Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts

Sunday, December 06, 2009

வில்லேருழவர் 4

நிற்கும் முறை

வில், அம்பு இலக்கு இவற்றின் தன்மையைப் புரிந்து கொண்டபின்னால், அம்பை எய்வதைக் கற்றுக் கொள்ள அமைதியும், பெருமிதமும் கொள்ளவேண்டும். அமைதி இதயத்திலிருந்து வரும். இதயம் பாதுகாப்பற்றுத் துன்பப்பட்டாலும், நல்ல நிலையில் நின்றுகொண்டால் எதையும் நன்றாகச் செய்யமுடியும் என்பதை அறியும். அழகு என்பது மேலோட்டமானதல்ல. அது மனிதன் தன்னையும், தன் வேலையையும் பெருமைப்படுத்தும் வழி. சில நேரங்களில் நிற்கும்முறை வசதியாக இல்லை என்றால், அது பொய் அல்லது செயற்கையானது என நினைக்காதே. அது கடினமாக இருப்பதால் உண்மையானது. வில்வீரன் தன் மரியாதையால் பெருமைப்படுத்துவதாக இலக்கு நினைத்துக் கொள்ள அது உதவுகிறது. நிற்கும் அழகு ரொம்ப வசதியானதல்ல அது அம்பை எய்வதற்கான மிகப் பொறுத்தமான நிலை. தேவையற்றவைகளை நீக்கினால் வருவது அழகு. வில்வீரன் எளிமையை, மனம் ஒருமுகப்படுவதைக் கண்டுகொள்கிறான். எவ்வளவு எளிமையானதாக, அமைதியானதாக நிற்கும் முறை இருக்கிறதோ அவ்வளவு எழிலானது. ஓரே நிறத்தில் இருப்பதால் பனி அழகாக இருக்கிறது, கடல் சமதளமாகத் தோன்றுவதால் கவர்ச்சியாக இருக்கிறது. ஆனால் பனியும் கடலும் ஆழமானவை. தங்களை அறிந்தவை..

அம்பைப் பிடிக்கும் முறை

அம்பைப் பிடிப்பதென்பது உன் உத்தேசத்தை தொடுவதாகும். அம்பு முழுவதையும் நீ பார்க்கவேண்டும், அதைச் பாதையில் செலுத்தும் இறகுகள் சரியாக இருக்கிறதா என்று பார். முனை கூர்மையாக இருக்கிறதென்பதை நிச்சயம் செய்து கொள்.

அது நேராக இருகிறதா, வளைந்தோ முந்தைய எய்தலில் பழுதுபட்டோ இருக்கிறதா என்பதை நிச்சயம் செய்துகொள். அம்பு அதன் எளிமையினாலும், எடைக்குறைவாலும் பலமில்லாததாக தோன்றக்கூடும். ஆனால் வில்வீரனின் பலம் என்பது அம்பு அவன் உடலின் மனதின் சக்தியை வெகுதூரம் கொண்டு போவதாக இருக்க வேண்டும்.

ஒரே அம்பினால் கப்பல் மூழ்கியதாக பழைய கதை ஒன்று உண்டு. கப்பலின் மரத்தில் எங்கே பலங்குறைந்த இடம் என்று வில்விட்டவனுக்குத் தெரியும். அதனால் கப்பலில் ஓட்டைவிழுந்து தண்ணீர் மெல்ல உள்ளே சென்று விட்ட்து. அதனால் அவனுடைய கிராமத்தை நோக்கிப் படைஎடுத்துவந்த எதிரிகளின் எண்ணம் சிதறியது.

அம்பு என்பது விட்டவனின் எண்ணம். தன்னிச்சையாகச் செல்கிறது. அதை விட்டபோது வில்வீரன் தேர்ந்தெடுத்த பாதையில் செல்கிறது. அது காற்றாலும், புவிஈர்ப்பினாலும் பாதிக்கப் படுகிறது. இவை அதன் பாதையின் ஒரு பகுதிதான். மரத்திலிருந்து புயலினால் கிழிந்தாலும் இலை இலையாகவே இருக்கிறது. மனிதனின் குறி நேராக, மிகச்சரியானதாக, உறுதியாக, இருக்கவேண்டும். இலக்கை நோக்கிய இடைவெளியை அது கடக்கும் போது யாரும் அதை நிறுத்த முடியாது.

வில்லைப் பிடிக்கும் முறை

அமைதியாக இரு. மூச்சை நன்றாக இழுத்து விடு. உன்னுடைய ஒவ்வொரு அசைவையும் உன் தோழர்கள் கவனிப்பார்கள். தேவையெனில் உதவுவார்கள். உன் எதிரியும் உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறவாதே. அச்சமற்ற கைகளுக்கும் நடுங்கும் கைகளுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்குத் தெரியும். எனவே பதட்டமாக இருந்தால் மூச்சை நன்றாக இழுத்துவிடு அது ஒவ்வொரு அடியிலும் உன் மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

வில்லைக் கையில் எடுத்து உன் உடல்முன் –தகுந்த முறையில் - வைக்கும் தருணத்தில், அம்பு விடுவதற்கு, அதுவரை நீ செய்த ஒவ்வொரு செயலையும் மீண்டும் நினைத்துப் பார். பதட்டம் இல்லாமல் இதைச் செய். ஏனெனில், எல்லா விதிகளையும் ஞாபகத்தில் வைக்க முடியாது. அமைதியான மனதில் நீ ஒவ்வொரு செயலையும் மீண்டும் நினைக்கும்போது, மிக கடினமான எல்லாத் தருணங்களையும் அவற்றை நீ எவ்வாறு கடந்தாய் என்பதையும் காண்பாய். இது உனக்குத் தன்னம்பிக்கையைத் தரும் உன் கைகள் நடுங்குவது நின்றுவிடும்.

வில்லின் நாணை இழுக்கும் முறை

வில் ஒரு இசைக்கருவி. நாண் மூலம் அதன் ஒலி வெளிப்படுகிறது. நாண் மிக நீளமானது. வில் அதன் ஒரு புள்ளியைத்தான் தொடுகிறது. வில்வீரனின் அறிவும், அனுபவமும் அந்தப் புள்ளியில் தான் குவிக்கப்பட வேண்டும்.

அவன் இடப்புறமோ வலப்புறமோ சிறிதும் சாய்ந்தால், அந்தப் புள்ளி வில்செல்லும் வழியிலிருந்து கீழோ மேலோ இருந்தால், அவன் இலக்கை அடிக்க முடியாது. எனவே நாணை இழுக்கும்போது, இசைக்கருவியை இயக்கும் கலைஞன் போல் இரு. இசையில் இடத்தை/ இடைவெளியை விட, காலம் முக்கியமானது. எழுதப்பட்ட இசையின் சுர வரிகள் பொருளற்றவை. அதைப் வாசிக்கத் தெரிந்தவன் சுர வரிகளை இசையாகயும், தாளகதியாகவும் மாற்றமுடியும்.

