Monday, August 14, 2023

 

தொண்டர்கள், கட்சி முதலாளிகள்

 

     இந்தியாவில் பல அரசியல் கட்சிகள்பெரும் வணிக நிறுவனங்களைப் போலச் செயல்படுகின்றன என்று சொல்லத் தோன்றுகிறது. போல என்று சொல்லக் காரணம் உண்டு. சில நேரங்களில் அவை நிலமானியக் காலத்து விழுமியங்களையும் பேணி வருகின்றன. இவற்றின் காரணமாக நல்ல விளைவுகளும், மோசமான விளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் தொண்டர்கள், தலைவர்கள், கட்சியின் சொத்துகள் அவற்றின் பயன்பாட்டில் ஜனநாயகத்தை நோக்கிய முன்னேற்றத்துக்கான வழி தெரிகிறதா? என்ற கேள்விக்கு விடையளிப்பது கடினம்.

     பதவிக்கும் அதிகாரத்திற்கும் வருவதற்கான செயல்திட்டங்களே கட்சிகளின் ஒரே இலக்காக இருக்கின்றன. அது சரியான வழிதான். ஆனால் பதவிகளை அடைந்தபின் என்ன செய்வது?  இன்றிருக்கும் பல அரசியல்வாதிகளால் இந்தக் கேள்விக்கு நேர்மையாக பதிலளிக்க முடியாது. அரசியலும் முழுநேரம் செயல்பட வேண்டிய ஒரு 'தொழில்' (அதன் நேர்மறையான பொருளில்) என்று எடுத்துக் கொண்டால், அதில் ஈடுபடுவோருக்கு ஊதியம் வேண்டியிருக்கிறது. ஆனால் கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டு அதில் ஏராளமானோர் ஈடுபடுகிறார்கள் என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம்.

      அரசியல் கட்சிகளில் இப்படி உயர்பதவிகளில் இருப்பவர்கள், தொண்டர்களை எப்படி அணுகுவார்கள்? தொண்டர்கள் தலைவர்களைப் பற்றி என்ன கணிப்பு வைத்திருப்பார்கள்? இப்படி எதையாவது கேட்டால் இத்தனை ஆண்டுகளாக தமிழ்நாடு அல்லது இந்தியா முன்னேறவில்லையா? என்று கேட்கிறார்கள். இதற்கும் கொள்ளையடிப்பதையே கொள்கையாக வைத்திருப்பதற்கும் என்ன உறவிருக்கிறது?  .

      ஊழல் இல்லாமல் ஆட்சி செய்வோம் என்று ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கும் கட்சிகள் பேசுவதே இல்லை. ஊழல் வெளிப்படையாக நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.

      கட்சிகளில் ஜனநாயக வழிமுறைகள் ஏட்டளவில் நேர்த்தியாக நடக்கின்றன. பணம், அதிகாரத் தொடர்பு, ஜாதி, ஊர், குடும்பம் அனைத்தும் தொடர்புகள் ஏற்படுத்தும் கண்ணிகள்.

     கட்சித் தேர்தல்களில் கூட தொண்டர்களுக்கு பணம், மது வினியோகிப்பது நடக்கிறது.

   அதிகாரத்தைப் பிடித்துவிட்டால் அதன் பலன்களும் இவ்வாறே மேலிருப்பவர்களுக்கு அதிகமாகவும், நேரடியாகக் களத்தில் இருப்பவர்களுக்கும் குறைவாகவும், மிச்சம் இருப்பவை பொதுமக்களுக்கு மிகக் குறைவாகவும் கிடைக்கின்றன.

   பல கட்சிகளில் பொறுப்பில் இருப்பவர்கள், தலைவர்கள் போலல்லாமல் பெருமுதலாளிகள் போல நடந்து கொள்கிறார்கள். தொண்டர்கள் கூலித் தொழிலாளிகள் ஆகிவிட்டார்கள். சமூகத்தில் எது நடக்கிறதோ அதையே அரசியல் பிரதிபலிக்கிறது என்றும் விளக்கம் தரப்படுகிறது. தலைவர்களும் தொண்டர்களும் அதை மாறவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லவா?

