பொம்மை வாழ்க்கை
அவனுக்கு
இது வேண்டும். ’எப்படியாவது எழுத்தாளனாகிவிட
வேண்டும் என்ற நப்பாசையில், கதையை எழுதி அவனிடம் போய்க்காட்டினேனே. மட மூட ஜென்மம். கதை, இலக்கிய வாசனையே கிடையாது. கழுதை’..என்னென்னமோ
தீட்டினாலும் அவன் கோபம் தீரவில்லை. வாழ்க்கையில
ஏதாவது ஒரு புத்தகம் படித்திருப்பானா? புத்தகத்தை விடு ஒரு உருப்படியான கட்டுரையாவது
… ஹூஹூம். வெட்டிப் பசங்க.
சுந்தருக்கு இது புதியதல்ல. அவன் நினைத்தான் ‘கிருஷ்ணாவும் இதையே
நினைத்துக் கொண்டிருக்கக்கூடும். சுந்தருக்கு
என்ன நினைப்பு.. பெரிய இவனோ.. அவன் எழுதினா.. மயிருபோல் இருக்கு… படிச்சா விறுவிறுன்னு
போக வேண்டாமா… அதெல்லாம் வணிகக் கதைகளாம், அதைப் படிக்கிறவன் கொடுத்த காசுக்கு எண்டெர்டெயின்மெண்ட்
வேணும்னு படிக்கிறானாம்…’ .
சுந்தருக்கு உண்மையியேலே சந்தேகம் வந்துவிட்டது. சுருக்கென்று
மனதில் முள் தைத்தும் விட்டது. யதார்த்தத்தில கதைஎழுதி என்னத்தைக் கண்டான். ஆனாலும்
அவனுக்கு மிகையாக எழுதுவதோ, மிகையாக கற்பனைவாதப் பாத்திரங்களை எழுதுவதோ பிடிக்கவில்லை. வெகு நேரமாக இந்த விவாவதம் அவன் மனதுக்குள்ளும்
தொடர்ந்து கொண்டிருந்தது.
காலையில் எழுந்து வழக்கம் போல ஏழு மணிக்குச் செருப்பு அணியாமல்
இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு நடக்கத் தொடங்கினான். எதிரே சைக்கிளில் வந்த பாஸ்கரன் சைக்கிளை நிறுத்தி
‘என்னப்பா, பிள்ளையார எங்களுக்கும் கொஞ்சம் விட்டுவை..செருப்பும் போடவில்லையா?..” எதிரே
வந்தால் அப்படித்தான் கேட்பான். நண்பன் வேறுயாரைக் கிண்டல் பண்ணுவான்.
அவன் கடந்து போனதும் தான் அவனுக்கு தான் யதார்த்தமில்லாத அளவு
பக்தி கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. தினமும்
இரண்டுவேளை, காலையும் மாலையும் கோயிலுக்குப் போவது அவன் விவரம் தெரிந்த நாளிலிருந்து
வழக்கம். சிறுவயதில் அம்மாவுடன் போனான். பிறகு அப்பாவுடன் போனான். அவனே போக ஆரம்பித்தபோது
செருப்பு இல்லாமலே இரண்டு கிலோமீட்டர் நடந்து போவான்.
கதையில் எதார்த்தத்தைக் கட்டமைக்க விரும்பும் நான் கடவுளை மட்டும்
எதார்த்தமாக எப்படி ஏற்றுக் கொண்டேன்? அவரென்ன தினமும் என்னருகில் வருகிறாரா? அல்லது
பேசுகிறாரா? ஆனால், அவர் நான் சொல்வதைக் கேட்பதுபோல் எனக்குத் தோன்றுகிறதே! இல்லையென்றால்
இத்தனை வருடங்களாக அவரிடம் நான் வைத்த பல கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறாரே? அதெல்லாம்?
ஆனால் நிறைவேற்றாத கோரிக்கைகளும் இருக்கின்றனவே?
அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
இன்றைக்கு பிள்ளையாரிடம் இதைக் கேட்டுவிட வேண்டியது தான்! வேறு எந்தக் கோரிக்கையும்
இன்று இல்லை. தினமும் நிம்மதியாக இருக்கவிடு,
என்று கேட்பது அவனுக்கே வெட்கமாக இருந்தது.
நல்ல வேலை இருக்கிறது, நல்ல சம்பளமும் வருகிறது. மனைவி இருக்கிறாள். ஆனால், தினமும் சண்டை வந்துவிடுகிறது. மீண்டும்
குழப்பிக் கொண்டான். இன்று கேட்கவேண்டியது
யதார்த்தம் குறித்த கேள்விதான். குடும்பத்தை இதில் குழப்பக்கூடாது.
கோயிலில் சென்று நிற்கும் போது இவன் மட்டும் தான் இருந்தான். போதுவாக திங்கட்கிழமை, வாரம் தொடங்கும் நாள் கூட்டமிருக்கும். செவ்வாய்க்கிழமை நல்ல நாள் என்று கூட்டம் இருக்கும். பிறகு வெள்ளி, சனி ஞாயிறு கூட்டமிருக்கும். வார நடுவில் கூட்டம் இருப்பதில்லை. இன்று புதன் கிழமை அதனால் தான் கூட்டமில்லை. நிம்மதியாக
வெகு நேரம் வரை எல்லாத் தெய்வங்களையும் கும்பிடலாம்.