இலக்கை, அதன் இருப்பை வில்வீரன் சாத்தியப்படுத்துவது போலவே, அம்பு வில்லின் இருப்பை சாத்தியப்படுத்துகிறது. அம்பைக் உன் கைகளால் நீ வீசலாம். ஆனால் அம்பு இல்லாத வில் பயனற்றது.
அதனால், கைகளை நீட்டும் போது வில்லின் நீட்சியாக உன்னை நினைக்காதே. அம்பு சலனமற்ற மையம் எனவும் நீ வில்லையும், நாணையும் அருகில் கொண்டுவருவதாகவும் நினை.

வில்லின் நாணை மெல்லத் தொடு. அதன் துணையை வேண்டு.

Tuesday, November 10, 2009

வில்லேருழவர் 3


அம்பு


அம்பு என்பது நமது எண்ணம். வில்லின் உறுதியையும் இலக்கின் மையத்தையும் இணைக்கிறது. எண்ணம் மிகமிகத் தெளிவாக, நேராக, சமச்சீராக, இருக்கவேண்டும். அம்பை விட்டுவிட்டால் திரும்ப வராது. இலக்குத் தயாராக இருக்கிறது என்பதற்காகவோ வில்லில் நாணேற்றிவிட்டோம் என்பதற்காகவோ முழுக்கவனமின்றி அம்பை எய்துவிடாமல், அதைச் செலுத்துவது வரைக்கும் நடந்ததனைத்தும் முறையாக, மிகச் சரியாக இல்லை என்றால், அது செலுத்தாமல் இருபதே நல்லது. தவறு செய்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக மட்டும் அம்பு எய்வதை நிறுத்தாதே. சரியான முறையில் நாணேற்றினால் கைகளை விரித்து அம்பை விடு. அம்பு இலக்கைத் தவறவிட்டாலும் அடுத்தமுறை எப்படி சரியாக விடுவது என்பதை நீ அறிந்து கொள்வாய். அந்த சவாலை எதிர்கொள்ளாவிட்டால் என்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதை நீ அறிய முடியாது. ஒவ்வொரு அம்பும் தன் நினைவை விட்டுச் செல்லும் அந்த மொத்த நினைவுகள் தான் மேலும் மேலும் சிறப்பாக அம்புவிட வைக்கும்.


இலக்கு
அடையவேண்டிய குறிக்கோள்தான் இலக்கு. வில்வீரன் அதை தீர்மானிக்கிறான். அது வெகு தூரத்தில் இருந்தாலும் நாம் அடையமுடியவில்லை என்றால் அதைக் குறை கூற முடியாது. இதில்தான் வில்வித்தையின் பெருமை இருக்கிறது. எதிரி உன்னைவிட பலசாலி என்று நீ சாக்குச் சொல்ல முடியாது. நீதான் இலக்கைத் தேர்ந்தெடுத்தாய் அதற்கு நீதான் பொறுப்பு. இலக்கு முன்னாலோ பின்னாலோ பெரிதாகவோ சிறிதாகவோ இடப்புறமோ வலப்புறமோ இருக்கலாம். அதை மதித்து மனத்தின் அருகில் கொண்டுவரவேண்டும். அது உன் அம்பின் முனையில் இருக்கும் போது அதை நாணிலிருந்து விடவேண்டும். இலக்கை எதிரியாக மட்டும் நினைத்தால், இலக்கை நீஅடித்துவிடலாம். ஆனால் உனக்குள் எந்த நிறைவையும் அடையமுடியாது.

ஒரு காகிதத்தின் அல்லது மரத்தின் நடுவில் அம்பைவிடுவது தான் வாழ்வின் அனுபவமாகிவிடும். அது பொருளற்றது. மற்றவர்களுடன் இருக்கும் போது, சுவராஸ்யமாக எதையும் செய்யமுடிவதில்லை என்று புலம்ப நேரிடும். அதனால், இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதை அடிக்க முயலவேண்டும். இலக்கைப் பெருமையுடனும் மரியாதையுடனும் அணுகவேண்டும். அதன் மதிப்பென்ன? அதற்காக எவ்வளவு பயிற்சியும் உள்ளுணர்வும் உனக்குத் தேவைப்பட்டது என்பது உனக்குத் தெரியவேண்டும். இலக்கைப் பார்க்கும் போது அதை மட்டும் கவனிக்காதே. சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் கவனி. ஏனெனில், அம்பை விடும்போது, காற்று, எடை, தூரம் என்பன போன்ற நீ கவனிக்காத பல விஷயங்கள் அதை பாதிக்கும்.

நீ இலக்கைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இலக்காக இருந்தால் எப்படி இருப்பேன்? எய்தவன் பெருமைப்பட வேண்டுமெனில் அம்பு எங்கே குத்துவதை விரும்புவேன்? என்று எப்போதும் உன்னை நீயே கேட்டுக்கொள்ள வேண்டும். வில்வீரன் இருந்தால்தான் இலக்கும் இருக்கும். அதை அடையவேண்டும் என்ற வீரனின் ஆசைதான் இலக்கின் இருப்பதற்கான நியாயம். இல்லையெனில் அது வெறும் உயிரற்ற பொருள், மரத்துண்டு அல்லது காகிதத்துண்டு. அம்பு எவ்வாறு இலக்கைத் தேடுகிறதோ அவ்வாறே இலக்கும் அம்பைத் தேடுகிறது. ஏனெனில் அம்புதான் இலக்கு இருப்பதற்கான அர்த்தத்தைத் தருகிறது. அது வெறும் காகித அல்லது மரத் துண்டு அல்ல. வில்வீரனுக்கு அதுதான் உலகின் மையம்.
வில்லேருழவர் 2

“நீங்கள் மிகச்சிறந்த வில்வீரர் என்று அவன் சொன்னான். நீங்கள் வில்வித்தையில் வல்லவர் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் ஏன் மரவேலை பார்க்க வேண்டும்.

“மரவேலை செய்யவேண்டும் என்பது என் கனவு. வில்வித்தை எல்லாவற்றுக்கும் உதவும். சொல்லப்போனால் வில்வித்தை கற்றவனுக்கு வில் அம்பு, இலக்கு எதுவும் தேவையில்லை’

அந்தச் சிறுவன் தொடர்ந்தான் “ இந்தக் கிராமத்தில் சுவராஸ்யமாக எதுவும் நடப்பதில்லை. இப்போது திடீரென்று நான் ஒரு வில் வீர்ரை, ‘குரு’வைப் பார்க்கிறேன் யாருமே அவரைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அவன் கண்கள் ஒளிவிட்டன.

வில்வித்தை என்றால் என்ன? எனக்குச் சொல்லித் தருவீர்களா?

