல கூடுவதும் இருப்பதுவும் (அதை வாழ்வதென்று எப்படிச் சொல்ல முடியும்?) வாழ்வின் தின நடவடிக்கைகள்.
வேண்டா வெறுப்பாக குழந்தைகள் வந்துவிட்டன. நான் பிறந்தது ஒரு தவறாக இருக்கலாம். ஆனால் நான் மணம் முடித்துக் கொண்டது தவறல்ல. என்னுடன் படித்த பையனை பள்ளியில் படிக்கும் போதே திருமணம் முடித்துக் கொண்டது நான் தெளிவாக சிந்தித்து எடுத்த முடிவுதான். என்னைப் படிக்க வைப்பதற்கோ, திருமணம் முடித்து வைப்பதற்கோ சற்றும் தகுதி இல்லாதவர் நீங்கள். உங்களால் என் வாழ்வை இருளாக்கி இருக்க முடியும். ஒரு தீபத்தை ஏற்றும் மனநிலை உங்களுக்கு இல்லை. இது ஒரு அப்பாவின் மீதான கொடூரமான குற்றச்சாட்டாக இருக்கலாம். பெண்களின் மீது வன்முறையை, பிரயோகிக்கும் ஆண்களுக்கு இது மிகவும் மிதமான பாராட்டு.
நீங்கள் என்னை இறந்துவிட்டதாகக் கருதுகிறீர்கள் என்று கேள்விப் பட்டேன். இந்தப் புறக்கணிப்பு ஒன்றும் புதியதல்ல. உள்ளே ஒளிந்திருந்த பொறுப்பற்ற தன்மையை நான் முன்னமே கண்டு கொண்டுவிட்டேன். என்னைப் புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதிர்ந்து அடிபட்டவரைப் போல நடிக்கிறீர்கள். மற்றவர்களுக்கு அது போதுமானது. உங்களுடனேயே பதினெட்டு வருடங்கள் கழித்த எனக்குப் புரியும். ஒருவேளை உங்களுடன் தொடர்ந்து இருந்திருந்தால் எவனாவது கையில் என்னைக் கொடுத்துவிட்டு சனியன் ஒழிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பீர்கள். நான் எனக்குப் பிடித்த எவனோ ஒருவனுடன் ஓடிப் போய் உங்களை அந்த நிலைமையிலிருந்து விடுதலை செய்துவிட்டேன். எனக்குப் பிடித்தவனுடன் நான் இருப்பது வெற்றியோ தோல்வியோ அல்ல. அது என்னுடைய தேர்வு. மோசமான தேர்வாக இருக்கும் வேளையில் அதை மாற்றிக் கொள்ளும் உறுதியை நான் கொண்டிருப்பேன். அதைத்தான் நான் நிரூபித்திருக்கிறேன் இப்போது. உங்கள் சங்கிலியில் கட்டப்பட்ட நாயாக இருந்தால், சங்கிலியைப் பிடித்திருக்கும் கை மாறுமே தவிர சங்கிலி அல்ல. இப்போது நான் மணம் முடித்திருக்கும் அவனும் என் சங்கிலியை இழுக்க முயன்றால் அறிந்து கொள்வான். அது முன்னரே நான் உடைத்தெறிந்துவிட்ட சங்கிலி அது என்னைப் பிணிக்காது என்று. ஒரு பாதுகாப்புக் கருதியே இப்போது அவனுடன் இருக்கிறேன். அது சிறை என்றாகும் போது அதை உடைத்தெறிவேன்.
அம்மாவை நீங்களும் அவள் வீட்டாரும் பூட்டி வைக்கக் கட்டியிருக்கும் கலாச்சாரச் சிறையை அவளால் உடைக்க முடியாது. அவள் சிறகையும் கால்களையும் ஒடித்துக் கொண்ட பறவை. உங்கள் கூண்டுக்குள் இருக்கட்டும். கூண்டிலிருந்து வெளிவந்தால் ஒருநாள் என்னுடன் அவள் வானில் பறக்கலாம். துணையோடோ அல்லது தனியாகவோ. அவளுக்கு இந்தக் கடித்ததைக் காட்டினால் எழுதிய விஷயம் எதுவும் புரியாது. புரிந்து கொண்டால் அவள் உங்களுடன் இருக்க முடியாது. அவளுக்கு புரிந்து கொள்ளும் உறுதி வரும் வரை காத்திருப்பேன். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவள் புரிந்து கொள்ளாமலே இருந்துவிடக்கூடும்.