அர்ச்சகர் கூட அவனைக் கடந்து வெளியில் போனார். இது இந்தப் பகுதியில் கொஞ்சம் நாலைந்து சுவாமிகள்
உள்ள கோவில். சக்திவினாயகர். சிவன், முருகன் பார்வதி என்று சைவத் தெய்வங்கள் உண்டு. அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது இன்று பிள்ளையாரிடம்
கேட்டுவிட வேண்டியது தான். யதார்த்தம் பெரிதா? கற்பனாவாதம் பெரிதா? எது நல்லது?
இதையெல்லாம் போய் கடவுளிடம் கேட்பதா என்று தோன்றலாம். கடவுளிடம் ஒவ்வொருவரும் ஒன்றொன்றைக் கேட்கிறார்கள்.
சின்னக் குழந்தைகள் சாக்லேட் வேண்டுமென்றோ, விளையாட எலெக்ரானிக் விளையாட்டு கன்சோல்
வேண்டுமென்றோ கேட்கிறார்கள். பெரியவர்கள் பணம்,
பொருள், நகை, மகளின் கல்யாணம், வீடு, தனது திருமணம், லாட்டரிச் சீட்டில் பரிசு என்று
பலவற்றைக் கேட்கும் போது ஒரு எழுத்தாளன் அல்லது எழுத்தாளனாகக் கனவு காண்பவன், யதார்த்த
வாதம் நல்லதா அல்லது கற்பனாவாதம் உதவுமா என்று கடவுளிடம் கேட்கக் கூடாதா?
சுந்தர் பிள்ளையாரப்பனின் முன்னால் நின்று கொண்டான். ‘பிள்ளையாரப்பா, நீயும் ஒரு எழுத்தாளன். வியாசர் சொல்லச் சொல்ல அவ்வளவு பெரிய மகாபாரதத்தையே
எழுதியவன் நீ. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
கவிபாடும் என்பது போல வியாசபாரதத்தை எழுதிய உனக்கு இலக்கிய நயம்பற்றி நான் சொல்ல வேண்டுமா?
கற்பனையும் யதார்த்தமும் கலந்து காவியம் படைத்தவனல்லவா?’ இன்னும் என்னென்னவோ இறைஞ்சினான். விடை கிடைக்காமல் கோயிலை விட்டுப் போவதில்லை என்று
முடிவுடன் இருந்தான்.
****************
அன்று முழுவதும் நாள் ஓடிக் கழிந்தது. அலுவலகத்தில் நுழைந்த நேரத்திலிருந்து ஏழுமணிவரை
வேலை. வீட்டுக்கு வரும்போது, மணி ஏழரைக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனைக்கும் ரோட்டில்
டிராபிக் கிடையாது. உள்ளே நுழைந்ததும் மனைவி
பார்த்த பார்வையே சரியில்லை. இன்றைக்கு ஏதோ
போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. அவனுக்குப் போர் எந்தக் காரணம் குறித்துவரும் என்று
தெரியாததால், எதைப் பற்றி வரும்? அதில் வரும் ஏவுகணைகளைத் தடுக்க என்ன செய்யலாம் என்று
யோசித்துக் கொண்டிருந்தான்.
காபியைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, குடித்து முடியும் வரை
காத்திருந்தவள், பிறகு பேச்சைத் தொடங்கினாள், இல்லை பொழிந்தாள். வழக்கம் போல முதல் ஐந்து நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருந்தான். அடுத்த ஐந்து நிமிடங்களில் அவன் பேச்சிலும் சூடேறியது.
அதற்கப்புறம், அவள் பேசிக்கொண்டிருக்கும் போது, இவள் ஒரு பொம்மையாகி விடக்கூடாதா என்று
நினைத்தான். அவன் மனைவி அலங்கரிக்கப்பட்ட, பொம்மையாக, உண்மையிலேயே
பொம்மையாக மாறிவிட்டாள். சுந்தருக்கு அதிர்ச்சியாகிவிட்டது. சோபாவில் உட்கார்ந்த படியே என்ன நடந்தது என்று யோசித்தான். அவன் மனைவி, சகதர்மிணி மீனாட்சி சாட்சாத் பொம்மையாக
உள்ளே இருந்த அறைக்கும் டிராயிங் ரூமுக்கும் நடுவிலிருந்த நிலைப்படியில் நின்றபடி பொம்மையாகிவிட்டாள். என்ன செய்வதென்று புரியாமல் வாயடைத்து உட்கார்ந்திருந்தான். போலிஸுக்கும் போன் செய்வதா? என் மனைவி பொம்மையாகிவிட்டாள்
என்றால் போலிஸ்காரன் என்ன செய்வான்? ஏதோ கொலை செய்துவிட்டு, பொய்சொல்லுகிறான் என்று
இவனைப் பிடித்து உள்ளே வைத்துவிடுவான். அண்ணனுக்குப் போன் செய்யலாம். காலையில் பிள்ளையாரப்பன் ஒரு பதிலும் சொல்லாதது
நினைவுக்கு வந்தது. கணவனும் மனைவியும் சண்டை
போடுவதை யதார்த்தமாக வர்ணித்தால் அது எல்லோர்வீட்டிலும் நடக்கிற சலிப்பூட்டும் சமாச்சாரமாகிவிடுகிறது.