   இப்போது ஆட்சியில் இருக்கிற கட்சிகளும், அரசியலில் பலமாக இருக்கும் கட்சிகளும் தலைவர்களும் சமூக மாற்றத்தை விருப்புகிறவர்களாகக் காட்டிக் கொண்ட போதிலும், (ஸ்டேஸ்குவோ) ஏற்கனவே இருக்கும் நிலையை அப்படியே கொண்டு செல்லும் எண்ணங் கொண்டவர்களாகவே இருப்பது போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

   பெயரளவில் கட்சிக் கொள்கைகள் தொடர்ச்சியாக இருப்பது கூட, கட்சித் தலைமைகள் சில குடும்பங்களின் கையில் இருப்பதே காரணம் என்றும் தோன்றுகிறது. சீனியாரிப்படி பதவிகள், குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவிகள் மீதம் இருந்தால் மற்றவர்களுக்கு என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. அதனால் கட்சிக்குள்ளோ , வெளியிலோ யாரும் கொள்கைகள் பற்றிப் பேசுவதில்லை. ஏனெனில் பலர் பதவி உயர்வுகள் பெறவேண்டும் என்ற காரணத்திற்காகவே கட்சியில் சேருகிறார்கள், இருக்கிறார்கள். அரசாங்க வேலை போல அரசியலும் ஒரு வேலை. அவ்வளவுதான். பதவிகள் இல்லையென்றால் அடுத்த கட்சி.

       வருத்தப்படக்கூடிய நிலைதான். கட்சிகளில் உண்மையான, இப்போதிருப்பதைவிட நேர்மையான தேர்தல்கள், அதிகாரப் பரவல் நடந்தால் இது சாத்தியம் ஆகலாம்.

   இன்னொருபுறம் மக்களைப் பிளவு படுத்தி, அரசியல் லாபம் பெற நினைப்பவர்கள் மிக உன்னதமான நிலையை அடைந்திருக்கிறார் கள்.

      இப்படி ஒரு அழுகிப்போன சூழலில் ஒரு புதிய குரலுக்காக, நேர்மையான தலைவனுக்காக, புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் கட்சிக்காக, நாடும் மக்களும் காத்திருக்கிறார்கள்.

   நம்மிலிருந்துதான் முகம் தெரியாத அந்த மனிதன் வரப் போகிறான். அவன் காந்தியைப் போலவோ, புத்தரைப் போலவோ, லெனினைப் போலவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தலைவர்கள் எல்லாம் புகழ் பெறுவதற்கு முன்னர் எவ்வளவு சாதாரணர்களாக இருந்தார்களோ எவ்வளவு அப்பாவிகளாக, கேள்விகேட்பவர்களாக இருந்தார்களோ அப்படித்தான் இருப்பார்கள். தம் கடமையைச் செவ்வனே செய்கிறவராக, எதிர்காலம் பற்றிய கனவுகள் காண்பவராக, ஏன் ஏச்சுக்கள் வாங்குபவராக இருக்கக்கூடும்.

வானத்திலிருந்து குதிக்கும் தேவ தூதர்கள் அல்ல, கட்சிகளின் மாபெரும் பிரச்சார பீரங்கிகளின் வழியே குதிப்பவர்கள் அல்ல, சாதாரண மனிதர்களே நம் மாற்றங்களுக்குக் காரணமாக இருப்பார்கள். அவர்களில் ஒருவர் உங்கள் பார்வையில் விழக்கூடும். அவரை உற்சாகப்படுத்துங்கள்.  இன்று அது போதுமானது. அதைவிடவும் முக்கியமானது அப்படி ஒருவரை நீங்கள் சென்றடைய வேண்டும் என்று உங்களிடம் /நம்மிடம் எழும் அவா. விடுதலைக்கான தாகம் இல்லாத சமூகம் விடுதலை பெற முடியாது.