சொல்லித் தருவது ஒன்றும் கஷ்டமானதல்ல. கிராமத்துக்குச் செல்லும் போதே வழியில் ஒருமணி நேரத்துக்குள் முடித்துவிடுவேன். மிக மிகச் தேர்ச்சி பெறுவது வரை நீ தினமும் பயிற்சி செய்வது தான் கஷ்டமானது.,

சரியென்று சொல்லிவிடுங்களேன் என்று சிறுவனின் கண்கள் அவனைக் கெஞ்சுவது போலிருந்தது. பத்துப் பதினைந்து நிமிடம் டெட்சுயா அமைதியாக நடந்தான். அவன் மீண்டும் பேசிய போது அவன் குரல் இளமையாக ஒலித்தது.

“இன்று எனக்குத் திருப்தியாக இருக்கிறது.. ரொம்ப வருஷங்களுக்கு முன் என் உயிரைக் காப்பாற்றிய ஒருவருக்கு நான் மரியாதை செய்தேன். அதனால் நான் எல்லா விதிகளையும் சொல்லித்தருவேன். அதற்கு மேல் முடியாது. நீ நான் சொல்வதைப் புரிந்துகொண்டால் என் உபதேசத்தை நீ விரும்பியபடி உபயோகிக்கலாம். கொஞ்சநேரத்துக்கு முன்னால் என்னை ‘குரு’ என்று சொன்னாய். குரு என்றால் யார்? எதையாவது யாருக்காவது சொல்லித் தருபவன் குரு அல்ல. யார் ஒருவன் ஒரு மாணவனின் ஆத்மாவில் ஏற்கனவே இருக்கும் முழுத் திறமையையும் அவனே கண்டு கொள்ளக் கற்பிக்கிறானோ அவன்தான் குரு. மலையிலிருந்து இறங்கும் போது டெட்சுயா வில்வித்தையை அவனுக்கு விளக்கினான்.

தோழர்கள்

அம்பும் வில்லும் பற்றிய தனது மகிழ்ச்சியை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாத வில்வீரன் தனது குணங்களையும் குறைகளையும் அறிந்துகொள்வதில்லை. அதனால் எதையும் நீ தொடங்குமுன் உன் வேலையில் ஆர்வமுள்ள தோழர்களை, தெரிந்தவர்களைத் தேடு. மற்ற வில்வீர்ர்களைத் தேடு என்று நான் சொல்லவில்லை. மற்ற திறமைகள் உள்ளவர்களைத் தேடு. மகிழ்ச்சியுடன் தொடரும் எந்த வித்தையையும் மாதிரித்தான் வில்வித்தையும். எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இவரை விடச் சிறந்தவர் இல்லை என்று குறிப்பிடும் அளவுக்குத் திறமையான தோழர்கள் பற்றிச் சொல்லவில்லை
.தவறுசெய்யப் பயப்படுகிற, அதனாலேயே தவறுகள் செய்கிற மனிதர்கள். அதனால் அவர்கள் வேலையை யாரும் அங்கீகரிப்பதில்லை. ஆனால், அது போன்றவர்கள் தான் உலகை மாற்றி அமைக்கிறார்கள். பல தவறுகள் செய்த பின்னால் ஏதாவது செய்து, அவர்கள் வாழும் சமூகத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவந்து விடுவார்கள். தங்களைச் சுற்றி ஏதாவது நடக்கும் என்று காத்திருந்து பின்னர் தங்கள் பாதையை அதற்கேற்றாற்போல் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு பொறுத்திருக்க மாட்டாதவர்கள். செயலில் ஈடுபடும் போதே பெரும் ஆபத்து என்று தெரிந்தும் முடிவெடுப்பவர்கள்.

இலக்கை எதிர்கொள்ளும் முன்னால் வில்லை நெஞ்சுக்கு உயர்த்தும்போதே திசையை மாற்றும் சுதந்திரத்தை அவன் உணரவேண்டியது அவசியம். அதனால் இதுமாதிரி மனிதர்களுடன் வாழ்வது முக்கியம். நாணிலிருந்து கையை விடும்போது தனக்குள் சொல்லிக் கொள்ளவேண்டும் “நாணை இழுக்கும்போது நீண்ட பாதையைக் கடந்துவிட்டேன். தேவையான சவால்களை என்னால் முடிந்த வரை எடுத்து இந்த அம்பை விடுகிறேன்.

எல்லோரையும் போல் சிந்திப்பவர்கள் நல்ல தோழர்கள் அல்ல. வில்வித்தையில் ஆர்வத்தை நீ பகிர்ந்து கொள்ளும் தோழர்களைத் தேடும் போது உள்ளுணர்வை மட்டும் நம்பு. மற்றவார்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாதே. மனிதர்கள் தங்களுடைய குறைகளைக் கவனத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை எடைபோடுகிறார்கள். புதிய முயற்சிகள் செய்பவர்கள், துணிந்து சவால்களை சந்திப்பவர்கள், அதனால் கீழே விழுந்தாலும் அடி பட்டாலும் மீண்டும் துணிந்து இறங்குபவர்கள், இவர்களுடன் சேர்ந்து கொள்.

ஏற்கனவே சொல்லப்பட்ட உண்மைகளை ஒத்துக்கொள்வோர், தங்களைப்போல் எண்ணாதவர்களை விமரிசிப்போர், ஓரடி எடுத்து வைக்கும் முன்னால் நமக்கு மரியாதை கிடைக்கும் என்று தெரிந்த பின்னரே அடுத்த அடி எடுத்து வைக்கும் மனிதர்கள், ஐயங்களைவிட அறுதியிட்ட உண்மைகளை விரும்புவோர், இவர்களிடமிருந்து தள்ளியிரு.,

திறந்த மனதுடையோர், பலங்குறைந்திருப்பதைப் பற்றி அஞ்சாதவர்களுடன் சேர்ந்துகொள். அடுத்தவர்கள் செய்வதைக் கவனித்தால், முன்னேறமுடியும் என்பது புரிந்தவர்கள். கவனிப்பது தீர்ப்புச் சொல்வதற்காக அல்ல உறுதியையும், ஈடுபாட்டையும் நேசிப்பதற்காக.

வில்வித்தை மீது விவசாயிக்கோ, சமையல்காரனுக்கோ ஈடுபாடு இருக்காது என்று நீ நினைக்கலாம். தாங்கள் எதைப் பார்க்கிறார்களோ அதை தங்கள் வேலையிலும் புகுத்திவிடுவார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன். நீயும் அதையே செய். ரொட்டி செய்பவனிடமிருந்து கைகளை எப்படிப் பயன்படுத்துவது, மசாலாக்களை சரியாக எப்படிச் சேர்ப்பது என்று நீ அறிந்து கொள்வாய். பொறுமை, கடும் உழைப்பு, பருவங்களை மதிப்பது, புயல்களை திட்டாமலிருப்பது(ஏனெனில் அது நேரத்தை வீணாக்குவதுதான்) இவற்றை விவசாயியிட்டமிருந்து கற்றுக் கொள்ளலாம். உனது வில்லின் மரத்தைப் போல் வளைந்துகொடுக்து, பாதையில் வரும் குறிப்புகளை உணர்ந்து கொள்பவருடன் சேர்ந்துகொள். அவர்கள் தாண்ட முடியாத தடைகள், நல்ல வாய்ப்புக்கள் வரும்போது திசைமாறத் தயங்காதவர்கள்.