அதைக் கற்பனாவாதத்தில் காட்டினால், என்ன என்று பிள்ளையாரிடம் கோரிக்கை விடுத்த போது
தோன்றியது. அதுதான் அவருடைய பதில் என்று எடுத்துக்
கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டிருந்தான். அதற்கான
பிள்ளையாரின் பதில்தான் இதுவோ? பிள்ளையார் என்ன கதைகளில் வருவது போல என் முன்னால் துதிக்கை
தொந்தி சகிதம் வந்து நின்றா பதில் சொல்லுவார்? அது நாடகத்திலும், சினிமாவிலும் நேரடியாக
நடப்பது போல பாவனை நடக்கும். பிள்ளையார் அவன்
பிரச்சனையைத் தீர்த்துவிட்டாரோ என்று தோன்றியது.
மீண்டும் பிள்ளையாரப்பனையே வேண்டினான். ‘அப்பா உன்னை சோதித்துத் தப்புச் செய்துவிட்டேன். இனிமேல் செய்யமாட்டேன். என் மனைவியிடம் பேசி ஒரு மணிநேரமாகிவிட்டது. அவள்
குளிர்ந்து பொம்மையாகி நின்றுவிட்டாள். மீண்டும்
அவளை உயிர்ப்பித்துவிடு. என்று வேண்டிக் கொண்டான். அவன் கேட்டுக் கொண்டதும் அவன் மனைவி மீண்டும் உயிர்ப்பித்துவிட்டாள். அவன் பிள்ளையாரப்பனை வேண்டி வணங்கிக்கொண்டிருந்தான். அவனுக்கு நிம்மதி வந்தது.
இரண்டு நாட்களுக்குள், அவனுக்கு அபரிமிதமான கோபம் வந்துவிட்டது. எதைச் சொன்னாலும் ஏறுக்கு மாறாக அவன் பேசிக்கொண்டிருந்தான். அவன் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது கோபத்தில்
அவளுக்குத் தோன்றியது. இந்த ஆளு இப்படியே சிலை மாதிரி ஆகமாட்டானா? என்று அழுது வருந்திக்
கொண்டிருந்தாள். சோபாவில் அமர்ந்து பாட்டுக்
கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்படியே கற்சிலையாகிப் போனாள். அவளுக்கும் திகைப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. யாருக்கு போன் பண்ண? மாமனார் மாமியாருக்குப் போன்
செய்யவேண்டும். ‘ஐயா, எப்படியிருந்த புருஷன்
எப்படியாகிப் போனான்? ஐயா, ராசா, என்று ஓலமிட்டுக்கொண்டே இருந்தாள். அப்படியே அரைமணி நேரம் கழிந்தது. அவளுக்கும் ஒன்றும் தோன்றவில்லை. அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள். அழுவதற்கும் கூட
சக்தியில்லை. ஓங்கியழவும் முடியவில்லை. பக்கததுக் வீட்டுக்காரர்கள் வந்துவிட்டால், ஜெயிலுக்குத்தான்
போகவேண்டும். ‘அப்படியே மீண்டும் உயிர் வந்துவிடட்டும். என் ஐயா ராசா’ என்று கத்தி அழுதாள். சுந்தர் மீண்டும்,
உயிர்பெற்றுவிட்டான்.
ஆனால் இருவருக்கும் இன்னொரு சண்டை அடிக்கடி நடக்கிறது. ஒரு புதிய
விஷயம் கிடைத்துவிட்டது. சுந்தர் சொல்கிறான்
நான் பிள்ளையாரைக் கும்பிட்டதால்தான் இப்படியெல்லாம் நடந்தது. அவன் மனைவி சொல்கிறாள். இல்லை நான் சும்மா ‘அவருக்கு
உயிர்வரட்டும் என்றேன், உங்களுக்கு உயிர் வந்துவிட்டது. இதில் பிள்ளையாருக்கு எந்தச்
சம்பந்தமும் இல்லை’. அவள் சொல்கிறாள் ’நான்
கற்புக்கரசி, அதனால் தான் சொன்னவுடன் நடக்கிறது. வாயைமூடிக் கற்சிலையாகிவிடுகிறீர்கள்’.
அவன் சொல்கிறான். பிள்ளையாரப்பனைக் கேட்பேன்
‘யெப்பா இவள் வாய் மூடாதா என்று. உடனே நீ பதுமையாகிவிடுகிறாய்.
இப்போது இன்னொன்றும் நடக்கிறது. அவள் அடிக்கடி பதுமையாகி நின்றுவிடுகிறாள். அவன்
அவ்வப்போது கற்சிலையாகிவிடுகிறான்.
எது உண்மையாக இருந்தால் நமக்கென்ன?