கார்த்திகா.
Tuesday, November 16, 2010
Sunday, November 14, 2010
விஞ்ஞானிகள் சில கேள்விகளை சந்திக்க வேண்டியிருக்கிறது . புதிய புதிய மருத்துவ முறைகளை செயல்படுத்தி பிறப்பிலிருந்து அல்லது மரபு வழியில் தொடரும் உடல் குறைபாடுகளை, அல்லது நோய்களை நீக்க, உடலியல் மருத்துவத்தை பயன் படுத்துவதன் மூலம் அவர்கள் கடவுளின் வேலையைச் செய்ய முற்படுகிறார்கள். அல்லது இயற்கைக்கு எதிரான வேலையைச் செய்கிறார்கள். உதாரணமாக பிறப்ப்பிலிருந்தே இதயச் செயல்பாட்டில் குறையுள்ள ஒருவனுக்கு உயிரியல் மருத்துவ முறையில் புதிய ஸ்டெம் செல்லை பயன்படுத்தி சரி செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த உடற்குறை அந்த மனிதனைப் பொறுத்த வரை இல்லாததாகி விட்டாலும் அவனுடைய மரபணுவில் அந்தக்குறை நீக்கப் படாததால் அடுத்த சந்ததியினரையும் அது தொடரும். இதனால் தனி மனிதனைப் பொறுத்த வரை நோய் நீங்கி விட்டாலும் அது பரம்பரையிலிருந்து விலகுவதில்லை. தொடரும் சந்ததியினரைப் பாதிக்கிறது.
ஆனால் இயற்க்கை தொடரும் சந்ததியினரை நோயிலிருந்து விலக்க ஒரு முறையைக் கடைப் பிடிக்கிறது. ஒவ்வொரு சந்ததியிலும் கடுமையாக வளரும் நோய் ஒன்று, ஒரு சந்ததியின் ஒரு குறிப்பிட்ட மனிதனிடம் முற்றி அவன் மரணம் அடையும் பொது அந்த மரபணுவை அந்தச் சந்ததியிடமிருந்து விலக்கி விடுகின்றது. அதனால் நீண்ட பரம்பரையிலிருந்து இயற்கை தானாகவே வைத்தியம் செய்து விடுகிறது. முதல் பத்தியில் சொன்ன நடைமுறையில் இது முற்றிலுமாக மறுதலிக்கப் படுகிறது. ஸ்டெம் செல் வைத்தியத்தில் பரம்பரை பரம்பரையாக விலக்கப் படாத நோய் தொடரும். அதனால் மேலும் மேலும் குறையுற்ற மனிதர்கள் பிறக்க வழியுண்டு.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சந்ததியிலும் மேலும் மேலும் குறைவுற்ற மனிதர்கள் பிறந்துவிட நேரும்.
ஆனால் இயற்க்கை தொடரும் சந்ததியினரை நோயிலிருந்து விலக்க ஒரு முறையைக் கடைப் பிடிக்கிறது. ஒவ்வொரு சந்ததியிலும் கடுமையாக வளரும் நோய் ஒன்று, ஒரு சந்ததியின் ஒரு குறிப்பிட்ட மனிதனிடம் முற்றி அவன் மரணம் அடையும் பொது அந்த மரபணுவை அந்தச் சந்ததியிடமிருந்து விலக்கி விடுகின்றது. அதனால் நீண்ட பரம்பரையிலிருந்து இயற்கை தானாகவே வைத்தியம் செய்து விடுகிறது. முதல் பத்தியில் சொன்ன நடைமுறையில் இது முற்றிலுமாக மறுதலிக்கப் படுகிறது. ஸ்டெம் செல் வைத்தியத்தில் பரம்பரை பரம்பரையாக விலக்கப் படாத நோய் தொடரும். அதனால் மேலும் மேலும் குறையுற்ற மனிதர்கள் பிறக்க வழியுண்டு.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சந்ததியிலும் மேலும் மேலும் குறைவுற்ற மனிதர்கள் பிறந்துவிட நேரும்.
Subscribe to:
Posts (Atom)