அவர்கள் தண்ணீர் போல. பாறையைச் சுற்றி ஓடும்; நதியின் பாதையில் சென்று சில நேரம் பெரிய ஏரியாக நிறையும்வரை காத்திருந்து பின் வழிந்தோடிப் பயணம் தொடரும்; ஏனெனில் இலக்கு கடல் என்று தண்ணீர் எப்போதும் மறப்பதில்லை. இப்போது அல்லது அப்புறம் அதை அடைந்தே ஆகவேண்டும்.

சரி இதுதான் முடிவு. இதற்குமேல் செல்லமாட்டேன் என்று சொல்பவருடன் சேராதே. குளிருக்குப் பிறகு வசந்தம் வருவதுபோல் நிச்சயம். எதுவும் முடிவதில்லை. உனது இலக்கை அடைந்த பின் மீண்டும் தொடங்கு. வந்த வழியில் நீ கற்றதையெல்லாம் பயன்படுத்து.

பாட்டுப்பாடி கதைசொல்லி, இன்பங்களை அனுபவித்து, கண்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவர்களுடன் சேர்ந்துவிடு. ஏனெனில் மகிழ்ச்சி அடுத்தவர்களைத் தொற்றிக் கொள்ளும். தன்னிரக்கத்தில், தனிமையில் கஷ்ட்த்தில் ஸ்தம்பித்து விடுவதிலிருந்து தடுக்கும்.

உற்சாகத்துடன் வேலை செய்பவர்களுடன் சேர்ந்து கொள். அவர்கள் உனக்கு உபயோகப் படுவது போலவே நீயும் அவர்களுக்கு உபயோகப்படுவாய். அவர்களின் கருவிகளைப் புரிந்துகொள். அவர்களின் திறனை அதிகரிப்பது பற்றி யோசி.

உன் வில்லையும், அம்பையும், இலக்கையும் பாதையையும் நீ சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. .

வில்

வில்லே உயிர். சக்தியின் ஊற்று. அம்பு ஒரு நாள் சென்றுவிடும். இலக்கு வெகு தூரத்தில் இருக்கிறது. வில் உன்னுடனே இருக்கும். அதை எப்படிப் பாதுகாத்து வைத்துக் கொள்வது என்பதை நீ அறிந்து கொள்ளவேண்டும். அதற்கு அவ்வப்போது ஓய்வு வேண்டும். எப்போதும் நாணேற்றிய வில் பலத்தை இழந்துவிடுகிறது. எனவே மீண்டும் உறுதிபெற அதற்கு ஓய்வு கொடு. பின் நீ நாணேற்றும் போது அது முழுபலத்துடன் இருக்கும். வில்லுக்கு மனசாட்சி கிடையாது. அது வில்வீரனின் ஆசையின், கைகளின் நீட்சி. அது கொல்ல அல்லது அமைதிக்கு உதவும். அதனால் நீ தெளிவான எண்ணங்களுடன் இரு. வில் நன்றாக வளைந்து கொடுத்தாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. அதற்கு மேல் வளைத்தால் உடைந்துவிடும் அல்லது வைத்திருப்பவனை களைப்படையச் செய்யும். உன் கருவிகளுடன் இயைந்து இரு. அதனால் முடிந்த்தற்கு மேல் எதிர்பார்க்காதே.

வில், வீரனின் கைகளில் இருக்கிறது அல்லது ஓய்வெடுக்கிறது. ஆனால் கைகளில் உடம்பின் எல்லாத் தசைகளும், வீரனின் எண்ணங்களும் வில்விடும் முயற்சியும் ஒருமுனைப்படுகிறது. நாணேற்றும் போது கம்பீரமாக நிற்க, உடம்பின் எல்லாப் பாகங்களும் தம்முடைய வேலையை வேண்டிய அளவு மட்டுமே செய்ய விடு. சக்தியை வீணாக்காதே. அப்படிச் செய்தால் களைத்துவிடாமல் தொடர்ந்து அம்புகள் விடலாம். வில்லை அறிந்து கொள்வதற்கு அது உனது கைகளின் உறுப்பாகவும் எண்ணங்களின் நீட்சியாகவும் இருக்கவேண்டும்.

'

Friday, November 06, 2009

வில்லேருழவன் - 1
‘டெட்சுயா’

சிறுவன் அதிர்ச்சியில் அன்னியனைப் பார்த்தான்.

‘இந்த ஊரில் யாருமே டெட்சுயா வில்லேந்தி இருப்பதைப் பார்த்ததில்லையே. அவன் மர ஆசாரி என்றுதான் எல்லோருக்கும் தெரியும்.” அவன் பதிலளித்தான்.
‘அடியோடு விட்டிருக்கலாம், ஒருவேளை தைரியம் இழந்திருக்கலாம் ஆனால் அதனால் எனக்கொன்றுமில்லை. தன் கலையை அவன் கைவிட்டால் அவன் இந்த நாட்டிலேயே மிகச் சிறந்த வில்வீரன் என்று கருதமுடியாது. அவனுக்குச் சவால் விடவும், அவனுக்குத் தகுதியற்ற அவன் பெருமையை முடிவுக்குக் கொண்டுவரவும் நான் இத்தனை நாளாக பயணம் செய்து வந்திருக்கிறேன்.’
அவனுடன் பேசுவதில் பொருளில்லை என்று அந்தப் பையன் தெரிந்துகொண்டான். தன் தவறை உணரும்படி அவனை மரஆசாரியின் கடைக்கு கூட்டிச் செல்வது தான் நல்லது.

டெட்சுயா வீட்டுக்குப் பின்னாலிருந்த பட்டறையில் இருந்தான். யார் வந்திருக்கிறார் என்று பார்க்கத் திரும்பினான். வந்தவனுடைய கையிலிருந்த பெரிய மூட்டையைக் கண்ட்தும் அவன் புன்னகை உறைந்துவிட்ட்து. ‘நீ நினைப்பதுதான் இது’ புதிதாக வந்தவன் சொன்னான். பெரிய கதாநாயகனை அவமானப் படுத்தவோ, சண்டைக்கு இழுக்கவோ நான் இங்கே வரவில்லை. இத்தனை வருடப் பயிற்சிக்குப் பிறகு வில்வித்தையின் உச்சத்தை அடைந்துவிட்டேன் என்பதை நிரூபிக்கவே வந்தேன்.” டெட்சுயா கவனிக்காத்து போல் வேலையைத் தொடர்ந்தான். ஒரு மேஜைக்குக் கால் வைத்துக் கொண்டிருந்தான்.


ஒரு தலைமுறைக்கு உதாரணமாக இருந்த மனிதன் திடீரென்று உன்னைப் போல் மறைந்துவிடக்கூடாது. நான் உங்களுடைய உபதேசங்களைப் பின்பற்றினேன். வில்வித்த்தையை மதித்தேன் நான் அம்புவிடுவதை நீ பார்க்கும் அளவுக்கு எனக்குத் தகுதி உண்டு. நீங்கள் அதைச் செய்தால், இப்படியே திரும்பிவிடுவேன். வில்வித்தையில் மிகப் பெரிய குருவை எங்கே காணலாம் என்பதை யாருக்கும் சொல்ல மாட்டேன். புதியவன் தன் மூட்டையிலிருந்து நீண்ட பளபளக்கும் அம்பு ஒன்றை அதன் நடுப்பகுதிக்கும் சற்றுக் கீழே பிடித்து உருவினான்.

டெட்சுயாவைப் பணிந்து வணங்கினான். தோட்ட்த்துக்குள் சென்று ஒரு இட்த்தைப் பார்த்து மீண்டும் வணங்கினான். பிறகு, பின்புறம் புறா இறகு வைக்கப்பட்ட அம்பு ஒன்றை வெளியில் எடுத்தான். அம்பு விடுவதற்கேற்ற மாதிரி உறுதியுடன் அசையாமல் நின்றான். ஒருகையால் வில்லை முகத்துக்கு நேராகப் பிடித்து இன்னொரு கையால் அம்பை சரியான் இடத்தில் பொறுத்தினான். சிறுவன் உள்ளுர மகிழ்ச்சியுடன் வியப்புடன் பார்த்தான். டெட்சுயா வேலை செய்வதை நிறுத்திவிட்டு புதியவனை ஆர்வத்துடன் கவனித்தான்.

அம்பைப் பொருத்தி, வில்லை நெஞ்சுக்கு நேராக உயர்த்தினான். தலைக்குமேல உயர்த்தினான். மெல்ல கீழிறக்கும்போது நாணைப் பின்னிழுத்தான். அம்பு முகத்துக்கு நேராக வரும்போது, வில் முழுமையாக இழுக்கப்பட்டிருந்தது. அப்படியே நின்றுவிட்டது போலிருந்தது. அவனும், வில்லும் அசையாமல் இருந்தனர். சிறுவன் அம்பு குறிவைத்திருக்கும் இடத்தைப் பார்த்தான். அவனுக்கு அங்கு ஒன்றும் தெரியவில்லை.

திடீரென்று நாணில் இருந்த கை விரிந்தது. பின்னால் சென்றது இன்னொரு கையிலிருந்த வில் வளைந்து நின்றது. அம்பு மறைந்து தூரத்தில் மீண்டும் தெரிந்தது. ‘போ, எடுத்து வா என்றான் டெட்சுயா. சிறுவன் அம்பை எடுத்து வந்தான். அது நாற்பது மீட்டருக்கு அப்பால் ஒரு செர்ரிப் பழத்தைத் துளைத்திருந்தது.

டெட்சுயா புதியவனை குனிந்து வணங்கிவிட்டு பட்டறையின் ஒரு மூலைக்குச் சென்றான். நீண்ட தோல் பையில் இருந்த மெல்லிய அழகாகச் செதுக்கப்பட்ட மரத்துண்டை எடுத்தான். தோல் பையை பிரித்து அதிலிருந்த வில் ஒன்றை எடுத்தான். அது புதியவனிடமிருந்த்து மாதிரிதான் இருந்த்து. ஆனால் பலமுறை உபயோகிக்கப்பட்டது. என்னிடம் அம்பு கிடையாது. உன்னிடம் உள்ளதைத்தான் உபயோகிப்பேன். நீ கேட்டுக் கொண்ட்து மாதிரி செய்வேன். ஆனால் நீ கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். நானிருக்கும் ஊரை யாருக்கும் எப்போதும் சொல்லக் கூடாது. யாராவது கேட்டால், நான் அவனைக் கண்டுபிடிக்க உலகத்தின் கோடிக்கே சென்றேன் ஆனால் பின்னால் தெரிந்த்து பாம்புகடித்து அவன் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டான்’ என்று சொல்லிவிடு’ புதியவன் தலையாட்டிவிட்டு தன்னுடைய அம்பு ஒன்றைக் கொடுத்தான்.

நீண்ட மூங்கில் வில்லின் ஒரு முனையை சுவரில் வைத்து அழுத்தி டெட்சுயா வில்லைக் கட்டினான். ஒன்’றும் சொல்லாமல் மலைகளைப் பார்த்துச் செல்ல ஆரம்பித்தான். புதியவனும் சிறுவனும் அவனுடன்சென்றனர். ஒருமணி நேரம் நடந்து இரண்டு மலைகளுக்கிடையில் பெரும் பள்ளம் இருந்த இடத்தை அடைந்தனர். பள்ளத்தில் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்த்து. இடைவெளிப் பள்ளத்திக் கடக்க கயிற்றுப் பாலம். அது எந்த நேரத்திலும் அற்று விழுந்துவிடும் நிலையில் இருந்தது.

டெட்சுயா மௌனமாக கயிற்றுப் பாலத்தின் மையப் பகுதிக்குச் சென்றான். அது மிக பயங்கரமாக ஆடியது. மறுபுறத்திலிருந்த எதையோ பார்த்துக் குனிந்து வணங்கிவிட்டு, அம்பை நாணேற்றி, தூக்கிப்பிடித்து நெஞ்சுக்கு நேர் வைத்து விட்டான். இருபது மீட்டருக்கு அப்பால் ஒரு பீச் பழத்தை அம்பு துளைத்திருந்த்தை சிறுவனும் புதியவனும் பார்த்தனர்.
‘நீ செர்ரிப் பழத்தில் நான் பீச் பழத்தில் அம்பை விட்டோம்’ டெட்சுயா கரைக்குத் திரும்பிக்கொண்டே சொன்னான். .

‘செர்ரி சின்னது. நாற்பது மீட்டர் தொலைவிலிருந்து அதைத் துளைத்தாய். நான் இருபது மீட்டரிலிருந்து. அதனால் நான் இப்போது செய்த்தை நீயும் செய்யவேண்டும். இந்தப் பாலத்தின் நடுவில் நின்று நான் செய்த மாதிரிச் செய்’
புதியவன் பயந்துநடுங்கி லொடலொடக்குப் பாலத்தின் நடுவில் சென்றான். கீழெ பள்ளத்தைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றான். டெட்சுயா செய்தமாதிரியே அவனும் செய்தான். பீச் மரத்தில் அம்பைவிட்டான் ஆனால் அம்பு விலகிப் போய்விட்டது.

கரைக்குத் திரும்பியபோது பயத்தில் அவன் முகம் வெளுத்திருந்தது. ‘உன்னிடம் திறமையும் கண்ணியமும், சரியாக நிற்பதும் இருக்கிறது. வில்லின் நுட்பத்தை நன்கு புரிந்து கொண்டிருக்கிறாய் ஆனால் உன் மனதை வெற்றி கொள்ளவில்லை. எல்லா சூழ்நிலைகளும் உனக்குச் சாதகமாக இருக்கும்போது நன்றாக அம்புவிடுகிறாய். ஆனால் ஆபத்தான சூழலில் இலக்கை உன் அம்பு எட்டவில்லை. வில்வீரன் போர்க்களத்தை தானாகத் தேர்ந்தெடுக்க முடியாது. மீண்டும் பயிற்சியைத் தொடங்கு.சாதகமில்லாத் சூழலில் போரிடப் பழகு. வில்லின் வழியில் செல். அது வாழ்க்கைப் பயணம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள் நல்ல குறிதவறாமல் எய்வதும் மனதில் அமைதியுடன் எய்வதும் வேறுவேறு.

புதியவன் மீண்டும் நன்றாகக் குனிந்து வணங்கிவிட்டு, வில்லையும் அம்பையும் தோளில் சுமந்த நீண்ட பைக்குள் வைத்து அவ்விடத்தை விட்டு நீங்கினான். திரும்பி வரும்போது சிறுவன் மகிழ்ச்சியில் குதித்தான். ‘டெட்சுயா நீங்க காட்டிட்டீங்க.. நீங்க தான் உண்மையிலேயே பெரிய வீரன்’
முதலில் நாம் மற்றவர்களிடமிருந்து கேட்கவும், மரியாதை செய்யவும் கற்றுக் கொள்ளாமல் அவர்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வரக்கூடாது. புதிதாக வந்தவன் ரொம்ப நல்லவன். வெளியில் அப்படித் தெரிந்தாலும், அவன் என்னை அவமானப் படுத்தவில்லை. என்னைவிடப் திறமைசாலிஎன்று காட்டவும் முயலவில்லை. பார்ப்பதற்கு ஏதோ அவன் எனக்குச் சவால் விடுவது போல் இருந்தாலும்
அவன் தன் திறமையைப் பெருமைக்குக் காட்டவிரும்பினான். நாம் ஒத்துக் கொள்ளவேண்டும் என்று விரும்பினான். எதிர்பாராத சூழலில் மாட்டிக் கொள்வது வில்வீர்ர்களுக்கு நடப்பது தான். அவனும் அதைத்தான் இன்று என்னை செய்து காட்டவைத்தான்.

-------will continue------


english "The Way of the Bow" - A novel by Paulo Coelho
Tamil V.Rajagopal

Tuesday, October 06, 2009

இந்தக் காலத்தில்

மழையில்லாமல் வெக்கையுடன் திங்கட்கிழமை விடிந்த்து. காலையிலேயெ எழுந்துவிடும் பழக்கமுள்ள, பட்டம் பெறாத பல் மருத்துவர் அரிலோ எஸ்கவர், ஆறுமணிக்கு தன் கிளினிக்கைத் திறந்தார். கண்ணாடிக் கூடுகளில் பிளாஸ்டர் அச்சுக்களில் வைத்திருந்த பொய்ப்பற்களை, தொழிலுக்குண்டான சிறு கருவிகளை மேஜை மீது வரிசையாக காட்சிக்கு அடுக்கி வைத்தார். காலர் இல்லாமல் கழுத்தை மூடிய கோடுபோட்ட சட்டையும், தோள் பட்டைகள் வைத்த பேண்ட்டும் போட்டிருந்தார். மெலிந்த நெட்டையான உருவம். காது கேட்காதவர்களைப்போல் நிலைமைக்குப் பொருத்தமில்லாதபடி பார்வை.
மேஜையில் பொருட்களை அடுக்கிய பிறகு, டிரில்லரை நாற்காலியின் பக்கம் இழுத்தார். பொய்ப்பற்களுக்கு பாலிஷ் போட ஆரம்பித்தார். என்ன செய்கிறாம் என்று யோசிக்காமலே தொடர்ந்தார். தேவையில்லாத போதும் அடிக்கடி துணியை இழுத்துவிட்டுக்கொண்டார். எட்டு மணிக்கு ஜன்னல் வழியே வானத்தைப் பார்க்க வேலையை நிறுத்தினார். அடுத்த வீட்டின் கம்பிகள் மீது அமைதியாக இரண்டு கழுகுகள் வெய்யிலில் ஈரம் காய்ந்து கொண்டிருந்த்தைப் பார்த்தார். மத்தியானச் சாப்பாட்டுக்கு முன் மழை பெய்துவிடும் என்ற நினைப்பில் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அவருடைய பதினொரு வயது மகனுடைய கீச்சுக் குரல் அவருடைய கவனத்தை குலைத்தது. “அப்பா”
“என்ன”
“மேயர் தன் பல்லைப் புடுங்கி விடுவீர்களா என்று கேட்கிறார்”
“நான் இங்கே இல்லைன்னு சொல்”
அவர் ஒரு தங்கப் பல்லை பாலிஷ் செய்து கொண்டிருந்தார். கை நீளத்தில் அதைப் பிடித்துக் கொண்டு ஒண்ணரைக்கண்ணால் பார்த்தார். அவர் மகன் மீண்டும் சிறிய முன்னறையிலிருந்து கத்தினான்.
“நீ பேசறதை அவர் கேட்கமுடியும் அதான் சொல்றார் நீ இருக்கயாம்”
அவர் பல்லைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வேலையை முடித்துவிட்டு மேஜையில் வைத்தபின்னால் சொன்னார் “அதான” டிரில்லரை மீண்டும் ஓட்டினார். கார்டுபோர்ட் பெட்டியிலிருந்த்து இன்னும் செய்ய வேண்டிய வேலைகளுக்கான பல பொருட்களை வெளியில் வைத்து தங்கப்பல்லுக்கு பாலிஷ் போட ஆரம்பித்தார்.
“அப்பா”
“என்ன?”
முகபாவம் மாறவே இல்லை.
“அவர் பல்லைப் புடுங்கவில்லையென்றால் உன்னைச் சுட்டுவிடுவாராம்”


அவசரமில்லாமல் அமைதியாக டிரில்லரை நிறுத்தி, நாற்காலியை விட்டுப் பின்னால் தள்ளிவிட்டு மேஜையின் டிராயரைத் முழுதாக வெளியே இழுத்த்தார். அங்கே கைத்துப்பாக்கி இருந்த்து. “சரி வந்து என்னைச் சுடும்படி அவனிடம் சொல்”
நாற்காலியைப் எதிப்புறமிருந்த கதவுப் பக்கம் தள்ளினார். அவருடைய கை டிராயரின் முனையில் இருந்த்து. மேயர் கதவுப் பக்கம் வந்தார். வலியினால் முகத்தில் இடது பக்கம் மழித்திருந்தார். வலது பக்கம் வீங்கியிருந்த்து. ஐந்து நாள் தாடி இருந்தது. பல இரவுகளின் துயரம் அவன் களைத்த கண்களில் தெரிந்த்து. விரல் நுனிகளால் மேஜை டிராயரை முடிவிட்டுச் மெதுவாகச் சொன்னார்:
“உட்கார்”
“காலை வணக்கம்” என்றார் மேயர்.
“காலை வணக்கம்” பதிலுக்குச் சொன்னார்
கருவிகள் கொதித்துக் கொண்டிருந்த போது, மேயர் மண்டையை நாற்காலியில் சாய்த்துக் கொண்டார். இதமாக இருந்த்து. மூச்சுவிடக் கஷ்டமாக இருந்த்து. அது பாடாவது க்ளினிக். பழைய நாற்காலி, காலால் இயங்கு டிரில்லர், களிமண் குடுவைகள் வைத்திருந்த கண்ணாடி அலமாரி. நாற்காலிக்கு எதிர்ப்புறம் தோள் உயரத்துக்கு திரையால் மூடிய ஜன்னல். பல்டாக்டர் தன் பக்கத்தில் வந்ததும் வாயைத்திறந்தார்.
அரிலியொ அவன் தலையை வெளிச்சத்துக்குத் திருப்பினார். கெட்டுப்போன பல்லைப் பார்த்துவிட்டு, மேயரின் தாடையை ஜாக்கிரதையாக அழுத்தி மூடினார்.
“மயக்க மருந்து இல்லாமல் தான் எடுக்கணும்”
“ஏன்?”
“சலம் வைத்த கட்டி இருக்கிறது”

மேயர் அவர் கண்ணில் நேராகப் பார்த்தார். “சரி” சொல்லிவிட்டு சிரிக்க முயன்றார். அரெலியொ பதிலுக்குச் சிரிக்கவில்லை. கருவிகளை கொதிக்க வைத்த பேசினை எடுத்துக் கொண்டு மேஜைக்கு வந்தார். இடுக்கிகளால் வென்னீரிலிருந்து கருவிகளை எடுத்தார். துப்புவதற்கான கோப்பையைக் ஷூ அணிந்த கால்களால் தள்ளிவிட்டு, வாஷ் பேஸினில் கைகளைக் கழுவச் சென்றார். மேயரைப் பார்க்காமலேதான் இதையெல்லாம் செய்தார். இவரை விட்டு மேயரின் கண்கள் அகலவேயில்லை.
அறிவுப் பல் தான் கெட்டுப் போயிருந்த்து. அரெலியொ கால்களை அகற்றி இடுக்கியால் பல்லை இறுக்கிப் பிடித்தார். மேயர் நாற்காலியைப் பிடித்து இறுக்கிக் கொண்டார் கால்களை வசதியாகத் தளர்த்திக் கொண்டார். விதைக்கொட்டையில் ஜில்லேன்று ஏறுவதை உணர்ந்தார் ஆனால் ஒரு சத்தமும் போடவில்லை. பல்டாக்டர் தன் மணிக்கட்டை மட்டும் அசைத்தார். எரிச்சலைக் காட்டாமல், ஆனால் மெதுவாக்க் கசப்புடன் சொன்னார் “இருபது பேர் செத்தார்களே அதுக்கு இப்ப பதில் கிடைக்கும்”
மேயர் தாடை எலும்புகள் நொறுங்குவதை உணர்ந்தார். கண்களில் நீர் நிரம்பியது. பற்கள் வெளிவருவதை உணரும் வரை அவர் மூச்சுவிடவில்லை. பின் கண்ணீருக்கிடையில் அதைப் பார்த்தார். அவருடைய வலிக்கும் அதற்கு சம்பந்தமே இல்லாதது போலிருந்தது. முந்தைய ஐந்து இரவுகளின் கொடுமையை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
வேர்த்து, விறுவிறுத்து, துப்ப வைத்திருந்த கோப்பைக்குக் குனிந்தார். மேல் கோட்டின் பட்டன்களைத் திறந்தார். பேண்ட் பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்தார். பல் டாக்டர் சுத்தமான துணியொன்றை நீட்டினார்.


“கண்ணீரைத் துடைத்துக் கொள்”
மேயர் துடைத்துக் கொண்டார். அவர் நடுங்கிக் கொண்டிருந்தார். பல் டாக்டர் கைகளைக் கழுவும் போது, உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்த கூரையை, தூசி படிந்த எட்டுக்கால் பூச்சி வலையில் இருந்த அதன் முட்டைகளை, அதில் சிக்கியிருந்த செத்த பூச்சிகளைப் பார்த்தார். கைகளைத் துடைத்துவிட்டு பல் டாக்டர் திரும்பிவந்தார். “வாயை உப்புத்தண்ணீரில் கொப்பளித்துவிட்டுப் படு”.
மேயர் எழுந்து நின்று, ராணுவ பாணியில் சல்யூட் அடித்து குட் பை சொன்னார். கால்களை சரிசெய்து கொண்டு, பட்டனைப் போடாமல் வாசலை நோக்கி நடந்தார்.
“பில்லை அனுப்பிவிடு” என்றார்
“உனக்கு அனுப்பவா? அல்லது ஆபீஸுக்கா?
மேயர் அவரைப் பார்க்கவில்லை. கதவைமூடிக்கொண்டே சொன்னார் “எல்லாம் ஒண்ணுதான்"

------------------------------------------------------------------------------------------------
Gabriel Garcia Marquez-
மொழிபெயர்ப்பு

Friday, October 02, 2009

மத்திய காலத் தென்னிந்தியாவில் நில உடைமையும் சமூகப் பிரிவினைகளும்

மத்தியகாலத் தென்னிந்தியாவில் சமூகம் முரண்பாடுகள் இல்லாமல், சுமூகமான உறவுகள் உள்ள சமூகமாக இருந்ததாக பழைய சரித்திர ஆசிரியர்கள் கருதி வந்துள்ளனர். சமத்துவத்தை விட வர்க்கங்களின் ஒத்திசைவை முன்வைத்து அரசியல் உணர்வுகள் அக்காலத்தில் இருந்ததாகவும், ஒரு வர்க்கத்தின்மீது இன்னொரு வர்க்கத்தின் கொடுமையான் அடக்குமுறை இருந்ததில்லை என்றும் அச்சமூகத்தை நீல கண்ட சாஸ்திரி பெருமைப்படுத்துகிறார். இதுபோன்று சொல்வதற்கும், மறுபுறம், தன் எழுத்துக்களில் அவர் திரட்டிய வர்க்க வேறுபாடுகள் குறித்த தகவல்களுக்கும் உள்ள முரண்பாடுகளை பல நேரங்களில் அவர் புரிந்து கொள்ளவில்லை. அப்பாத்துரை, மீனாட்சி, மகாலிங்கம் போன்றோரின் ஆய்வுகளிலும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை. கி.பி. 1000 லிருந்து 1500 வரையிலான காலத்தின் தென்னிந்தியாவின் பொருளாதார நிலையை ஆய்ந்த அப்பாத்துரையின் நூல்களிலும் வர்க்கப் பிரிவினைகள் குறித்து ஏதாவது இருக்கும் என்ற இயல்பான எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிகிறது.

நீலகண்ட சாஸ்திரி போன்றோரால் செய்யப்பப்ட்ட வரலாற்றாய்வுகளில் இருந்த தவறுகளைச் சீர்படுத்தும் நோக்கத்துடன் சமீபத்தில் வந்த அமெரிக்க ஆய்வாளர்களாலும் நிலைமை மாறவில்லை. பல்லவர் காலத்திலும் அதைத்தொடர்ந்த சோழர்காலத்திலும் சமூகம் ஏராளமான வேளாண் குடியிருப்புகளாக இருந்ததாக மத்திய காலத் தென்னிந்தியாவில் அரசுகளை சமூகத்தை ஆய்ந்த பர்ட்டன் ஸ்டெயின் குறிப்பிடுகிறார். நீலகண்ட சாஸ்திரியின், அவரது சீடர்களின் வரலாற்றாய்வியலின் மீது தொடுத்த கருத்துத் தாக்குதலின் நிறைவாகவும், தொடர்ச்சியாகவும் செய்யப்பட்ட இவ்வாய்வுகளிலும் வளர்ந்த வேளாண் சமூகத்தில் முறைப்படுத்தப்பட்ட சமூக உறவுகள் குறித்த விபரங்களை எதிர்பார்ப்போம். ஆனால் பண்ணையார்கள் இல்லாத உழவுக்குடிகள் பற்றித்தான் இந்நூல் எழுதப் பட்டிருக்கிறது. ஸ்டேயின் குறிப்பிட்டதுபோல கருத்து ரீதியாகவும் வரலாற்று ரீதியிலும் இந்நூல் குறையுள்ளது. ‘பண்ணையார் இல்லாத குடிகள்’ பற்றிய தன் கருத்தை அடைய, வேளாண் குடிகளிடம் காணப்பட்ட உயர்வு தாழ்வுகள் பற்றி தனக்குக் கிடைத்த பல தகவல்களை, ஸ்டெயின், வெட்கமில்லாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். பிராமணர்களுக்கும் விவசாயக்குடிகளுக்கும் இருந்த உறவுகளைச் சித்தரிக்கும்போது பெருவாரியான குடிகள் பற்றிய விபரங்களை மறைத்துவிடுகிறார். சமூகத்தில் வேறுபாடுகள் இல்லை என்ற கருத்து, கோணலான கொள்கையிலிருந்தும், கிடைக்கும் தகவல்களை கண்டுகொள்ளாமல் விடுவதிலிருந்தும் எழுகிறது.

ஆனால், நொபொரு கராஷிமொ, எம்.ஜி.எஸ் நாராயணன், ஒய். சுப்பராயலு, டி.என். ஜா, ஆர். சம்பகலக்ஷ்மி, ராஜன் குருக்கள் போன்றோரின் மூலம் சமீப காலங்களில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் ஒரே பார்வையைக் கொண்டவர்கள் என்றோ, ஒரே கருத்துக்கள் கொண்டவர்கள் என்றோ சொல்லவில்லை. மாறாக, இவர்கள் ஒவ்வொருவரது கொள்கைகளும் ஆய்வு முறைகளும் வெவ்வேறானவை. ஒவ்வொருவரும் அடிப்படைத் தகவுகளை அறிந்தவர்கள். வரலாற்றிப்பற்றிய தனித் தத்துவப்பார்வை கொண்டவர்கள். இது தென்னிந்திய இந்திய வரலாற்றியலில் மகிழ்ச்சிதரும் விஷயமாகும்.



பல்லவர், பாண்டியர் காலத்து தாமிரப் பட்டயங்களில் பலவிதமான உரிமைகள் பற்றி பதிவுகள் உள்ளன. சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவினருக்கும் குறிப்பிட்ட நிலத்தின் மீது கிடைக்கும் உரிமைக்கு ஏற்றாற் போல் சமூகத்தில் அவர்களது இடம் இருந்தது. பிராமணர்களுக்கு நிலம் தான்மளிக்கப்பட்டதையே பல்லவ காலத்தின் தாமிர பட்டயங்கள் பதிவு செய்கின்றன. நிலத்தின் மீது கூடுதல் உரிமையை கொடுப்பதும் அதைப் பெயர்மாற்றம் செய்வதும் பற்றியதாக இருந்தன. இது சில பல்லவர் பட்டயங்களில் ‘குடி நீக்கி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் இருந்த குடிகளை நீக்குவது என்பது தான் இதன் பொருள். இதே கருத்து, சில பல்லவகாலப் பதிவுகளில் ‘முன் பெற்றாரை நீக்கி’ என்றும் குறிப்பிடப்படுகிறது. நிலத்தைத் தானம் பெற்றவர்கள் முன்னால் இருந்தவர்களை நீக்கிவிட்டு தங்களுக்குப் பிடித்த புதியவர்களை குடியமர்த்தும் சுதந்திரம் இருந்ததைக் குறிப்பிடுகின்றன. இந்தப் பதப் பிரயோகங்கள் பழைய குடிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப் பட்டதைக் குறிப்பிடவில்லை என்று ஆர். திருமலை எழுதுகிறார். ஏற்கனவே இருந்த நிலத்தின் மீதான் உரிமையை இழப்பதை இது குறிக்கலாம் என்கிறார் அவர். எல்.பி. அலயேவ், குடிநீக்கி என்பதை, நிலம் கைமாறும் போது, குடிகள் அத்துடன் சேர்ந்து மாற்றிக் கொள்வது கிடையாது என்பதை குறிக்கிறது என்பார். விரல்விட்டு எண்ணக் கூடிய பதிவுகளே முன்னர் இருந்த குடிகள் பற்றிப் பேசுகின்றன. பெரும் பான்மையான பல்லவர்காலப் பதிவுகள் முன்னரிருந்த குடிகள் பற்றிப் பேசுவதே இல்லை. அவர்கள் இடத்தை விட்டுத் துரத்தப் பட்டனரா அல்லது உரிமைகள் மட்டும் பறிக்கப் பட்டனவா அல்லது அவர்களை இந்த (உரிமை மாற்றம்) தொடவில்லையா என்பது தனி விஷயம்.

kesavan veluthat

மொழிபெயர்ப்பு.வே.ராஜகோபால்